இந்தியாவின் 69-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்திய குடிமக்களாக இந்தியாவின் வளர்ச்சிக்கு நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டியதையும், நம் தேசத்தின் வேற்றுமைகள் அனைத்தையும் தாண்டி நம்மை பிணைக்கும் "தேடுதல்" எனும் நூலினை பாதுகாப்பதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறார் சத்குரு.

கடந்த சில நூற்றாண்டுகளாக, இந்தியா, ஒரு தேசமாகவும், இந்தியர்களாகவும், பல்வேறு காரணங்களால் தன் முழுத்திறனுக்கு குறைவாகவே வாழ்ந்திருக்கிறது. சுதந்திரம் கிடைத்து 68 வருடங்கள் ஆகியும், கிட்டத்தட்ட பாதி ஜனத்தொகைக்கு, ஊட்டச்சத்து, ஆரோக்கியம், மற்றும் கல்வி சரியாக போய்ச்சேராத நிலையில் இருக்கிறது. ஆனால் கடந்த ஒரு வருடத்தில் புதியதோர் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் இந்தியாவிலும் பிற தேசங்களிலும் பிறந்துள்ளது. இளைஞர்களின் கூட்டு சக்திகளால் நாம் நல்வாழ்வை நோக்கி சீறிப்பாயும் வாய்ப்பு இப்போது நம்மிடம் உள்ளது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஒரு தேசமாக, நம்மிடம் 125 கோடி மக்களுக்குத் தேவையான நிலம் இல்லை, நீர் இல்லை, மலைகள் இல்லை, காடுகள் இல்லை, வான்வெளி கூட இல்லை. நம்மிடம் இருப்பது எல்லாம் மனிதர்கள் தான். இந்த ஜனத்தொகையை நாம் கல்வி இல்லாமல், தெளிவான நோக்கமில்லாமல், திறமையில்லாமல், ஊக்கமில்லாமல் வைத்திருந்தால், நமக்கு ஒரு பேரிழப்பு காத்திருக்கிறது. ஆனால் இந்த தலைமுறையை தெளிவான நோக்கமுடைய, ஆற்றல்வாய்ந்த, திறமையான, ஊக்கமிக்க தலைமுறையாக மாற்றிவிட்டால், நமக்கு ஓர் அற்புதம் காத்திருக்கிறது.

இந்தியாவுக்கு சக்திவாய்ந்த தேசமாக மாறும் வாய்ப்பு இருக்கிறது. சக்திவாய்ந்த தேசம் என்றால் இராணுவப்படை சக்திவாய்ந்ததாய் இருப்பதல்ல. உலகை நல்வாழ்வு நோக்கி வழிநடத்தத் தேவையான வலிமை, அறிவு மற்றும் ஆற்றல் நம்மிடம் இருப்பதையே சக்தி என்கிறேன். அப்போது பிற உலக நாடுகள் இயல்பாகவே இந்தியாவை நாடும். பழங்காலம் முதல் விவேகம் என்றால் எல்லோரும் கிழக்கு நோக்கி, இந்தியாவை நோக்கி பார்த்தனர். இந்த இடத்தை நாம் தொலைத்து விடக்கூடாது. நாம் வலிமையான தேசமாக மாறி, நம் மக்களை வல்லமை படைத்தவர்களாக மாற்றவேண்டும், அந்த வாய்ப்பு இப்போது நம்மிடம் இருக்கிறது. உலகம் முழுவதற்கும் நல்வாழ்வு கிடைக்கும் வாய்ப்பின் வாசலில் நாம் அமர்ந்திருக்கிறோம்.

இந்த செய்தியின் மூலம், இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனிடமும் நான் வேண்டிக்கேட்பது இதைத்தான், நீங்கள் இந்நாட்டில் இருந்தாலும் சரி வேறு எங்கோ வாழ்ந்தாலும் சரி, இந்த சாத்தியத்தை நிஜமாக்குவது, தலைமையினால் நிகழாது, இதை நிகழ்த்த குடிமக்களாக நீங்கள் ஒவ்வொருவரும் எழுந்து நிற்கவேண்டும். "இதை எப்படிச் செய்வது?" என்பது உங்கள் கேள்வி. உங்கள் வாழ்க்கையில் என்ன செய்தாலும் சரி, விவசாயி, அரசியல்வாதி, போலீஸ், டாக்டர், வக்கீல், எஞ்ஜினியர் என்று என்ன வேலை செய்தாலும், அதை சிறப்பாக செய்யுங்கள். ஒரு நாட்டை முன்னேற்றம் நோக்கி கொண்டுசெல்ல இது மட்டுமே வழி. நாடு முன்னேறுவது, பெரிய பெரிய சொற்பொழிவுகளாலும் கோஷங்களாலும் நிகழாது. நாம் ஒவ்வொருவரும் நாம் செய்யும் பணிகளை வேறொரு நிலையிலான ஊக்கத்துடன் செய்தால் மட்டுமே நாடு முன்னேறும். நாம் செய்வது அனைத்தும், புதியதோர் தேசத்தை உருவாக்கும் உறுதியுடன் ஓர் அர்ப்பணிப்பாக நிகழவேண்டும்.

