பஞ்சபூதங்களில் நெருப்பின் முக்கியத்துவம்
பஞ்சபூதங்களில் நம்மை பிரமிக்கவைக்கும் தன்மை கொண்ட நெருப்பு பற்றி இதுவரை நமக்குத் தெரியாத அம்சங்களை பகிர்வதோடு, உள்நிலையில் இருக்கும் நெருப்பிலும் வெளியில் நாம் ஏற்றும் நெருப்பிலும் உள்ள வகைகளையும், அவற்றின் குணங்களையும் இந்த சுவாரசியமான ஸ்பாட்டில் சத்குரு விளக்கியுள்ளார்.
 
பஞ்சபூதங்களில் நெருப்பின் முக்கியத்துவம், Pancha bhuthangalil neruppin mukkiyathuvam
 
 
 

பஞ்சபூதங்களில் நம்மை பிரமிக்கவைக்கும் தன்மை கொண்ட நெருப்பு பற்றி இதுவரை நமக்குத் தெரியாத அம்சங்களை பகிர்வதோடு, உள்நிலையில் இருக்கும் நெருப்பிலும் வெளியில் நாம் ஏற்றும் நெருப்பிலும் உள்ள வகைகளையும், அவற்றின் குணங்களையும் இந்த சுவாரசியமான ஸ்பாட்டில் சத்குரு விளக்கியுள்ளார்.

எந்த ஒரு சமூகத்திலும், "தீ" என்று சற்று சத்தமாகச் சொன்னாலே அனைவரையும் பதற்றத்த்தில் திரும்பிப் பார்க்க வைக்கும் தன்மை கொண்டது நெருப்பு. சாதாரணமாக நெருப்பு என்றாலே ஆபத்தாகக் கருதப்படுகிறது - அதை சரியாகக் கையாளவில்லை என்றால் அதுவும் அவ்வாறே செயல்படுகிறது. பஞ்சபூதங்களில் ஒன்றான நெருப்பு அல்லது அக்கினியையும், அது பிரதிபலித்திருக்கும் விதத்தையும், அதனை எப்படிக் கையாண்டு எப்படி அதன்மீது ஆளுமை கொண்டுவருவது என்பதையும் இப்போது பார்ப்போம். பஞ்சபூதங்களில் நெருப்பின் விகிதம் மனித உடலில் குறைந்தபட்சமாக இருப்பினும், அதன் தாக்கம் அபரிமிதமானது. பலவிதங்களில் நெருப்பு என்பது உயிர்த்தன்மையைக் குறிக்கிறது. நீங்கள் உயிருடன் இருக்கிறீர்களா இல்லையா என்பதற்கு ஒரு அறிகுறி, உங்களுக்குள் இன்னும் நெருப்பு இருக்கிறதா அல்லது உடல் குளிர்ந்துவிட்டதா என்பதுதான். இந்த பூமியில் அடிப்படையாகவே வாழ்க்கையை நடத்துவது சூரிய சக்திதான். பூமியில் உயிர் நடப்பதற்கு எரிவாயுவாக இருப்பது சூரியன் எனும் பெரிய நெருப்புப் பந்து. எந்த இயந்திரமானாலும், அது இயங்கும்போது வெப்பத்தை உருவாக்குகிறது, ஏனென்றால் நெருப்புதான் அதை இயக்கும் எரிவாயுவாக இருக்கிறது. மின்சாரம், பெட்ரோல், மரம், நிலக்கரி, அல்லது வேறு எந்த வடிவத்தில் இருந்தாலும் சரி, அடிப்படையாகவே, உங்கள் உடல் உட்பட அனைத்து இயந்திரங்களையும் இயக்குவது நெருப்புதான்.

