நம் எதிர்காலத்திற்காக எழுந்து நில்லுங்கள்
"நதிகளை மீட்போம்" விழிப்புணர்வு பேரணி துவங்க இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், இந்த தேசத்தின் குடிமக்கள் யாவரும் எழுந்து நின்று ஆதரவு தெரிவிக்க வேண்டிய தேவையையும், பொறுப்பையும் இந்த வார சத்குரு ஸ்பாட்டில் நமக்கு சுட்டிக்காட்டுகிறார் சத்குரு. நீண்டகாலத் தீர்வு எத்தனை அவசியம் என்பதையும், "இந்தப் பேரணி என்னைப் பற்றியோ ஈஷாவை பற்றியோ அல்ல," என்பதையும் தெளிவுப்படுத்துகிறார். உங்கள் ஊரில் பேரணி நிகழ்கையில் கலந்துகொள்ள மறவாதீர்கள்!
 
 
 
 

"நதிகளை மீட்போம்" விழிப்புணர்வு பேரணி துவங்க இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், இந்த தேசத்தின் குடிமக்கள் யாவரும் எழுந்து நின்று ஆதரவு தெரிவிக்க வேண்டிய தேவையையும், பொறுப்பையும் இந்த வார சத்குரு ஸ்பாட்டில் நமக்கு சுட்டிக்காட்டுகிறார் சத்குரு. நீண்டகாலத் தீர்வு எத்தனை அவசியம் என்பதையும், "இந்தப் பேரணி என்னைப் பற்றியோ ஈஷாவை பற்றியோ அல்ல," என்பதையும் தெளிவுப்படுத்துகிறார். உங்கள் ஊரில் பேரணி நிகழ்கையில் கலந்துகொள்ள மறவாதீர்கள்!

உங்களில் பலர் இதனை அறிந்திருப்பீர்கள். செப்டம்பர் 3ம் தேதியிலிருந்து "நதிகளை மீட்போம், பாரதம் காப்போம்" விழிப்புணர்வு பேரணி துவங்குகிறது. எதற்கு இந்தப் பேரணி? பரந்துபட்ட விழிப்புணர்வையும் ஆதரவையும் எதற்காக திரட்ட வேண்டும்? நாம் அறிந்ததை விடவும் மிகக் கடுமையான அளவுகளில் நம் தேசத்தின் மண்ணும், நீர்நிலைகளும், நதிகளும் வறண்டு வருகின்றன. இந்த உண்மையை சிலர் ஒப்புக்கொள்ள மறுக்கின்றனர் என்றும் சொல்லலாம்.

இது எச்சரிக்கை மணியல்ல - இதற்கு போதிய அறிவியல் ஆதாரங்கள் உள்ளன. சில எளிமையான விஷயங்களைச் செய்து இதனை நாம் தடுத்திருக்கலாம். ஆனால், நிகழ்ந்துவிட்டது. இப்போது நாம் இருக்கும் கட்டத்தில், தனிமனிதர்களது கைகளில் இனியும் இதனை நாம் கொடுக்க இயலாது. இதனால், அமலாக்கக்கூடிய திட்டம் இயற்றுவதை நோக்கி நாம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

மத்திய மற்றும் மாநில அரசுகளின் பொது உடமையாக நதிகள் இருக்கின்றன. மத்திய அரசால் ஒருங்கிணைந்த ஒரு திட்டத்தை மட்டுமே இயற்ற முடியும். ஆனால், அதை செயல்படுத்துவது மாநில அரசுகளின் கைகளில்தான் உள்ளது. இதனால்தான், 16 மாநிலங்கள் வழியாக நாம் பேரணி செல்கிறோம்.

கோவையிலிருந்து கன்னியாகுமரி வரை சென்று, அங்கிருந்து இமயம் வரை, நானே வண்டியோட்டி செல்கிறேன். மாநிலங்களின் ஆதரவினை திரட்டவே இம்முயற்சி. அதிர்ஷ்டவசமாக, அனைத்து முதல்வர்களும் தங்கள் வருகையை உறுதி செய்துவிட்டனர். நாம் செல்லும் ஒவ்வொரு நகரிலும் ஒரு பெரிய நிகழ்ச்சி நடைபெறும். அதற்கு முன், தேசம் முழுவதும் பிரம்மாண்ட விழிப்புணர்வினை ஏற்படுத்துவது அவசியம்.

செப்டம்பர் 1ம் தேதி முதல், தொலைக்காட்சிகளிலும், செய்தித்தாள்களிலும், அனைத்து ஊடகங்களிலும் விளம்பரங்கள் துவங்கும். கிட்டத்தட்ட ஆங்கில ஊடகங்கள் அனைத்தும், இந்தி ஊடகங்களும், சில தமிழ் ஊடகங்களும், தானே முன்வந்து இந்த இயக்கத்திற்கு தங்கள் ஆதரவினை நல்கியுள்ளன. இதற்கு பணமும் கிடையாது. முக்கிய ஊடகங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த விளம்பரங்கள் செய்ய, தங்கள் சொந்த தயாரிப்பில், முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றன. எல்லா திசைகளிலிருந்தும் நம்பமுடியாத வேகத்தில் ஆதரவு கிடைத்து வருகிறது.

