இந்த வார ஸ்பாட்டில், 70 வருட சுதந்திரத்திற்குப் பிறகு பாரதம் இருக்கும் நிலை குறித்தும், பாரதத்திற்கு காத்திருக்கும் சாத்தியங்களையும் அதை நிறைவேற்றுவதற்கு, மண்வளத்தையும் நீர்வளத்தையும் பேணிக்காப்பதன் முக்கியத்துவத்தையும் சத்குரு நம்முடன் பகிர்ந்துள்ளார். அவர் பயணத்தின் ஊடே இதை எழுதியுள்ளதோடு, அடுத்தடுத்து காத்திருக்கும் பயணங்கள் குறித்தும் கூறியுள்ளார்.

24 மணி நேரத்திற்குக் குறைவான நிகழ்ச்சிகளுக்காக சிங்கப்பூர் செல்லும் வழியில், இப்போது இந்தியாவில் சில மணி நேரம். கடந்த சில வாரங்கள் புத்துணர்வூட்டுவதாகவும், சக்தியூட்டுவதாகவும், வியக்கவைப்பதாகவும் இருந்ததோடு, நம்பமுடியாத அளவு கடினமாகவும் இருந்துள்ளது. நேபாளத்தில் ஈஷாவின் செயல்பாடுகள் அதிவேகமாக முன்னேறிக்கொண்டு இருக்கிறது. ஈஷா சார்ந்த எல்லாவற்றின் மீதும், அதீத ஆர்வமும் ஆச்சரியமும் நேபாள மக்களுக்கு இருக்கிறது. இந்த அற்புதமான தேசமும், மென்மையான மக்களும் தற்போது சந்தித்து வரும் பிரச்சனைகளுக்கு பதிலாக, நல்லதொரு வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கவேண்டும்.

இந்த மலைகளில் நடந்து செல்லும் இந்த மலையேற்றங்கள் மட்டுமே எனது மருத்துவப் பரிசோதனை. தொடர் பயணங்கள், தூங்காமல் கண்விழிக்கும் இரவுகள், சரியான ஊட்டச்சத்து கிடைக்காமல் போகும் நாட்கள், என்று உடலை வருத்தும் பல சூழ்நிலைகளையும் மீறி, என் உடல் நல்ல நிலையில் இருக்கிறதென்று இம்மலைகள் சொல்கின்றன. என் காலில் ஏற்பட்ட சில உள்காயங்கள் ஒரு வருடத்திற்கு மேலாக என்னை தொந்தரவு செய்தபடி இருந்தன. சவாலான இந்த மலையேற்றத்தில் அவை மாயமாய் மறைந்துவிட்டன.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

கைலாயத்தின் அருள், அளப்பரிய சக்தியின் மூலமாக எப்போதுமே இருந்துள்ளது. சொல்லப்போனால் கைலாயம்தான் சக்தியின் மூலம், நான் அதிலிருந்து திருட மட்டுமே செய்கிறேன். ஆரம்பத்தில் இருந்தே நான் கைலாயத்தின் சக்தியையும் ஞானத்தையும்தான் திருடியிருந்திருக்கிறேன்.

இன்று ஆகஸ்ட் 15 - சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் நிறைவடைகின்றன. ஒரு தேசமாக நாம் பல அற்புதமான விஷயங்கள் செய்திருக்கிறோம், இன்னும் பல விஷயங்கள் செய்யப்படாமலும் இருக்கின்றன. தேசங்களின் குழுமத்தில், இந்தியா ஒரு அற்புதமான ஜனநாயகமாக நிமிர்ந்து நின்றுள்ளது. இருபகுதியாக பிரித்ததில் ஏற்பட்ட இரணத்திலிருந்தும், ஆங்கிலேயர்கள் சூறையாடி ஒன்றுமில்லாது விட்டுச்சென்ற நிர்கதி நிலையிலிருந்தும், ஆச்சரியங்கள் நிறைந்த ஒரு பயணத்தில், இந்த தேசம் முன்னேற்றப் பாதையில் வெகுதூரம் பயணித்துள்ளது. ஆனால் குடிமக்களை அடுத்த படிக்கு எடுத்துச்செல்ல முடியாதது, ஊழலின் சவால்கள், அருகிலுள்ள நாடுகளுடன் எல்லைப் பிரச்சனைகள் என்று பல பிரச்சனைகள் இன்னும் இந்த தேசத்தை வாட்டுகின்றன.

