சிவன் - இயற்கை விதிகளில் அடங்காதவன்!

இதோ இன்று மஹாசிவராத்திரி... சிவனின் தன்மையை உணரும் ஓர் இரவு! இந்த வார சத்குரு ஸ்பாட்டில், சிவனைப் பற்றிய அரிய செய்தியை நமக்கு தருவதோடு, இரவு ஈஷாவில் நிகழவிருக்கும் இவ்விழாவில் இணைந்துகொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறார் சத்குரு...


சிவன் – இயற்கை விதிகளில் அடங்காதவன் !, Shivan iyarkai vithigalil adankaathavan

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இன்று சிவனைப் பற்றிய அறிமுகம் துரதிருஷ்டவசமாக, பலருக்கும் இந்திய காலண்டர் மூலம் மட்டுமே நிகழ்கிறது. திரண்ட கன்னங்களும், நீல நிற தொண்டைக்குழியும் கொண்டவராக மட்டுமே ஓவியர்கள் அவரை சித்தரிக்கின்றனர். திரண்ட கன்னங்களும் நீல நிறமும் கொண்ட அதே மனிதரை, உங்கள் விருப்பபடி ஒரு திரிசூலத்தையோ, புல்லாங்குழலையோ, வில்லையோ ஏந்த வைத்து, அவரை கிருஷ்ணராகவோ, ராமனாகவோ, இப்படி நீங்கள் யாரை விரும்புகிறீர்களோ அவராகவே மாற்றி விடமுடியும்.

"ஷிவா" என்று நாம் சொல்லும்பொழுது அடிப்படையான இரு விஷயங்களைப் பற்றி நாம் குறிப்பிடுகிறோம். "ஷிவா" என்றால் "எது இல்லையோ அது" என்று பொருள். இன்றைய நவீன விஞ்ஞானம், அனைத்துமே ஒன்றுமில்லாததில் தோன்றி, ஒன்றுமில்லாததில் மறைகிறது என்கிறது. பிரபஞ்சத்தின் அடிப்படைத் தன்மையே, பரந்து விரிந்த வெறுமை மட்டும்தான். பால்வெளிகள் என்பது சிறிய நிகழ்வு, மீதம் இருப்பதெல்லாம் பரந்த வெற்றிடம் மட்டுமே. இதைத்தான் நாம் "ஷிவா" என்று குறிப்பிடுகிறோம். எனவே ஷிவாவை இருப்பு/மனிதர் என்று வர்ணிப்பதில்லை, இருப்பற்றது என்றே கூறுகிறோம்.

இன்னொரு தளத்தில், "ஷிவா" என்று நாம் சொல்லும்பொழுது, யோக விஞ்ஞானத்தின் அடிப்படையான ஆதியோகி அல்லது முதல் யோகியைக் குறிப்பிடுகிறோம். யோகா என்றால் தலைகீழாக நிற்பதோ அல்லது உங்கள் மூச்சை பிடித்து வைப்பதோ அல்ல. யோகா என்பது இந்த உயிர் உருவான விதம், அந்த உயிரை அதன் உச்சபட்ச சாத்தியத்திற்கு எடுத்து செல்லும் விதம் பற்றி அறிய உதவும் விஞ்ஞானம், தொழில்நுட்பம்.