இந்த கலாச்சாரத்தில் பஞ்சபூதத்தில் ஒன்றான நெருப்பை அக்கினி தேவராக உருவகப்படுத்தியுள்ளோம், அவர் ஒரு முறட்டு ஆட்டுக்கடா மீது சவாரிசெய்யும் இரண்டுதலைக் கடவுள். இவ்விரண்டு தலைகளில் ஒன்று நெருப்பின் உயிர் கொடுக்கும் தன்மையையும், இன்னொன்று உயிரை எடுக்கும் தன்மையையும் குறிக்கின்றன. நமக்குள் எரியும் நெருப்பு இல்லாமல் உயிர் இல்லை. ஆனால் நீங்கள் கவனிக்கவில்லை என்றால், அதே நெருப்பு க்ஷணப்பொழுதில் கட்டுக்கடங்காமல் படர்ந்து எல்லாவற்றையும் புசித்துவிடும். நம் உடலை அது புசிக்கும்போது அதனை தகனம் என்கிறோம். இன்னொரு அம்சம், சமையல் செய்ய நாம் நெருப்பை பயன்படுத்துகிறோம், அதன்மூலம் நாம் அப்படியே சாப்பிடமுடியாத உணவு வகைகளை சாப்பிடக்கூடியதாக மாற்றுகிறோம். நமக்குள்ளும் வெளியும் பல பரிமாணங்களில் நெருப்பு செயல்படுகிறது. உள்நிலை நெருப்பின் ஒரு வகை, ஜடராக்கினி. ஜடரா என்றால் வயிறு அல்லது ஜீரணத்தின் நெருப்பு. வயிற்றில் கொஞ்சம் நெருப்பு இல்லாவிட்டால் உண்ணும் உணவை உங்களால் ஜீரணிக்க முடியாது. உணவென்பது, நீங்கள் உடைத்து சக்தியை எடுத்துக்கொள்ளவேண்டிய எரிவாயுவாக செயல்படுகிறது. இந்த ஜீரணத்தின் நெருப்புக்குத் தேவையான எண்ணெயும் சரியான ஊட்டமும் வழங்கப்பட்டால், அது இனப்பெருக்கத்திற்கான நெருப்பாகவும் மாறுகிறது. செரிமானமும் இனப்பெருக்கமும் ஜடராக்கினியை சார்ந்திருக்கின்றன.

உள்நிலை நெருப்பின் இரண்டாவது வகை சிதாக்கினி. அது மனம் மற்றும் மனதைக் கடந்த பரிமாணத்தைக் குறிக்கிறது. சித்தா என்பது பொருள்வடிவத்தின் எல்லைகளைக் கடக்கும் புத்திசாலித்தனத்தின் பரிமாணம். உங்கள் மரபணு மற்றும் கர்மப் பதிவுகளின் விளைவே உங்கள் உடல்வடிவம். மாறாக, சித்தா என்பது பழைய பதிவுகளால் கறைபடாத புத்திசாலித்தனத்தின் பரிமாணம். புத்தியின் நெருப்பு பல நிலைகளில் பிரதிபலிக்க முடியும், அதன் முதல் வெளிப்பாடு அறிவாற்றல். உங்களுக்குள் இருக்கும் வெவ்வேறு நெருப்புகளை பார்த்தால், உங்களுக்குள் செரிமானத்திற்கான நெருப்புக்கு சரியாக எண்ணெயூற்றியிருந்தால் மட்டுமே இனப்பெருக்கத்திற்கான நெருப்பு இயங்கத்துவங்கும். சரியாக சாப்பாடு கிடைக்காமல் நீங்கள் இருந்தால், உங்கள் பாலுணர்வு காணாமல் போய்விடும். அதேபோல் உங்கள் சிதாக்கினிக்குப் போதுமான எண்ணெய் இல்லாவிட்டால், உங்கள் அறிவாற்றல் பலவீனமாகி செயலிழந்துவிடும். ஆனால் உங்கள் சிதாக்கினி தீவிரமாக எரிந்தால், அது அறிவாற்றலின் வடிவில் பிரதிபலிக்கும் - புத்தியின் வேறு பரிமாணங்களை நீங்களாகவே ஆராய்ந்துணரும் நிலையில் நீங்கள் இல்லாவிட்டாலும், உங்கள் அறிவாற்றல் சுடர்விடும்.

