ஓர் அளப்பரிய, பெரிய பாறை

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், தான் மேற்கொண்ட ஆஸ்திரேலியா மற்றும் கிழக்காசிய நாடுகளுக்கான பயணங்களைப் பற்றியும், ஆசிரமத்துக்குக் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ள 500 டன் எடையுள்ள ஒரு பாறையைப் பற்றியும் விவரிக்கிறார் சத்குரு. "இந்தக் கல்லை எடுப்பதற்காக, எனது தாய் வழிப் பாட்டனாரின் ஊருக்கு அருகே சென்றிருந்தோம். அங்கே பாறைகள் நிறைந்த குன்றுகள் இருக்கின்றன. இந்தப் பாறை, மக்கள் அனுபவத்தில், பரம்பரையாகக் கிடைக்கக் கூடியதைவிட, மிகப் பெரிய சொத்தாக இருக்கப் போகிறது." படித்து மகிழுங்கள்!
 
 
 
 

இமயமலையின் கைலாஷ் சிகரங்களிலிருந்து கீழிறங்கி ஆஸ்திரேலியாவிலும், சிங்கப்பூர், மலேசியா போன்ற ஆசிய கண்டத்தின் சில பகுதிகளிலும் நடந்த பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன்.

நிறைய, நிறைய நிகழ்வுகள் நடந்தேறிவிட்டன. பல விஷயங்களை என்னால் தெளிவாக விளக்க முடியாவிட்டாலும், இந்த தெளிவாக விளக்குதல் என்பதே மிகுந்த ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது. திபெத், நேபாளம், ஆஸ்திரேலியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய பகுதிகளில் ஆங்கில மொழி பேசப்படுவதைப் பார்த்தால் அதுவே ஒரு கலாச்சாரக் குவியலாக இருக்கிறது.

முதன்முதலாக நாம் 2006ம் ஆண்டு திபெத்தில் கைலாஷ் யாத்திரைக்காக அங்கு சென்றிறங்கி வண்டிகளில் பயணித்துக் கொண்டிருந்தபோது, வழிகாட்டியிடம் வண்டியிலிருந்த பெண்கள் "கழிவறை எங்கே?' என்று கேட்டதற்கு, அவர் 'மரத்துக்குப் பின்னால்' என்று சொன்னார். அவர்கள் 'மரத்துக்குப் பின்னால்' சென்றார்கள்.

சிறிது நேரம் கழித்து, மரங்களே இல்லாத வெட்டவெளியான பீடபூமி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, பெண்கள் 'இப்போது எங்கே போவது?' என்று கேட்டனர். அதற்கு அவர் 'பாறைக்குப் பின்னால்' என்று சொன்னார்.

பின்னர் நாங்கள் காரில் பயணித்தபடியே பாறையைத் தேடினோம். ஆனால் ஒரு பாறை கூட இல்லாத முற்றிலும் சமவெளியான பகுதி அது. எனவே அவர்கள், 'இப்போது என்ன செய்வது?' என்று கேட்க, வழிகாட்டி, 'வண்டிக்குப் பின்னால்' என்று சொன்னார்.

ஆஸ்திரேலியா, மலேசியா மற்றும் சிங்கப்பூரிலுள்ள தன்னார்வத் தொண்டர்கள் மிகச் சிறப்பாக செயலாற்றியிருந்தார்கள். இந்த இடங்களில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பெருமளவில் மக்கள் வருகை தந்திருந்தனர்; தாங்கள் இப்போதிருக்கும் நிலையைத் தாண்டி இருக்கும் ஏதோ ஒன்றை அறிந்து கொள்வதில் மக்கள் வியக்கத்தக்க ஆர்வம் கொண்டிருக்கின்றனர்.

கடந்த பதினைந்து நாட்களில், இந்தப் பகுதிகளில் உள்ள தன்னார்வத் தொண்டர்களுக்கு நிறைய மனதைத் தொடும் நெகிழ்ச்சியான, தருணங்கள் வாய்த்தன. அவர்கள் மிக அற்புதமானவர்கள்.

இந்தியாவில் செவ்வாய்க்கிழமை வந்து இறங்கினேன். அன்றைய தினம் முழுவதும் ஆசிரமத்துக்குக் கொண்டு வருவதற்கு ஒரு பாறையைத் தேர்ந்தெடுப்பதில் செலவழித்தேன் - ஏனென்றால், தியானலிங்கம் கோவிலின் புதிய நுழைவாயிலில் ஒரு பாறை இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம்.

முதலில் நான் கிட்டத்தட்ட 200 டன்கள் எடையுள்ள ஒரு பாறையை தேர்ந்தெடுப்பதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன், ஆனால் கடைசியில் ஏறக்குறைய 500 டன்கள் எடையுள்ள ஒரு பாறையை தேர்வு செய்தோம்.

இது திகைக்க வைக்கும் அளவுக்கு பெரிய ஒரு பாறை; 40 அடி நீளமும், 23 அடி உயரமும் உடையது. வரும் மாதத்தில் இதை ஆசிரமத்துக்குக் கொண்டு வருவது மிகப் பெரிய ஒரு செயலாக இருக்கப் போகிறது.

