ஜெர்மனியின் கொலோன் நகரிலிருந்து மும்பை செல்லும் விமானத்தில் இருக்கிறேன். இது இரவு 10:30 மணியளவில் கோவை சென்றடைந்து, அதிகாலை 3 மணியளவில் ஆசிரமத்தை அடைவேன் என்று நினைக்கிறேன். சென்றவாரம் அதிவேகமாக ஓடியது. ஆனால் இந்த வாரமோ அசுரவேகம். பிங்க் சிட்டி என்று அழைக்கப்படும் ஜெய்ப்பூர் நகரில், முதல் முறையாக மிஸ்ட்டிக் ஐ (Mystic Eye) நிகழ்ச்சியுடன் YPO (இளம் தலைவர்கள் அமைப்பு) நிகழ்ச்சியும் நடந்தது. பல காரணங்களால் இந்த ஜெய்ப்பூர் பயணம் விசேஷமாக அமைந்தது. கடும் வெயில் மட்டும் இல்லாதிருந்தால், வசிப்பதற்கு மிகச்சிறந்த நகரங்களுள் ஒன்றாக இது இருக்கும். இதன் கடந்த காலத்துடைய ராஜபாரம்பரியம் தனித்துவமான ஒரு ருசியைத் தருகிறது, அது சிலசமயம் பிரச்சனையான ருசியும்கூட.

“பத்மாவதி” திரைப்படம் குறித்த சர்ச்சை கொழுந்துவிட்டு எரியும் இந்த சமயத்தில், கோரமாக இருந்தாலும் சரித்திர ரீதியாக அற்புதமான பல விஷயங்கள் வெளியே வரத் துவங்கியுள்ளன. கட்டிடக்கலையையும் வடிவியல் ரீதியான கச்சிதத்தையும் ரசிக்கும் என்னைப்போன்ற ஒருவருக்கு இந்த நகரம் ஒரு விருந்து. பாலைவனத்தில் இருக்கும் இம்மாநிலத்தில், தண்ணீரை சேமிப்பதற்கு ஏற்கனவே குறிப்பிடத்தக்க பல பணிகள் நடந்தவண்ணம் இருக்க, நதிகளுக்கு புத்துயிரூட்டும் செயல்திட்ட வரைவின் பரிந்துரைகளை மாண்புமிகு முதல்வரிடம் கொடுத்துள்ளேன்.

அடுத்து நதிகள் மீட்புக்கான தேசியக்குழுவின் சந்திப்பிற்குச் சென்றேன். அதன் நோக்கத்தை நிறைவேற்றும் திசையில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. கிரண் மஜூம்தர் ஷா மற்றும் பிரவேஷ் ஷர்மா அவர்களின் அற்புதமான பங்களிப்பு வெகுதூரம் செல்லும். தொடர்புடைய அனைத்து அமைச்சகங்களுடன் நிதி ஆயோக் குழுவையும் சந்தித்தேன், அதிகாரிகளிடம் அற்புதமான உற்சாகத்தையும் உறுதியையும் காண்கிறேன். பொதுவாக கடினமாகத் தெரியும் அதிகாரிகளிடம் இவ்வளவு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் காண்பது அற்புதம். மீடியா பார்ட்னர் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுடன், நதிகள் மீட்புக்கான பயணத்திற்குப் பின் நடந்த முன்னேற்றங்களின் அறிக்கையை வெளியிடுவது போன்றதொரு சந்திப்பு நடந்தது. அக்டோபர் 2ம் தேதியோடு சாலைவழிப் பயணம் நிறைவுற்ற பிறகு, மகத்துவமான பல விஷயங்கள் நடந்துள்ளன.

