கத்தாரில் நடைபெற்ற பெண்கள் சர்வதேச வர்த்தக மாநாட்டில் பேசிய சத்குருவின் உரையிலிருந்து ஒரு பகுதியை இந்த வார சத்குரு ஸ்பாட்டில் இங்கே உங்களுக்காக வழங்குகிறோம். பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட இம்மாநாட்டில், கத்தாரின் தொழில் மற்றும் எரிசக்தித் துறை அமைச்சரும், கத்தார் தொழிலதிபர்கள் குழுத் தலைவரும், கத்தார் பெண்கள் தொழிலதிபர்கள் குழுத் துணைத் தலைவரும் கலந்து கொண்டனர். படித்து மகிழுங்கள்!

நான் பங்கெடுத்த பல பொருளாதார மாநாடுகளில், இந்தியாவை வளர்ந்து வரும் பொருளாதாரம் என்றே அழைக்கின்றனர். அதோடு இந்தியாவை எப்படி சுரண்டுவது என்றும் பார்க்கின்றனர். 120 கோடி நபர்களை, மக்களாக பார்த்தால் அவர்களுக்கு எப்படி சேவை செய்வது என்று பார்ப்பீர்கள். அவர்களுக்கு நீங்கள் சேவை செய்தால், அவர்கள் உங்களுடைய வாடிக்கையாளர்களாகி விடுவார்கள், உங்களுக்கு தேவையான வளமாகவும் இருப்பார்கள். அவர்கள் உங்களது தொழில் கூட்டாளியாகவும் இருப்பார்கள். இது அனைவரையும் இணைத்துக் கொண்டு செயல் செய்யும் விதம், இதுவே நிலைத்து நிற்கவும் செய்யும். நீங்கள் என்னைச் சுரண்ட நினைத்தால் என்றைக்கு உங்களிடமிருந்து தப்பிக்க முடியுமோ, அன்று நான் தப்பித்துக் கொள்வேன். நீங்கள் என்னை உங்கள் கூட்டாளியாக்கிக் கொண்டால், என் வாழ்வில் ஒரு பாகமாக்கிக் கொண்டால், நீங்கள் செல்வதை நான் விரும்ப மாட்டேன்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மக்களின் வாழ்விற்குள் பொருந்தும் வண்ணம், பொருளாதாரம் தன்னை செப்பனிட்டுக் கொள்ள வேண்டும். ஏற்கனவே தவறு செய்து நமக்கு ஒருபடி முன்னர் நிற்கும் ஒருவரைவிட, இன்னும் ஒரு படி மேலே நிற்பதே வெற்றி என்னும் மனப்பான்மையில் நாம் இருக்கிறோம்.

தற்சமயம் நாம் கடைபிடித்து வரும் பொருளாதார அமைப்புமுறையை மனிதகுல நலனிற்கு உகந்தவாறு சீரமைத்து பயன்படுத்த வேண்டும். மனிதகுல நலனிற்கு சேவை செய்யும் வண்ணம் வணிகத்தை சீரமைப்பதற்கான தருணம் வந்துவிட்டது. வணிகம் நமக்கு எதிராக வேலை செய்யக் கூடாது.

வியாபாரத்திலோ அல்லது வேறெந்த விஷயமாக இருந்தாலும் சரி, பிறரால் காண இயலாததை ஒரு தலைவரால் காண முடியும். தலைவராக இருந்து கொண்டு உங்களால் புதிய ஒன்றைக் காண இயலாவிட்டால், பிறர் காண்பவற்றிலிருந்து புதிதாய் எதையும் உங்களால் பார்க்க இயலாவிட்டால், நீங்கள் ஏளனப் பொருளாகிவிடுவீர்கள்.

வியாபாரத் தலைவராகவும் பொருளாதார தலைவராகவும் ஒரு பெண்ணுடைய பங்கு மிக முக்கியமானது. சற்றே விலகியிருந்து நடப்பதை கவனித்து பார்க்கும் பேறு பெற்ற இடத்தில் பெண்கள் உள்ளனர். பிறர் கண்களுக்கு புலப்படாத விஷயங்கள் ஒரு பெண்ணின் கண்களுக்கு புலப்படும்படி, தங்கள் திறமையை பெண்கள் மேம்படுத்தியுள்ளனர். ஒரு ஆண், தினசரி வாழ்வில் நடக்கும் போட்டிகள் தன்னை முழுவதுமாக ஆக்கிரமிக்க அனுமதி கொடுத்துவிட்டதால், அவனால் எதையும் காண முடிவதில்லை. ஒரு தலைவனுக்கு தொலைநோக்கு பார்வை மிக அவசியம்.

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால், தனியொருவருடைய உடல்பலம் ஒரு பொருட்டாக இல்லாத நிலையில் இருக்கிறோம். இவ்வுலகில் ஆணெண்றும் பெண்ணென்றும் ஒன்றும் கிடையாது. ஒருவர் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி வீட்டில் அமர்ந்தபடியே உலகத்தை தொடர்பு கொள்ள முடியும். அனைவருக்கும் கதவு திறந்தே இருக்கிறது.

மனித இனத்தின் பிரச்சனைகளை எதிர்கொள்ள நம்மிடம் போதுமான வளமும் தொழில்நுட்பமும் உள்ளது.

Love & Grace