இந்த வார சத்குரு ஸ்பாட்டில், ஒரே தலைமுறையில் உடல் வலுவற்றவர்களாக நாம் மாறிவிட்ட சோகத்தையும், அதை சரிசெய்வதில் யோகப்பயிற்சிகளின் முக்கியத்துவம் குறித்தும் சத்குரு சொல்கிறார்.

ஒரே தலைமுறையிலேயே ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் மரபணு அமைப்பு சீர்கெடும் சாத்தியம் இருக்கிறது என்பதற்கு வலுவான அறிவியல் ஆதாரம் உள்ளது. இதற்கு, நம் மரபணுக்களே பலவீனமாகிவிட்டன என்று அர்த்தமல்ல, நாம் பலவீனமானவர்களாக மாறிவிட்டோம். நாம் வலுவிழந்துவிட்டதால், அடுத்த தலைமுறையினர் தீவிரமாக பாடுபடாவிட்டால் அவர்கள் இன்னும் பலவீனமானவர்களாக இருப்பார்கள். இதை நாம் நிச்சயம் மாற்றியமைத்திட முடியும், ஆனால் நாம் இழந்த பலத்தை மீட்டு, மீண்டும் உயிர்ப்பிக்க முடியுமா என்பதுதான் கேள்வி.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உங்கள் வரவேற்பறையிலிருந்து படுக்கை அறைக்குச் செல்லவும், படுக்கை அறையிலிருந்து அலுவலகம் செல்லவும் நீங்கள் மின்சாரக் கார் ஒன்றை வைத்திருக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. ஒரு பட்டனைத் தொட்டால் எல்லாம் நடந்துவிடும். பட்டனைத் தொடுவதுகூட விரைவில் காணாமல் போய்விடலாம். நீங்கள் வார்த்தைகளாக பேசினால், எல்லாம் டைப் செய்யப்பட்டு வேலை நடந்தேறிவிடும். உங்கள் உடலையும் மூளையையும் அதிகம் பயன்படுத்தும் சூழ்நிலைகளே இருக்காது. அதனால் கட்டாயமாக நாம் ஒரே தலைமுறையில் நம்பமுடியாத அளவு கீழே சரிந்திடமுடியும். இது இப்போதே அபாரமான அளவில் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. குழந்தைகளாக நம்மால் செய்யமுடிந்த மிக எளிய செயல்களைச் செய்ய, இன்றைய குழந்தைகள் சர்க்கஸ் செய்து தடுமாறுகிறார்கள். விளையாட்டில் அதிகம் ஈடுபட்டிருக்கும் குழந்தைகள் மட்டுமே அவற்றைச் செய்யும் திறமை கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

சென்னையில் உயரடுக்கு சமூகத்தைச் சேர்ந்த சிலரிடம் நான் பேசிக் கொண்டிருந்தேன். அக்குழுவைச் சேர்ந்த இளம் தம்பதியினர் சிலர் தங்களுடைய உடல்திடம் கருதி பெருமைப்படுகிறார்கள். நின்ற இடத்திலேயே ட்ரெட்மில்லில் (treadmill) நடப்பது, சைக்கிள் ஓட்டுவது, எல்லாம் செய்து, பெண்களெல்லாம் பூஜ்ஜியம் சைஸ் (size zero) உடைகள் அணிந்திருப்பதால், அவர்கள் ஆரோக்கியமாக இருப்பதாக எண்ணிக்கொள்கிறார்கள். நான் சாதாரணமான இந்தக் கேள்வியை அவர்களிடம் கேட்டேன், "நீங்கள் தெருவில் நடந்து சென்றுகொண்டிருக்கும் போது ஒரு புலி வந்துவிட்டால், உங்களில் எவ்வளவு பேரால் ஏதோவொரு மரத்தில் ஏறி தப்பித்துவிடமுடியும்? தினக்கூலி வேலை செய்பவர்கள், ரோடு போடுபவர்கள், குழி வெட்டுபவர்கள், இவர்களால் மட்டும்தான் முடியும்." என்றேன். அனைவரும் ஒத்துக்கொண்டார்கள். அவர்கள் பார்ப்பதற்கு ஓரளவு திடமாகத் தோன்றலாம், ஆனால் அடிப்படையில் அவர்களுக்குள் திடமானவர்களாக அவர்கள் இல்லை. உடலைப் பிடித்துவைத்திருக்கும் நாடி நரம்புகளும் தசைகளுமே பலவீனமாகிவிட்டன. இந்த மாற்றம் அதிவேகமாக நிகழ்ந்துகொண்டு வருகிறது. தொழிற்நுட்பத்தால், உடலளவில் மனதளவில் என இரண்டு நிலைகளிலும் உங்கள் செயல்பாடுகள் குறையக்குறைய, இது மிகவும் மோசமான பிரச்சனையாக மாறுகிறது. இப்படித்தான் நம்மை நாமே அழித்துக்கொள்வோமோ என்னவோ, குண்டுகளாலோ, நெருப்பாலோ, கலவரங்களாலோ அல்ல, நாமாக நாம் உயிர்வாழத் தெம்பில்லாமல் வீழ்ந்துவிடுவோம்.

