நரக சதுர்தசி - தீமைகளின் அழிவு

'நரகாசுரனைக் கொன்று மக்களின் வாழ்வில் கிருஷ்ணர் வெளிச்சம் கொண்டுவந்த நாள்தான் தீபாவளி' என்ற கதையை நாம் கேட்டு வளர்ந்திருப்போம். ஆனால் முன்பேதோ ஒரு நாள், அதுவும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த அந்த சம்பவத்திற்கு இன்றளவிலும் நாம் ஏன் முக்கியத்துவம் தரவேண்டும்? அல்லது இதைக் கொண்டாடுவதற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா..? சத்குருவின் பதிலாய் இந்த வார ஸ்பாட் பதிவு!
 
 
 
 

'நரகாசுரனைக் கொன்று மக்களின் வாழ்வில் கிருஷ்ணர் வெளிச்சம் கொண்டுவந்த நாள்தான் தீபாவளி' என்ற கதையை நாம் கேட்டு வளர்ந்திருப்போம். ஆனால் முன்பேதோ ஒரு நாள், அதுவும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த அந்த சம்பவத்திற்கு இன்றளவிலும் நாம் ஏன் முக்கியத்துவம் தரவேண்டும்? அல்லது இதைக் கொண்டாடுவதற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா..? சத்குருவின் பதிலாய் இந்த வார ஸ்பாட் பதிவு!

தீபாவளியை 'நரக சதுர்தசி' என்றும் சொல்வர். ஏனெனில், நரகாசுரன் தன் மரணதினத்தை எல்லோரும் கொண்டாடவேண்டும் என்று கேட்டுக்கொண்டான். மரணம் நிகழக்கூடிய கணத்தில்தான் பலரும் அவர்களின் கட்டுப்பாடுகள், தடைகளை உணர்கிறார்கள். இக்கணத்தில் அதை உணர்ந்தால், வாழ்க்கை மேம்படும்... ஆனால் பலரும் வாழ்வின் கடைசிக் கட்டம்வரை ஏனோ இதற்காகக் காத்திருக்கின்றனர். நரகாசுரனும் அப்படிப்பட்டவர்களில் ஒருவன். இறக்கப் போகும் அந்த நொடியில், 'வாழ்வை எப்படியெல்லாம் வீணடித்துவிட்டோம், என்னென்னவெல்லாம் செய்துவிட்டோம்' என்று திடீரென அவனுக்குப் புரிந்தது. அதனால் கிருஷ்ணரிடம் அவன் வேண்டினான், "இன்று நீங்கள் என்னை மட்டுமல்ல, நான் செய்த எல்லாத் தவறுகளையும், தீமைகளையும் அழிக்கிறீர்கள் - இது கொண்டாடப்பட வேண்டும்" என்று. அதனால் நரகாசுரனின் தீமைகள் அழிந்ததற்காக கொண்டாடாமல், உங்களுக்குள் இருக்கும் தீமைகளைக் கொன்று, அதற்கான விழாவாய் தீபாவளியைக் கொண்டாடுங்கள். அப்போதுதான் அது உண்மையான தீபாவளி. இல்லையென்றால், அது வெறும் வீணாகிப்போன செலவு, எண்ணெய் மற்றும் பட்டாசுகள். அவ்வளவே!

'நரகா' (நரகாசுரன்) ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்தவன். புராணத்தில் அவனை விஷ்ணுவின் மகன் என்பர். ஆனால் இது விஷ்ணு 'வராக' அவதாரம் எடுத்தபோது நிகழ்ந்ததால், நரகனுக்கு சில குணாதிசயங்கள் இருந்தன. அதுபோதாதென்று, அவன் 'முரணிற்கு' நண்பனானான். பிற்காலத்தில் முரண், நரகனின் படைத்தளபதியாக செயல்பட்டான். இவர்கள் இருவருமாக சேர்ந்து, பற்பல போர்களைத் தொடுத்து, ஆயிரமாயிரம் மனிதர்களை கொன்றுகுவித்தனர். கிருஷ்ணர் முதலில் முரணைக் கொன்றார். ஏனெனில் முரண் உயிரோடு இருக்கும்பொழுது, அவனையும் நரகனையும் சேர்த்து எதிர்கொள்வது மிகக் கடினம். முரணைக் கொன்றதால், கிருஷ்ணனை முராரி என்றும் வழங்குவர். போரில் பல மந்திரவித்தைகளை முரண் கையாள்வதால் அவனை எதிர்த்து யாருமே நிற்கமுடியாது என்றும் கூட சொல்வர். முரணை அகற்றிவிட்டால், பின் நரகனை எளிதாக அழித்துவிடலாம்.

