பரந்து விரிந்து கிடக்கும் இப்பிரபஞ்சத்தில் நாம் கற்றதும், குழந்தைகளுக்கு கற்பிப்பதும் என்னவோ கைமண்ணளவுதான். சிறிய அணுவிலிருந்து அந்த அண்டம் வரை ஒவ்வொன்றும் அதிசயமே. இவற்றுள் பல விஞ்ஞான கண்டுபிடிப்புகள் நடந்திருந்தாலும், தெரியாதவை இன்னும் எண்ணிலடங்காமல்தான் உள்ளது. இவைகளைப் பற்றி, வளரும் குழந்தைகளுக்கு கற்பிக்க உருவாக்கவிருக்கும் "அறிவியல் ஆய்வுக்கூடம்" பற்றி இந்த வார சத்குரு ஸ்பாட்டில் விளக்குகிறார் சத்குரு.

இதனால் எனக்கு என்ன பலன், இதை வைத்து நான் என்ன செய்து கொள்ளலாம் என்று பயன்பாட்டு நோக்கத்திலேயேதான் நமது விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் தொழில்நுட்பங்களும் இருக்கின்றன. ஆனால் உண்மையான ஆய்வு என்பது என்ன என்பதை வெளிப்படுத்தவும் அதற்காகவே ஒரு ஆய்வுக்கூடம், தென்னிந்திய பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும்படியாக, பெரிய அளவில் அமைக்க விரும்பும் தனது கனவையும் பற்றியும் சத்குரு இங்கு விளக்குகிறார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

குழந்தைகளுக்காக, முழுமையான ஒரு அறிவியல் ஆய்வகத்தை உருவாக்க வேண்டும் என்பது நம் விருப்பம். குழந்தைகளின் அறிவியல் தாகத்தை தணிக்கக்கூடிய இந்த ஆய்வகம் நமது ஆசிரமத்தில் இருக்கும் குழந்தைகளுக்காக மட்டும் அல்ல. நம் நாட்டில் இருக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் அது சொந்தமாக இருக்கும். ஆனாலும் தூரத்தை கணக்கில் கொண்டு பார்க்கும்போது, இது தென்னிந்தியப் பள்ளிகள் அதிகம் பயன்படுத்துவதாகவே இருக்கும். 150,000 - 200,000 சதுர அடியில் இருக்கக்கூடிய இந்த அறிவியல் கூடத்தில், குழந்தைகள் உள்ளே நுழைந்தாலே பிரமிப்பில் தங்களை மறக்க வேண்டும்.

ஒரு மாலையை கையில் பிடித்தால் அது ஒரு வடிவம் எடுக்கிறது. இது ஏனென்று உங்களுக்கு தெரிந்தால் பிரபஞ்சத்தின் தன்மையே உங்களுக்கு தெரிந்து விடும். "இந்த மாலை ஏன் இந்த வடிவம் எடுக்கிறது? வேறு வடிவம் ஏன் எடுக்கவில்லை?" - இதை புரிந்து கொண்டால் போதும். உங்களுக்கு சூரிய மண்டலம், பிரபஞ்சம் இவற்றின் தன்மையே தெரிந்து விடும். இவையெல்லாமே ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையாக இருக்கிறது. ஆனால், இது பற்றி ஒரு ஆய்வுகூட இல்லை - குறிப்பாக இந்தியாவில்.

ஒரு விருந்தில் இளம் பெண் ஒருத்தி பிரபலமான விஞ்ஞானியின் அருகில் அமர்ந்திருந்தாள். அந்த பெண்ணுக்கு அவர் யாரென்றே தெரியாது. மரியாதை நிமித்தமாக அவரைப் பார்த்து, "நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டாள். "நான் விஞ்ஞானம் படித்து கொண்டிருக்கிறேன்" என்றார். அந்த பெண், "அப்படியா! நானெல்லாம் அதை பத்தாம் வகுப்பிலேயே முடித்து விட்டேனே" என்றாள். விஞ்ஞானம் பற்றிய நம் புரிதல் இவ்வளவுதான். நாம், அறிவியலை, படித்து முடித்த விஷயம் என்று நினைக்கிறோம். நிச்சயமாக அது முடித்துவிட்ட விஷயம் இல்லை. சொல்லப்போனால் இன்னும் ஆரம்பிக்கப் படவே இல்லை. இப்பொழுதுதான் தளிர் நடை போட்டுக் கொண்டிருக்கிறது. தொழில் நுட்பத்திலும், gadgets களிலும் மூழ்கிப்போய் ஆய்வுக்கான பாதையை தொலைத்து விட்டோம். இதனால் எனக்கு என்ன கிடைக்கும் என்னும் சுரண்டல் மனப்பான்மையை விட்டு விட்டு வெறுமனே ஆராய்ச்சியில் ஈடுபட்டால்தான் மனித இனத்திற்கு உண்மையான சக்தி கிடைக்கும். தற்சமயம் தொழில்நுட்பம் என்பது அனைத்தையும் பயன்படுத்தவே பார்க்கிறது. ஆனால் அறிவியல் என்பது ஆய்வுக்கான பாதை. இது ஆன்மிக செயல்முறையை ஒத்ததுதான். ஆனால், இது வெளிப்புறமாக நிகழும் ஒரு செயல்முறை, அவ்வளவுதான். யார் ஒருவர் உண்மையான அறிவியல் தேடலில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறாரோ அவர் ஆன்மிகத் தேடலில் இருந்து தப்ப முடியாது.

