Question: சத்குரு, உங்கள் வெளி வேலைகளைக் குறைத்துக் கொண்டு ஆசிரமத்தில் ஆன்மீகப் பணிகளை தீவிரப்படுத்துவேன் என்று சொல்லியிருந்தீர்கள். இது குறித்து சிறிது விளக்க முடியுமா?

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இதை ஏற்கனவே நாம் பல வழிகளில் செய்து கொண்டுதான் இருக்கிறோம். வெளிசெயல்களை நான் இன்னும் குறைத்துக் கொள்ளவில்லை. சொல்லப் போனால் அது இன்னும் அதிகரித்துக் கொண்டே போகிறது என்பதை நான் ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும். அதே நேரத்தில், நம் ஆசிரமத்தில் பலரை நாம் சிறுசிறு அளவுகளில் படிப்படியாக மேம்படுத்திக் கொண்டு வருகிறோம். அருகில் இருந்து பார்த்துப் பார்த்து செய்யவேண்டிய அவசியம் இல்லாமலே, இவற்றைச் செய்திடலாம். ஒரு சில பிரம்மச்சாரிகள் தீவிர சாதனாவில் இருக்கிறார்கள். இது பலன் தருவதற்கு சிறிது காலம் பிடிக்கும்... ஆனால் மிகத் தீவிரமான சாதனா நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் பலர் இந்த சாதனாவில் நிலைபெறும் போது... நம் ஆசிரமத்தில் நீண்ட காலங்கள் வாழும் பிற மக்களுக்கு, உடலளவிலும், மனதளவிலும் உறுதியாய் இருப்பவர்களுக்கு, நாம் ஏதோ ஒன்று செய்ய முடியும்.

அதிக அளவில் மக்களை கையாள, 2010ல் அமெரிக்காவில் 'அனாதி' நிகழ்ச்சியில் செய்தது போல சில முயற்சிகளை எடுத்திருக்கிறோம். 'அனாதி'யில் நடந்தேறியது மிகமிகக் குறிப்பிடத்தக்கது. இது போன்ற விஷயங்கள் நடப்பது அரிது, அதிலும் மிக அதிகமான மக்களுக்கு ஒரே நேரத்தில் நிகழ்வது மிகவும் அரிது. அதில் ஒரு சில மக்கள் மிக நன்றாகவே மலர்ந்திருக்கிறார்கள். ஆனால், இன்றைய உலகின் பிரச்சினையே, 'இன்று ஒன்று, நாளை இன்னொன்று' என்று மக்கள் தங்கள் மனதை மாற்றிக் கொண்டே இருப்பது தான். 'நிலையாய் இருந்தோம், செய்தோம்' என்பதே இல்லாமற் போய்விட்டது. ஆதிசங்கரர் "நிஷ்சல தத்வம் ஜீவன் முக்தி" என்றார். அதாவது ஏதோ ஒன்றின் மீது நிலையான கவனம் வைத்தால், நமக்கு முக்தி கிடைத்து விடும். கவனம், கடவுள் மீதோ, சொர்க்கம் மீதோ என்றல்ல, ஏதோ ஒன்றின் மீது நிலையான கவனம் வைத்தாலே, நமக்கு முக்தி கிடைத்திடும் என்கிறார் அவர். இதோ இந்தப் பூவை கவனம் சிதறாமல் உற்றுப் பார்த்தாலும்... அந்த எறும்பை கவனம் குறையாது பார்த்துக் கொண்டிருந்தாலும் கூட அது நடந்திடும். நீங்கள் எப்படி வேண்டுமானாலும் இருங்கள். ஆனால், அலைபாயாத கவனத்தோடு இருங்கள்! நீங்கள் அன்பாக இருக்க வேண்டும் என்றில்லை, கோபமாகவேனும் இருங்கள்... ஆனால் முழுமையான தீவிரத்துடன், அந்நிலையில் இருந்து சற்றும் பின்னடையாமல் இருங்கள்... முக்தி கிடைத்திடும். இனிமையாய் இருக்கிறீர்களோ, இனிமையற்று இருக்கிறீர்களோ அது முக்கியமில்லை. ஆனால் அசையா கவனத்தோடு இருங்கள். இது நடந்திடும். 'கவனம்' இத்தனை வலியது. ஆனால் இன்றைய உலகிலோ கவனக் குறைபாடு ஏதோ தகுதி என்பதுபோல் பெருமிதம் கொள்கிறார்கள்.