மும்பை கால்ஃப் ஜான்ட் (Golf Jaunt) நிகழ்ச்சி நோக்கி தற்போது பயணிக்கிறேன். இந்த வருடம், ஈஷா வித்யாவிற்கு, முன்பு எப்போதையும் விட அதிக ஆதரவு கிடைத்துள்ளது. குழந்தைகளின் முகங்களை வீடியோவில் பார்த்தால்கூட நெகிழ்ச்சியால் கண்ணீர் பெருகுகிறது. அவர்களின் நம்பிக்கையில்லா வாழ்விற்கு ஒளிசேர்க்க நாம் ஆற்றவேண்டிய பங்கு எவ்வளவு சிறியது என்பது உலகிற்கு சேர்க்கப்படவேண்டிய செய்தி. அடுத்தநாள் கொல்கத்தாவில் இன்னுமொரு கால்ஃப் ஜான்ட், மகிழ்ச்சியின் நகரம் (City of Joy) என்று அழைக்கப்படும் இந்நகரத்தில் இது முதல்முறை நடக்கவுள்ளது. கால்ஃப் விளையாடுவோரின் சமுதாயத்திலிருந்து உள்ளம் கனியவைக்கும் ஆதரவு.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

கொல்கத்தாவில் ஒரு மிஸ்ட்டிக் ஐ நிகழ்ச்சி, அதுவும் இங்கு முதல்முறையாக நடக்கிறது. அரங்கம் நிறைந்து 3000 பேருக்கு மேல் கலந்துகொண்ட நிகழ்ச்சி. ஒரு லயன்ஸ் இன்டர்நேஷனல் நிகழ்ச்சி, அதோடு வெஸ்ட் இன் ஹோட்டல் திறப்பு நிகழ்ச்சி, எல்லாம் ஒரே நாளில். அடுத்தநாள் தள்ளாடிப் பறக்கும் கேரவன் விமானத்தில் கவுஹாத்தி நோக்கிய பயணம். அசாம் மற்றும் வங்காளதேசத்திற்கு மேல் பறந்து அந்த அழகிய நிலப்பரப்பைக் காண்பது ஒரு தனி அனுபவம். அருகில் மேகாலயாவும் இருக்கிறதே, அது பெயருக்கேற்றாற்போல் உண்மையில் மேகங்களின் ஆலயம்.

நதிகள் மீட்புக்காக மாண்புமிகு மாநில முதல்வருடன் (புரிந்துணர்வு ஒப்பந்தம்) கையெழுத்திடும் நிகழ்ச்சி, பனியினாலும் தரையிறங்குவதில் ஏற்பட்ட சிரமத்தாலும் சற்று தாமதமாகியது. மாண்புமிகு முதல்வர் மற்றும் இன்னும் பல அமைச்சர்களின் முன்னிலையில், அசாம் அரசின் அதிகாரிகள் குழுவிடம் உரையாற்றிய பிறகு, ஆதியோகி நிறுவுவதற்கான இடத்தைக் காண அவசரமாகக் கிளம்பிச் சென்றோம். கிழக்குப் பகுதியில் இருக்கும் மாநிலம் என்பதால், அங்கு மாலை 4:30 மணிக்கே சூரியன் மறைந்துவிடும். அவ்விடத்தை அடைந்ததோ 5:30 மணிக்குத்தான். கும்மிருட்டில், பிரம்மபுத்ரா நதிக்கரையில், ஊரிலிருந்து ஒதுக்குப்புறமான அந்த இடத்தில் இருந்தோம்.

நான்கு தேசங்கள் வழியாக ஓடும் பிரம்மபுத்ரா நதி, இந்த துணைக்கண்டத்தின் மிகப்பெரிய நதிகளுள் ஒன்று. நம் குழுவுடன் அங்கு பன்னிரண்டே நிமிடங்கள்தான் இருக்க முடிந்தது, அதற்குப்பிறகு தில்லியிலிருந்து ஜெர்மனியின் கொலோன் நகரத்திற்குச் செல்லும் விமானத்தைப் பிடிக்க 7 மணிக்கு தில்லி விமானநிலையத்தில் இருக்கவேண்டும். போலீஸ் எஸ்கார்ட் கார்களின் ஓட்டுநர்களுக்கு நன்றி, சாலை நெரிசலையும் மீறி சரியான நேரத்திற்கு என்னை அருகிலுள்ள விமானநிலையத்திற்கு கொண்டுசேர்த்தார்கள். தில்லி விமானநிலையத்தில் நான் நிஜமாகவே நின்றபடியே தூங்கும் நிலையில் இருந்தேன்.

