Question: சத்குரு, நீங்கள் எங்கள் அடையாளங்களை விட்டுவிடச் சொன்னீர்கள். அப்படியென்றால், நாங்கள் அனைவரும் பிரம்மச்சாரிகள் ஆகிவிட வேண்டுமா? ஒருவர் திருமணமான பிறகும் தன்னை வாழ்க்கைத்துணையுடன் எப்படி அடையாளப்படுத்திக் கொள்ளாமல் இருப்பது?

நான் இந்தக் கேள்விக்கு பதிலளிக்க மாட்டேன்! நீங்கள் தப்பிச்செல்ல வழி தேடுகிறீர்கள், நீங்கள் விவாகரத்து கேட்கிறீர்கள்! நான் உங்களிடம் கேட்பது இதைத்தான், யாரோ ஒருவருடன் மிக ஆழமாக உங்களை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளீர்கள் என்றால், நீங்கள் எப்படி புத்தியுடன் வாழமுடியும்? யாரோ ஒருவர் அல்லது ஏதோ ஒன்றின் மீது மிக அதிகமாக உங்களை நீங்கள் அடையாளப்படுத்தி இருந்தால், உங்களால் புத்திசாலித்தனமாக வாழ இயலாது. இதனால்தான் பல அற்புதமான உறவுகள் சிறிது காலத்திலேயே நரகமாக மாறிவிடுகின்றன, நீங்கள் எதற்காக இணைந்தீர்கள் என்பதையே மறந்துவிட்டீர்கள். இந்த உறவு எதற்காக மலர்ந்தது என்பது மறைந்து, அந்த உறவின் அடையாளம் பெரிதாகிவிடுகிறது. ஆனால் "பிரம்மச்சாரி" என்ற பட்டம் கூட மிக மோசமான ஓர் அடையாளம்தான். பிறர் ஒருவரைப் பார்த்து, "அவர் ஒரு பிரம்மச்சாரி" என்று சொல்ல வேண்டும். அவர் சும்மா, அப்படியே, இருக்க வேண்டும், அவ்வளவுதான்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பிரம்மச்சரியம் என்றால் பிரம்மம் அல்லது தெய்வீகத்தின் பாதையில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். அப்படியென்றால் உலகில் உங்களுக்கென்று எந்த குறிக்கோளையும் நீங்கள் உருவாக்கிக்கொள்ளவில்லை. நீங்கள் படைத்தவனுடன் இணக்கமாக இருக்க விரும்புகிறீர்கள். படைத்தவனுடைய திட்டத்திற்கு இணக்கமாக இருந்திட விரும்புகிறீர்கள். பரிணாம வளர்ச்சி குறித்த கோட்பாடுகள், நீங்கள் அனைவரும் குரங்காக இருந்தீர்கள் என்று சொல்கிறது. நீங்கள் குரங்காக இருந்தபோது, "எப்படி மனிதராக மாறுவது? எப்படி ஈஷா யோக மையத்திற்குச் சென்று மென்மேலும் வளர்வது?" என்றெல்லாம் திட்டம் தீட்டினீர்களா? இவற்றை நீங்கள் திட்டமிடவில்லை, படைத்தவனின் திட்டத்தின்படி சென்றீர்கள், அவ்வளவுதான்.

ஒரு பிரம்மச்சாரி என்றால், அவருடைய பாழாய்ப்போன திட்டங்கள் அவரை எங்கும் கொண்டுசெல்லவில்லை, அவருடைய திட்டங்கள் அவரைச் சுற்றிச்சுற்றி அதே வட்டத்தில் செல்ல வைக்கின்றன என்று அவர் உணர்ந்துவிட்டார். "படைத்தவன் குரங்காக இருந்த என்னை மனிதனாக மாற்றிவிட்டார் என்றால், அவர் திட்டத்தின்படி சென்றால், நிச்சயம் அவர் என்னை வேறெங்காவது கூட்டிச்செல்வார்" என்று அவர் நினைக்கிறார். அந்த நம்பிக்கையில்தான் ஒரு பிரம்மச்சாரி வாழ்கிறார். உங்களுக்கும் அவருக்கும் வழங்கப்பட்டிருப்பதை, அதன் முழுமை நிலைக்கு மேம்படுத்திடவே இயங்கிக்கொண்டு இருக்கிறார்.

