இந்த வார சத்குரு ஸ்பாட்டில், புதுவருடத்தில் தீய பழக்கங்களிலிருந்து விடுபடுவதற்கான முயற்சிகள் மேலோங்கும்போது, பழக்கமெனும் விழிப்புணர்வற்ற செயல்நிலையிலிருந்து வெளிவருவதற்கான வழிகளை சத்குரு நம்முடன் பகிர்கிறார்.

புது வருடம் பிறக்கும் வேளையில், கெட்ட பழக்கங்களை விடுவது எப்படி என்ற கேள்வி மற்ற நேரங்களில் வருவதைவிட அதிகமாகத் தோன்றும். நல்ல பழக்கம், கெட்ட பழக்கம் என்றெல்லாம் எதுவும் கிடையாது - எல்லா பழக்கங்களும் கெட்டவை தான். பழக்கம் என்றால் விழிப்புணர்வின்றி, தானியங்கு நிலையில் செயல்படுவது. உதாரணத்திற்கு, பல்துலக்க இரண்டு வழிகள் உள்ளன. நீங்கள் விழிப்புணர்வாக பல்துலக்கினால், அந்த சமயத்தில் எப்படித் தேவையோ அவ்வளவு நேரம் எடுத்து, அவ்வளவு அழுத்தம் கொடுத்து பல்துலக்குவீர்கள். அப்படித்தான் பல்துலக்க வேண்டும். அல்லது கடுமையாக உங்களைப் பழக்கப்படுத்திக் கொண்டபடி, பற்கள் தேய்ந்தாலும் அதை உணராமல் 3 நிமிடங்கள் பல் துலக்கலாம். நீங்கள் விழிப்புணர்வாக இருந்தால், உடலுக்கு அன்று எப்படித் தேவையோ அப்படி சாப்பிடுவீர்கள், அன்று தேவையான அளவே தூங்குவீர்கள். சொல்லப்போனால், எல்லாவற்றையும் தேவைக்கேற்ப செய்வீர்கள். ஆனால் இன்று, உங்கள் தினசரி செயல்களின் பெரும்பான்மையை, பழக்கத்தின் அடிப்படையில், அல்லது பரிந்துரையின் அடிப்படையில் செய்கிறீர்கள். எப்போது விழித்தெழுவது, எப்போது தூங்குவது, என்ன சாப்பிடுவது, என்ன சாப்பிடக்கூடாது என எல்லாவற்றையும் பரிந்துரைகளின்படி செய்கிறீர்கள் என்றால், இது அடிமைத்தனம் தான் - பரிந்துரை உங்கள் மருத்துவரிடமிருந்து வந்தாலும் சரி, உங்களை அடக்கி ஆளும் எஜமானிடமிருந்து வந்தாலும் சரி. எந்தவொரு நேரத்திலும், அப்போது உங்களுக்கு என்ன தேவைப்படுகிறது என்று உங்களுக்குத் தெரியாமல் இருப்பது விழிப்புணர்வு இல்லாததால் தான்.

பழக்கங்களில் நல்ல பழக்கங்கள், கெட்ட பழக்கங்கள் என்று பிரிப்பது, நல்ல விதத்தில் விழிப்புணர்வின்றி இருப்பது, கெட்ட விதத்தில் விழிப்புணர்வின்றி இருப்பது என்று சொல்வதற்கு சமம். ஏதோவொன்றை நல்ல பழக்கம் என்று நீங்கள் கருதினால், நீங்கள் நல்ல விதத்தில் விழிப்புணர்வின்றி இருக்கிறீர்கள், அதாவது நல்லவிதத்தில் உயிரற்று இருக்கிறீர்கள் என்று சொல்லலாம். உயிருடன் இருப்பதற்கும் இறந்திருப்பதற்கும் இடையேயான அடிப்படை வித்தியாசமே, விழிப்புணர்வாக இருப்பதற்கும் முற்றிலும் விழிப்புணர்வின்றி இருப்பதற்கும் இடையேயான வித்தியாசம்தான். ஓரளவு விழிப்புணர்வுடன் இருப்பது ஓரளவு இறந்திருப்பதாகும். எந்த விதமான பழக்கத்தையும் உருவாக்காதீர்கள். தினசரி வாழ்க்கையிலிருந்து ஒதுங்கி புது இடங்களுக்கு செல்வதற்கும், ஆன்மீக வளர்ச்சிக்கான இடங்களுக்கு வருவதற்குமான அடிப்படை நோக்கமே, எல்லாவற்றையும் விழிப்புணர்வாகச் செய்வதற்கு உறுதுணையான ஒரு சூழ்நிலைக்காகவே. எப்படியோ தினசரி வாழ்க்கையை சமாளிக்க நீங்கள் பழக்கங்கள் உருவாக்கிவிட்டீர்கள். ஆன்மீக ஸ்தலத்திற்கு நீங்கள் வரும்போது, உடல், மனம், உணர்வு, மற்றும் சக்தியின் தேவைகளுக்கு நீங்கள் கவனம் செலுத்தவேண்டும். இந்த உயிர் இயற்கையாக எதற்காக ஏங்குகிறது என்பதற்கு நீங்கள் விழிப்புணர்வாக கவனம் செலுத்தவேண்டும். நீங்கள் விழிப்புணர்வின்றி இருந்தால், இது உங்களுக்கு எதிரான குற்றம். ஆன்மீகமென நீங்கள் கருதும் ஒன்றை எனக்காக செய்கிறீர்கள் என்றால், அது எனக்கு எதிரான குற்றம். அதற்கு நீங்கள் அதை செய்யாமலே இருக்கலாம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

