ஊழலும் நீங்களும்

ஊழல் அதிகாரத்தால் வருவதில்லை, ஒருவருக்குள் இருக்கும் ஊழல் அதிகாரத்தால் வெட்ட வெளிச்சத்திற்கு வருகிறது என்பதை இந்த வார சத்குரு ஸ்பாட்டில் விளக்குகிறார் சத்குரு. நான், என் குடும்பம், என் சமூகம், என் நாடு எனத் தொடங்கி விரியும் ஊழலை எப்படிக் கையாள்வது என்றும் வழிகாட்டுகிறார்...

Question: அன்புள்ள சத்குரு, அதிகாரம் இருக்கும் பதவியில் நான் அமரும்பொழுது, அதனால் நான் எப்படி ஊழல்வாதியாகாமல் இருப்பது?

சத்குரு:

Sign Up for Monthly Updates from Isha

Summarized updates from Isha's monthly Magazine on Isha and Sadhguru available right in your mailbox.

No Spam. Cancel Anytime.

அதிகாரத்தால் ஊழல் நடப்பதில்லை, மனிதர்கள்தாம் ஊழல்வாதிகளாக இருக்கிறார்கள். அவர்களுக்கு அதிகாரம் கிடைக்கும்பொழுது, அந்த ஊழல் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. பூதக்கண்ணாடி அவர்கள் மீது இல்லாதபோது நீங்கள் அதை பார்ப்பதில்லை. ஆனால் ஊழல் என்பது ஒருவருக்குள் இல்லாதபோது, அவர் ஊழல்வாதியாக மாறமாட்டார். முதலில் ஊழல் என்றால் என்ன என்பதை நாம் புரிந்துகொள்வோம். "நான்" என்ற ஒன்றும், "நீங்கள்" என்ற ஒன்றும் இருந்தால், ஊழல் ஆரம்பமாகி விடுகிறது. ஏனென்றால் "நான்" என்பது "நீங்கள்" என்பதைவிட முக்கியமாக இருக்கிறது. "நான்" என்பது வந்துவிட்டால், "என்னுடையது", "என்னுடையது அல்லாதது" என்பதும் வந்துவிடுகிறது. "இது என்னுடையது", "இது என்னுடையது இல்லை"என்பது வந்துவிட்டால், ஊழல் ஆழமாகிறது. "என்னுடையது", "என்னுடையது இல்லை" என்பதோடு நீங்கள் அதிகம் அடையாளப்படுத்திக் கொள்ளும்போது ஊழல் நிலைபெறுகிறது. இந்த ஊழல் இப்படியே தொடர்கிறது.

அதனால்தான் நான் இத்தனை வருடங்களாக, "ஊழலை பிரபஞ்சமயமாக்குவோம்!" என்று சொல்லி வருகிறேன். உங்களுடைய இயல்பு எப்படி உள்ளதென்றால், எதனோடாவது நீங்கள் அடையாளம் கொள்ள வேண்டும். உங்களை, உடலோடு மட்டும் அடையாளப்படுத்திக் கொண்டால், அது ஒரு நிலையிலான ஊழல். உங்களுக்கு திருமணமாகும் போது, இரு உடல்களோடு அடையாளப்படுத்திக் கொள்கிறீர்கள், இப்போது ஊழல் பெறுகுகிறது. ஒன்று இரண்டாகும் பொழுது ஊழல் சற்று பெரிதாகிறது, இப்போது இதிலிருக்கும் சதியை மக்களால் பார்க்க முடிகிறது. குடும்பம்தான் ஊழலின் முதல் வடிவம். நான் அதற்கு எதிராகப் பேசவில்லை, எடுத்துச் சொல்கிறேன், அவ்வளவுதான். திடீரென்று "நம்முடையது", "நம்முடையது இல்லை" என்பது முக்கியமாகிறது. அடுத்து சமூகம், தேசம், இனம், மதம், என்று வெவ்வேறு நிலைகளிலான ஊழல் வருகிறது.