நரகனை வாழவிட்டால், அவன் தொடர்ந்து இதேபோல்தான் வாழ்வான் என்பதை கிருஷ்ணர் உணர்ந்ததால்தான் அவனைக் கொன்றுவிடும் முடிவை அவர் எடுத்தார். மரணத்தின் வாயிலில் அவனை நிறுத்தினால், தான் செய்துவரும் தீயவற்றை அவன் உணர்வதற்கான வாய்ப்புகள் இருந்தது. அதேபோல், தேவையேயின்றி வாழ்க்கை முழுவதும் அவன் செய்துவிட்ட தீமைகளை திடீரென அந்நேரத்தில் அவன் உணர்ந்தான். அதனால் கிருஷ்ணரிடம், "நீங்கள் என்னை அழிக்கவில்லை. என்னிடம் இருக்கும் எல்லாத் தீயவற்றையும் என்னில் இருந்து அகற்றுகிறீர்கள். இது நீங்கள் எனக்கு செய்யும் நல்லது. இதை எல்லோரும் அறியவேண்டும். அதனால் என்னிடம் நான் சேர்த்துக் கொண்டுவிட்ட எல்லாத் தீயவற்றின் அழிவாக இந்நாளை எல்லோரும் கொண்டாடவேண்டும். இது எனக்கு புதிய வெளிச்சத்தைக் கொண்டுவந்தது போல், எல்லோருக்கும் இது வெளிச்சத்தை அளிக்கவேண்டும்" என்று கேட்டுக்கொண்டான். அதனால் இது நமக்கு "தீபங்களின் திருநாளாக" ஆனது. நம்நாடு முழுவதிலும் இந்நாளில் விளக்கேற்றி வெளிச்சம் செய்கிறோம். அதுமட்டுமல்ல, இதோடு சேர்த்து, நமக்குள் இருக்கும் எல்லாத் தீயவற்றையும் நாம் எரித்திடவேண்டும். அதை இப்போதே நாம் செய்வது நல்லது. நரகனுக்கு, கிருஷ்ணர் 'நான் உன்னை இப்போது கொல்லப்போகிறேன்' என்று சொன்னபோது இது நிகழ்ந்தது. ஆனால் உங்களுக்கு அப்படி யாரும் சொல்லமாட்டார்கள் - திடுமென ஒருநாள் அது நிகழ்ந்திடும்.

அமெரிக்காவின் டென்னெஸியில் ஒருமுறை இப்படி நடந்தது. ஒரு பெண்மணி துப்பாக்கிக் கடைக்குச் சென்றார். அங்கெல்லாம் அவ்வப்போது புதுத் துப்பாக்கிகள் வாங்குவது சகஜம். இவர் அக்கடைக்குச் சென்று, "எனக்கு ஒரு துப்பாக்கியும், சில தோட்டாக்களும் தேவைப்படுகிறது... என் கணவருக்காக" என்றார். அந்தக் கடைக்காரரும், "நல்லது! உங்கள் கணவருக்கு எந்த பிராண்ட் துப்பாக்கி வேண்டும்?" என்று கேட்டார். அதற்கு அந்தப் பெண்மணியோ, "எனக்கு எப்படித் தெரியும்? அவரைச் சுடப்போகிறேன் என்று நான் அவரிடம் சொல்லவில்லை" என்றாராம்.

மரணம் நிகழும்போது உங்களுக்குச் சொல்லிவிட்டு வரவேண்டும் என்று அவசியமில்லை. அதற்காகத்தான் இந்த தீபாவளி: "வேறொருவர் உங்களை சுட்டுக்கொல்வதற்கு நீங்கள் காத்திருக்கவேண்டாம். விழிப்புணர்வோடு இறந்து, விழிப்புணர்வோடு பிறப்பெடுக்க உங்களால் முடியும்" என்பதை உங்களுக்கு நினைவுறுத்த இந்த தீபாவளி. ஒரு ஆணோ, பெண்ணோ, அல்லது கண்ணுக்குத் தெரியாத கிருமிகளோ... எது உங்களை வீழ்த்தும் என்று தெரியாது. ஆனால் யாரோ ஒருவர் நிச்சயம் நம்மை வீழ்த்திடுவார்கள். அதற்கு முன்பே நரகனின் உதாரணத்தைக் கொண்டு எல்லோருக்கும் நினைவுறுத்துங்கள், "என்னை நான் எப்படி வேண்டுமானாலும் உருவாக்கிக் கொண்டிருக்கமுடியும். ஆனால் தீயவற்றை சேகரித்து நான் இப்படி ஆகிவிட்டேன்".

