வாழ்க்கை மீது தாபம் - 20 வருடங்கள் முன்னோக்கியப் பயணம்

இந்த வார சத்குரு ஸ்பாட் 20 வருட ஈஷாவின் கதையாய் மலர்கிறது. ஈஷா உருவான கதை மட்டுமல்லாமல் புதிதாய் ஈஷாவைச் சுற்றி தான் பின்னவுள்ள திட்டங்களை பற்றிக்கூறும் சத்குரு, ஈஷாவிற்காக கல்லும் மண்ணும் சுமந்த அந்தத் தன்னார்வத் தொண்டர்களின் அன்பு இதயங்களையும் வருடத் தவறவில்லை. 20 வருடங்களைத் தொடப் போகும் ஈஷாவின் செயல், சீரமைத்துக் கொள்வதில் இருக்கும் என்று கூறும் அவர், ஒவ்வொரு மனிதரும் இதில் பங்கெடுத்து ஆனந்தம் உணர வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறார்!

2013 ம் வருடத்தின் இறுதிப் பகுதிக்கு நாம் வந்திருக்கிறோம். 20 வருடங்களுக்கு முன்னர், இதே சமயத்தில் அந்த ஏழாவது மலையின் முகட்டை நான் முதல்முறையாக பார்த்தேன். அதற்கடுத்த வருடம், ஜுன் மாதத்தில் 90 நாள் ஹோல்னஸ் வகுப்பினை நாம் துவங்கினோம். முதல் 30 நாட்களுக்கு இந்நிகழ்ச்சியில் இருந்த அந்த 68 பேரும், 3 மாதங்களுக்கு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 39 பேரும் பலவகையில் இன்றிருக்கும் ஈஷாவின் அடித்தளமாய் இருந்திருக்கின்றனர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அதில் பலர் ஓசையில்லாமல் இங்கு இருக்கின்றனர், அவர்கள் "நான் இதைச் செய்தேன், அதைச் செய்தேன்," என்று எதற்கும் உரிமைக் கொண்டாடிக் கொள்வதில்லை. ஏனென்றால், நாம் முதல் நாளிலிருந்தே உருவாக்கி வைத்த கலாச்சாரம் அது. பலரும் தனக்கு கொடுக்கப்பட்ட செயல்களை எந்தக் கேள்வியும் இல்லாமல் செய்கின்றனர். வரும் ஆண்டு ஈஷா யோகா மையத்தின் 20ம் ஆண்டு, இது கொண்டாடப்பட வேண்டிய ஓரு நிகழ்வு.

கடந்த 20 ஆண்டுகளாக, கண் கட்டப்பட்டிருக்கும் குதிரையைப் போல் நாம் ஒரே நோக்கோடு பயணித்திருந்தோம், நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதில் அதிக கவனம் செலுத்தவில்லை. நாளொரு பொழுதும், பொழுதொரு வண்ணமுமாய் பல்வேறு நிகழ்வுகள், ஏதோவொரு இடத்தில் நிகழ்ந்தபடியே இருந்தன. அனைத்தும் விரிவடைந்து கொண்டே செல்கிறது, நாம் நினைத்ததை விடவும் அனைத்தும் பெரிய அளவில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலை, எல்லா நேரத்திலும் நெருக்கடி நிலையில் இருப்பதைப்போல் உள்ளது. இந்நிலையில் வாழ்வதற்கு என்ன தேவை என்பது பலருக்கும் புரிவதில்லை. நம் கைகளில் 10 ரூபாய் இருந்தால், அதில் 100 ரூபாய்க்கான வேலையைச் செய்கிறோம். நம்மிடம் 10 பேர் இருந்தால் அவர்களை வைத்து 25 பேருடைய வேலையை நாம் செய்கிறோம்.

இரண்டு நாட்களுக்கு முன்னம் ஒருவர் என்னிடம், "சத்குரு, நீங்கள் வாழ்க்கை மேல் பேராசைக் கொண்டிருக்கிறீர்கள்," என்றார். நான் வாழ்க்கை மேல் போராசைக் கொள்ளவில்லை, அதன்மேல் தீரா தாபம் கொண்டிருக்கிறேன். நான் "தாபம்" என்ற வார்த்தையைப் பயன்படுத்தக் காரணம், இரண்டாம் நபர் உடன்படாவிட்டால், காதல் அணைந்து போகும். தாபமோ இன்னொருவர் சார்ந்தது அல்ல, அது எப்போதுமே இருக்கும். "வாழ்க்கையின் மேல் தாபம்" என்னும் வார்த்தையை நான் உபயோகிக்கக் காரணம், மனிதகுலத்திற்கு நாம் செய்ய வேண்டியதைச் செய்ய இந்த ஒரு ஜென்மம் போதாது. நாம் 100 வருடங்கள் வாழ்ந்து, ஓயாமல் வேலை செய்து கொண்டே இருந்தாலும் அதுவும் போதாது. இதனை நிகழச் செய்ய ஒரே வழி, அடுத்து வரும் தலைமுறையை ஊக்கமடையச் செய்து அதனை பெரிய அளவில் நிகழச் செய்வதே.

