மனித அனுபவத்தின் இயல்பு எப்படியென்றால் ஒருவர் தம்முடைய புலனறிவு, எண்ணம், உணர்வு, நம்பிக்கை இவற்றின் கட்டுப்பாட்டில் சுலபமாக ஏமாந்துவிடுகிறார். நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அல்லது என்ன உணர்ச்சியை வெளிப்படுத்துகிறீர்களோ அது, இந்த படைப்பைவிட மிகப் பெரிதாகவும் முக்கியமானதாகவும் ஆகிவிடக்கூடும்.

சென்ற வாரம் சென்னை, ஐதராபாத், அகமதாபாத் சுற்றுப்பயணம் முடித்து திரும்பிவந்தேன். அங்கே நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஒருவர், “சத்குரு, கடவுள் என்னை ஏன் இங்கு அனுப்பிவைக்க வேண்டும்? இப்பொழுது நான் முக்தி, மோட்சம் அடைய பாடுபட வேண்டியிருக்கிறதே?” என்று கேட்டார். “உங்களை கடவுள்தான் இங்கு அனுப்பி வைத்தார் என்று ஏன் நம்புகிறீர்கள்? உங்களைப் பார்த்தால் எனக்கு அப்படி தோன்றவில்லையே” என்று அவரைக் கேட்டேன். இப்படிதான் முடிவில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.

மக்கள் ஏதோ ஒன்றில் முதலீடு செய்கிறார்கள். அதிலிருந்து ஓர் உலகமே வளர்ந்து விடுகிறது. ஒரு எண்ணம், ஒரு சிந்தனை, ஒரு உணர்ச்சி, ஒரு பற்றுதல்; இது ஒன்றிலிருந்து ஒரு பிரபஞ்சமே உருவாகிவிடும். எனவேதான் வழிவழியாக இந்த அனுபவங்களை எல்லாம் ‘மாயை’ என்று ஒரு வார்த்தையைக் கூறி தள்ளுபடி செய்துவந்தார்கள். உங்களுடைய அடையாளத்திலிருந்து, உங்கள் எண்ணத்திலிருந்து, உணர்ச்சியிலிருந்து, பற்றுதலிலிருந்து உருவாகும் எதுவும் மாயைதான் - அது ஒன்றே போதும், ஓர் உலகம் உருவாகும் - அதிலிருந்து பிரபஞ்சமே வெளிவந்துவிடும். அவரவர்க்கென்று தனி பிரபஞ்சம் வைத்துக்கொண்டிருக்கிறார்கள். இப்படித்தான் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இதுவே நிஜத்தைக்காட்டிலிம் நிஜமானதாக தோன்றும்பொழுது அந்த மெய்யானதை அறிந்துகொள்ள நேரமேது?

நீங்கள் சிறுவராய் இருந்தபோது விளையாடிய விளையாட்டுகள் இந்த பிரபஞ்சத்தை விட பெரிதாகத் தோன்றியது. எல்லாமே விளையாட்டுதான். சிறிது வளர்ந்தவுடன், உங்கள் அறிவை ஹார்மோன்கள் கடத்திவிட்டன. எதிர்பாலினம்தான் எல்லாம் என்றாகிவிட்டது. எல்லாவற்றையும் அதுவே ஆட்சி செய்தது. எல்லாம் நிஜம் என்று நினைத்தீர்கள். வயதானவுடன் அந்த விளையாட்டுகள், எதிர்பாலினம் எல்லாம் பின்னுக்கு தள்ளப்பட்டு கவலைகளின் சுழற்சியில் சிக்கிக்கொண்டுவிடுகிறீர்கள். உங்களுக்கு தேவைப்படாத பணத்தைப்பற்றியும், இல்லாத எதிர்காலத்தைப் பற்றியும், மீட்கமுடியாத கடந்த காலத்தைப் பற்றியும் சதாசர்வகாலமும் கவலைப்பட்டு, கவலைப்படுவதில் மன்னனாகிவிட்டீர்கள்.

