இந்தவார சத்குரு ஸ்பாட்டில், இந்தப் பருவத்தில் பூமியில் நடக்கும் மிகப்பெரிய மாற்றங்கள் குறித்தும், அதைப் பயன்படுத்தி நாமும் பழைய தோலுதிர்த்து புதிதாய் வாழ்க்கையைத் துவங்குவதன் முக்கியத்துவம் குறித்தும் கூறியுள்ளார். அதோடு வீடியோ மூலம் சக்திமிக்க தியானத்திலும் கலந்துகொள்ளுங்கள்.

கடந்த சில நாட்களாக பூமியில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்த மாற்றம் இன்னும் சற்று காலம் தொடரும். கதிர்த்திருப்பத்துடன் உத்தராயணம் துவங்கும் இவ்வேளையில், பூமியும் அதிலுள்ள உயிரினங்கள் அனைத்திற்கும் சூரியனுக்கும் இடையிலான தொடர்பு மாறுகிறது. சூரியன் இந்த பூமியில் சக்தியின் மூலமாக இருக்கிறான். பூமியின் பயணத்தில், இந்த குளிர்காலக் கதிர்த்திருப்பம் வடதுருவத்திற்குப் புதிய துவக்கமாக, புதிய சாத்தியமாக, புத்துயிரளிப்பதாக இருக்கிறது. வருடத்தின் இந்த சமயத்தில், வசந்தகாலத்தை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் பின்னணியில் நடந்தவண்ணம் உள்ளது. பூமியிலும் அதைச் சுற்றியுள்ள வெளிமண்டலத்திலும் நிறைய செயல்கள் நடக்கின்றன. இது நிகழ்வதற்கு எல்லாவிதமான உயிரினங்களும் கூடுதல் நேரம் வேலை செய்கின்றன. இரண்டு வகையான மனிதர்கள் இருக்கிறார்கள் - ஒரு வகை விரும்புவதை நிகழ்த்துவார்கள், இன்னொரு வகையினர் சரியாக நடந்தால் ரசிப்பார்கள், அவர்களுக்குப் பிடித்தமாதிரி நடக்காவிட்டால் நொந்துகொள்வார்கள். விரும்புவதை நிகழ்த்துபவர்களை நீங்கள் கண்முன் காணாமல் இருக்கலாம், ஆனால் பின்னணியில் அவர்கள் அயராது உழைத்துக்கொண்டு இருக்கிறார்கள். வருடம் முடியப்போகும் இந்த சமயம், பூமிக்கும் அதிலுள்ள அனைத்து உயிர்களுக்கும் தோலுரிப்பதற்கான சமயம். குறிப்பாக வடதுருவத்தில் இருப்போருக்கு, அறுவடை, பூ, மற்றும் பழம் கொடுக்க உயிர் தயாராகிக் கொண்டு இருக்கிறது.

புது வருடத்தை வரவேற்க மிகவும் அபத்தமாக எதையோ செய்யவேண்டும் என்று நிறைய மக்கள் நினைக்கிறார்கள் - அபத்தமான அளவு குடிப்பது, அபத்தமாக வண்டி ஓட்டுவது, சிலர் அபத்தமாக இறக்கவும் செய்கிறார்கள். இன்று ஏதோவொன்று பிரபலமாக வேண்டும் என்றால், அது அபத்தமாக இருக்கவேண்டும். கொண்டாட்டத்தின் இலக்கணத்தை நாம் மாற்றியெழுதி, ஆழமான ஒன்றை ரசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டுமல்லவா? வரும் வருடத்தில் உங்களை விடப் பெரிதான ஒன்றை உருவாக்கும் உறுதிகொள்ள உங்களிடம் தைரியமுள்ளதா? மற்ற உயிரினங்கள் அனைத்தும் அவற்றின் உள்ளுணர்வால் இயங்குகின்றன, இயற்கையின் விதிகளின்படி வாழ்ந்து இறக்கின்றன. மனிதராய் இருந்தால், இயற்கையின் விதிகளைக் கடந்து நம்மை விடப் பெரிதான ஒன்றை நிகழ்த்தமுடியும். "என் இடம், உன் இடம்" என்று எல்லைகளைப் பாதுகாக்காமல், எல்லைகடந்து செயல்பட முயற்சிப்பதற்கான சாத்தியம் உங்களிடம் உள்ளது.