இதை ட்ரக்கில் ஏற்றி, 400 கிலோமீட்டர்கள் ஓட்டி வந்து, கீழிறக்கி, நாம் விரும்பிய வகையில் வைப்பது என்பது ஒரு சவாலான விஷயம். ஸ்பந்தா ஹாலுக்காக நாம் 130 டன்கள் எடையுள்ள ஒரு பாறையைக் கொண்டு வந்தோம். ஆனால் இது இன்னும் பெரிய சவாலாக இருக்கப் போகிறது.

யாரும் இது போன்ற ஒரு கல்லை அது எப்படி உள்ளதோ அதே போன்று வைப்பதற்கு ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குக் கொண்டு வந்திருப்பார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை. இதை நாம் செதுக்கக் கூடப் போவதில்லை, இதிலிருந்து சிற்பம் எதையும் உருவாக்கப் போவதில்லை, நமக்கு ஒரு கல் வேண்டும், அவ்வளவுதான்.

மேலும் இது அசாதாரணமான வடிவம் உடையது, இது வெட்டப்படவும் இல்லை. இது எப்படி இருக்கிறதோ அப்படியே நமக்கு வேண்டும். இது மிகவும் உயிர்ப்புள்ளதாக, மிகுந்த அதிர்வுகளுடன் இருக்கிறது.

இந்தக் கல்லை எடுப்பதற்காக, எனது தாய் வழிப் பாட்டனாரின் ஊருக்கு அருகே சென்றிருந்தோம். அங்கே பாறைகள் நிறைந்த குன்றுகள் இருக்கின்றன. என் தாத்தா மிகப் பெரிய பணக்காரர்; அவருடைய சொத்துக்களை அடைய நான் என்றுமே விரும்பியதில்லை, ஆனால் இப்போது இந்தப் பாறையை அவரது பகுதியில் கண்டெடுத்தோம்.

இது, மக்கள் அனுபவத்தில், பரம்பரையாகக் கிடைக்கக் கூடியதைவிட, மிகப் பெரிய சொத்தாக இருக்கப் போகிறது. ஒரு பாறையைத் தேடி எல்லா இடங்களுக்கும் சென்று பார்த்துவிட்டு, இறுதியில், இரண்டு பாறைகளைத் தேர்ந்தெடுத்தோம்.

இந்த 500 டன் எடையுள்ள பாறையை எடுக்க முடியவில்லை என்றால், 250 டன் எடையுள்ள இன்னொரு பாறையைக் கண்டறிந்து வைத்துள்ளோம். இந்தப் பாறையைக் கொண்டு வரும் பணியில் பங்கேற்க விரும்புபவர்கள்... உண்மையிலேயே இது ஒரு சாதனையாக இருக்கப் போகிறது.

அதிருஷ்டவசமாக, இந்தப் பாறை நெடுஞ்சாலையிலிருந்து 50 அடி தொலைவில்தான் இருக்கிறது. இருந்தாலும், அது இயற்கையாக இருக்கும் இடத்திலிருந்து, சில ஆயிரம் வருடங்களாக அல்லது சில லட்சம் வருடங்களாக அது உட்கார்ந்திருக்கும் இடத்திலிருந்து, அதைத் தூக்கி, ஒரு ட்ரக்கின் பின்பகுதியில் வைத்து, நாம் விரும்பும் வகையில் அதை சரியாக நிலைப்படுத்துவது என்பது கண்டிப்பாக பெரிய விஷயம்தான். எனவே உண்மையிலேயே இது ஒரு பெரிய வேலைதான்.

பாறைகள் உண்மையிலேயே புத்திசாலித்தனமானவை; எப்போதுமே அவை தவறு செய்வதில்லை. இது உங்களுக்குத் தெரியுமா? அவை உங்களை விட புத்திசாலிகள். தவறே செய்யாத ஒரு மனிதரை நீங்கள் கண்டுபிடித்தால், அவர் மிகப் பெரியவர் என்று நீங்கள் நினைப்பீர்கள்தானே? அப்படியென்றால் ஒரு பாறைக்கும் அந்தப் பாராட்டை ஏன் நீங்கள் வழங்கக் கூடாது? அது எப்போதுமே தவறிழைத்ததில்லை, மேலும் அது அங்கேயேதான் இருந்திருக்கிறது. உங்களை, என்னை, இன்னும் லட்சக்கணக்கான பேரை பார்த்திருக்கிறது. பெரும்பாலானவற்றை அது நினைவிலும் வைத்திருக்கிறது.

எனவே அதை நாம் இங்கு ஆசிரமத்துக்குக் கொண்டு வந்து, அதற்கு வேறு சில செயல்களைச் செய்யப் போகிறோம். பிறகு அது ஈஷா யோகா மையத்தின் மிக முக்கியமான உறுப்பினராகிவிடும் - அநேகமாக அதுதான் மிக நீண்ட ஆயுளை உடைய ஓர் உறுப்பினராக இருக்கும். நாம் அனைவரும் சென்று விட்ட பின்னரும், அது இங்கே மிக நீண்ட காலம் இருக்கப் போகிறது.

அன்பும் அருளும்