பயணத்திற்கிடையே... ஒரு கடிதம்

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், கடந்த ஒரு வாரத்தில் தான் கடந்து வந்த பாதைகளை நம் மனதுகளில் பதித்து செல்கிறார் சத்குரு. தேர்தல் களத்தை லேசாக தொட்டுச் செல்லும் அவர் சமீபத்தில் ஈஷா லீடர்ஷிப் அகாடமி பதிவு செய்யப்பட்டுள்ள இடத்தைப் பற்றியும் அதனுடன் தனக்குள்ள தொடர்பினையும் வெகு சுவாரஸ்யமாக விளக்குகிறார்... படித்து மகிழுங்கள்!

கடந்த 8 நாட்களில் 6 நகரங்கள், ஏராளமான நிகழ்ச்சிகள். ஐதராபாதில் Mystic Eye நிகழ்ச்சி, பிறகு வெற்றிகரமான தொழிலதிபர்களாக விளங்கும் மூன்று பெண்மணிகளுடன் ‘In Conversation’ நிகழ்ச்சிகள், இதைத்தொடர்ந்து பெங்களூரில் ஈஷா லீடர்ஷிப் அகாடமிக்கு நிலம் வாங்குவதற்கான முதல் படியை எடுத்து வைத்தோம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நீங்கள் இதனை எப்படி எடுத்துக் கொண்டாலும் சரி.... எதேச்சையாக இவ்விடம் என் தாயுடைய பிறப்பிடமான சிக்கபல்லாப்பூரில் அமைந்துவிட்டது. என் குழந்தைப் பருவத்தின் மறக்கமுடியாத பல ஞாபகங்கள் நிரம்பிய இடமிது. என் சிறுவயதிலும் பால்ய பருவத்திலும் கழிந்த பல அழகிய தருணங்களின் நினைவுகள் நிரம்பிய நந்தி மலையின் அருகில் இது அமைந்துள்ளது. இங்குதான் நான் முதல்முதலாக பறக்க முயற்சித்தேன், அல்லது பறந்தேன் என்று சொல்லலாம். நாங்கள் உருவாக்கிய சாதனம் ஒன்றில் 20 வினாடிகளுக்கும் மேலாக காற்றில் பறந்தோம். பாப்புலர் மெக்கானிக்ஸ் புத்தகத்தில் வந்த டிசைன் ஒன்றைப் பார்த்து, உள்ளூரில் கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி நாங்களே உருவாக்கிய glider போன்ற சாதனமது. ஒரு மலைச்சரிவிலிருந்து பறக்கும் முயற்சியில் என் கணுக்கால்கள் உடைந்தபோதிலும், பறந்துவிட்டதன் பரவசம் கட்டுக்கடங்காமல் கொப்பளித்தது. அதனுடனே கிடைத்த தாங்கமுடியாத வலி ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. விஜயநகரத்திலிருந்து இப்பகுதிக்கு வந்து இந்நிலத்தைப் பண்படுத்திய எங்கள் மூதாதையர்கள் இடத்திற்கே திரும்பி வந்துவிட்டோம்.

பெங்களூரில் ‘In Conversation’ தொடர், தொழில்நுட்ப அறிஞராக இருந்து அரசியல்வாதியாக மாற்றம் கண்டிருக்கும் நந்தன் நிலேகனி அவர்களுடன் நடந்தது. இந்தியாவின் முதல் தலைமுறை தொழிலதிபர்களுள் மிகவும் வெற்றிகரமான இவர், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருக்கிறார். நந்தனைப் போன்றவர்கள் இந்தத் தேர்தலில் களத்தில் இறங்கியிருப்பது நம் நாட்டிற்கு பெருத்த நம்பிக்கையைத் தருகிறது. ஆனால் என்ன செய்ய, இம்முறை ஜெயிக்க வாய்ப்பில்லாத கட்சியில் அவர் இருக்கிறார்.

அடுத்து மும்பையில், மூன்று நாட்களில் அத்தனை நிகழ்ச்சிகள். அத்தனையையும் நினைவுக்கூறிவிட முடியாத அளவு பற்பல நிகழ்ச்சிகள். அதில் ஒன்று பிரசுன் ஜோஷியுடன் ‘In Conversation’. "மரணம், அதற்கு அப்பால்" என்ற தலைப்பில் நடந்த இந்நிகழ்ச்சி, அங்கு திரண்டிருந்த பெருத்த மக்கள் கூட்டத்திற்கு சுவாரஸ்யமானதாய் அமைந்திருந்தது. இத்தலைப்பிற்கு நியாயம் செய்யவேண்டும் என்றால், இன்னும் சில மாலைப்பொழுதுகள் இதே தலைப்பில் பேசவேண்டியிருக்கும் போலத் தோன்றுகிறது.

ஈஷாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் விதமாக இருக்கும் மிக முக்கியமான பல சந்திப்புகளுக்காக நான் இப்போது ஐரோப்பாவில் உள்ளேன். இங்கே லூஃப்தான்சா விமானிகள் வேலை நிறுத்தத்தில் உள்ளனர். கடந்த இரண்டு நாட்களில் 1300க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், விமானங்கள் மாற்றி பயணம் செய்ய சர்க்கஸ்கள் நடந்துகொண்டிருக்கின்றன. நியூயார்க் நகரம் சென்றடைவதை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். கிறுகிறுக்கவைத்த ஒரு வார நிகழ்வுகளுக்குப்பின் விமான பயணத்தில் சிறிது உறக்கமும் ஓய்வும் கிடைக்கப்போவது நிச்சயம். ஈஷா அமெரிக்கா காத்துக் கொண்டிருக்கிறது...

டௌட்ச்லாந்து (Deutschland)

ஆற்றலும் ஆக்ரோஷமும் நிறைந்த
ஜெர்மானிய இனம்
ஒழுக்கத்தின் உறைவிடம்,
திறமைகளின் பிறப்பிடம்
தந்திரமான ஆங்கிலேயர் கொண்டதும் கூட
ஜெர்மானிய ராணியை

ஜெர்மனியின் கனவு
கானலாய் ஆனது
ஒரே ஒருவரின் கொடூரமான
கொடுங்கோன்மையால்

அவரைப்போல் இன்னொருவரை
இவ்வுலகம் இனி ஒருபோதும்
உருவாக்காமல் இருக்கட்டும்.

Love & Grace