இந்த உயிரை நீங்கள் சேமித்து வைக்கமுடியாது - இதனை உங்களால் செலவுசெய்ய மட்டுமே முடியும். நீங்கள் சும்மா இருந்தாலும் அற்புதமான ஒன்றை உருவாக்கினாலும், ஆழம்மிக்க ஒன்றைச் செய்தாலும் அபத்தமான எதையோ செய்தாலும், நீங்கள் எப்படியும் இறப்பீர்கள். எப்படியும் உங்கள் வாழ்நாளை செலவழித்தாக வேண்டும், எப்படி செலவுசெய்கிறீர்கள் என்பதே கேள்வி. நம் வாழ்க்கையை நாம் எப்படி செலவழிக்கிறோம் என்பது மனிதர்கள் தேர்ந்தெடுக்கக்கூடிய சிறப்புரிமை. மற்ற உயிரினங்கள் அனைத்திற்கும் இது முன்கூட்டியே வரையறுக்கப்பட்டுள்ளது. எவ்வளவு அழகான, ஆழமான, அற்புதமான, அல்லது எவ்வளவு முட்டாள்தனமான, பிரயோஜனமற்ற, சோம்பேறித்தனமான வாழ்க்கை வாழ்கிறோம் என்பது நம் கைகளில் உள்ளது. நீங்கள் சிறுபிள்ளைத்தனமாக புதுவருட உறுதி எதையும் எடுக்கவேண்டும் என்று நான் சொல்லவில்லை. வருடத்தின் இந்த வேளையில் வெளிநிலையில் பற்பல மாற்றங்கள் நிகழ்கின்றன. நமக்குள் நாம் மாறினால் மட்டுமே மனித வாழ்க்கையின் தரம் மாறும். இல்லாவிட்டால் மிகவும் அழகான இடத்தில் இருந்தபடியே நாம் துயரத்தில் ஆழ்ந்திருக்க முடியும். உலகில் நாம் விரும்புவதை உருவாக்க, பல சக்திகளை நாம் ஒன்றுசேர்க்க வேண்டும். உங்களுக்குள் நீங்கள் விரும்புவதை உருவாக்க, உங்களை நீங்கள் ஒன்றுசேர்க்க வேண்டும்.

உலகில் அற்புதமான ஒன்றை நீங்கள் உருவாக்கினால் அற்புதமாக இருக்கும். இல்லாவிட்டால் உங்களுக்குள்ளாவது அற்புதமான ஏதாவது நிகழவேண்டும். உங்களுக்குள் அற்புதமான ஏதாவது நிகழ்ந்தால், உலகில் அற்புதமான ஒன்றை நீங்கள் உருவாக்குவதை யாராலும் தடுக்கமுடியாது. மற்றவர் சின்னச்சின்ன வேகத்தடைகள் மட்டுமே போடமுடியும். அது நம் வேகத்தைக் குறைத்து, சுற்றியுள்ள அழகை ரசித்து, அதன்பிறகு வேகத்தைக் கூட்டுவதற்கான வாய்ப்பை வழங்கும். உங்களுக்குள் அற்புதமான எதையும் நிகழ்த்தாமல் உலகில் அற்புதமான எதையாவது நிகழ்த்த முயன்றால், அது பேரழிவை ஏற்படுத்தக்கூடிய கொடுங்கோன்மை ஆகிவிடலாம். மனித சரித்திரம் முழுவதும் இதற்கு உதாரணங்கள் உள்ளன. மிகக் கொடுமையானவர்களின் பட்டியலில் எப்போதும் மேலே இருக்கும் அடால்ஃப் ஹிட்லர் கூட, தான் அற்புதமாக ஏதோ ஒன்று உருவாக்கப் போவதாக நம்பினார், ஆனால் அதன் விளைவுகளோ மிக மோசமாக இருந்தன. உங்களுக்குள் அசிங்கமான விஷயங்கள் நடக்கும்போது நீங்கள் ஏதோவொன்றை உருவாக்க முயன்றால், இந்த அசிங்கத்தின் மிகைப்படுத்தப்பட்ட பிம்பமே வெளியில் உருவாகும். நீங்கள் ஏதோவொன்றை உருவாக்க விரும்பினால், முதலில் உங்களுக்குள் அழகான ஏதோவொன்று நிகழவேண்டும். என்ன செய்தாலும் சரி, இறுதியில் நீங்கள் யாராக இருக்கிறீர்களோ அதுதான் உலகில் பிரதிபலிக்கும்.

