சக்திவாய்ந்த ஒரு என்ஜினை உருவாக்கிடுங்கள்

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், ஒருவர் தன் வேலை, உறவுகள் மற்றும் சமுதாயத்திட்டங்கள் பற்றி காணும் கனவுகளை எப்படி நிஜமாக்குவது என்று சொல்கிறார் சத்குரு.
 
 
 
 

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், ஒருவர் தன் வேலை, உறவுகள் மற்றும் சமுதாயத்திட்டங்கள் பற்றி காணும் கனவுகளை எப்படி நிஜமாக்குவது என்று சொல்கிறார் சத்குரு.

Question:வேலை, உறவுகள் மற்றும் சமுதாயத் திட்டங்களைப் பொருத்தவரை, ஒருவர் மனதில் காணும் கனவை எப்படி நனவாக்குவது?

சத்குரு:

மனதை ஒருவிதமாக ஒருமுகப்படுத்துவதன் மூலம் நீங்கள் வாழ்வில் சில விஷயங்களை சாதிக்கமுடியும். ஆனால் சாதனை என்றால் என்னவென்று நாம் மறு ஆய்வு செய்யவேண்டும். நீங்கள் விரும்பியதை அடைகிறீர்கள் என்றால் ஏதோ ஒன்றை சாதித்துவிட்டீர்கள் என்று அர்த்தமல்ல. மனிதனின் ஏக்கத்தை தணிப்பதற்கு இது மிகவும் நடுத்தரமான வழி. குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் நான் இதை கவனிக்கிறேன், இதை மாற்றிட விரும்புகிறேன்.

தொழில், உறவுகள், இதனுடன் நீங்கள் சொன்னது போல சமுதாயத் திட்டங்களைப் பொருத்தவரை, உங்களுக்கு பொருளளவில் சில விஷயங்கள் தேவைப்படும். உதாரணத்திற்கு, மூன்று பேரை ஏற்றிச் செல்லக்கூடிய ஆட்டோவை எடுத்துக்கொள்ளுங்கள், அது பத்து பேரை சுமந்து செல்கிறது. ஆட்டோ ஓட்டுனர் தட்டுத் தடுமாறி ஒரு மலைமேல் ஏறி, எப்படியோ உச்சிக்கு சென்றுவிடுகிறார். அவர் இதை ஒரு சாதனையாக நினைக்கிறார். அவர் என்ஜினை அணைத்துவிட்டு டீ குடிக்க உட்கார்ந்து கொண்டாடுவார். தனிப்பட்ட அளவிலும், பொருளாதார அளவிலும் இது பொருந்தலாம், ஆனால் இது ஒரு சாதனையோ தொலைநோக்குப் பார்வையோ அல்ல. இது பல வழிகளில் சுலபமாக அடைந்திருக்கக்கூடிய அற்ப ஆசை.

மக்கள் மனங்களில் இவை பெரிதாகியிருப்பதன் காரணம், அவர்கள் தங்கள் குறிக்கோள்களை ஒரு குறிப்பிட்ட விதத்தில் அமைத்திருக்கிறார்கள். ஈஷா யோகாவின் அறிமுக வகுப்பிலேயே இது குறித்து நாம் பேசுகிறோம். யோக முறையில், நீங்கள் அடைய விரும்பும் இலக்கில் ஒரு கண்ணை வைத்தால், உங்கள் பாதையை கண்டுகொள்ள உங்களுக்கு ஒரு கண் மட்டுமே இருக்கிறது என்று சொல்வோம். ஒற்றைக்கண் கொண்ட ஒருவர் வீடு சென்றடைந்ததால், தான் பெரிய விஷயத்தைச் செய்துவிட்டதாக நினைக்கிறார். ஆனால் தெளிவாக பார்க்கும் திறன் கொண்ட ஒருவரோ வீடு சேரும் பாதையை கண்டுபிடிப்பதைப் பற்றி அதிகம் சிந்திப்பதில்லை, ஏனென்றால் அது நீங்கள் செய்யக்கூடிய மிக எளிதான் செயல்.