உங்கள் சிதாக்கினி சுடர்விட்டு எரிந்தால், உணவு, பாலுணர்வு, மற்றும் உடல்சார்ந்த வேறு விஷயங்களில் உங்களுக்கு நாட்டமில்லாமல் போய்விடும். இந்த விதத்தில் தான், துரதிர்ஷ்டவசமாக நாம் எதை துறவு என்று பரவலாகப் பிரச்சாரம் செய்கிறோமோ, அது உண்மையில் கடந்துசெல்வதாக இருக்கவேண்டும். நெருப்பின் அடுத்த பரிமாணம் பூதாக்கினி, அல்லது பஞ்சபூதங்களின் நெருப்பு. பஞ்சபூதங்களின் நெருப்பு உங்களுக்குள் உயிர்ப்பாக இருப்பின், உடல் மற்றும் மனதின் விளையாட்டு உங்களுக்கு பெரிதாகத் தெரியாது. உங்கள் ஆர்வமும் கவனமும், உடல் மற்றும் மனம் செய்யும் கோமாளித்தனங்களிலிருந்து, படைப்பின் இன்னும் அடிப்படையான அம்சமான உயிரின் மூலம் நோக்கித் திரும்பும். ஜடராக்கினியை உங்கள் கைகளில் எடுத்துக் கொண்டால், ஆரோக்கியமான கட்டுக்கோப்பான உடல் கிடைக்கும். சிதாக்கினியை உங்கள் ஆளுமையில் வைத்துக்கொண்டால், பலவிதங்களில் பயன்படுத்தக்கூடிய மனம் உங்களிடம் இருக்கும். உங்கள் பூதாக்கினியை ஆட்கொண்டால், உயிர் செயல்முறை மீது உங்களுக்கு அடிப்படையான ஆளுமை இருக்கும்.

உடல் எல்லைகள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. மனதின் வரையறைகளோ இன்னும் விரிவானது. உதாரணத்திற்கு, உலகின் வேறொரு பகுதியைப் பற்றி உங்களுக்கு ஏதோவொன்று தெரியுமென்றால், அது உங்கள் மனதின் எல்லைக்குள் இருக்கிறது. உங்கள் அறிவு விரிவடைய விரிவடைய, உங்கள் மனதின் எல்லைகள் விரிகின்றன. ஆனால் பஞ்சபூதங்களின் நெருப்பு அல்லது பூதாக்கினியின் பரிமாணம் குறித்து உங்களுக்கு விழிப்புணர்வு வந்துவிட்டால், நீங்கள் எல்லையில்லாத உயிராகிவிடுவீர்கள், ஏனென்றால் பஞ்சபூதங்களின் விளையாட்டு பிரபஞ்சம் முழுவதும் நிகழும் நிகழ்வு. இதற்கு மேல் சர்வாக்கினி என்று ஒன்று இருக்கிறது. ஏனென்றால், நவீன அறிவியலின்படி, பொருள்தன்மையிலுள்ள பிரபஞ்சம் ஐந்து சதவிகிதத்தை விடக் குறைவானது. இதற்கு அர்த்தம் என்னவென்றால், பொருள்தன்மையைச் சேர்ந்த பிரபஞ்சம் முழுவதையும் நீங்கள் அறிந்துகொண்டாலும், பிரபஞ்சத்தின் ஐந்து சதவிகிதத்தை மட்டுமே நீங்கள் அறிந்திருப்பீர்கள். சர்வாக்கினி என்பது இந்த பஞ்சபூதங்கள் அல்லாத பரிமாணத்தைத் தொடுகிறது, அங்கு நீங்கள் அறிந்தவிதத்தில் படைப்பு இருக்காது. வேறு விதமாகச் சொல்வதென்றால், அது பொருள்தன்மை அல்லாததைத் தொடுகிறது.

