இந்த வார சத்குரு ஸ்பாட்டில், நெல்சன் மண்டேலாவின் மரணத்தை பற்றியும் அவர் வாழ்ந்த வாழ்க்கை எத்தனை பாங்குடன் அமைந்திருந்தது என்பதையும் பேசும் சத்குரு, வார்த்தைகளால் வர்ணிக்க இயலா துன்பங்களை அனுபவித்தும் கொடுமைகளுக்கு உள்ளாகியும் அவர் தன் வாழ்வில் வன்மம் இல்லாது வாழ்ந்த விதத்தைப் பற்றி மிக அழகாக பேசுகிறார். இந்த வார சத்குரு ஸ்பாட், சத்குருவின் எழுத்தோவியமாய் கவிதை மழையாய் பொழிகிறது. படித்து மகிழுங்கள்!

நெல்சன் மண்டேலாவின் மரணத்தின் மூலம் ஒரு சகாப்தத்தின் முடிவை நாம் இந்த வாரம் பார்த்திருக்கிறோம். அவருடைய வாழ்வு வெறும் அரசியல் சார்ந்த முக்கியத்துவம் பெற்றது என்று மட்டும் சொல்ல முடியாது. அந்த தேசத்திற்கு அவருடைய பங்களிப்பு அரசியல் சார்ந்ததாக இருந்தாலும், ஒரு மனிதராய் கடந்த நூற்றாண்டு இவரைப் போன்ற வெகு சில மனிதர்களை மட்டுமே பார்த்திருக்கிறது. ஏன், இந்தியாவின் சுதந்திர போராட்டமும் தென் ஆப்பிரிக்காவிலேயே அடை காக்கப்பட்டது எனச் சொல்லலாம். தென்னாப்பிரிக்காவின் இனவெறி அரசாங்கம், மஹாத்மா காந்தியின் கண்ணியத்திற்கு ஒருவித அவமானத்தை வழங்கியதால் இந்தியாவின் சுதந்திர போராட்டம் பெரிதும் தூண்டுதல் பெற்றது. அநீதியும், தாழ்வுபடுத்துதலும் பல நிலைகளில் நிகழும் கொடுமைகளும் அற்புதமான மனிதர்களை உருவாக்குகிறது என்பதே துரதிர்ஷ்டமான உண்மை.

இதுபோன்ற மனிதர்களை சச்சரவில்லாத, அநீதியிழைக்கப்படாத, ஏற்றத் தாழ்வற்ற சூழ்நிலையில் உருவாக்குவதற்கு நாம் வழிவகை செய்ய வேண்டும். இவர் போன்ற மனிதர்கள் சந்தோஷத்திலும் கொண்டாடத்திலும் உருவாக்கப்பட வேண்டும். சந்தோஷமும் அன்பும் போரானந்தமும் அல்லாமல் வலி மட்டுமே மிக ஆழமான அனுபவமாய் இருப்பதால், சமூகங்கள் இதுபோன்ற மனிதர்களை உருவாக்கத் தவறிவிட்டன. அனுபவத்தின் ஆழம் மட்டுமே அதி அபூர்வ குணங்களை உடைய மனிதர்களை பிரசவிக்கும். அவர்கள் தங்கள் சக்தியாலும் சமநிலையாலும் மிளிர்வார்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நெல்சன் மண்டேலாவின் தனித்துவமே அவர் இன்னல்களை சந்தித்தாலும், வாய்திறந்து சொல்ல முடியா அக்கிரமங்களை அனுபவித்தாலும், அந்த அனுபவங்களால் அவர் கசப்படைந்துவிடவில்லை விரக்தியடையவில்லை. சந்தோஷமாகவும் சிரித்துக் கொண்டுமே வாழ்ந்தார், அவர் பிறர் மேல் வன்மம் கொள்ளவில்லை. இவ்வாறு இருக்க ஒரு மனிதனுக்கு தனித்துவமான குணம் வேண்டும். பலரும், தனக்கு நேர்ந்த சிறு சிறு விஷயங்களை தான் வாழும் வரை நினைத்துக் கொண்டு, வாழ்நாள் முழுவதற்கும் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த வருத்தம், கொடுங்கோலுக்கு கீழ் அவர்கள் வாழ்ந்ததால் அல்ல, தன் பெற்றோர் தனக்கு செய்த சிறு சிறு விஷயங்களை நினைத்துக் கொண்டு வருந்துகின்றனர்.