அடிப்படையில் ஊழல் என்றால், ஒரு மனிதன் நல்வாழ்வுக்காக என்ன செயல் செய்தாலும், அதில் யாரோ ஒருவரை சேர்த்துக் கொள்ளாமல் விட்டுவிடுகிறார். உங்களிடம் ஏதோ ஒன்று இருந்தால், இந்த மனிதருக்கு சற்று அதிகமாகவும், அந்த மனிதருக்கு சற்று குறைவாகவும் கொடுக்க விரும்புகிறீர்கள். இதுதான் ஊழல். இந்த ஊழல் சமூகம் ஏற்கக்கூடிய வடிவத்தில் இருக்கிறதா இல்லையா என்பதுதான் கேள்வி. உதாரணமாக, உங்கள் குழந்தைகளுக்கு ஏதோ ஒன்று நேர்ந்தால், குடம் குடமாக கண்ணீர் வருகிறது. ஆனால் தெருக்களில் மற்ற குழந்தைகள் உடுத்த உடையில்லாமல், வயிற்றில் உணவில்லாமல் இருக்கும்போது, உங்களுக்கு ஒருதுளி கண்ணீர் கூடவரவில்லை என்றால் நீங்கள் ஊழல்வாதிதான். நாங்கள் உங்களை பிரதமராக்கினால், உங்கள் ஊழல்களை ஊடகங்களில் வெளியிடுவார்கள். தற்சமயம் உங்கள் ஊழல் மற்ற மனிதர்கள் மேல் அந்த அளவு தாக்கம் ஏற்படுத்தாததால், ஊடகங்களில் வெளியிடும் அளவு அதற்கு மதிப்பில்லை. அதற்கு நீங்கள் சக்தியூட்டினால், அது ஊழலின் பெரிய பரிமாணமாக வெடிக்கிறது. ஆனால் நீங்கள் பிரதமராகும் வரை காத்திருந்து, அதன்பிறகு நீங்கள் ஊழல்வாதியா இல்லை என்பதை பரிசோதித்துப் பார்க்காதீர்கள்.

பூமியில் பெரும்பாலான ஊழல்களுக்குக் காரணம், எல்லையுடைய ஏதோ ஒன்றோடு நீங்கள் உங்களை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளதுதான். எல்லையுடைய அடையாளம் என்றால் ஊழல். உங்கள் அடையாளம் நீங்களாக இருந்தால், அருகில் இருப்பவரிடம் திருடுவீர்கள். உங்கள் அடையாளம் உங்கள் சமூகமாக இருந்தால், வேறொரு சமூகத்தை பாதிக்கும் விதத்தில் உங்கள் சமூகத்திற்கு செயல்கள் செய்வீர்கள். உங்கள் தேசத்தோடு உங்களை அடையாளப்படுத்திக் கொண்டால், வேறொரு தேசத்தை பாதிக்கும் விதத்தில் உங்கள் தேசத்திற்கு நல்லது செய்வீர்கள். இதை யாரும் ஊழலாக புரிந்துகொள்வதில்லை, ஆனால் இதுவும் ஊழல்தான். ஊழல் என்பது ஒழுக்கமில்லாத நிலையில்லை. அடிப்படையில் ஊழல் என்பது எல்லையுடைய அடையாளம்.

ஆன்மீக செயல்முறை முழுவதுமே, ஒரு தனிமனிதனை எல்லையுடைய அடையாளத்தில் இருந்து அனைவரையும் அரவணைத்து இணைத்துக் கொள்ளும் சாத்தியத்திற்கு இட்டுச்செல்வது. அதுவும் அறிவுரீதியாக மட்டுமில்லாமல் அனுபவரீதியாக இட்டுச் செல்கிறது. "நான் ஒரு பக்தன்" என்றுநீங்கள் சொல்லும்பொழுது, "நான் கரைந்துவிட்டேன்" அல்லது "நான் கரைந்துவிடத் தயாராக இருக்கிறேன்" என்று அர்த்தம். இந்த நிலையில் நான்", "எனது" என்று எதுவுமில்லை. அதனால்தான் உலகின் சக்திவாய்ந்த மனிதர்களை நெருங்க நாங்கள் இவ்வளவு கடினமாக முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். ஒருவர் தியானநிலையில் இருக்கத் துவங்கிவிட்டால், ஒருவர் பக்தராகிவிட்டால், அவரால் ஊழல்வாதியாக இருக்க இயலாது.

Love & Grace