கெட்ட பழக்கங்களை விடவேண்டும் என்றால், விழிப்புணர்வற்ற நிலையை விடவேண்டும் என்று நினைக்காதீர்கள். விழிப்புணர்வு "அற்ற" என்பது இல்லாத ஒன்றைக் குறிக்கிறது. விழிப்புணர்வு என்பது இருக்கிறது. விழிப்புணர்வற்ற நிலை என்பது விழிப்புணர்வு இல்லாத நிலையைக் குறிக்கிறது. இல்லாத ஒன்றை உங்களால் விடமுடியாது. உதாரணம் சொல்லவேண்டும் என்றால், இந்த அறை இருட்டாக இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இருளை ஒழிக்க முயற்சிப்பது பைத்தியக்காரத்தனமானது. இருளை ஒழிப்பதற்கு நீங்கள் ஒளியேற்ற வேண்டும். ஒளியேற்றினால் இருள் அகன்றுவிடும். இருள் என்பது, இருக்கும் ஒன்றல்ல. ஒளியின்றி இருப்பதே இருள். அதேபோல விழிப்புணர்வற்ற நிலை, இருக்கும் ஒன்றல்ல. அது விழிப்புணர்வு இல்லாததைக் குறிக்கிறது. நீங்கள் விழிப்புணர்வாகிவிட்டால், விழிப்புணர்வற்ற பழக்கங்களை எதிர்த்துப் போராடத் தேவையில்லை. விழிப்புணர்வாக மாறுவதற்காகவே நீங்கள் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். விழிப்புணர்வாக இருப்பதே உயிரின் சாரம்சம். நீங்கள் உயிருடன் இருப்பதை நீங்கள் உணர்கிறீர்கள் என்றால், அது ஓரளவாவது நீங்கள் விழிப்புணர்வாக இருப்பதால் தான்.

அதிக விழிப்புணர்வாக மாறுவதற்கு, உங்கள் சக்தியின் தீவிரத்தை நீங்கள் உயர்த்த வேண்டும். நாம் செய்வதனைத்தும் அதற்காகத் தான். உங்கள் உடல் மந்தமடைந்துள்ளது - அதற்காகத்தான் காலையில் ஹடயோகா. உங்கள் மனம் பழக்கமான விதங்களிலேயே இயங்கிகிறது - அதற்காகத்தான் ஈஷா யோகா நிகழ்ச்சியில் வழங்கப்படும் கருவிகளும் சில தியானப் பயிற்சிகளும். உங்கள் சக்தி அதன் போக்கில் இயங்குகிறது - அதற்காகத்தான் சாதனா. விழிப்புணர்வற்ற நிலையின் சுழற்சியான தன்மையை உடைத்து விழிப்புணர்வாக மாறுவதே நோக்கம். நீங்கள் விழிப்புணர்வாக மாறும்போது, ஆரம்பகாலத்தில் நாம் அறியாத இடம் போல அது தோன்றலாம், கடினமானது போலவும் தோன்றலாம். ஆனால் பழக்கத்தின்படி இயங்குவது சுலபமாகத் தோன்றினாலும், விழிப்புணர்வு இல்லாதபோது வளர்ச்சி இருக்கமுடியாது.