நெல்சன் மண்டேலாவின் முடிவு நாம் வன்மம் கொண்ட மனிதர்களின் வரிசையில் நிற்கக் கூடாது என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. நீங்கள் உண்மையான சுதந்திரத்தில் நிற்க வேண்டும். அரசியல் மற்றும் பொருளாதார நடைமுறைகளால் சுதந்திரம் ஏற்படாது. யார் என்ன செய்தாலும், அவரால் தேவையில்லாத உங்களுக்குள் தேவையில்லாத குணங்களை தூண்டிவிட முடியாத போதுதான் உண்மையான சுதந்திரம் ஏற்படும்.

ஒரு குறிப்பிட்ட நாளில், ஒரு இராணுவத் தளபதி மோசமான மனநிலையில் இருந்தார். அதனால் படை வீரர்களை கணமான பைகளை தூக்கச் செய்து கஷ்டப்படுத்தினார். வெயிலில் அலைக்கழித்தார். வீரர்களும் தன் கால்கள் தடதடக்க, வேர்த்து விருவிருத்து வேலை செய்து கொண்டிருந்தனர். ஒரு வீரனின் முகம் மட்டும் தனக்கு தலைவரின் மேலிருந்த கோபத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. இராணுவத் தளபதி அவனிடம் சென்று, அவன் முகத்திற்கு நேராக முகம் வைத்து, "நான் இறந்துபோனால், என் கல்லறையின் மேல் நீ சிறுநீர் கழிக்க விரும்புவாய் என நினைக்கிறேன்," என்றார். அந்த வீரன் மிக அமைதியாக, "சார், என் வாழ்வில் நானொரு முடிவு எடுத்திருக்கிறேன். நான் இராணுவத்தை விட்டு விலகும்போது நான் இன்னொரு வரிசையில் நிற்க மாட்டேன்," என்றார்.

நெல்சன் மண்டேலாவின் வரலாற்று வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது. இதுபோன்ற பல மனிதர்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பதில் நாம் கவனம் செலுத்தத் தேவையிருக்கிறது. அவர் உருவாக்கப்பட்ட சூழ்நிலையில் இவர்களும் உருவாக வேண்டும் என்பதல்ல. சிறப்பாக செயல்பட உலகம் உங்களுக்கு கசையடி தரத் தேவையில்லை. உங்களால் எவ்வளவு சிறப்பாக செயல்பட முடியுமோ அத்தனை சிறப்பாக செயல்பட உங்களுக்கு நீங்களே கசையால் அடித்து கொள்ள விருப்பமாய் இருக்கிறீர்கள்.

உங்களை உள்சூழ்நிலை உந்தித் தள்ளி நீங்கள் செயல் செய்தால் அதனை நாம் ஆன்மீகம் என்போம். உங்களை வெளிசூழ்நிலைத் தூண்டினால் அதனை அடிமைத்தனம் என்று அழைப்போம்.

மண்டேலா

மனிதா ஓ மனிதா!
சரண் அடைந்துவிடவில்லை அவன் எளிதாய்
மனிதம் மறுத்தவனுக்கு மனிதம் தந்தான் பரிசாய்
அவனிடமிருந்து நீ எதைப் பறித்தால் என்ன
அவன் மேன்மையை குறைத்துவிட முடியுமா என்ன?

கொடுங்கோலின் கைவிலங்கோடு பிறந்தான்
சுதந்திரம் சுய மரியாதை சுவைத்திட தவித்தான்
வெறுப்பு கசப்பு தடைகளை உடைத்தான்
கொடுங்கோல் சிதறுவதை காணும்வரை இருந்தான்
சந்தோஷம், சிரிப்புடன் சுதந்திரத்தைக் களித்தான்

நம் காலத்தில் இவனை போல் காணுவதற்க்கு இல்லை இங்கே
இவனைப் போன்ற மனிதர்கள் முளைத்திடுவர் இவன் தாக்கத்தால் இனிமேல்
எதிர்காலம் வேண்டுகிறது எத்தனையோ மண்டேலா

ஆம் மனிதா ஓ மனிதா!

Love & Grace