மனித உயிரை மேம்படுத்தாமல் சில அற்பமான குறிக்கோள்களை நாம் அமைத்துக் கொள்கிறோம். மலைமேல் ஏறுவதற்கு சக்தியில்லாத இந்த சிறிய என்ஜின், ஏறிவிட்டு அது பெரிய சாதனை படைத்துவிட்டதாக நினைக்கிறது. ஆனால் அது தன்னை ஒரு சக்திமிக்க என்ஜினாக உருவாக்கிக்கொண்டால், முயற்சியின்றி எப்படியும் அது மேலே சென்றுவிடும். மனிதனின் கவனம் இங்குதான் இருக்கவேண்டும், "நான் என்னவாக வேண்டும்?" அல்லது "நான் என்ன வைத்திருக்க வேண்டும்?" என்பதில் இருக்கக்கூடாது. ஏதோ ஒன்றை வைத்திருப்பதும் ஏதோ ஒன்றாக ஆகுவதும் உங்கள் குறிக்கோளாக இருக்கக்கூடாது. "நான் இந்த உயிரை எப்படி மேம்படுத்துவது?" என்பதே உங்கள் குறிக்கோளாக இருக்கவேண்டும். நான் "உயிர்" என்று சொன்னால், உங்கள் தொழிலைப் பற்றியோ, உறவுகள் பற்றியோ, உங்கள் சமுதாயத் திட்டங்கள் பற்றி கூட நான் பேசவில்லை. இந்த உடலில் உறையும் இந்த உயிரைப் பற்றி நான் பேசிக்கொண்டு இருக்கிறேன். இப்போது இருக்கும் நிலையிலிருந்து எப்படி இதை இன்னும் மேம்பட்ட, அதிக சக்திவாய்ந்த உயிராக மாற்றுவது என்று பார்த்து, அதை மட்டும் செய்யுங்கள். நீங்கள் அப்படிச் செய்தால், அது செய்ய வேண்டிய அனைத்தையும் செய்யும்.

யோகா இது குறித்ததுதான். நீங்கள் என்ன வைத்திருக்க வேண்டும் அல்லது என்ன செய்யவேண்டும் என்பது பற்றி கவலைப்படாதீர்கள். இதை ஒரு சக்திவாய்ந்த என்ஜினாக மட்டும் மாற்றுங்கள், இது எந்த மலையையும் ஏறும். இதுதான் உங்கள் குறிக்கோளாக இருக்கவேண்டும். "எனக்கு இப்படிப்பட்ட வேலை வேண்டும், எனக்கு இவ்வளவு ஆயிரம் டாலர்கள் சம்பாதிக்க வேண்டும், பக்கத்து வீட்டில் இருக்கும் இந்த அழகான பெண்ணை மணம் முடிக்க வேண்டும்..." என்பதல்ல. இப்போது இது இருக்கும் அளவையும் ஆற்றலையும் தாண்டி இதை வளர்த்திடுங்கள், நீங்கள் கற்பனை செய்துகூட பார்த்திராத அளவு இவையனைத்தும் சிறப்பாக நடைபெறும். எல்லாவற்றிற்கும் மேலாக, உங்கள் வாழ்க்கை ஏற்பாடுகள் உங்கள் வாழ்க்கைத் தரத்தை நிர்ணயிப்பதில்லை. உங்கள் வாழ்க்கையின் தன்மையை நிர்ணயிப்பது உங்களுக்குள் துடித்துக்கொண்டு இருப்பது. வாழ்க்கை அப்படித்தான் நடக்கவேண்டும், ஏனென்றால் உயிர் உள்ளே நடக்கிறது. நீங்கள் செய்யும் ஏற்பாடுகள் சமுதாய அளவில் அர்த்தமுள்ளதாக இருக்கலாம், ஆனால் இந்த பிரபஞ்சத்தின் இருப்பு நிலையில் அதற்கு எந்த அர்த்தமுமில்லை.

எனவே அற்ப ஆசைகளை தொலைநோக்குக் குறிக்கோள் என்று சொல்லாதீர்கள்."நான் ஒரு புதிய மாடல் கார் வாங்க நினைத்து அது நடந்துவிட்டது!" என்றால், அது எப்படியும் நடக்கும், ஏனென்றால் இப்போது உங்களுக்கு வட்டியில்லாத (0%) கடன் கொடுக்கிறார்கள், அதை பத்து வருடங்களில் உங்களிடமிருந்து திரும்பிப் பெற்றுக் கொள்வார்கள். எவரும் ஒரு கார் வாங்கலாம், அதில் எந்த அர்த்தமும் இருக்காது, ஆனால் காரில் உட்கார்ந்து நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்கள் அக்கம் பக்கத்தினர் உங்களைப் பார்த்து பொறாமைப்பட்டால் தான் நீங்கள் சந்தோஷமாக உணர்வீர்கள். அவர்கள் அனைவரிடமும் உங்கள் காரைவிட பெரிய கார்கள் இருந்தால், மீண்டும் நீங்கள் குப்பையைப் போல உணர்வீர்கள். ஆனால் இந்த மனிதன் மேம்படுத்தப்பட்டால், நீங்கள் நகரத்தில் அமர்ந்திருந்தாலும் சரி, மலையில் தனியாக அமர்ந்திருந்தாலும் சரி, அற்புதமாக இருக்கிறது. இதுதான் நீங்கள் அடையவிரும்பும் இலக்காக இருக்கவேண்டும்.

Love & Grace

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1