யோகியாக அறியப்படும் தன்மையும், பிரபஞ்சத்தின் அடிப்படையாக அறியப்படும் தன்மையும் ஒன்றுதான். ஏனென்றால் ஒரு யோகியானவர், பிரபஞ்சத்தையே தனக்குள் ஒரு பாகமாக அனுபவித்தவர். இந்த பிரபஞ்சத்தை உங்களுக்குள் ஒரு ஷணமேனும் அனுபவத்தில் பிடித்து வைக்க வேண்டுமென்றால், நீங்கள் அந்த ஒன்றுமில்லாததாக இருக்க வேண்டும். ஒன்றுமில்லாதது மட்டுமே அனைத்தையும் பிடித்து வைக்க முடியும். ஏதோ ஒன்று அனைத்தையும் பிடித்து வைக்க முடியாது. இந்த கிரகமானது, இங்கிருக்கும் கடலை பிடித்து வைக்க முடியுமே தவிர அந்த சூரிய மண்டலத்தை அல்ல. சூரிய மண்டலமானது அந்தச் சூரியனையும் மற்ற கிரகங்களையும்தான் பிடித்து வைக்க முடியுமே தவிர அந்தப் பால்வெளியை அல்ல. அப்படியென்றால், ஒன்றுமில்லாதுதான் அனைத்தையும் பிடித்து வைக்க முடியும் என்பது உங்களுக்குப் புரியும். ஷிவாவை, "எது இல்லையோ அது" என்று சொன்னாலும், யோகி என்று பேசினாலும், இரண்டும் ஒன்றுதான், ஆனால் இரண்டுமே வெவ்வேறு அம்சங்கள். இந்தியா ஒரு பேச்சுவழக்கு கலாச்சாரம். எனவே ஒன்றில் இருந்து இன்னொன்றுக்கு எளிதில் நாம் இடம் பெயர முடியும்.

யோக விஞ்ஞானத்தின் பரிமாற்றம், கேதார்நாத்தில் இருந்து சில மைல் தொலைவில் உள்ள காந்திசரோவர் ஏரிக் கரையில் நிகழ்ந்தது. இது, அனைத்து மதங்களுக்கும் முற்பட்டது. ஷிவா, தன்னுடைய ஏழு சீடர்களான சப்தரிஷிகளுக்கு, யோகாவை விஞ்ஞானபூர்வமாக அறிமுகப்படுத்தினார். இந்த உயிர் இயங்கும் விதத்தை, தத்துவமாக இல்லாமல், அறிவாக இல்லாமல், ஒரு அனுபவமாக பரிமாறினார். படைப்பின் ஒவ்வொரு அம்சத்தையும் ஆராய்ந்து, யோகாவை மனித விழிப்பணர்வு பெற உதவும் ஒரு தொழில்நுட்பமாக உருவாக்கினார். இயற்கை நம்மீது விதித்துள்ள பொருள்தன்மை சார்ந்த விதிகளைக் கடக்க உதவும் படி இது.

பொருள் தன்மையின் விதிகளுக்கு உட்பட்டே வாழ்க்கை நிகழ்கின்றது. ஆனால் மனித இனத்தின் அடிப்படை இயல்பே இந்த கட்டுப்பாடுகளைக் கடந்து செல்வதுதான். பொருள்தன்மை சார்ந்த இயற்கை விதிகளை தகர்த்தெறிவதே ஆன்மீகம். இந்த வகையில் நாம் அனைவரும் விதிகளை மீறியவர்கள். சிவனோ இத்தகைய விதிமுறைகளில் எல்லாம் அடங்காதவன். சிவனை நீங்கள் வழிபட முடியாது. ஆனால் அவன் குழுவில் நீங்கள் இணைந்துகொள்ளலாம்.

இந்த குழுவில் இணைய விருப்பமென்றால் மஹாசிவராத்திரியை விட சிறந்த ஒரு இரவு வெறெதுவும் இல்லை. இந்த இரவில் கோள்களின் அமைப்பு, மனித உடலில் இயற்கையாகவே சக்தி மேலெழும்பும் வகையில் உள்ளது. ஒருவரின் சக்தியை அதன் உட்சபட்ச நிலைக்கு உயர்த்தி, தன்னை கறைத்து, பிரபஞ்சத்தோடு ஒன்றாவது இந்த இரவில் அபரிதமாக நிகழ்ந்துள்ளது. இரவு முழுவதும் நிகழும் கொண்டாட்டங்கள், விழிப்போடு இருந்து, முதுகுத் தண்டை நேரே வைத்து இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள உதவியாக இருக்கும். இந்த மஹாசிவராத்திரி வெறும் விழித்திருக்கும் இரவாக இல்லாமல் விழிப்புணர்வுக்கான இரவாக இருக்கட்டும்.

Love & Grace