நீங்கள் வாழ்க்கையில் எவ்விதமான பாத்திரத்தை எடுத்திருக்கிறீர்கள் என்பது ஒரு பொருட்டல்ல, அந்த பாத்திரமே வாழ்வதற்கு சிறந்த வழி. ஏனென்றால், உங்கள் வாழ்க்கையில் அளப்பரிய மாற்றம் கொண்டுவரும் அளவிற்கு உங்கள் புத்திக்கு சக்தியில்லை. இந்த பரிமாணத்தில் பிழைப்பை நடத்திடும் அளவிற்கே உங்கள் புத்தி வேலை செய்யுமே தவிர, அதைக் கடந்துபோக உங்கள் புத்தி மட்டுமே போதாது. நீங்கள் கடந்துபோக விரும்பினால், இந்தப் பரிமாணத்திற்கும் அடுத்த பரிமாணத்திற்கும் அடிப்படையாக இருக்கும் மதிநுட்பத்துடன் இணங்கிட வேண்டும். அந்த மதிநுட்பத்தின் கைகளில் உங்களை நீங்கள் ஒப்படைத்துவிட்டால், நீங்கள் ஓடையைப் போல அதனோடு செல்வீர்கள். அந்த மதிநுட்பம் எங்கே இருக்கிறது? அது இல்லாத இடமே இல்லை. உள்ளும் வெளியும் இருப்பது அதுதான். இந்த பரிமாணத்தில்கூட உங்கள் சிறுநீரகத்தின் செயல்பாடுகளை நீங்களாகவே நடத்திடமுடியாத அளவு அது சிக்கலானதாக இருக்கிறது. ஒரு சாதாரண சிறுநீரகம், அதன் செயல்பாடுகளைக்கூட உங்கள் புத்தியை வைத்து நடத்திட முடியாத அளவு அது நுட்பமாக இருக்கிறது. தன் நிலை இதுதான் என்று ஒருவர் உணர்ந்துவிட்டால், சுற்றிச்சுற்றி அதையே திரும்பத்திரும்ப செய்துகொண்டு இருப்பதில் அர்த்தமில்லை என்பதை உணர்ந்தபோது, அவர் பிரம்மச்சாரி ஆனார்.

நீங்கள் ஒரு ஆணையோ அல்லது பெண்ணையோ திருமணம் செய்துகொண்டிருக்கிறீர்கள். சிலர் தங்கள் வேலை, சிலர் தங்கள் சொத்து, வீடுகள், கார்கள், என்று பல்வேறு விஷயங்களுடன் மணமாகியிருக்கிறார்கள். அனைவரும் மனிதர்களுடன் மணமாகியிருப்பதில்லை. பல்வேறு மனிதர்கள் தங்களை பல்வேறு விஷயங்களுடன் பிணைத்துக்கொள்கிறார்கள். பிரம்மச்சாரிகள் மெதுமெதுவாக ஈஷா யோக மையத்துடன் மணமாகிவிடலாம். நான் சொல்ல வருவதெல்லாம், பொருள்தன்மையில் செய்துகொள்ளும் ஏற்பாடுகளைப் பொருத்தவரை, அனைவரும் ஏதோ ஏற்பாடுகளைச் செய்துகொள்கிறார்கள். பிரம்மச்சாரிகள்கூட ஏதோ ஏற்பாடுகள் செய்துகொண்டார்கள், எந்த ஏற்பாடுகளும் இல்லாமல் அவர்கள் இல்லை. ஆனால் அவர்களுடைய ஏற்பாடுகள் மிக எளிமையானவை.

உங்கள் திருமணம், உங்கள் தொழில், சொத்துக்கள், எல்லாம் நீங்கள் செய்திருக்கும் ஏற்பாடுகள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு ஏற்பாடு என்பது நம் வாழ்க்கையை மெருகேற்றி, சிறப்பாக நடத்திட வழிவகுப்பதாக செய்துகொள்வது. அது, நம் வாழ்க்கையைக் கட்டுப்படுத்தி, அழிப்பதற்காக செய்துகொள்வதல்ல. இந்த அளவு நாம் புரிந்துகொண்டால், நாம் எந்த ஏற்பாட்டைத் தேர்ந்தெடுத்தாலும், அது ஒரு பொருட்டல்ல. அது வேலைசெய்யவில்லை என்றால் என்ன செய்யவேண்டும் என்று உங்களுக்குத் தெரியவேண்டும். அதில் என்னை சேர்த்துக்கொள்ளப் பார்க்காதீர்கள். ஆனால் எல்லா ஏற்பாடுகளும் உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்குடன் செய்துகொள்பவைதாம், உங்களை சிக்கவைப்பதற்கல்ல. அந்த அளவு தெரிந்திருந்தால் பிரச்சனையில்லை. அதோடு, திருமணமாகியிருந்தால் உங்கள் துணையுடன் நீங்கள் உங்களை அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. திருமணம் அழகாக இருப்பது அந்த அடையாளத்தால் அல்ல. அந்த அடையாளத்தால் அது அசிங்கமாகத்தான் மாறும். “இது ஒரு உறவு, இது உங்கள் வாழ்க்கையை மேம்படுத்திட, அழகாக்கிக்கொள்ள நீங்கள் செய்திருக்கும் ஏற்பாடு" என்ற விழிப்புணர்வோடு நீங்கள் இருந்தால், அது இன்னும் சிறப்பாக வேலைசெய்யும்.

Love & Grace