இப்போது நாம் புதியதோர் சாத்தியத்தின் வாசலில் அமர்ந்திருக்கிறோம். கிட்டத்தட்ட 500 கோடி மக்களின் வாழ்க்கைத்தரத்தை ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு நம்மால் எடுத்துச் செல்லமுடியும். இது சரித்திரம் படைக்கும் வாய்ப்பு, சரித்திரத்தில் மிகக் குறைவான தலைமுறையினருக்கு மட்டுமே இது கிடைத்துள்ளது. என்னுடைய ஆசை, ஒவ்வொரு இந்தியனும் இதற்காக உழைத்து இதை நிஜமாக்க வேண்டும். நான் குறிப்பாக இந்நாட்டின் அரசியல்தரப்பினரிடம் இதை கேட்டுக்கொள்கிறேன். உங்கள் அரசியலை தயவுசெய்து தேர்தலின்போது மட்டும் செய்துகொள்ளுங்கள். மீதி நேரம், மத்தியிலோ மாநிலத்திலோ மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ள அரசுகள், மக்களுக்கு பயனளிக்கும் விதத்தில் தன் வேலையை நல்லபடியாக செய்திட அனுமதியுங்கள். தேர்தலுக்கு ஒருமாதம் முன்னர் மட்டும் அரசியல் நடக்கட்டும். மற்ற நேரத்தில், இந்த தேசத்தை ஒரு உயர்ந்த சாத்தியமாக மாற்றுவது நோக்கி நாம் ஒவ்வொருவரும் செயல்படுவோம். இந்த சாத்தியத்தை நிஜமாக்குவதற்குத் தேவையான உறுதியையும் தைரியத்தையும் நாம் வெளிப்படுத்துவோம். இது தேசப்பற்று சார்ந்த விஷயமல்ல, இது நம் மனிதத்தன்மையைப் பற்றியது.

தேசங்கள் பெரும்பான்மையாக ஜாதி, மதம், இனம் மற்றும் மொழியின் அடையாளங்கள் மீது உருவாக்கப்படுகின்றன. ஆனால் ஒரு தேசமாக நம்மிடம் பற்பல மதங்கள், இனங்கள், ஜாதிகள், மற்றும் மொழிகள் உள்ளன. நாம் மிகவும் பிரம்மாண்டமான, தனித்துவமான தேசம், 10,000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலமிருந்தே நாம் இப்படித்தான் இருந்துள்ளோம். அரசியல்ரீதியாக நமக்குள் பிரிவினைகள் இருந்தாலும், கலாச்சாரரீதியாக நாம் எப்போதும் ஒரு தேசமாகத்தான் இருந்துள்ளோம். அடிப்படையாக நம்மை இணைக்கும் நூல், நாம் உண்மையை நாடுபவர்களின் தேசம் என்பதே. இந்த தனித்துவத்தை நாம் பேணிக்காப்பது முக்கியம். நாம் ஒற்றுமையைத் தேடினால், ஒரே நம்பிக்கை உடையவர்களின் தேசமாக நாம் மாறிவிடுவோம். மக்கள் ஒரே விஷயத்தை நம்புவதால் ஒன்று கூடுவார்கள். ஆனால், இங்கே நாம் எப்போதும் உண்மையையும் விடுதலையையும் தேடும் தேடுதல் உடையவர்களின் தேசமாகவே இருந்துள்ளோம். உண்மையை நாடுபவராக இருந்தால் ஏதோ ஒருவிஷயத்தோடு மட்டும் ஒத்திசைவாக இல்லாமல், உங்களுக்குள் இருக்கும் உயிர் செயல்முறைக்கு ஒத்திசைவாக இருப்பீர்கள், அது ஒருபோதும் தவறாய்ப் போகாது.

இந்த தேடுதலில் நாம் ஒன்றாய் சங்கமித்தோம், ஏனென்றால் தேடுதல் என்பது நீங்களோ நானோ கண்டுபிடித்த ஒன்றல்ல. பிழைப்பு என்பது கவனிக்கப்பட்டுவிட்டால், நம்பிக்கை முறைகளும் வேறு விஷயங்களும் மிக மோசமாக மாசுபடுத்தினாலும் கூட, ஒவ்வொரு உயிரும் இயற்கையாகவே உண்மையை உணர்ந்து, தன்னை விடுவித்துக் கொள்ளவே விரும்பும். ஏனென்றால் மனித புத்திசாலித்தனத்தின் இயல்பே அதுதான். இந்த தேசம் இந்த அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டது. இந்த தேடுதலை நாம் உயிர்ப்புடன் வைத்துக்கொண்டால், இந்த தேசத்தை அழிக்கமுடியாது. இந்த தேடுதலை நாம் பேணிப் பாதுகாக்கவில்லை என்றால், நமக்கு தேசம் என்று எதுவும் இருக்காது. இந்தியர்களாக நம்மை பிணைப்பது என்னவென்று நாம் உணர்ந்திட வேண்டும், இது இந்த 68-வது சுதந்திர தினத்தில் என் ஆசையும் ஆசியும். இந்த அடிப்படையான பண்பை பாதுகாப்பதன் மூலமாக மட்டுமே, நம் வேற்றுமையில் உள்ள அழகை நம்மால் இரசித்திட முடியும்.

Love & Grace