இருபத்தைந்து வருடங்களுக்கு முன் கோவை சிறைச்சாலைக்கு யோகா நிகழ்ச்சி நடத்துவதற்கு நான் சென்றபோது, பல மனிதர்கள் தங்கள் வாழ்க்கையில் விரும்பக்கூடிய விதத்தில் அது அமைக்கப்பட்டிருப்பதை கவனித்தேன். அந்த இடத்தில் எப்போதுமே யாரோ ஒருவர் உங்களுக்காக கதவுகளைத் திறக்கிறார்கள், மூடுகிறார்கள்; அவர்கள் உங்களுக்காக light-ஐ on செய்கிறார்கள், off செய்கிறார்கள்; நேரத்திற்கு உணவு வருகிறது. தங்கள் வாழ்க்கையில் எல்லாம் நிர்வகிக்கப்பட்டு, ஒழுங்குபடுத்தப்பட்டு, செயல்திறன்மிகுந்த விதத்தில் இயங்கவேண்டும் என்றே பெரும்பாலான மனிதர்கள் விரும்புகிறார்கள். ஆனால் பிரச்சனை என்னவென்றால், சிறைச்சாலையில் அது உங்கள்மீது திணிக்கப்படுகிறது, அதனால்தான் மக்கள் வேதனைப்படுகிறார்கள். நீங்கள் சிறைச்சாலைக்குள் நுழைந்தாலே, அந்தக் காற்றிலேயே வேதனை கலந்திருக்கும். எந்த சிறைச்சாலையில் நான் யோகா நிகழ்ச்சி நடத்தினாலும், கண்களில் கண்ணீரின்றி அவ்விடத்தை விட்டு ஒருமுறை கூட நான் வெளியே காலெடுத்து வைத்ததில்லை. தாங்கமுடியாத அளவு அங்கே வேதனை நிறைந்திருக்கும். வசதிகளும் சொத்துக்களும் மற்ற பொருட்களும் இல்லாததால் மனிதர்கள் வேதனைப்படுவதில்லை - சுதந்திரம் இல்லாததாலே மனிதர்கள் வேதனைப்படுகிறார்கள்.

சிறை வாழ்க்கை என்பது, வேலைக்குச் செல்வது, traffic-ல் மாட்டிக்கொள்வது, தினசரி சந்திக்கும் இக்கட்டான சூழ்நிலைகள், என்று எதுவுமின்றி மிக சுலபமானதாய் இருக்கிறது. ஒரு சிறைவாசியாக, ராஜமரியாதையை அனுபவிக்கும் விருந்தினராகவே இருக்கிறீர்கள். ஆச்சரியங்களும் அதிர்ச்சிகளுமற்ற, முற்றிலும் திட்டமிடப்பட்ட வாழ்க்கையை நீங்கள் வாழ விரும்புகிறீர்கள் என்றால், சிறை வாழ்க்கையில் அவை அனைத்தும் இருக்கிறது. எதிர்பாராது நிகழும் சின்னச்சின்ன விஷயமும் உங்களுக்கு மனஅழுத்தமும் டென்ஷனும் பதற்றமும் ஏற்படுத்துகிறது என்றால், சிறை வாழ்க்கை சிறந்ததாக இருக்கும். எல்லாம் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது, அதிர்ச்சிகள் எதுவுமில்லை. அடுத்த ஏழு நாட்களுக்கான உணவுப்பட்டியல் கூட பலகையில் எழுதி வைக்கப்பட்டிருக்கும், அதிலிருந்து துளிகூட மாறாது. உணவும் சரியான அளவு பரிமாறப்படும், அதிகமாகவும் இருக்காது, குறைவாகவும் இருக்காது. எல்லாம் திட்டப்படி நடக்கும். ஒருங்கிணைக்கப்பட்ட, அதிர்ச்சிகளற்ற வாழ்க்கையைத் தேடுபவர்களுக்கு சிறைச்சாலையே சிறந்த இடம். ஆனால் சுதந்திரம் இல்லாவிட்டால் மனிதர்கள் சொல்லமுடியாத வேதனைக்கு உள்ளாகிறார்கள். பழக்கம் என்றாலே உங்களுக்குள் ஒரு சிறையை உருவாக்கிவிட்டீர்கள் என்று அர்த்தம், காலப்போக்கில் அது வேதனையை ஏற்படுத்தும். ஆரம்பத்தில் அது செயல்திறன்மிகுந்த விதத்தில் செயல்படுவது போலத் தோன்றலாம், ஆனால் காலப்போக்கில் சிறையாகிவிடும். சிறை என்பது பலவிதங்களில் செயல்திறன்மிக்க வாழ்க்கையாக இருக்கிறது. ஆனால் செயல்திறனுக்காக இந்த உயிர் ஏங்கவில்லை. இந்த உயிர் விரிவடைவதற்குத் தேவையான சுதந்திரத்திற்காகவே ஏங்குகிறது. அந்த சுதந்திரம் பறிக்கப்பட்டுவிட்டால், கனக்கச்சிதமாக திட்டமிடப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் மனிதர்களின் முகம் நீண்டு சந்தோஷமில்லாது போய்விடும்.