உங்கள் சுயநினைவுக்குத் திரும்புங்கள் - அப்போது ஆனந்தமாக மட்டுமே இருக்கமுடியும். இதற்கு ஒரு தீர்மானமோ, "இந்த நாட்டில் அனைவரும் ஆனந்தமாக இருக்கவேண்டும்" என்று சட்டத்தில் திருத்தங்களோ கொண்டுவரத் தேவையில்லை. மனித விழிப்புணர்வை உயர்த்துவதே தேவைப்படுகிறது. விழிப்புணர்வு என்பது பொருள்தன்மை சார்ந்ததல்ல. பொருள்தன்மை எல்லைகளுக்குட்பட்டது. விழிப்புணர்வு எல்லைகளைக் கடந்தது, அனைத்தையும் உள்ளடக்கியது. ஒன்று, வெறும் எலும்பும் சதையும் கொண்ட பிண்டமாக நீங்கள் இருக்கலாம், அப்போது எல்லைகள் இருப்பது நல்லதுதான். அல்லது, விழிப்புணர்வு எனும் எல்லையில்லாத பரிமாணத்தைத் தொடலாம். உங்கள் அனுபவம் எல்லையில்லாமல் போனால், சாத்தியங்களும் எல்லையில்லாமல் போகும். அப்போதும் நீங்கள் உருவாக்குவது எல்லையில்லாமல் இருக்கமுடியாது, ஆனால் அது உங்களை விடப் பெரியதாக இருக்கும், அதுதான் முக்கியம். உங்களுக்குள் உங்களைவிடப் பெரிதாக ஏதோவொன்று நடந்திருந்து, உங்களுக்கு வெளியேயும் அது சாத்தியமானால் தான், ஒரு மனிதராக உங்களால் நன்றாக வாழ்ந்து நல்லபடியாக இறக்கமுடியும். இல்லாவிட்டால் நீங்கள் மலச்சிக்கல் வந்தது போல வாழ்வீர்கள்.

Sign Up for Monthly Updates from Isha

Summarized updates from Isha's monthly Magazine on Isha and Sadhguru available right in your mailbox.

No Spam. Cancel Anytime.

இந்த கலாச்சாரத்தில் உத்தராயணத்தை அறுவடைக் காலமாகப் பார்க்கிறோம், விவசாயரீதியாகவும் சரி, ஆன்மீகரீதியாகவும் சரி. பல முனிவர்கள், ரிஷிகள், யோகிகள் உடலை விட்டுச்செல்ல இந்த சமயத்தைத் தேர்வுசெய்துள்ளார்கள். அப்படியானால் நீங்களும் இந்த சமயத்தில் உடலை விட்டுச்செல்ல வேண்டும் என்று கிடையாது. பழைய குப்பை எதையாவது உதிர்த்து புதிதாக, உயிர்ப்பாக மாறுவதற்கான நேரமிது. அதிலிருந்து புதிய சாத்தியங்கள் என்ன பிறக்கிறது என்று பார்ப்போம். இது ஏதோவொரு குறிப்பிட்ட விஷயத்தைச் செய்ய உறுதி எடுப்பதோ, வேறு எதையோ விடுவதோ பற்றியதல்ல. ஆனால் ஊர்ந்து செல்வன கூட தங்கள் பழைய தோலை அவ்வப்போது உதிர்த்துகின்றன. உங்களிடமிருந்தும் அதை எதிர்பார்க்கும் நிலையில் நீங்கள் இருக்கவேண்டும். ஒரு பாம்போ கரப்பான்பூச்சியோ வேறு உயிரினமோ தோலுரிக்கும்போது, சிறிது காலத்திற்கு அவை பாதுகாப்பின்றி இருக்கின்றன. இயற்கையில் சிறிதுகாலம் மேல்தோல் இல்லாமல் வாழ்வது மிகவும் ஆபத்தானது. அந்த சமயத்தில் சாதாரண எறும்புக்கூட்டமே உங்கள் உயிரை எடுத்துவிட முடியும். ஆனால் அந்தச் சின்னச்சின்ன உயிரினங்கள் கூட அதற்குத் துணியும்போது, உங்கள் வாழ்க்கையில் நீங்கள் துணிந்து தோலுரிக்கும் நேரம் வந்துவிட்டது.