சாதாரணமாக, உயிரின் தன்மையைத் தொட விரும்பும் ஒரு யோகிக்கு, ஜடராக்கினி, சிதாக்கினி, மற்றும் பூதாக்கினி மீது நாட்டமிருக்காது. அவர் சர்வாக்கினி மீது மட்டுமே கவனம் செலுத்துவார், ஏனென்றால் அதுதான் உச்சபட்ச நெருப்பு - ஆனால் அது குளிர்ந்த நெருப்பு. ஜடராக்கினி வெளிப்படையாகத் தெரியும் நெருப்பு. சிதாக்கினி அவ்வளவு வெளிப்படையாக இல்லாவிட்டாலும், அது இருக்கிறது. பூதாக்கினி வெளிப்படையாகத் தெரியாது, ஆனால் அதுவும் இருக்கிறது. சர்வாக்கினி இருப்பதே தெரியாது, ஆனால் அது இல்லாமல் எதுவும் நிகழாது. மற்ற எல்லா நெருப்புகளையும் உள்ளடக்கும் அடிப்படையான உச்சபட்ச நெருப்பு அது. ஆகாஷ் அல்லது ஆகாயத்திற்கு மிகவும் நெருக்கமானது நெருப்பு. நெருப்பு இருக்கும்போது, நாம் சுலபமாகத் தொடும் விதமாக ஆகாயத்தத்துவம் இருக்கிறது - குறிப்பாக சில எண்ணெய்களைப் பயன்படுத்துகையில் இப்படி அமைகிறது. தென் இந்தியாவில் விளக்கேற்றும் போது நெய் அல்லது நல்லெண்ணெயை பயன்படுத்துகிறோம். இரண்டும் இல்லாவிட்டால் கடலை எண்ணெயை பயன்படுத்துகிறோம், அதுவும் இல்லாவிட்டால் தேங்காய் எண்ணெய். இந்த எண்ணெய்களை வைத்து ஏற்றப்படும் நெருப்பிற்கு குறிப்பிட்ட ஒரு குணம் இருக்கிறது. மற்ற எண்ணெய்களோடு ஒப்பிடும்போது, இவை அவற்றைவிட அதிகமான வெப்பநிலையில் புகைவிடும் தன்மை கொண்டவை. அதனால் இந்த எண்ணெய்கள் கொண்டு ஏற்றப்படும் தீபச்சுடரின் விளிம்பைப் பார்த்தால் - சுடரைப் பார்க்காமல் அதைச் சுற்றியுள்ள இடத்தைப் பார்த்தால் - ஆகாயத்தின் பரிமாணம் இன்னும் அடர்த்தியாக இருக்கும்.

எங்கெல்லாம் உகந்த சூழ்நிலையை நீங்கள் உருவாக்க விரும்புகிறீர்களோ, அங்கே முதலில் நெய் அல்லது இந்த எண்ணெய் ஊற்றிய தீபத்தை ஏற்றுவோம். இது இந்திய வாழ்க்கைமுறையின் ஓர் அங்கமாகும். அதிகபட்ச நலனுக்கு இந்த எண்ணெய் குறிப்பிட்ட குணம் கொண்டதாக இருக்கவேண்டும். மெழுகுவர்த்திகள் சாதாரணமாக இந்த குணம் கொண்டவை கிடையாது, குறிப்பாக இரசாயணங்களால் ஆன மெழுகிற்கு இந்த குணம் கிடையாது. அடிப்படையாக, நாம் எந்தவொரு பொருளைப் பயன்படுத்தினால் அதைச் சுற்றி குறிப்பிட்டதொரு ஆரா அல்லது ஓளிவட்டம் ஏற்படுமோ, அந்த பொருளை வைத்து ஒரு தீச்சுடர் ஏற்ற விரும்புகிறோம், அப்போது ஆகாயத்தின் பரிமாணம் அணுகும் தூரத்தில் இருக்கிறது. இப்படி எண்ணெயின் தீபம் ஏற்றினால், நீங்களும் வீட்டிலுள்ள மற்றவர்களும் பலன்பெறும் விதமான ஒரு ஆகாயத்தின் வளையத்தை உருவாக்குகிறீர்கள். குறிப்பாக குழந்தைகளுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும், உடல்நலம் இல்லாதவர்களுக்கும், பொதுவாக ஆரோக்கியத்திற்கும், உங்கள் வீட்டில் ஒரு எண்ணெய் விளக்கு எரிவது அத்தியாவசியமானது. இப்படிப்பட்ட ஒரு நெருப்பு உங்கள் ஆரோக்கியம் மற்றும் உடல் உறுதிக்கான ஜடராக்கினியை மேம்படுத்துவதோடு, உங்கள் சிதாக்கினியையும் மேம்படுத்தி, ஆகாயத்தின் பரிமாணத்தை நெருங்கிட வழிவகுக்கிறது. அறிவாற்றலின் நெருப்பு உங்களுக்குள் எரிவது முக்கியமானது. பொருள்தன்மையின் நெருப்பு மட்டும் உங்களுக்குள் எரிந்து புத்தியின் நெருப்பு சுடர்விடாவிட்டால், வாழ்க்கை துயரமாகவும் அசிங்கமாகவும் மாறிவிடும் அபாயமுள்ளது. அதிகப்படியான ஜடராக்கினி இருந்து போதுமான சிதாக்கினி இல்லாவிட்டால் மக்கள் அடிமுட்டாள்களாக நடந்துகொள்வார்கள்.

