உப்பு பொம்மையாக மாறி கரைவது எப்படி?

 
 
 
 

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், சாதகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கிறார் சத்குரு...

Question:சத்குரு ஒரு உப்பு பதுமையாக மாறி கரைந்து போவது எப்படி? இந்த பயணம் ஏன் இத்தனை கடினமான ஒன்றாக இருக்கிறது?

சத்குரு:

பயணம் கடினமாக இல்லை. நீங்கள்தான் அவ்விதமாக இருக்கிறீர்கள். பாறை ஒன்றை கடலில் ஆயிரம் முறை நனைத்தாலும் அது கரைந்து போகாது. உண்மையில் சொல்லப் போனால் பயணம் என்று ஒன்றே இல்லை. ஏனென்றால் பயண இலக்காக ஒரு தூரம் இருக்க வேண்டும். உங்களுக்கும் உங்கள் சுயத்துக்கும் இருக்கும் தூரம் என்ன? இந்த பயணத்தை மேற்கொள்ள எத்தனை காலம் பிடிக்கும்? பயணம் என்பது ஒரு கருவியாக பயன்படுத்தப்படுகிறது. இல்லையென்றால் மக்கள் சும்மா இருந்து விடுவார்கள். ஆனால் பயணம் என்று நீங்கள் சொன்னால் ஏதோ ஒரு இடத்தை அடைய வேண்டும் என்று அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.

சிறிது காலத்துக்கு முன், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 21 நிமிட கிரியாவான ஷாம்பவி மஹாமுத்ராவிற்கு தீட்சை அளித்துக் கொண்டிருந்தோம். ஒருவர் எழுந்து "சத்குரு, ஏன் இத்தனை நீளமான, கடினமான செயல்முறையை கற்றுக் கொடுக்கிறீர்கள். 'எதுவும் செய்யாது இருங்கள். என்ன நடக்க வேண்டுமோ அது நடக்கும்' என்று ரமண மகரிஷி சொல்லி இருக்கிறாரே" என்றார். நான் அதற்கு "அவர் சொன்னது சரிதான், ஆனால் அவர் என்ன அர்த்தத்தில் சொன்னார் என்று தெரிந்து கொள்ள வேண்டும். 14 வருடங்கள் அவர் ஒன்றுமே செய்யாமல் உட்கார்ந்து இருந்தார். எலிகள் அவர் தொடையை கடித்து அவர் தசையை உண்டன. அந்த புண்ணில் புழுக்கள் வந்தது. அப்படியும் அவர் எதுவும் செய்யவில்லை. ஆனால் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்றால் ஒரு கொசு கடித்தாலே உடனே அலறி அடித்து உதவியைத் தேடுவீர்கள்.

ரமணர் போல உங்களால் ஒன்றும் செய்யாமல் இருக்க முடிந்தால், நான் எதற்காக ஷாம்பவி மஹாமுத்ரா போல் ஒன்றை கற்றுக் கொடுக்க வேண்டும். அது போன்ற நிலையில் நீங்கள் இருந்தால் நான் ஏன் ஏதோ ஒன்றை கற்றுக் கொடுக்க வேண்டும்? மூன்றே மூன்று நிமிடங்கள் நீங்கள் அமைதியாக இருப்பதற்கு நான் தொடர்ச்சியாக பேச வேண்டி இருக்கிறது. உங்களில் இருந்து ஏதோ ஒன்றை நாம் உருவாக்க வேண்டும் என்பது நோக்கம் இல்லை. அது மிக கடினமானது. உங்களுக்குள் ஒரு நிர்பந்தமாக எழும் சிந்தனைகளை தடுத்து சிந்தனை இல்லாமல் ஆக்க வேண்டும். இதை நீங்கள் புரிந்து கொள்ள உங்களை நாங்கள் வளைக்க வேண்டும், முறுக்க வேண்டும், தலைகீழாக திருப்ப வேண்டும். இப்படி பல விஷயங்கள் செய்ய வேண்டியிருக்கிறது.

