உத்தராயணம் முடிந்து தட்சிணாயணம் ஆரம்பமாகும் ஜூன் 21ம் தேதி, நாம் உலக யோகா தினத்தையும் கொண்டாட இருக்கிறோம். "எளிமையான 'நமஸ்காரம் யோகா' செய்வதன் மூலம் அனைவரும் உங்களுக்குள் நல்லிணக்கத்தை உணர்ந்திடுங்கள்" என்று சொல்கிறார் சத்குரு... தொடர்ந்து படியுங்கள் இந்த வார சத்குரு ஸ்பாட்...

உலக யோகா தினம்

"ஜூன் 21 - உலக யோகா தினம்" என்ற ஐநா சபையின் அறிவிப்பு மனித குல வரலாற்றின் முக்கியமான ஒரு கட்டத்தில் வந்திருக்கிறது. இதன் விளைவாக இன்னும் சிலர் தங்கள் உடலை வளைப்பது மற்றும் முறுக்குவது போன்றவை நிகழும். ஆனால் அதையும்விட வேறு பல வகைகளில் இந்த உலக யோகா தினம் மிகவும் முக்கியமானது. ஐநா சபையின் வரலாற்றில் முதன் முறையாக 177 நாடுகள் உலக யோகா தினத்துக்கான தீர்மானத்தை வழி மொழிந்தன. இதற்கு முன்னர் ஐ.நா.வின் எந்தவொரு தீர்மானத்திற்கும் இந்த அளவு ஆதரவு கிட்டியதில்லை. இந்த நாளில், நலவாழ்வு குறித்த மனித இனத்தின் போக்கை திசை திருப்ப விரும்புகிறோம். நல வாழ்வை தேடி மக்கள் வெளியே பார்க்காமல், மேலே பார்க்காமல், உள்ளே பார்க்க வேண்டும் என்று விரும்புகிறோம்.

யோகா என்பது மக்கள் உள்நோக்கி பார்த்து தங்கள் நலவாழ்வை தாங்களே உருவாக்க உதவும் ஒரு தொழில்நுட்பம், ஒரு கருவி. உங்கள் நலவாழ்வு வேறு எங்கோ இருந்து வருவதில்லை. ஒன்று நீங்கள் அதை உருவாக்குகிறீர்கள் அல்லது நீங்கள் அதை உருவாக்குவதில்லை, அவ்வளவுதான். யோகாவின் அடிப்படை இதுவே. வெளி நலனுக்காக எப்படி ஒரு விஞ்ஞானம், ஒரு தொழில்நுட்பம் உள்ளதோ, அதேபோல் உள்நலனுக்கென்று ஒரு விஞ்ஞானம், தொழில்நுட்பம் உள்ளது. இந்த விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் இந்த மண்ணில் ஆழமான முறையில் வெளிப்பட்டிருக்கிறது. உலகத்திற்கு, மதிப்பு மிக்க ஒன்றை வழங்கக்கூடிய நிலையில் இன்று இந்தியா இருப்பது, ஒரு அற்புதமான தருணம்.

பல்வேறு அரசாங்கங்களுடன், பெரும் தொழில் நிறுவனங்களுடன் நாம் இது குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம். அவர்கள் அனைவருமே இந்த வாய்ப்பை எதிர் நோக்கி இருக்கிறார்கள். செல்வ செழிப்பு இருந்தால் மக்கள் நன்றாக இருப்பார்கள் என்று நம்பிக் கொண்டிருந்தோம். ஆனால் செல்வம் மிகுந்த நாடுகளில் தான் நோய்களும் ஆதிக்கம் செலுத்துகின்றன. உதாரணமாக அமெரிக்காவில் ஊட்டம் பெற நிறைய சாத்தியங்கள் இருக்கின்றன. ஆனால் அவர்கள் உடல் ஆரோக்கியம் காப்பதற்கு என்று 3000 கோடி ரூபாய் ஒரு வருடத்துக்கு ஒதுக்குகிறார்கள். இப்படியான ஒரு செலவு ஒரு தேசத்தை மூழ்கடித்து விடும். துரதிர்ஷ்டவசமாக, இந்தியா இதை நோக்கி வேகமாகப் போய்க் கொண்டிருக்கிறது. நமது பொருளாதார வளம் சிறப்பான திசையில் போய்க்கொண்டிருக்கும் அதே நேரத்தில் உலகின் நீரிழிவு நோயின் தலைநகராக மாறிக் கொண்டிருக்கிறோம். பல்வேறு வியாதிகள் பெருக்கெடுத்துக் கொண்டிருக்கிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இதற்கெல்லாம் ஒரு தீர்வாக, யோகாவை ஒருவர் வாழ்வில் அறிமுகம் செய்தால், அது ஆரோக்கியம், நல்வாழ்வு உருவாக்கும் ஒரு செயல்முறையை வழங்கும். யோகாவின் முக்கியத்துவம் என்னவென்றால், ஒரு முறை இதை கற்றுக் கொண்டால் பிறகு இதை செய்வதற்கு வேறு யாருடைய உதவியும் தேவை இல்லை, ஒரு தனி இடம் தேவை இல்லை, எந்த விதமான கருவிகளும் தேவை இல்லை. நீங்கள் எங்கே இருந்தாலும் இதை செய்யலாம். யோக விஞ்ஞானம் மனித இனத்தின் ஒட்டுமொத்த நலனுக்கான ஒரு அற்புதமான பரிசு.