குறிப்பிடத்தக்க அளவில் ஐமேக்ஸ் (imax) விளைவை ஏற்படுத்தக்கூடிய வட்ட வடிவ தியேட்டர் ஒன்று நிறுவ வேண்டும். இது முப்பரிமாண வசதி உடையதாக, உங்களுக்கு 100% நிஜம் போலவே காட்சி அளிக்கும் விதமாக இருக்கும். இதற்காகவே திரைப்படங்கள் தயாரிக்கப் படுகின்றன. இயற்பியல், உயிரியல், வேதியல், தொடர்புடைய வெவ்வேறு அனுபவங்களும், பொருட்களும் அங்கு இடம் பெறும். 1000 குழந்தைகளுக்கான தங்குமிடத்தையும் உருவாக்குவோம். இதனால் குழந்தைகள் அங்கு இரண்டு தினம் தங்கி இந்த ஆய்வில் தங்களை தொலைக்க வேண்டும். அதன் பிறகு அந்தக் குழந்தைகள் தூங்கவே கூடாது. எதைப் பார்த்தாலும் ஆச்சரியப் பட வேண்டும்.

அவர்கள் எல்லோருமே விஞ்ஞானியாக உருவெடுப்பார்கள் என்று நான் சொல்ல வில்லை. ஆனால் இது போன்ற வாய்ப்பைப் பயன்படுத்தும் ஒவ்வொரு மனித மனமும் எதைப் பார்த்தும் வியப்படையும். 'ஏன் இந்த மரம் இந்த விதமாக கிளை விட்டிருக்கிறது?' கூர்ந்து பார்த்தால் இந்த பிரபஞ்சம் இருக்கும் நிலையையே அந்த மரம் கிளை விட்டிருக்கும் வகையிலிருந்து தெரிந்து கொள்ள முடியும். அந்த வகையில்தான் ஆற்றின் கிளைகளும் பிரிகின்றன. ஏன் உங்கள் ரத்த நாளங்கள் கூட அப்படித்தான் இருக்கிறது. ஏதோ ஒரு வடிவ அடிப்படை இருக்க வேண்டுமே. இதுதான் அது. ஏதோ ஒரு பாட புத்தகத்தில் அறிவியல் படிப்பதோ, அதை பற்றி நினைப்பதோ ஒரு முழுமையான சமூகத்தை உருவாக்காது. மக்கள் அறிவியலில் அல்லது ஆன்மிகத்தில் ஆழமாக இருக்க வேண்டும். ஏனென்றால் இரண்டுமே ஒரு தேடல்தான், ஒரு ஆய்வுதான், முடிவுகள் அல்ல. மனித மனம் அறிந்து கொள்ளும் நோக்கில் இருந்தால்தான் ஆழ்ந்த அறிவோடு, பொறுப்புணர்ச்சியோடு செயல்படும். இல்லையென்றால் சுரண்டும் தன்மைக்கு இயல்பாகவே மாறிவிடும். "இதை எப்படி பயன்படுத்துவது, அதை எப்படி பயன்படுத்துவது" இதுதான் நடக்கும். முதலில் அது பொருட்களில் ஆரம்பிக்கும். பிறகு அது மக்களிடம் நடக்கும். இறுதியாக உலகைப் பற்றியே அப்படித்தான் நினைக்கச் செய்யும். இப்போது நாம் எதிலும் தொழில்நுட்பம் சார்ந்தே இருப்பதால், பிரபஞ்சத்தில், எல்லாவற்றையும் எப்படி பயன்படுத்துவது என்பது பற்றியே யோசிக்க ஆரம்பித்து விட்டோம். எனவேதான் நாம் குழந்தைகளுக்கு உண்மையான அறிவியல் தாகத்தை உருவாக்க விரும்புகிறோம்.

தற்சமயம் இதற்காக ஒரு குழு அமைக்க இருக்கிறோம். சிகாகோ அறிவியல் அருங்காட்சியகம் மற்றும் சான்பிரான்சிஸ்கோ ஆய்வகத்தை சேர்ந்தவர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறோம். அமெரிக்காவிற்கு கடந்த சிலமுறைகளில் நான் சென்று வரும்போதெல்லாம் இதற்காக முயற்சி எடுத்து வருகிறேன். ஒரு துடிப்பான சக்தி வாய்ந்த குழுவை இது நிகழ்வதற்காக தேடிக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கு சக்தியும், ஈடுபாடும் இருந்தால் இதில் நீங்கள் ஈடுபட வேண்டும். என் மனதில் இருப்பது உருவாகி விட்டால், அது இந்த நாட்டில், பல தலைமுறைக்கு, குழந்தைகள், ரசித்து பயன்படுத்தக் கூடிய இடமாக இருக்கும். gadgetsகளில் மட்டும் விருப்பமில்லாத, உண்மையிலேயே ஆய்வுகளில் ஆர்வம் இருக்கக்கூடிய, சமநிலைமிக்க, ஒரு , நோக்கத்துடன் செயல்படக்கூடிய, பயனுள்ள மனிதர்களை உருவாக்க சிறிய அளவிலான மாதிரி வடிவம் உருவாக்கிக் காண்பிக்க வேண்டும். அடுத்த 10,15 வருடங்களில் நாம் செய்ய விரும்புவதை செய்தால், அதற்குத் தேவையான பொருளாதாரமும், திறமையும் கிடைத்தால், இந்த உலகமே விரும்பி பின்பற்றக்கூடிய ஒரு முன்மாதிரியை உருவாக்குவோம். நீங்கள் நிரூபித்து காட்டினால் மட்டுமே உலகம் உங்களை நம்பும், பின்பற்ற முயற்சி செய்யும். ஆனால் அது நிகழ்ந்துவிட்டால், நிச்சயமாக அது போன்ற பயனுள்ள மனிதர்களை இந்தக் களம் உருவாக்கி விடும்.

Love & Grace