நீங்கள் உங்களை மிகவும் விசேஷமாக ஒன்றாக நினைத்துக் கொள்வதுதான் பிரச்சனை. உங்களை உருவாக்கிய மூலப் பொருட்கள் என்ன என்று சொல்ல முடியுமா? பிற படைப்புகள் என்ன பொருளால் ஆக்கப்பட்டிருக்கிறதோ அதே பொருட்களால்தான் நீங்களும் ஆக்கப்பட்டிருக்கிறீர்களா? இல்லை வேறு பொருட்கள் உங்களை உருவாக்கியதா? படைப்பின் மூலம் உள்ளே துடித்துக் கொண்டிராத ஒரு இலையோ, பறவையோ, அணுவோ பிரபஞ்சத்தில் இருக்க முடியுமா? படைப்பின் மூலம் எல்லா இடத்திலும் நிறைந்து இருக்கிறது, நீங்களும் அதே பொருளால்தான் உருவாக்கப் பட்டிருக்கிறீர்கள். பின் ஏன் உங்களை வித்தியாசமாக நினைத்துக் கொள்கிறீர்கள். புத்திசாலித்தனம் உங்களுக்கு கொடுக்கப்பட்டதன் காரணம் நீங்கள் இன்னும் அதிக புத்திசாலித்தனத்தோடு இயங்க வேண்டும் என்பதற்காக. வெவ்வேறு பரிமாணங்களில் இங்கே இருக்கும் சாத்தியத்தை உங்களுக்கு அளிப்பதே படைப்பின் வழி. உயர்வானதை தேர்வு செய்வதோ, தாழ்வானதை தேர்வு செய்வதோ உங்கள் கையில் இருக்கிறது. உடல் ஏற்படுத்தும் கட்டுப்பாடுகளை கடந்து செல்வதே புத்திசாலித்தனம் ஆகும். ஆனால் உங்களுக்கு இருக்கும் ஓரளவு புத்திசாலித்தனத்தை வைத்துக் கொண்டு நீங்கள் நினைப்பதை செய்ய விரும்புகிறீர்கள். அப்படி செய்ய ஆரம்பித்தால் பிறகு ஒரு கடினமான பாறை போலாகி விடுவீர்கள்.

நீங்கள் இங்கே உட்கார்ந்து இருக்கிறீர்கள். காற்று உங்கள் உள்ளே சுவாசமாக நுழைந்து உங்கள் உயிர் நடக்க வழி செய்கிறது. நீங்களும் அதை அனுமதிக்கிறீர்கள். பசியோடு இருக்கும் பொழுது, உலகில் என்னவெல்லாம் இருக்கிறதோ அவையெல்லாம் உங்களுக்கு உணவாகி விடுகிறது. உயிர் வாழ இரண்டு கதவுகளை மட்டும் திறந்து வைத்திருக்கிறீர்கள். மற்ற கதவுகள் மூடியே இருக்கின்றன. நாசியை திறந்து வைக்கா விட்டால் சுவாசிக்க முடியாது, வாயை திறந்து வைக்கா விட்டால் சாப்பிட முடியாது என்று புரிந்து வைத்திருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் உண்மையில் புத்திசாலியாக இருந்தால் இதை விரிவுபடுத்தி, "நான் முழுவதுமாக திறந்த நிலையில் இல்லா விட்டால், என் வாழ்வு அதன் முழு சாத்தியத்தில் நிகழாது. வாழ்வின் முழு பரிமாணம் என்னைத் தொடாது என்பதைப் புரிந்து கொள்வீர்கள். இதை புரிந்து கொள்ளும் அளவு புத்திசாலித்தனம் அனைவருக்குமே இருக்கிறது.