நீண்டகாலம் உங்களோடு ஒட்டிக்கொண்டிருக்கும் ஏதோவொன்று, பிரயோஜனமில்லாது உங்களுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் ஒன்றை அடுத்த சில நாட்களில் நீங்கள் கிழித்தெறிய வேண்டும். இந்த கெட்டியான தோல் உதிர்வதற்கு நான் நீண்டகாலமாக காத்துக்கொண்டு இருக்கிறேன். உங்கள் குப்பையை நீங்கள் கீழே போட்டால், என்னால் உங்களுக்குள் பரவசம் பொங்கச்செய்ய முடியும். இப்போது கேள்வி, "என் தோலை நான் எப்படி உதிர்ப்பது?" உங்களுக்குத் தெரிந்திருக்கும், ஏதாவது காயம் அல்லது கீறல் ஏற்பட்டு அந்தப்புண் மேல் பொருக்கு உருவாகியிருந்தால், அது தானாக விழும்முன் பிய்த்து எடுத்துவிடும் அவசரம் கிட்டத்தட்ட எல்லோருக்கும் இருக்கும். அதேபோல நீண்டகாலம் உங்களுடன் ஒட்டியிருக்கும் ஏதோவொன்றை நீங்கள் உதிர்த்த விரும்பினால், அது கொஞ்சம் வலியை ஏற்படுத்தும். தினமும் உங்கள் பழைய தோல் செல்களை அறியாமலே நீங்கள் உதிர்த்துக்கொண்டு தான் இருக்கிறீர்கள். அவற்றின் காலம் முடிந்துவிட்டதால் அவை தாமாக விழுந்துவிடுகின்றன. இப்போது நீங்கள் ஆன்மீகப் பாதையில் இருக்கிறீர்கள், இயற்கையின் சாதாரண வேகத்தைவிட வேகமாகச் செல்ல விரும்புகிறீர்கள். சில தத்துவஞானிகள், இயற்கையாகவே அது எப்படியும் மெதுவாக நடந்தேறும் என்று விவாதிப்பார்கள். ஒரே பிரச்சனை என்னவென்றால், இது மிகவும் குறுகிய வாழ்க்கை. குரங்கிலிருந்து மனிதனாக பரிணமிக்க பல கோடி வருடங்கள் எடுத்தது. ஆனால் நீங்கள் வேகமாகப் பரிணமிக்க விரும்புகிறீர்கள், பழைய தோலை சீக்கிரமே உதிர்க்க விரும்புகிறீர்கள்.