வயது ஆக ஆக, ஒரு காரணமும் இல்லாமலேயே கவலைப்படுகிற அளவிற்கு தேர்ச்சி பெற்றுவிடுவீர்கள். நீங்கள் ஒரு போலிப் பிரபஞ்சத்தை உருவாக்கிவிட்டதால் இது முடிவில்லாமல் போய்க்கொண்டிருக்கும். நீங்கள் இறந்தால் அதுவும் உடைந்து வீழ்ந்துவிடும் என்பதால் அது ஒரு நிலையில்லாமல் செயல்பட ஆரம்பித்துவிடும். தன்னுடைய இருப்பு நிரந்தரமானது அல்ல என்று அது உணர்ந்துவிடும். எனவே பதற்றத்தால் உங்களுக்கு எல்லா விதமான போலி கண்ணோட்டங்களையே கொடுக்கும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஒரு இளம்பெண் டாக்டரிடம் சென்றாள். “டாக்டர் எனக்கு உடம்பெல்லாம் வலிக்கிறது. எங்கு தொட்டாலும் வலிக்கிறது", என்றாள். டாக்டர் அவளைப் பரிசோதித்து அவள் ஆரோக்கியமாக இருப்பதாக முடிவு செய்தார். “இது வினோதமாக இருக்கிறதே! எங்கே, எப்பொழுது வலிக்கிறது என்று காண்பியுங்கள்” என்றார். அப்பெண் தன் கைவிரலால் வலது முழங்காலைத் தொட்டு “ஆஆ’ என்று அலறினாள். பின்னர் வலது முழங்கையைத் தொட்டு மறுபடியும் “ஆஆ’ என்று அலறினாள். டாக்டர் “பதறாதீர்கள்” என்று கூறி ஒரு பிளாஸ்திரி எடுத்து அவர் கைவிரலில் போட்டுவிட்டார். கைவிரலில் காயம் இருந்ததால் எங்கு தொட்டாலும் வலித்தது.

இந்த பிரபஞ்சத்தில் எல்லாமே தவறு. எதுவும் சரியாக இல்லை. எவரும் சரியாக இல்லை. ஏன் தெரியுமா? ஒரு விஷயம் தவறாகிப் போனதனால் எல்லாமே தவறாகத் தெரிகிறது. எனவே இந்த ஒரு விஷயத்தை சரி செய்ய வேண்டும் (தன்னை சுட்டிக் காட்டுகிறார்). இதில் ஏதேனும் தவறு உள்ளதா? இல்லை, இதில் எதுவும் பிழையில்லை - இது எதுவாக ஆக வேண்டுமோ அதுவாக இன்னும் ஆகவில்லை, அவ்வளவுதான். இன்னும் ‘அதுவாக’ ஆகாத ஒருவர் வாழ்க்கையை வாழ முயற்சி செய்கிறார். இதுதான் பிரச்சனை.

சிந்தனைகள், உணர்ச்சிகள், நம்பிக்கைகள், பாரபட்சங்கள் இவற்றின் குவியலே வாழ்க்கையை வாழ முயற்சி செய்துகொண்டிருக்கிறது. இங்கு தனிமனிதன் யாரும் கிடையாது. ஒரு பெரிய கூட்டமே உள்ளுக்குள் இருக்கிறது. அந்தக் கூட்டம் தான் வாழ முயற்சி செய்கிறது, கல்வி கற்க, வேலை தேட, திருமணம் செய்துகொள்ள, குழந்தை பெற்றுகொள்ள முயற்சி செய்துகொண்டிருக்கிறது. எல்லாமே குழப்பம்தான்.

உங்கள் கல்வியோ, வேலையோ, திருமணமோ, குழந்தைகளோ இவற்றில் எதுவும் தவறில்லை. ஒரு கூட்டத்தால் ஒரிடத்தில் வேலை செய்யவோ, திருமணம் செய்துகொள்ளவோ, பெற்றோராகவோ முடியாது. ஒரு கூட்டத்திற்கு கல்வி கற்பிக்கவும் முடியாது.