உப்பு பதுமையாக ஆவதென்றால், உங்களை விட பெரிதான ஒன்று உங்களுக்கு நிகழ்வதற்காக, நீங்கள் இப்பொழுது இருக்கும் நிலையிலேயே இறந்து போக சம்மதமாக இருப்பது. நீங்கள் கொண்டிருக்கும் கருத்துக்களே நீங்கள் யார் என்பதை நிர்ணயம் செய்கிறது. எதைக் குறித்தும் எந்த கருத்தும் நீங்கள் உருவாக்காமல் இருப்பது மிக முக்கியம். எனக்குள் நான் யாரை பற்றியும் எந்த கருத்தும் உருவாக்குவதில்லை. முதல் முறையாக பார்ப்பது போலவே நான் மக்களை ஒவ்வொரு முறையும் பார்க்கிறேன். வேலை, செயல் என்று வரும்பொழுது அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை அறிவது அவசியமாகிறது. குறிப்பிட்ட செயல்களுக்கு ஒரு நபரின் இயல்புகள், போக்குகள் எப்படி என்று அறிய வேண்டும். மறைபொருளான வேலை என்று வரும்பொழுது ஒருவரின் கர்ம உடல் தகவல்களை சல்லடையாக துளைத்து முடிவுக்கு வருவேன். ஆனால் அது வேலைக்காக மட்டும்தான். ஆனால் ஒருவரை சும்மா பார்க்கும் பொழுது நான் முதல் முறையாக பார்ப்பது போலதான் பார்ப்பேன். நீங்கள் செய்யக் கூடிய கொடுமையான ஒரு விஷயம் இன்னொருவர் பற்றி ஒரு கருத்து உருவாக்கிக் கொள்வதுதான். எந்த ஒரு உயிர் பற்றியும் ஒரு கருத்து உருவாக்கும் உரிமை உங்களுக்கு இல்லை.

கரைந்து போக விரும்பினால், எது குறித்தும் கருத்து இல்லாமல் இருப்பது ஒரு முக்கியமான விஷயம். எல்லா விஷயங்கள் குறித்தும் கருத்து உருவாக்கிக் கொள்ள சமூகம் உங்களை பழக்கிக் கொண்டிருக்கிறது, இல்லையென்றால் சுய மரியாதை இல்லாமல் போய் விடுவீர்கள்! உங்கள் சுயம் வெறுமையானது. அதனால்தான் நீங்கள் அழகானவர் என்று யாராவது உங்களுக்கு சொல்லிக் கொண்டே இருக்கும் தேவை இருக்கிறது. கருத்துக்களால்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள், மற்றவர்களால் கருத்துக்களால் மட்டுமல்ல, உங்கள் கருத்துக்களாலும்தான். உங்கள் கருத்துக்களின் வடிவமாகத்தான் நீங்கள் இருக்கிறீர்கள். எந்த கருத்தும் இல்லாது இருந்தால் நீங்கள் ஒரு உப்பு பதுமை ஆகி விடுவீர்கள். வெறுமனே இங்கு உட்கார்ந்தால் காற்று அல்ல, இந்த பிரபஞ்சமே உங்களுள் நுழைந்து விடும். உங்களை பற்றி நீங்கள் கொண்டிருக்கும் கருத்துக்களே அதை தடுக்கின்றது. உங்களை பற்றியோ, பிறரை பற்றியோ எந்த ஒரு கருத்தும் வைத்துக் கொள்ள வேண்டாம். அனைத்தும் எப்படி இருக்கிறதோ அப்படியே பார்த்தால் நீங்கள் அனைத்திலும் கரைந்து போவீர்கள். வேறு வழி இல்லை.

உப்பு பொம்மை

உண்மையைத் தேடி
எங்கெங்கோ அலைந்து

மலைகளில் திரிந்து
புனித நதிகளில் நீராடினேன், பக்தர்களுடன்

குருடர்கள் சுட்டிய இடமெல்லாம்
நம்பிக்கையும் உற்சாகமுமாய் பயணித்தேன்

ஒவ்வொரு வழியிலும் வாசனையை நுகர்ந்தேன்
ஆனால் போனதெல்லாம் சுற்றிச் சுற்றித்தான்

இல்லாத ஒருவரை அறிய வீணடித்தேன் பல பிறவிகளை
ஆனால் தேடலின் தீவிரம் மட்டும் குறையவேயில்லை

மீனும் திமிங்கலமும் கூட அறியா அந்த
சமுத்திரத்தின் ஆழம் அறிய என்னதான் தேவை?

உப்பு மட்டுமே சமுத்திரமாய் மாறும்
உப்பு பொம்மையானேன், ஒரேயொரு முழுக்கு, நான் சமுத்திரமானேன்

அன்பும் அருளும்