ஆனால், வேறெப்போதும் கிடைக்காத கால்ஃப் கொண்டாட்டமாகவும் இந்தவாரம் அமைந்தது. எட்டு நாட்களில் 5 சுற்று கால்ஃப், இதற்குமுன் நான் விளையாடியதேயில்லை. ஆனால் இதுவும் ஒரு நல்ல காரியத்திற்காக என்பதால் நடந்தது…

கொலோன் நகரத்தில், சுற்றுச்சூழல் பணியில் முன்னணி அமைப்பான குளோபல் லேண்ட்ஸ்கேப்ஸ் ஃபோரம் (Global Landscapes Forum) எனும் சர்வதேச அமைப்பு, நதிகள் மீட்பு இயக்கத்தை ஒரு தலைசிறந்த இயக்கமாக அங்கீகரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் அமைப்பின் செயல் இயக்குனரான எரிக் சோலெம் அவர்களுடனான என் உரையாடலும், வேறு பல நிகழ்ச்சிகளும் 24 மணி நேரத்திற்குக் குறைவான நேரத்தில் நடந்தேறியது. சுற்றுச்சூழல் குறித்த கவனத்துடன் நீடித்த முன்னேற்றம் நடக்கவேண்டும் என்பதில் ஆழமான உறுதியுடன் இருக்கும் எரிக் சோலெம், நதிகள் மீட்பு இயக்கத்தை மிக உயர்வாக மதிக்கிறார்.

ஒரு வாரத்திற்கு சற்று கூடுதலான நாட்களில் இவையனைத்தும், இன்னும் பலவும் நடந்துள்ளன. முழுவீச்சில் நடக்கும் வாழ்க்கையிது. நம் குழுக்களில் உள்ளவர்கள், பயணம் செய்வோரும் சரி, உள்ளூர் தன்னார்வலர்களும் சரி, இதையும் இதற்கு அதிகமான விஷயங்களையும் வியக்கத்தக்க விதத்தில் ஆதரித்துள்ளனர். அவர்களிடமிருந்து ததும்பும் அன்பும் உறுதியும் என்னை நெகிழச்செய்கிறது. என்ன அதிர்ஷ்டம்!

சுவிஸ் ஏர் விமானத்தில் இப்போது பறக்கையில், இங்கு ஒரு விமான பணிப்பெண் என்னிடம் வந்து கண்களில் நெகிழ்ச்சியின் கண்ணீர் பொங்க, கைகூப்பியபடி விமானத்தின் தரையில் அமர்ந்தார். இந்த கண்ணீருக்காகவும், இந்த இளம் பெண்ணும் உலகெங்குமுள்ள இன்னும் பலர் என்னிடம் தினமும் காட்டும் அன்பான தேவர் தேவதை போன்ற முகத்திற்காகவும், உயிர்விடுவதற்கும் விருப்பமாய் இருக்கிறேன்.

இங்கு நிகழ்ச்சிகள் நிறைந்த 24 மணி நேரத்திற்குப் பிறகு புவனேஷ்வர் செல்கிறேன். என் உருவாக்கத்தில் முக்கியத்துவம் வாய்ந்த இடமிது. சில மணி நேரம் அங்கு கலிங்கா இலக்கியத் திருவிழாவிற்காக இருந்துவிட்டு அதற்குப் பிறகு மும்பை, துபாய் வழியாக அமெரிக்கா. கிருஸ்துமஸ் பண்டிகைக்கு அமெரிக்காவின் iii ஆசிரமத்தில் இருப்பேன்.

உங்களுக்கு இது அற்புதமான விழாக்காலமாகவும் பயனுள்ள உத்தராயணமாகவும் (வடதிசை நோக்கிய சூரியனின் பயணம்) அமையட்டும்.

 

Sign