ஒரு தனிமனிதனுடன்தான் வேலை செய்ய முடியும். ஒரு கூட்டத்தை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. இந்த உலகில் உள்ள மூலை முடுக்கில் எல்லாம் துண்டும் துளியுமாக சேகரித்த சிந்தனைகள், உணர்ச்சிகள், தத்துவங்கள்தான் இப்பொழுது கூட்டமாய் இருந்துகொண்டு உள்ளுக்குள் ஆட்சிசெய்து கொண்டிருக்கிறது. எல்லாமே குளறுபடிதான். இந்தக் குளறுபடியை சரி செய்ய முடியாது, ஏனென்றால் அதன் சுபாவமே அப்படிதான்.

இதில் உள்ள தனிமனிதனை நீங்கள் கண்டுபிடித்துவிட்டால், இதில் ஒன்றும் பிரச்சனையே இல்லை. ‘இது’ நன்றாக இருக்கும். மாலை நேரங்களில் ஒரு பெரிய கொசுக்கூட்டம் உங்கள் தலை மேலேயே சுற்றுவதை பார்த்திருக்கிறீர்களா? அது ஏன் தெரியுமா? உங்களுக்கு மூளை இருக்கிறதா இல்லையா என்று ஆராய்ச்சி செய்ய அவை வரவில்லை. ஒரு மனிதன் தன் தலை மற்றும் கால் பகுதியில்தான் அதிக அளவு கரியமிலவாயுவை வெளியேற்றுகிறான். நீங்கள் தெய்வீகமானவர் என்று உங்கள் கால்களை வணங்கவோ அல்லது மிகுந்த அறிவாளி என்று நினைத்தோ உங்கள் தலை அருகில் அவை வரவில்லை. கரியமிலவாயுவை வெளியேற்றுவதால் அவற்றின் ஏற்பிகள், உங்கள் தலைக்கும் காலுக்கும் ஈர்க்கப்படுகிறன.

இதைப்போல் ஒரு கூட்டம் உள்ளுக்குள் உறைந்துகொண்டிருக்கிறது. உங்கள் தலையில் நீங்கள் சுமந்துகொண்டிருக்கும் இந்த கூட்டத்தை கைவிட்டுவிட்டால் இந்த தனிமனிதனால் எந்த பிரச்சனையும் இல்லை. எந்த ஒரு தனிமனிதனும் நன்றாகத்தான் இருக்கிறார், மனிதனின் குப்பைகள்தான் பிரச்சனையாகிறது. மனிதக் குப்பை என்று ஏன் சொன்னேன் என்றால் உங்களைச் சுற்றியுள்ள உலகிலிருந்து சேகரிக்கப்பட்ட குப்பையே உங்கள் மனோபாவம் ஆகிறது. இந்தக் குப்பைதான் பிரச்சனை. தனிமனிதனால் எந்த பிரச்சனையும் இல்லை. எந்த ஒரு உயிராலும் நமக்கு பிரச்சனையே கிடையாது. ஆனால் இந்தக் கூட்டத்தை இறக்கி வைக்க கொஞ்சம் ஞானம், கொஞ்சம் தைரியம், கொஞ்சம் அறிவு அல்லது ஒருவர் சொல்வதைக் கேட்கும் அளவிற்கு அவரிடம் கொஞ்சம் பக்தியாவது இருக்க வேண்டும். இதில் ஏதாவது ஒன்று தேவை. இல்லையேல் அந்தக் கூட்டத்தை கல்லறை வரைக்கும் கொண்டு சென்றுவிடுவீர்கள். கல்லறையில் அந்தக் கூட்டம் இறக்காது. நீங்கள்தான் உங்கள் வாழ்க்கையை வாழாமலேயே இறந்திருப்பீர்கள். எனவே ‘இதை’ சரிசெய்வது என்பது நம்மைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளை சரிசெய்வது அல்ல.