இந்த கலாச்சாரத்தில் மனிதர்களின் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த எதுவும் நெருப்பைச் சுற்றியே நடந்தது. நெருப்பில்லாமல் வழிபாடில்லை, திருமணமில்லை, எந்த ஒரு முக்கிய நிகழ்வும் இல்லை. ஹோமங்கள் ஹவனங்கள் உட்பட, நெருப்பைப் பயன்படுத்தும் பல்வேறு விதங்களும், நெருப்பின் பல வடிவங்களும் இந்த கலாச்சாரத்தின் அங்கமாக நிலைபெற்றன. ஆகாஷ் அல்லது ஆகாயத்தை அணுக, நெருப்பு வழிவகுக்கிறது. நம்மை உருவாக்கும் பஞ்சபூதங்களுள் ஆகாயமே ஒளிபுகும் தன்மை கொண்டதும் நீர்மத்தன்மை கொண்டதும் ஆகும். என் உடலில் இருக்கும் பூமியும் உங்கள் உடலில் இருக்கும் பூமியும் அடிப்படையில் ஒன்றுதான், ஆனால் உங்கள் உடலில் இருப்பதும் என் உடலில் இருப்பதும் மிகவும் மாறுபட்டவை. உங்கள் உடலில் இருக்கும் நீரும் என் உடலில் இருக்கும் நீரும் வெவ்வேறு - அவை இப்போது வெவ்வேறு பாத்திரங்களில் இருக்கின்றன என்று சொல்லலாம். ஆனால் நாம் சுவாசிக்கும் காற்றை நம்மால் பிரிக்க இயலாது. அது தொடர்ந்து பரிமாற்றத்தில் உள்ளது. நமக்குள் இருக்கும் நெருப்பானது இன்னும் அதிக அளவில் பரிமாற்றத்தில் உள்ளது. ஆகாயத்தின் பரிமாணத்தை நாம் முழுக்க முழுக்க பகிர்ந்துள்ளோம். நாம் அனைவரும் ஒரே ஆகாயத்தில் இருக்கிறோம். பஞ்சபூதங்களில் ஆகாயத்தை எந்தவொரு சூழ்நிலையிலும் அடர்த்தியாக்கினால், ஒருவிதமான பிணைப்பு மனிதர்களிடையே ஏற்படுகிறது. ஒரு நெருப்பைச் சுற்றி நெருக்கம் அதிகரித்து, தொடர்புகொண்டு பரிமாறிக்கொள்ளும் ஆற்றல் மேம்படுகிறது. ஏனென்றால் நெருப்பு இருக்கும் இடத்தில் ஆகாயம் ஆதிக்கமான தத்துவமாகிறது.

சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால் : அளவைப் பொறுத்தவரை உங்களின் ஒரு சிறிய பகுதியாக இருப்பினும், தரத்தைப் பொறுத்தவரை நெருப்பு அதன் தனித்துவத்தால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாய் விளங்குகிறது. நெருப்பைத் தொடும் திறன் உங்களுக்கு மிகக்குறைவாய் இருக்கும் அதே சமயம், நெருப்பெனும் தத்துவத்திற்கு நீங்கள் மிகவும் நுண்ணுணர்வு கொண்டவராய் இருக்கிறீர்கள். தொடர்பு கொள்ளவும், உள்வாங்கிக்கொள்ளவும், எல்லைகளைக் கடப்பதற்கும், தெய்வீகம் அல்லது கடவுள் அல்லது படைப்பின் மூலம் என்று நாம் அழைக்கும் பரிமாணத்தைத் தொடுவதற்கும் ஏதுவான சூழ்நிலையை உருவாக்க, நெருப்பு ஒரு கருவியாய் விளங்குகிறது.

Love & Grace

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1