வன்முறை... தீர்வுதான் என்ன?
இப்போதைய உலக சூழ்நிலையில், எங்கு பார்த்தாலும் கலவரம், சண்டை, அடிதடி, வன்முறை என்று இருக்க, அதற்கான ஆதரவு குரல்கள் ஆங்காங்கே எழுந்து கொண்டிருக்க, ஒரு சிலர் அவைகளை தடுக்கவும் பல வழிகளில் முயற்சிக்கிறோம். சரி அதற்கான தீர்வுதான் என்ன?... தொடர்ந்து படியுங்கள்.
 
 
 
 

இந்த உலகில், வன்முறையை, வாயளவில் மட்டுமே பயன்படுத்தும்படியான ஒரு அமைப்பை நிறுவ நாம் முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். இந்த வாய்ச் சண்டையைத்தான், நாம் "ஜனநாயகம்" என்று சொல்லிக் கொள்கிறோம். இதில் வெளிப்படும் வார்த்தைகளால் புண்பட வேண்டாம், ஏனென்றால் இந்த வாய்ப்போரை எடுத்துவிட்டால், பிறகு அது மற்போராக மாறிவிடும்.

எனவே ஒவ்வொருவருக்கும் வாய்ச் சண்டையில் பயிற்சியளிப்பது முக்கியமாக இருக்கிறது. கோபம், அதிருப்தி மற்றும் விரக்தியை வெளிப்படுத்த வாய்ச்சண்டையில் போதிய திறமை இல்லையென்றால், பிறகு மக்கள் தங்கள் கைகளைத்தான் பயன்படுத்துவார்கள். ஒவ்வொருவரும் சதாஷிவா என்னும் நிலைக்கு வரும்வரை, மனிதர்களிடம், வாய்ச்சண்டை என்பது ஒரு கலையாக இருக்கும். வாய்ச்சண்டை என்பது ஒரு சிறந்த தீர்வு அல்ல, ஆனால் ஒரு இடைக்காலத் தீர்வாக இருக்கும்.

நாடாளுமன்றம் மற்றும் ஐ.நா. சபை விவாதங்களில் வாய்ச்சண்டைத் திறமையை பயன்படுத்தாமல் தற்போதுள்ள வன்முறைக் கருவிகளை மட்டும் நீங்கள் பயன்படுத்தியிருந்தால் - ஓ! இந்த உலகத்தை பலமுறை நீங்கள் அழித்திருப்பீர்கள். ஆனால் அப்படி நடப்பதில்லை. ஏனென்றால் நவீன சமூகம் வாய்ச்சண்டையைக் கற்றுக்கொண்டுவிட்டது; ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்வதென்றால் கூட அதை நாகரீகமாக செய்து கொள்ள முடியும்.

தற்போதெல்லாம் அப்படி நேருக்கு நேராக சொல்ல உங்களுக்கு துணிவு இல்லையென்றால், பேச விரும்புவதை நீங்கள் வலைப்பதிவு செய்துவிட முடியும். உங்கள் வீட்டிலிருந்து கொண்டே எவ்வளவு மோசமான விஷயங்களை வேண்டுமானாலும் நீங்கள் சொல்ல முடியும். அது உண்மையானதா, அதை மற்றவர்கள் படிக்கப் போகிறார்களா, அது அர்த்தமுள்ளதா இல்லையா என்பதெல்லாம் ஒரு பொருட்டே இல்லே. வெறுமனே எதையாவது ஒன்றைச் சொல்லலாம்.

நீங்கள் ஒருவர் மேல் ஒருவர் பழி சுமத்திக்கொள்ள வேண்டும் என்று நான் சொல்லவில்லை. குறைந்தபட்சம் நீங்கள் பேசவோ, எழுதவோ அல்லது வாக்குவாதமோ செய்யும்போது அடுத்தவர் மேல் குண்டெறிய மாட்டீர்கள். உங்கள் கருத்தைப் புரியவைக்க முடியாததால்தான் நீங்கள் குண்டு வீசுகிறீர்கள்.

இந்த குண்டு வீச்சுக்கள் எல்லாம், குறைந்தபட்சம் இந்தியாவில், ஒருவர் தன் நிலைப்பாட்டைத் தெரிவிக்கும் முயற்சிதான். "குண்டு வெடித்து 16 பேர் இறந்துவிட்டனர், 100 பேர் படுகாயம் அடைந்தனர்" என்று செய்திகள் வரும்போது - அதில் ஒரு அறிவிப்பு வெளிப்படுகிறது என்று பொருள். "நாம் 16 பேரை மட்டும்தானே கொன்றோம் - காரிலோ, ஒரு சைக்கிளிலோ குண்டு வைத்ததற்குப் பதிலாக, ஒரு பெரிய டிரக்கில் குண்டை வைத்திருந்தால், 2000 பேர் இறந்திருப்பார்கள் தெரியுமா?" என்றெல்லாம் விவாதம் போய்க் கொண்டிருக்கிறது. தாங்கள் சொல்ல விரும்புவதை வாயளவில் பேச அவர்களுக்கு நாம் கற்றுக் கொடுத்திருந்தால், பிறகு சைக்கிள் குண்டை உபயோகிக்கக் கூடிய அவசியம் அவர்களுக்கு வந்திருக்காது. அவர்கள் எதை சொல்ல விரும்பினாலும் அதை எப்படி வேண்டுமானாலும் உளறிக் கொள்ளட்டும். அதற்காக 16 பேரை அவர்கள் கொன்றிருக்கத் தேவை இல்லை.

ஒவ்வொரு சமுதாயமும் எந்த அளவிற்கு சாத்தியமோ, அந்த அளவிற்கு வன்முறையை குறைக்க தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். இந்த உலக மனிதர்கள் எல்லோரும் ஞானம் அடைவதற்கான சாத்தியம் வரும் வரை, அந்த நாள் வரும் வரை, இந்த வன்முறையை குறைத்து வைப்பதே சிறந்தது. அந்த நாள் வரும்போது நாம் இந்த முழு உலகத்தையுமே ஞானமடையச் செய்து விடலாம்.

நான் தோல்வி மனப்பான்மை கொண்டவன் அல்ல, அதே சமயத்தில் அது என் வாழ்நாளிலேயே நடந்துவிடும் என்று நினைக்கும் அளவிற்கு நான் ஒரு முட்டாளும் அல்ல. ஒரு நூறு மனிதர்கள் மலர்ந்தாலே அற்புதம் என்று நான் நினைக்கிறேன், அதன் பிறகு அவர்களே அந்த எண்ணிக்கையைப் பெருக்கி விடுவார்கள். நமக்கான வாய்ப்புகள் நன்றாக இருக்கின்றன, உண்மையிலேயே மிக நன்றாக இருக்கின்றன. தற்போது சம்யமா நிகழ்ச்சி தொடங்கியிருக்கிறது. வன்முறையற்ற மக்களை நாம் நிச்சயமாகவே உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

Love & Grace

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1