கடந்த எழுபது ஆண்டுகளில், அறிவியல், விண்வெளி தொழில்நுட்பம், பாதுகாப்பு, கல்வி, பெண் உரிமை, சராசரி ஆயுள்காலம் போன்றவற்றில் மலைகளையே நகர்த்தும் அளவுக்கு முன்னேறியுள்ளோம். ஆனால் நம் விவசாயிகளை நம்மால் ஏழ்மையிலிருந்து மீட்க முடியவில்லை. ஆங்கிலேயர்களிடமிருந்து மீண்டு வந்துள்ள இந்த தொன்மையான தேசத்தின் சாதனைகளில் மகத்துவமான சாதனை என்றால், நாம் மிகக்குறைவான வசதிகளுடன் 100 கோடி மக்களுக்கு உணவு உற்பத்தி செய்துவந்துள்ளோம். ஆனால் நம் மண்ணையும் நீரையும் நாம் பாதுகாத்து அவற்றுக்கு ஊட்டமளிக்காவிட்டால், இவை அனைத்தும் அழிந்துவிட முடியும். குறிப்பாக நதிகளை மீட்க அவசரமான, அறிவியல்பூர்வமான அணுகுமுறை தேவைப்படுகிறது. தேசங்களிலெல்லாம் தொன்மையான நம் தேசத்திற்கு அபாரமான சாத்தியங்கள் உள்ளன. நம் தேசத்தின் ஆற்றலை நாம் உணரவேண்டும் என்றால், அதற்கு நம் மண்ணையும் தண்ணீரையும் பேணிக்காப்பதே தலையாயது. மண்ணும், நீரும் உயிரற்ற ஜடப்பொருட்கள் அல்ல, அவை உயிரை உருவாக்கும் மூலப்பொருட்கள். அவற்றை சீர்செய்வதற்கும், அனைவரின் நல்வாழ்வுக்கும் வழிசெய்யவும் ஒரு உறுதியான வழி பிறக்கட்டும்.

'நதிகளை மீட்போம் - பாரதம் காப்போம்' இயக்கம், மக்களின் ஆர்வத்தால் வேகமாக பரவத் துவங்கியுள்ளது. ஈஷா தன்னார்வலர்கள் மட்டுமின்றி, தேசம் முழுவதும் உள்ள பல்வேறு வாழ்க்கை முறைகளைச் சேர்ந்தவர்களும் இதில் காட்டும் ஆர்வம் உண்மையிலேயே என் மனதை உருக்குகிறது. இதுதான் நம் பிரியமான பாரதம்: பிரபலங்கள் முதல் பொதுமக்கள் வரை, உயர்ந்த தலைவர்கள் முதல் பள்ளி மாணவர்கள் வரை, 'நதிகளை மீட்போம் - பாரதம் காப்போம்' இயக்கம் ஏன் தேவைப்படுகிறது என்று அனைவரும் உடனடியாக புரிந்துகொள்கின்றனர். சிலர் செய்யும் செயல்களைக் காணும்போது கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கிறது. ஈஷா வித்யா குழந்தைகள் ஆறு கிலோமீட்டர் நீள கோலம் வரைந்ததை நீங்கள் கண்டிருப்பீர்கள். அனைவருக்கும் சிறப்பான எதிர்காலம் உருவாக்குவதற்கு இப்படி அர்ப்பணிப்பும் அன்பும் கலந்த எத்தனையோ வெளிப்பாடுகள்.

விமான நிலையம் செல்ல சில நிமிடங்களே எஞ்சியுள்ளன. அதற்குப் பிறகு பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக சிங்கப்பூரிலிருந்து மும்பை, மும்பையிலிருந்து சென்னை, சென்னையிலிருந்து தில்லி, தில்லியிலிருந்து பெங்களூரு, பெங்களூருவிலிருந்து கோவை, கோவையிலிருந்து லக்னோ, லக்னோவிலிருந்து தில்லி, தில்லியிலிருந்து கோவை, பிறகு கன்னியாகுமரி, அங்கிருந்து 16 மாநிலங்கள் வழியாக ஆங்காங்கே மின்னல் வேக நிகழ்ச்சிகள் நடத்தியபடி இமயமலை நோக்கிய பயணம். முப்பத்தி இரண்டு நாட்கள் தொடர்ந்து பயணமாக இருக்கப்போகிறது.

இதனை நாம் நிகழச்செய்வோம்.

Love & Grace