ஒரு கணவனும் மனைவியும் காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அமைதியாக போய்க்கொண்டிருந்த பயணத்தில் கணவன் பேச ஆரம்பித்தான், “மேரி, நமக்கு திருமணமாகி 20 வருடம் ஆகிவிட்டது. உன்னால் முடிந்தவரை ஒரு நல்ல மனைவியாக நீ இருந்திருக்கிறாய். ஆனாலும் எனக்கு விவாகரத்து வேண்டும்.” அவள் ஒன்றுமே சொல்லவில்லை. 60 கி.மி வேகத்தில் போய்க்கொண்டிருந்தவள், 80 கி.மி க்கு வேகத்தை கூட்டினாள். அவள் மிகவும் அமைதியாகவே இருப்பதை கவனித்த கணவன், ”மேரி, எனக்கு விவாகரத்தோடு நம் வீடும் என் சொந்தமாக வேண்டும். ஏனென்றால் உன் ஆருயிர் சினேகிதியுடன் நான் கள்ளத் தொடர்பு வைத்திருக்கிறேன். அவளுக்கு நம் வீடு பிடித்திருக்கிறது,” என்றான்.

மேரி ஒன்றும் பேசவில்லை. வண்டியின் வேகத்தை 100 கி.மிக்கு கூட்டினாள். சரி எல்லாம் நன்றாகதான் எடுத்துக்கொள்கிறாள் என்று நினைத்த கணவன் “மேரி, எனக்கு இந்த காரும் வேண்டும். எனக்கு இது மிகவும் பிடிக்கும் என்று உனக்கு தெரியுமே!” என்றான். மீண்டும் மௌனம். வண்டியின் வேகம் மட்டும் 110 கி.மிக்கு கூடியது. இதுதான் சரியான சமயம் என்று நினைத்து, அவன், “மேரி வங்கியில் உள்ள பணத்திலும் உனக்கு பங்கு எதுவும் என்னால் கொடுக்க முடியாது. பத்து வருடம் முன்பே நம் இருவர் பெயரிலும் இருந்த கணக்கை என் பெயருக்கு மட்டும் மாற்றிவிட்டேன்,” என்றான். காரின் வேகத்தை 135 கி.மிக்கு கூட்டினாள். “மேரி உனக்கு எதுவுமே வேண்டாமா?” என்று கேட்டான். வண்டியை ரோட்டருகே உள்ள ஒரு பாலத்தை நோக்கி திருப்பிவிட்டு மேரி சொன்னாள், ”எனக்கு தேவையானது கிடைத்துவிட்டது.” “என்ன கிடைத்தது உனக்கு?” என்றான். “நான் காரை திசை திருப்பி விட்டுவிட்டேன். என் சீட்டில் விபத்து நடந்தால் காயமின்றி காப்பாற்றக் கூடிய ஏர்பேக் (airbag) உள்ளது. உங்கள் சீட்டில் இல்லை,” என்றாள் அவள்!

எனவே ‘இது’ தப்பிக்கவே முடியாத அளவிற்கு நீங்கள் சரிசெய்து கொள்ள வேண்டும். எனவேதான் ‘காலையில் சாதனா, ‘காலையில் சாதனா, ‘காலையில் சாதனா, என்ன நடந்தாலும், ‘காலையில் சாதனா,” ஒரு சிறிய ஓட்டை கூட இல்லாத அளவிற்கு நீங்கள் இதை சரிசெய்ய வேண்டும். சிறிய ஓட்டை இருந்தால் கூட இது தப்பித்து அந்தக் கூட்டத்தோடு சேர்ந்துவிடும். அங்கே பெரிய கூட்டம் என்பதால் அதை பிடிப்பது கடினமாகிவிடும். விக்கிரமாதித்யன் கதைகள் படித்திருப்பீர்களே. அது எங்கிருக்கிறது என்று தெரியாது. ஆனால் சதாசர்வகாலமும் எங்கோ இருந்து கொண்டுதான் இருக்கிறது.

Love & Grace