செய்தியை பரப்புங்கள்

நாட்டின் தலைவர்கள் யோகா பற்றி முதல் முறையாக பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இது நம்ப முடியாத ஒன்றாக இருக்கிறது. அரசாங்கங்கள் இதை பரப்ப பணத்தை முதலீடு செய்கின்றன. ஏனென்றால் ஆரோக்கிய திட்டங்கள் வெற்றி பெறவில்லை. மக்களுக்கு மகிழ்ச்சி தரும், நலவாழ்வு தரும் வழிகள் தோல்வியில் முடிந்துள்ளன. இப்பொழுது அனைவரும் மகிழ்ச்சியை உருவாக்குவது பற்றி பேசத் தொடங்கி விட்டார்கள்.

இதற்காக பல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றது. பல சாதனைகள் முறியடிக்கப்படுகின்றன. உலக அளவில் யோகா நிகழ்சிகள் ஆயிரக்கணக்கான இடங்களில் நடைபெறுகின்றன. இந்திய தூதரகங்கள் வாயிலாக உலகின் பல்வேறு இடங்களில் நம் அரசாங்கம் யோகா கற்றுக் கொடுக்கிறது. இது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம். ஏனெனில் நாம் நலவாழ்வை விஞ்ஞான பூர்வமாக அணுகுகிறோம். ஒரு நம்பிக்கையாக, ஒரு தற்செயலான நிகழ்வாக பார்ப்பதில்லை. நலவாழ்வுக்கென நட்சத்திரங்களை பார்க்காமல், விழிப்புணர்வாக நலவாழ்வு உருவாக்கும் ஒரு விஞ்ஞான செயல்முறையை நாம் நாடுகிறோம்.

ஐநா சபை யோகா பற்றி பேசுகிறது, நமது பிரதமர் யோகா பற்றி பேசுகிறார், அமெரிக்க அதிபர் யோகா கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுகிறார். முக்கியமான பொறுப்பு வகிப்பவர்கள் உள்நோக்கி பார்க்கும் தேவை இருப்பதை உணர்வது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம். கடந்த சில நூற்றாண்டுகளில் முதன் முறையாக உலக தலைவர்கள், பொருளாதாரம், ராணுவம், தேசத்தின் பிற அம்சங்கள் குறித்து பேசாமல், மனிதனின் உள்நிலை நலன் குறித்து பேசுகிறார்கள். உலக யோகா தின அறிவிப்பின் விளைவே இது.

ஆன்மீக செயல்முறையை, உலகிற்கு, குறிப்பாக உலகில் தாக்கம் ஏற்படுத்தக் கூடிய நிலையில் உள்ள மனிதர்களுக்கு அளிப்பதற்கான முயற்சி பல காலமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. 8000 ஆண்டுகளுக்கு முன்பே, மன்னர் ஜனகர், அஷ்டவக்ரர் உதவியால் ஞானோதயம் அடைந்தார். கிருஷ்ணரின் வாழ்க்கை நோக்கமே ஆன்மீக செயல்முறைக்கும், அரசியல் செயல்முறைக்கும் இடையே ஒரு பந்தம் ஏற்படுத்துவதாக இருந்தது. மன்னர்களோடு செயல்பட்டது மட்டுமல்லாமல் கிருஷ்ணர் வட இந்தியாவில் கிட்டத்தட்ட 1000 ஆசிரமங்களையும் நிறுவினார். உலகில் உள்ள மேல்தட்டு மக்களுக்கும் கீழ்தட்டு மக்களுக்கும் ஆன்மீகம் நிகழ்வது மிகவும் முக்கியம்.