அனாதியில் அந்த 90 நாட்களில் நடந்தவை, அதில் கலந்து கொண்டவர்களுக்கு கொடுக்கப்பட்ட சாதனா, அதை அவர்கள் உணர்ந்து வந்த விதம், அந்த சாதனாவில் அவர்கள் எட்டிய நிலைகள், தங்களுக்கு அது அதிஅற்புதமாக வேலை செய்கிறது என்று தெரிந்தும் அதைப் பற்றிய எண்ணத்தை அவ்வப்போது மாற்றிக் கொள்ளும் குறிப்பிடத்தக்க அளவிலான மனிதர்கள், என அவர்களை நான் வேடிக்கையாக கவனித்து வந்திருக்கிறேன். ஏதோ ஒன்று உங்களுக்கு வேலை செய்யவில்லை என்றால் அதைப் பற்றி நீங்கள் நினைக்கக்கூட வேண்டாம், அதை விட்டு விடுங்கள். ஆனால், உங்களுக்கு ஒன்று அதிஅற்புதமாக வேலை செய்திருக்கிறது என்றாலும், அதைப் பற்றி அவ்வப்போது மனதை மாற்றிக்கொண்டே இருக்கிறீர்கள் என்றால், உங்கள் 'தவணை முறை' அளவுகளை நீங்கள் தான் முடிவுசெய்ய வேண்டும். சிற்சிறு படியாக எடுப்பதோ, பெரிய படிகளாக எடுப்பதோ உங்கள் விருப்பம். மேற்கத்திய கலாசாரத்தில் மனதை மாற்றிக் கொள்வது என்பது மதிக்கப்படும் விஷயம். எதிலும் நிலையாய் இல்லை எனில், அதுவே சுதந்திரம் என்பது அவர்கள் எண்ணம்.

நம் நாட்டின் நகரங்களும், இக்கலாச்சாரத்தை நோக்கி அதிவேகமாக போய்க் கொண்டிருக்கின்றன. இதே மன நிலையில்தான் இங்கிருப்பவர்களும் இருக்கிறார்கள். ஏதோ ஒன்று அவர்களுக்கு நன்மை அளித்திருந்தாலும், அதோடு அவர்களால் தொடர்ந்திருக்க முடியவில்லை. இது போல் அவ்வப்போது மனதை மாற்றிக் கொண்டே இருப்பவர்களுக்கு, மிக ஆழமான விஷயங்களை எல்லாம் வழங்குவதில் அர்த்தமில்லை. அது அவ்வாறு வேலையும் செய்யாது. உயிர்ப்பற்ற ஏதோ ஒரு பயிற்சியை, சும்மா கொடுக்கவேண்டும் என்பதற்காக உங்களுக்குக் கொடுப்பதென்றால், அதை ஒரு பேப்பரில் எழுதி உங்களுக்குக் கொடுத்து விடலாம். ஆனால் உயிரோட்டம் நிறைந்த ஒரு செயல்முறையை உங்களுக்குப் பரிமாற வேண்டுமென்றால், அதற்கு உயிரையே செலவழிக்க நேரிடும். உங்கள் உயிரை நீங்கள் வீணடிக்கவில்லை, மாறாக என் உயிரை வீணடித்துக் கொண்டிருக்கிறீர்கள். அதை ஏற்க நான் தயாராக இல்லை. விளையாத இடத்தில், கல்லாய் இறுகிப் போன இடத்தில் விலைமதிக்க முடியாத விதையைப் போடுவதில் என்ன பலன்? அதை வளமான பூமியிலே விதைக்கவே நான் விரும்புவேன். அதில் தவறேதும் இல்லையே? வளமான மண்ணிருந்தால், அதில் எல்லாவற்றையும் நான் தூவி விடுவேன். ஆனால் ஒரு கல்லின் மீது அது வீணாகத்தான் போகும்.

அதனால்தான் நாம் படிப்படியாகப் போகிறோம். யார் யார், எப்படியெப்படி இருக்கிறார்கள் என்று பார்த்து, அதைப் பொறுத்து என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்திடுவோம். நீங்கள் ஆசிரமத்தில் இருந்தாலும், இல்லையென்றாலும், நான் உங்களை பார்த்திருந்தாலும், பார்க்கவில்லை என்றாலும், அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். உங்கள் பெயர் கூட எனக்குத் தெரியாது என்றாலும் பரவாயில்லை. சாதனா செய்து உங்களைத் தயார் நிலையில் நீங்கள் வைத்துக் கொண்டால், சரியான நேரத்தில் என்ன செய்ய வேண்டுமோ அதை நாங்கள் செய்திடுவோம். அதைப் பற்றி நாங்கள் உங்களிடம் பேச வேண்டும் என்றும்கூட அவசியம் இல்லை. உங்கள் அமைப்பை சாதனா செய்து, தயாராக வைத்திருங்கள். மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்வோம்.

திறந்த நிலையில் இருந்திடத் தேவையான முயற்சி எடுத்து, உங்களிடம் இருந்து உங்களை நீங்கள் விடுவித்துக் கொண்டிருந்தால், நீங்கள் வீணாக நான் விட மாட்டேன். அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம். உங்களை உங்கள் கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்திக் கொண்டது தவிர உங்களிடம் வேறு குறை இல்லை. உங்கள் உடலும் மனதும் சொல்வதை எல்லாம் மந்திரமாய் நீங்கள் பின்பற்றாதீர்கள். மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன். இது நான் உங்களுக்குக் கொடுக்கும் வாக்குறுதி!

Love & Grace