தற்சமயம் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் பலர், பலவிதமான கருவிகளின் உதவியுடன் உயிர்வாழ்கிறார்கள். நாம் இப்படியே பலவீனமாகிக்கொண்டே போனால், இன்னும் ஐம்பது வருடங்களில், மனிதர்கள் உயிர் வாழ்ந்திட மருத்துவக்கருவிகள் தேவைப்படும் நிலை மிகக் குறைந்த வயதிலேயே, 10 அல்லது 15 வருடங்கள் முன்பாகவே வந்துவிடக்கூடும். இது மனித உடலமைப்பு மிகவும் மோசமாக பலவீனமடைவதைக் குறிக்கிறது. அமெரிக்காவில் 1,300 ஏக்கர் நிலத்தில் நாம் யோக மையம் நிறுவியிருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். முதலில் எல்லோரும், "இது பைத்தியக்காரத்தனம் சத்குரு, நாம் அட்லாண்டா அருகில் 25 ஏக்கர் நிலம் வாங்கவேண்டும்." என்றார்கள். ஆனால் ஆசிரமம் அமைப்பதன் நோக்கம், ஒரு மையம் அமைத்து தியானம் செய்வது மட்டுமல்ல, இது உயிரை உயிர்ப்பிப்பதற்காக உருவாக்குவது.

நீங்கள் மண்ணில் வாழ்ந்து, மண்ணில் வேலை செய்து, உயிர் எவ்வளவு திடமாக இருக்கிறதோ அவ்வளவு உறுதியாக மாறவேண்டும் என்பதே என் நோக்கம். நீங்கள் ஆன்மீக செயல்முறையையும் உங்கள் வாழ்க்கையையும் எப்படி நடத்தப்படவேண்டுமோ அப்படி நடத்திடமுடியும். நியூயார்க் நகரத்திலோ வேறு எங்கோ வாழ்க்கை நடத்தப்படும் விதத்தில் அல்ல, உயிரை உறுதியாக நடத்திடுங்கள். இதை நாம் செய்யாவிட்டால், மனிதகுலம் குறித்து நாம் பேசுவதற்கு எதுவும் இருக்காது. ஒரே ஆசிரமம் நம்மைக் காப்பாற்றிவிடும் என்று நான் சொல்லவில்லை, இது பல இடங்களில் நிகழவேண்டும். நாம் மண்ணிற்குத் திரும்பவேண்டும். நாம் பஞ்சபூதங்களுக்கு வெளிப்படுத்தப்பட வேண்டும், மண், மழை, ஆகாயம், எல்லாவற்றிற்கும் நாம் திறந்திருக்கவேண்டும். உயிர்சக்தி என்பது நம் உடலில் மட்டும் இல்லை, எல்லா இடங்களிலும் இருக்கிறது. இந்த பஞ்சபூதங்களுடன் நாம் தொடர்பில் இல்லாமல் உயிர் உறுதியாக நடக்காது. நாம் உறுதியாக உயிர்வாழ்ந்திட வேண்டும், இந்நோக்கத்தை யோகா பூர்த்தி செய்யும்.

Love & Grace