அமெரிக்காவின் பிரபலமான மேலாண்மை நிபுணர் ஒருவரிடம் நான் உரையாடிய நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. அவர் இறுக்கமான செயல்முறைகளை அடிப்படையாகக் கொண்ட மேலாண்மைக் கொள்கைகளை உபதேசித்தார். அவர் வழங்கிய வழிமுறைகளில், செயல்திறனை அதிகரிப்பதற்காக எல்லா நுணுக்கங்களும் முன்பே வரையறுக்கப்பட்டன. எனக்கோ அது சிறையைப் போலத் தெரிந்தது. இன்னொரு உதாரணம் தரவேண்டும் என்றால், மிக அழகாகத் தெரியும் ஒழுங்குபடுத்தப்பட்ட தோட்டங்கள் உள்ளன. எல்லாம் குளறுபடியாகத் தோன்றும் காடுகள் உள்ளன. செயற்கையாய் அழகூட்டப்பட்டிருக்கும் தோட்டத்தை நீங்கள் ஒரு மாதம் பராமரிக்காவிட்டால் கூட அது பாழாகிவிடும். காடுகளோ பலகோடி வருடங்களாக தம்மைத்தாமே பராமரித்து வந்துள்ளன. அதனால் காடுகளே சிறந்த முறையில் ஒருங்கிணைந்து, செயல்திறன்மிகுந்த விதத்தில் இயங்குவது கண்கூடு. இந்த உதாரணத்தை அடுத்த படிக்கு எடுத்துச் சென்றால், அழகூட்டப்பட்ட தோட்டமாய் இருப்பதிலிருந்து, வெளி உதவியின்றி தன்னைத் தானே பராமரித்துக்கொள்ளும் காடாக உங்களை நீங்கள் மாற்றிக்கொள்வதே ஞானோதயம். அதற்கு யாரும் நீர்ப்பாய்ச்சத் தேவையில்லை, உரம்போடத் தேவையில்லை, வெட்டிவிடத் தேவையில்லை. எல்லாம் அதற்குள்ளேயே நிகழ்கிறது. குளறுபடியாக இருப்பது செயல்திறன்மிக்க நிலை என்பதால், அது தன்னைத் தானே தக்கவைத்துக் கொள்ளும்.

நம் தர்க்க அமைப்பிற்குள் பொருந்தாததால்தான் நாம் ஏதோவொன்றை குளறுபடி என்கிறோம், ஆனால் அது செயல்திறனற்ற நிலை என்று அர்த்தமல்ல. பழக்கம் என்றால் உங்கள் தர்க்க மனதிற்கு நீங்கள் அடிமையாகிவிட்டீர்கள். காலப்போக்கில் அது தன்னிச்சையாக, விழிப்புணர்வின்றி நடக்கத் துவங்குகிறது. பழக்கங்களைக் கைவிடுவதற்கு நீங்கள் விழிப்புணர்வாக மாறவேண்டும். நீங்கள் அதிக விழிப்புணர்வானால், பழக்கங்கள் என்று எதுவும் இருக்காது. அந்தக் கணத்தில் உங்களுக்கும் உங்களைச் சுற்றியிருப்பவர்களுக்கும் சரியானது எதுவோ அதைச் செய்வீர்கள். தன்னிலை மாற்றத்தை ஏற்படுத்துவது உங்கள் நோக்கமல்ல, உங்கள் விழிப்புணர்வே!

Love & Grace