நாம் எல்லோரும் ஒரே மூலப்பொருட்கள் கொண்டே உருவாகி இருக்கிறோம். இருப்பினும் ஒவ்வொருத்தரும் மற்றவரைவிட எப்படி வித்தியாசமாய் உருவாகி இருக்கிறோம் என்று பாருங்கள். தினம்தினம் உங்கள் வாழ்வில் அப்படி எதைத்தான் சேகரித்துக் கொண்டிருக்கிறீர்கள்? விஷப் பொருட்களை சேகரித்து, உங்களுக்குள் விஷத்தை உருவாக்கப் போகிறீர்களா அல்லது தெய்வீகத்தின் வாசத்தை உங்களுள் உருவாக்கப் போகிறீர்களா? இது உங்களிடம் இருக்கும் தேர்வு. நல்ல பிறப்பெடுத்தும் தீயவழிக்குச் சென்ற நரகனின் கதை முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், இறக்கும் தருவாயில் 'தனக்கும் கிருஷ்ணருக்கும் இடையே இருக்கும் வித்தியாசங்கள், அவரும் கிருஷ்ணரும் தம்மைத் தாமே உருவாக்கிக் கொண்டதில் வந்தது' என்பதை நரகன் தெள்ளத்தெளிவாய் உணர்ந்தான். கிருஷ்ணர் தம்மை கடவுள்போல் ஆக்கிக் கொண்டார், ஆனால் நரகனோ தன்னை அசுரனாக, அரக்கனாக ஆக்கிக்கொண்டான். நம் ஒவ்வொருவர் கையிலுமே இந்தத் தேர்வு உண்டு. இந்த தேர்வு நம் கையில் இல்லையென்றால், நட்சத்திரமாய் மின்னும் மனிதமாணிக்கங்களின் உதாரணங்கள் நமக்கெதுக்கு? அவர்கள் அப்படி உருவானது, அவர்களின் அதிர்ஷ்டமோ, இல்லை அவர்களின் பிறப்பே அப்படித்தான் என்பதாலல்ல. ஒருவிதமாய் தம்மை உருவாக்கிக் கொள்வதற்கு, 'கடைந்து, பலவற்றை உடைத்து...' என, இதற்கு நிறைய பிரயத்தனப்பட வேண்டியிருக்கிறது.

ஒன்று, வாழ்க்கை அதன் வழியில் உங்களை அடித்துத் திருத்த காத்திருங்கள்... அல்லது அந்தச் சாட்டையை உங்கள் கையில் ஏந்தி, நீங்களே உங்களை திருத்திக் கொள்ளுங்கள் - இதுதான் உங்கள் கையில் இருக்கும் தேர்வு. கிருஷ்ணர் வந்து கசையடி கொடுத்து தன்னை வழிக்குக் கொண்டுவர வேண்டும் என்று நரகன் நினைத்துவிட்டான். ஆனால் கிருஷ்ணரோ, தன் கசையை தன் கையிலேயே ஏற்று, தன்னைத் தானே அவர் உருவாக்கிக் கொண்டார். இதுதான் வித்தியாசம்... மாபெரும் வித்தியாசம். ஒருவர் கடவுளாக வணங்கப்படுகிறார், மற்றவனோ அரக்கன் என சாடப்படுகிறான். ஒன்று உங்களை நீங்களே திருத்திக் கொள்ளுங்கள். அல்லது வாழ்க்கை தேவையான வகையில் உங்களை ஆக்கிடுமோ, அழித்திடுமோ... ஏதோ ஒன்று. தீபாவளி என்பது இதற்கான நினைவுச்சான்று. வாருங்கள், ஒளிபெருகச் செய்வோம்.

Love & Grace

 
 
 
 
 
 
Login / to join the conversation1
 
 
3 வருடங்கள் 7 மாதங்கள் க்கு முன்னர்

kodana kodi nandri guru................

2 வருடங்கள் 1 மாதம் க்கு முன்னர்

nice explanation about diwali & life