போஸ்டனில் இருந்து நீண்ட பயணத்திற்குப் பின் ஆசிரமம் (அமெரிக்க ஈஷா யோகா மையம்) வந்து சேர்ந்தது நன்றாக இருக்கிறது. பயணத்தின் நடுவில், ஓர் இரவு மட்டும் வடக்கு கரோலினாவில் இருக்கும் அந்த ஏரியில் இருக்கும் இல்லத்தில் தங்கினேன். அந்த இடம், 'மிட்நைட் வித் த மிஸ்டிக்' என்னும் என் ஆங்கிலப் புத்தகத்தின் களம். ஒரு வேளை இங்கு தங்குவது இது கடைசி முறையாக இருக்கலாம். ஏனெனில் அந்த இடத்தை விற்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. கடந்த நான்கு மாதமாக நடந்த நிகழ்வுகளை எண்ணிப்பார்க்க, அவற்றைத் திரும்பிப் பார்க்க, கடந்த இருபது மணிநேர பயணம் வாய்ப்பளித்தது.

விதவிதமான நிகழ்வுகளும் நம்பமுடியாத தீவிரமும் கொண்ட அற்புதமான நான்கு மாதங்கள். கைலாயப் பயணம் மிகவும் தீவிரமாகவும் ஆனந்தமாகவும் இருந்தது. அதன் பின் ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், நேபாள் - இவையெல்லாம் சிறப்பாகவே இருந்தன. இடங்களைவிட என் மனதில் ஒட்டிக்கொள்வதென்னவோ அதன் அற்புதமான மக்கள்தான். அன்புடனும் பக்தியுடனும் மனிதர்கள் செய்யும் சிறிய சிறிய விஷயங்கள்தான் - வாழ்வின் பெரிய நிகழ்வுகள் என்று சொல்லப்படுபவற்றை விட - அதிக முக்கியமாக எனக்குத் தோன்றுகிறது. அந்தக் கண்கள், அவர்கள் இருக்கும் விதம், அந்த நரம்புகளின் துடிப்பு, அவர்களின் கைகள், உதடுகள், அவற்றை அவர்கள் வைத்துக் கொள்ளும்விதம், அல்லது அந்தக் கண்ணீர்துளிகள், கைகளிலும் முதுகுத்தண்டிலும் ஏற்படும் நடுக்கம்... இது போல் இன்னும் பல. இவைதான் என் மனதில் ஒட்டிக்கொள்கின்றன. கடந்த சில பிறவிகளாகவே இவைதான் மனதில் ஒட்டிக்கொண்டு விடுகின்றன.

இந்த உலகில் மனிதர்களிடம் விரும்பத்தகாத நிறைய விஷயங்கள் இருந்தாலும், குவிந்துகிடக்கும் இந்த மிருதுவான மனித இயல்புகள்தான், அவர்களை உள்நிலையில் மலரவைக்கும் என் நம்பிக்கையை தளரவிடாமல் வைக்கின்றன. இதனால்தான், என்னைச் சுற்றி இருப்பவர்களுக்கு, குறைந்தபட்ச தகிப்பை ஏற்படுத்தியபடி, அவர்களுக்கு ஏற்ற வேகத்தில் மெதுவாக நகர்கிறேன். ஆம்! நான் இந்த வேகத்தைத்தான் அதிகம் நிர்வகிக்க வேண்டியுள்ளது.

பலவிதமான நிகழ்வுகளில் தனித்தன்மை கொண்டது காசிக்குச் சென்ற பயணம்தான். எத்தனை அற்புதமான இடம், ஆனால் அதை எத்தனை மோசமாக வைத்திருக்கிறோம். ஆனால் இத்தனை அழிவு முயற்சிகளுக்குப் பிறகும், அபரிமிதமான சக்தியுடன் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதைக் காண ஆனந்தமாக இருக்கிறது. அதை அழிக்க நிகழ்த்தப்பட்டிருக்கும் பல சதிளைப் பார்க்கும் போது வலி ஏற்படுகிறது. இப் புவியிலேயே மிகவும் பழையதான இந்த நகரம் இன்னும் தொடர்ந்து வாழ்கிறது. சிவனின் உள்ளம் கவர்ந்த இந்நகரம், வாழ்க்கையையும் இறப்பையும் கொண்டாடிக் கொண்டு இருக்கிறது. சிவனுக்கும் அவருடைய கணங்களுக்கும் போதுமான பஸ்மத்தை (விபூதியை), சுடுகாட்டுச் சாம்பலை, அது தந்துகொண்டிருக்கிறது.

இது, பிரபஞ்ச வடிவவியலுக்கு பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட நகரம் மற்றும் அனைத்துவிதமான அற்புத உயிர்களை தனது ஒளியின் கதகதப்பில் வைத்துக் காத்த நகரம். முனிவர்கள், முனிவர்கள் என்றால் ஆன்மீகம் சார்ந்தவர்கள் மட்டுமல்ல, கணிதம், இசை, விண்ணியல், அறிவியல் மற்றும் இலக்கியம், இன்னும் சொல்லப்போனால் காமசூத்திரம் கொடுத்த வாத்ஸயாயனர் ஆகிய அனைவரையும் பாதுகாத்த நகரம். இந்த நகரத்தின் இன்னொரு பெயரான பனாரஸ், மேலே சொன்ன எல்லாவற்றையும் குறிக்கிறது.

Sign Up for Monthly Updates from Isha

Summarized updates from Isha's monthly Magazine on Isha and Sadhguru available right in your mailbox.

No Spam. Cancel Anytime.

மிகவும் அற்புதமான நெசவுவகை இங்கிருந்து தான் வருகிறது. பனாரஸ் பட்டின் வேலைப்பாடும், நுட்பமும் நிகரே இல்லாதது; ஆனால் இக்கலை தற்போது அழிந்து வருகிறது. அழிந்து கொண்டிருக்கும் இந்த இந்திய நெசவுத்துறைக்கு புத்துயிர் ஊட்ட, அமெரிக்காவில் உள்ள மிகவும் புகழ்பெற்ற உடை உற்பத்தி நிறுவனம் ஒன்றுடன் சில முயற்சிகளைச் செய்துவருகிறேன்.

இந்தியாவில் நூற்றி இருபதுக்கும் மேற்பட்ட நெசவு வகைகள் இருக்கின்றன. அவற்றுள் பல உண்மையாகவே அழியும் தருவாயில்தான் இருக்கின்றன. எனவே கைவினைக் கலைகளில் ஆர்வம் கொண்டவர்கள் எல்லோரும் ‘Save the Weave’ என்னும் 'நெசவைக் காப்போம்' செயல்திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம். இது என்ன விசித்திரம் என்று என்னைப் பற்றி நீங்கள் நினைக்கலாம். இந்த கலைகள் எல்லாம் பல்லாயிரம் ஆண்டுகளாக, பல ஏற்ற இறக்கங்களைத் தாங்கியபடி இன்னும் இருக்கின்றன. ஆனால் இந்தத் தலைமுறையினரான நாம் இவற்றின் முடிவிற்குக் காரணம் ஆகிவிடக்கூடாது.

நான் நேற்று நள்ளிரவுதான் வந்தேன். ஆனால் மீண்டும் அட்லாண்டாவில் நிகழவிருக்கும் ஒரு மாலை நிகழ்ச்சிக்குச் செல்ல வேண்டும். ஓட்டுனர் பயிற்சி முடித்தவுடன் முதன்முறையாக டர்பைன் பொருத்திய ஹெலிகாப்டரை ஓட்டிக்கொண்டு செல்லப்போகிறேன்.

புறப்படுவோம்...

Love & Grace