20 வருடங்களுக்கு முன் இங்கிருந்தவர்கள் முக்கோண கட்டிடத்தை கட்ட கான்கிரீட் சுமந்தனர், தியானலிங்கத்திற்கு கற்களைச் சுமந்தனர். இதனை உருவாக்கியதில் உள்ள நிறைவும் திருப்தியும் அவர்களிடத்தில் உள்ளது. அந்தக் காலகட்டத்தில் ஈஷாவில் இருந்திராத உங்களில் பலருக்கும் அந்த வாய்ப்பை நாம் வழங்க விரும்புகிறோம். நாம் 20 வருடங்களை தொடவிருக்கும் இச்சமயத்தில், அடுத்து வரும் 6 மாதங்களை ஏதோவொன்றை புதிதாய் செய்ய பயன்படுத்தாமல், நாம் இதுவரை செய்துள்ள செயல்களை மறுசீரமைப்பு செய்ய நினைக்கிறோம். நாம் செய்துள்ளவற்றை சற்றே திரும்பிப் பார்க்க நமக்கு நேரம் இருந்ததில்லை. பல விஷயங்களை இப்படித்தான் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் நம் மனதில் இருந்து கொண்டே இருக்கிறது.

நீங்கள் அனைவரும் இந்த இடத்தை சீரமைக்கும் இம்முயற்சியில் கலந்துகொண்டு, கோடிக்கணக்கான மக்களின் வாழ்வை தொடும் ஒர் உன்னத செயலில் உள்ள ஆனந்தத்தை உணர வேண்டும். கோடிக்கணக்கான மக்கள், பல ஆண்டுகளுக்கு அனுபவித்து உணர்ந்து, பாராட்டும் செயல் அல்லவா இது!

நாம் செயல்புரியும் விதத்தை மறுசீரமைப்பு செய்ய நாம் பல செயல்முறைகளைச் செய்ய உள்ளோம். வெளிக் கட்டமைப்பை மட்டுமல்ல மனித கட்டமைப்பையும் நாம் மாற்றி அமைக்கவுள்ளோம். நாம் ஈடுபட்ட காரியங்களில் நாம் வெற்றி பெற்றுள்ளோம் என்றாலும் நம்மால் பலவற்றை இன்னும் சிறப்பாக செய்ய முடியும். மக்கள் தங்கள் உள்ளங்களில் கொண்டுள்ள உறுதி, அர்ப்பணிப்பு, பக்தியை பார்க்கும்போது நாம் தற்சமயம் செய்து கொண்டிருப்பதைவிட மிகச் சிறப்பாக செய்ய முடியும். தனி மனித இதயங்களில் உள்ள அழகெல்லாம் தனக்கு பொருத்தமற்ற செயல்களை செய்வதால் வீணாய் போய்விடக் கூடாது என்று நான் நினைக்கிறேன். இங்கே நான் 'பொருத்தமற்றது' எனக் கூறுவது, நம்மால் சிறப்பாக செய்யக் கூடியவற்றை சிறப்பாகச் செய்யாமல் இருப்பது, நம்மால் சிறப்பாக உருவாக்கக் கூடியதை சிறப்பாக உருவாக்காமல் இருப்பது, நான் இதைத்தான் பொருத்தமற்ற செயல் என்று நினைக்கிறேன்.

மனித உயிரை வீணாக்கும் செயல் இது. அதீத தீவிரத்தாலும் அன்பாலும் பக்தியாலும் இங்கு நிகழ்ந்துள்ள செயல்களின் வெளிப்பாடாய் இவ்விடம் இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். மனித இதயங்களின் துடிப்பு இந்த இடத்தில் பிரதிபலிக்க வேண்டும். இங்கு நுழையும் ஒவ்வொருவரும் அதனை உணர வேண்டும்.

இதனை நிகழச் செய்வதில் உங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் தேவை. ஏனெனில், தங்கள் வாழ்வில் தன்னைவிட பெரிதான ஒன்றை படைக்கும் மகிழ்ச்சியையும் நிறைவையும் யாரும் உணர்வதில்லை. பெரும்பாலான மனிதர்கள் வெறும் பணம் சம்பாதிப்பதிலேயே தங்கள் வாழ்வைக் கழிக்கின்றனர். ஆனால், கோடிக்கணக்கான உயிர்களை உருமாற்றம் பெறச் செய்யும் ஒரு கருவியை உருவாக்கும், ஒரு இடத்தை உருவாக்கும் ஆனந்தத்தினை நீங்கள் உணர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீங்கள் அனைவரும் இதில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும், உங்களையும் என்னையும் கடந்து வாழும் ஒன்றை படைக்கும் ஆனந்தத்தை நீங்கள் உணர வேண்டும்.

இவ்விடத்தில் வாழாதவர்கள், அருள் உங்களை முழுமையாய் தழுவ அனுமதியுங்கள். இதனை நிகழச் செய்ய, உங்களில் இருந்து பக்தியும் அன்பும் பொங்கிப் பெருகட்டும். உங்கள் உயிரின் இனிமை உங்களைச் சுற்றியுள்ள உலகை தொடட்டும். உங்களால் இயலும்போதெல்லாம் இங்கு வந்து, இருந்துச் செல்லுங்கள்.

நான் உங்களில் இருக்கிறேன்.