மனிதராக இங்கே வந்ததே அதிர்ஷ்டம், உங்களுக்கு ஓரளவு வேலை செய்யும் மூளையும் இருக்கிறது, உங்களைப் பற்றி ஏதோவொன்று செய்யவேண்டும் என்று உங்களுக்குத் தெரியவும் செய்கிறது. அதைச் செய்வதற்கு இதுதான் நேரம். ஆனால் எப்படிச் செய்வது? உங்களுக்கு தீட்சை கொடுத்திருக்கும் இந்த ஆன்மீக சாதனா, உதாரணத்திற்கு ஈஷா யோகா நிகழ்ச்சியில் வழங்கப்படும் பயிற்சி, இதைச் செய்யும் சக்திகொண்டதாய் இருக்கிறது. ஆனால் எவ்வளவு தீவிரத்துடன் பயிற்சி செய்கிறீர்கள் என்பதைப் பொருத்ததாய் இது இருக்கிறது. உங்கள் ஆன்ம சாதனையை அடுத்த படிக்கு எடுத்துச்செல்ல, சிறிது காலம் ஆசிரமத்தில் வந்து தங்குவது நல்லது. அப்படியானால் அதிக பயிற்சிகள் செய்யவேண்டும் என்றில்லை, அதே பயிற்சியை இன்னும் சற்று தீவிரமாகச் செய்யவேண்டும். அப்படிச் செய்தால் பழைய தோல் உதிரும். பழைய போக்கில் சிந்திப்பதை விடுத்து அனைத்தையும் புதிதாய்ப் பார்த்தால், நீங்கள் அழகான மனிதராய் மலர்வீர்கள், உலகமும் அழகான இடமாக மாறும். இந்தப் புதிய "நீங்கள்", தீர்வுகளை மட்டுமே தேடுவார், பிரச்சனைகளைத் தேடமாட்டார்.

தோலுதிர்ப்பதை நீங்கள் தான் செய்யவேண்டும். அருளுக்கு உங்களைத் திறந்தால் மட்டுமே எங்களால் உங்களுக்கு உதவமுடியும். அதற்கு உங்களை நீங்கள் புதிதாய்ப் பிறந்த குழந்தையைப் போல வைத்துக்கொள்ள வேண்டும். உங்கள் வயது இப்போது என்னவாக இருந்தாலும், புதிதாய்ப் பிறந்தால் வாழ்க்கையை நீங்கள் எப்படிப் பார்ப்பீர்கள்? எல்லாம் புதிதாய் இருக்கும், எல்லாம் அற்புதமாய் இருக்கும். நீங்கள் எல்லாவற்றையும் புதிதாய்ப் பார்த்தால், நான் உங்களை பார்த்துக்கொள்வேன். "புதிது" என்றால் இதுதான் - பழையது எதுவும் இல்லாமல் இருப்பது! ஜனவரி ஒன்று வரை காத்திருக்காதீர்கள். பூமிக்கு புதிய காலம் ஏற்கனவே துவங்கிவிட்டது, நாமும் இந்த பூமியின் அங்கமாக இருக்கிறோம். ஒரு பச்சிளம் குழந்தையைப் போல அனைத்தையும் பாருங்கள் - எல்லாவற்றையும் உள்வாங்கிக்கொண்டு, எந்த முடிவும் எடுக்காமல், எதையும் நல்லது கெட்டது என்று முத்திரை குத்தாமல், சரி சரியில்லையென்று பார்க்காமல், நீங்கள் நேசிப்பவர்கள் வெறுப்பவர்கள் என்று மனிதர்களைப் பிரிக்காமல் வாழ்க்கையைப் பாருங்கள். ஒரே ஒருநாள் நீங்கள் இப்படிச் செய்தாலும், வாழ்க்கையைப் புதிதாய்த் துவங்கி அற்புதமாய் இருக்கலாம்.

Love & Grace

இந்த வீடியோவில், ஒரு தீவிரமான தியான செயல்முறையில் கலந்துகொள்ளும் வாய்ப்பை சத்குரு நமக்கு வழங்குகிறார். டிசம்பர் 24, 2016ல் ஈஷா யோகா மையத்தில் நிகழ்ந்த தரிசன நேரத்தில் நடந்தது இது. தரிசனம் என்றால் கண்களால் கண்ணுறுவது. இந்த செயல்முறையை சிறப்பாக பயன்படுத்த, சம்மணமிட்டு, கைகளைத் திறந்து உள்ளங்கைகள் மேல்முகமாக வைத்து, முகத்தை லேசாக மேல்முகமாக வைத்து, சத்குருவை பார்த்தபடி அமரவும்.