மக்கள் யோகா மீது ஆர்வம் காட்டுவது ஒன்றும் புதிது அல்ல. ஊடகங்கள், விளம்பரங்கள் இவற்றால் முன்னெப்போதும் இல்லாத வகையில் மக்கள் இதைத் தேடி வருகின்றனர். மக்கள் மிகுந்த அழுத்தத்துக்கு ஆளாகி இருக்கின்றனர். பதட்டம், நரம்பு கோளாறு காணப்படுகிறது. இவற்றை சமாளிக்க மக்கள் மேற்கொண்ட வழிகள் ஓரளவுக்குதான் வேலை செய்திருக்கிறது. எனவே யோகாவை நாடுவது இயல்பான ஒன்று.

இந்த ஜூன் 21, இந்த செய்தியை உலகெங்கும் மக்களிடம் பரப்ப வேண்டும் என நாம் விரும்புகிறோம். ஒவ்வொரு மனிதனும் அவரது நலவாழ்வை அவரே உருவாக்க முடியும் என்பதை நிலைநாட்டுவதே அடிப்படை. வேறு ஒரு சக்தி அதை தனக்கு வழங்கவேண்டும் என்று அவன் காத்திருக்கத் தேவை இல்லை. ஏற்கனவே இணையத்தில் நாம் வழங்கியிருக்கும் எளிமையான உப-யோகா, ஆசிரியர் மூலம் நிகழும் வகுப்புகள் அவை தவிர்த்து இப்போது ஒரு மூன்று நிமிட காணொளி ஒன்றை வெளியிட்டு இருக்கிறோம்: நமஸ்காரம் யோகா - அனைவருக்கும்! உங்கள் கைகளை சேர்த்து வைப்பது ஒரு எளிமையான யோகா. நமஸ்காரம் செய்தபடி ஒருவரையோ அல்லது ஏதோ ஒன்றையோ மிகுந்த அன்போடு பார்த்தால், உங்களுக்குள் நல்லிணக்கம் ஏற்படும். நமஸ்காரம், உள்ளே இருக்கும் துருவங்களுக்குள் ஒரு நல்லிணக்கத்தை உருவாக்கும்.

இதை வாசிக்கும் ஒவ்வொருவரும் இதை பிறருக்கு கொண்டு செல்ல வேண்டும். உப-யோகா வடிவில் வழங்கப்படும் கருவிகளை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். வரும் தட்சிணாயணத்திற்கு முன், உங்களால் 100 பேரையாவது தங்கள் நலனுக்காக உப-யோகா பயிற்சி செய்வதை உறுதி செய்யுங்கள். மையத்தில் இருந்து உங்களுக்கு எல்லா விதமான உதவியும் வழங்கப்படும். ஆனால் இது நடைபெறுவதை உறுதி செய்வது உங்கள் கைகளில் இருக்கிறது. வரும் தட்சிணாயணத்தில் உங்களுக்கான சாதனா இதுவே. யோக முறையில் ஜூன் 21 இல் இருந்து டிசம்பர் 22 வரையில் ஆன கால கட்டம் சாதனா பாதம். இது உங்கள் சாதனாவாக, உங்கள் கர்ம யோகாவாக இருக்கட்டும். பலமுறை, "சத்குரு உலகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது?" என்ற கேள்வியை நான் எதிர் கொண்டிருக்கிறேன். இந்த உலகம் செல்லும் திசை குறித்து உங்களுக்கு பங்கு இல்லாதது போன்ற ஒரு கேள்விதான் இது. ஒரு பார்வையாளராக இல்லாமல், உலகம் எப்படி இருக்க வேண்டும் என்பதில் தீவிர பங்கேற்பாளராக இருங்கள். மனித விழிப்புணர்வை உயர்த்தும் நோக்கத்தில் பங்கேற்பதில் உள்ள சிறப்பை நீங்கள் அனைவரும் உணர வேண்டும் என்பதே என் விருப்பம். உலகம் உள்நோக்கி திரும்ப வேண்டும் என்பதே என் விருப்பும், கனவு. இதில் ஒரு பாகமாக இருங்கள்.

நாம் இதனை நிகழச் செய்வோம்.

மிக்க அன்பும் அருளும்,

சத்குரு