இரண்டு மாத பயணத்திற்கு பின் இந்தியா வந்துள்ள சத்குரு, எதிர்வரும் தேசிய தேர்தல் சூழ்நிலையை உற்றுப் பார்த்து, அங்கு நிலவும் அரசியல் சூழ்நிலையைப் பற்றி இந்த வார சத்குரு ஸ்பாட்டில் பேசுகிறார். மும்பையில் சச்சினுக்கு வழங்கிய நிறைவு விழாவைப் பற்றி சிலாகித்துப் போகும் இவர், சச்சினிடமிருந்து நம் அரசியல் தலைவர்கள் ஏதாவது கற்றுக் கொள்வார்களா என தன் ஆதங்கத்தை கேள்வியுடன் நிறைவு செய்கிறார். படித்து மகிழுங்கள்!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

59 நாள் பிரயாணம். 25 நாட்களில், 6 தேசங்கள். பல்வேறு நிகழ்ச்சிகள். இதோ நான் சற்றே களைத்தவனாய், புது தில்லியில் உள்ள டெர்ரா ஃபர்மாவில் (terra firma) உள்ளேன். YPO (Young Presidents Organization) மற்றும் வேறு சில முக்கிய மாநாடுகளில் பேசுவதற்கும் மக்களைச் சந்திப்பதற்கும் இங்கு வந்திருக்கிறேன். தில்லியில் இருப்பதால், நாடு முழுவதும் பரவி வரும் அரசியல் தீப்பொறிகளின் விஷப்புகையை தவிர்க்க இயலவில்லை.

முன்னெப்போதும் இல்லாத வகையில், சூழ்நிலை தற்சமயம் சீர்கெட்டுக் கொண்டிருக்கிறது. தன்னைத் தேர்ந்தெடுத்தால், தன்னால் என்னென்ன செய்ய முடியும் என்பதைப் பற்றிய கருத்தாழமிக்க விவாதங்களை விடுத்து, தன்னுடைய உரிமைகளைப் பற்றியும் தனது முன்னோர் இந்த தேசத்தை தான் ஆள்வதற்காக விட்டுச் சென்றுள்ள பிறப்புரிமைகளைப் பற்றியும் பெரும் கட்சிகள் பேசிக் கொண்டிருக்கின்றன. யார் வேண்டுமானாலும் ஆளமுடியும் என்பதே ஜனநாயகம், அது தன் முன்னோர் யார், தன் பரம்பரை எப்படிப்பட்டது, எவ்விதமான பின்னணியிலிருந்து நான் தோன்றியிருக்கிறேன் என்பதைப் பற்றி அல்ல. அரசியல் ஆடுகளத்தில், ஒருவொருவரை ஒருவர் பொய்யர்கள், திருடர்கள், கபடதாரிகள் என பலவகையாய் வர்ணனை செய்துகொள்ளும் போக்கு வெகு சாதாரணமாய் ஆகிவிட்டது.

அன்பிற்குரிய நம் பாரதம், ஆட்சி செய்யப்படாமல் மீண்டும் அடிப்படை இயல்புகளுக்கே தள்ளப்பட்டுள்ளது. தேசத்தின் பெருமையும் தன்மான உணர்வும் மக்கள் மனதிலும் உள்ளங்களிலும் மீட்டெடுக்கப்பட வேண்டும். நஞ்சூட்டப்பட்ட அரசியல் போர் நம் முன்னே விரிகிறது, அதன் காட்டத்தை நம் தலைநகரில் நம்மால் தவிர்க்க இயலவில்லை. இந்த அரசியல் போர்களின் அடிப்படையை தேசத்தின் பல பகுதிகளுக்கும் பரவாமல் தடுப்பது மிக முக்கியம்.

ஆனால் பாரதத்தில் அதன் இரத்தினங்களும் இருக்கத்தான் செய்கின்றன. சச்சின் டெண்டுல்கரின் முதல்தரமான விளையாட்டு நேர்த்தி, ஒரு கதைப் புத்தகப் பாணியில், மனதைத் தொடுவதாகவும் பிரம்மிக்கத் தக்கதாகவும் மும்பையில் நிறைவுக்கு வந்தது. 'உலகைச் சுற்றி வந்த இந்த வானம்பாடி' தனித்துவம் வாய்ந்தவர் எனச் சொல்லலாம். சமநிலையான மனதும், பணிவான குணமும் ஒரு மனிதரை எந்த அளவிற்கு உயர்த்தும் என்பதை, பெரும்படிகள் எடுத்த இந்தச் சிறிய மனிதரின் வாழ்க்கை நமக்கு உதாரணமாய் சொல்கிறது. பல திறமை வாய்ந்த கிரிக்கெட் வீரர்கள் இருந்தாலும், எவரையும் சச்சினுடன் ஒப்பிட முடியாத அளவிற்கு இவர் உயர்ந்து நிற்கிறார். ஜாம்பவனாய் உயர்ந்து நிற்கும் சிகரங்கள் எல்லாம் இந்த மனிதர் முன் சிறிதாகிப் போவார்கள். இந்த சிற்றுருவம் கொண்ட மனிதரோ, தான் நடைபயிலும் பூமியை வணங்குகிறார், தன் நன்றியை ஆகாயத்திற்கு செலுத்துகிறார்.

உலகம் முழுக்க சச்சினை நேசிப்பவர்களும் கிரிகெட்டில் கைதேர்ந்தவர்களும் சச்சின் செய்த சாதனைகளே, சாதனைகளுக்கெலலாம் சாதனை என நெஞ்சாரப் புகழும்போது, வேறொருவரிடமிருந்து அவருக்கு விருதொன்றும் தேவையில்லை. ஆனால் பாரத ரத்னா விருதைப் பற்றி ஒர் அரசியல் யுத்தமே அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இந்த சிறிய ரத்தினத்திடமிருந்து நம் அரசியல் தலைவர்கள் பணிவையும், சமநிலையையும், செய்து கொண்டிருக்கும் செயலிற்கான நோக்கம், அதற்கான உறுதியையும் பாடமாக பெற்றுக் கொள்வார்களா? ஆணவம், அறியாமை என தாங்கள் கட்டுப்பட்டிருக்கும் சுவர்களை உடைத்து, தேசம் வெற்றி பெற சில முயற்சிகளை இவர்கள் செய்வார்களா?

Love & Grace