திரை நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள், இன்னும் பல சாராரும் செய்த ட்வீட்களை பார்த்திருப்பீர்கள். பள்ளிக் குழந்தைகளிலிருந்து பிரபலங்கள் வரை, எளிமையான குடியானவனிலிருந்து தேசத்தின் பெரிய தலைவர்கள் வரை, இந்த இயக்கத்திற்கு தங்கள் பரிபூரண ஆதரவினை அனைவரும் வழங்கி வருகின்றனர். இந்தப் பேரணி என்னைப் பற்றியோ ஈஷாவை பற்றியோ அல்ல. நம் தேசத்தைப் பற்றியது, நம் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றியது.

இந்தப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, செப்டம்பர் 1ம் தேதி, காலை 8 மணியிலிருந்து 11 மணி வரை, தேசத்தின் பல்வேறு பெருநகரங்களில், ஊர்களில், ஆயிரக்கணக்கான மக்கள் "நதிகளை மீட்போம்" பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு நிற்கவிருக்கின்றனர். உங்களிடமும் ஒன்று இருக்கட்டும். உங்கள் ஊரில் உள்ள முக்கிய வீதியில், பிரபலமான இடங்களில், நீங்கள் மட்டும் நின்று கொள்ளலாம்.

அடுத்து நிற்கும் நபருக்கும் உங்களுக்கும் 50 அடி இடைவெளி இருக்கட்டும். குழுவாக நிற்கவேண்டாம். அதனை ஒரு போராட்டமாகப் பார்ப்பார்கள். இது போராட்டமல்ல. ஒரு போராட்டம், எப்போதும் யாரையோ எதிர்த்தே நடைபெறும். யாரும் இதற்கு எதிராக இல்லை. ஏனெனில், அனைவரும் தண்ணீர் குடிக்கின்றனர்.

எதற்காக இந்தப் பிரச்சாரம், இந்த மிஸ்டு கால், பொது மக்களின் திரண்ட ஆதரவு, இந்தப் பேரணி - இவை எல்லாம் எதற்காக? ஒரு அரசு இதுபோன்ற ஒரு திட்டத்தை இயற்ற வேண்டுமென்றால், நிதிச் செலவுகள், வாழ்க்கைமுறை மாற்றங்கள் தேவைப்படுகின்றன. தேர்தலை வெற்றி கொள்ளக்கூடிய திட்டங்கள் அல்லாத பலவற்றை செய்யத் தேவையிருக்கும். நாங்கள் முதிர்ச்சி அடைந்தவர்கள் என்பதை இந்திய குடிமக்கள் அரசிடம் தெள்ளத் தெளிவாய் உரைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

நமக்கு இலவசங்கள் தேவையில்லை, நம் தேச நலனுக்கான ஒரு நீண்டகால கொள்கையை எதிர்பார்க்கிறோம் என்பதை உணர்த்த வேண்டும். இந்த திட்டம் வெற்றிபெற, அதனை தீவிரமாய் செயல்படுத்த வேண்டும். இதனை முழுவீச்சில் செயல்படுத்த எட்டிலிருந்து பதினைந்து ஆண்டுகள் வரை எடுக்கும். இதனை நாம் செயல்படுத்திவிட்டால், இருபது இருபத்தைந்து ஆண்டுகளில், நம் நதிகளில், இருபதிலிருந்து இருபத்தைந்து சதவிகிதம் நீர்ப்பெருக்கு ஏற்படும்.

நீண்டகால கொள்கையினை அரசு இயற்றுவதே நமக்கு தேவை. பொதுவாக, ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசிற்கு 5 ஆண்டுகள்தான் ஆயுள் என்பதால், அவர்கள் எந்த நடவடிக்கை எடுத்தாலும், அடுத்த தேர்தலை பற்றி எண்ணுகிறார்கள். இந்திய மக்கள் ஒரு தெளிவான அறிவிப்பை வெளியிடுவது மிக முக்கியம்: "எங்கள் எதிர்காலத்தை காப்பதற்காக, நீங்கள் நீண்டகால கொள்கைகளை வகுக்கவேண்டும். இம்முயற்சியில் எங்களுக்கு சில சங்கடங்கள் நேர்ந்தால் பரவாயில்லை."

இந்த திட்டத்திற்கு மகத்தான ஆதரவு இருப்பதை தலைவர்களுக்கு சொல்ல, பத்திலிருந்து முப்பது கோடி மிஸ்டு கால் எதிர்பார்க்கிறோம். இதன்மூலம், மக்கள் தங்களுடன் இருக்கும் நம்பிக்கையுடன் இதனை அணுகுவார்கள். இங்கொன்றும் அங்கொன்றுமாக நடைபெறும் சிறு திருத்தங்களில் நமக்கு விருப்பம் இல்லை. நம் தேச நலனிற்காக, விரிவான நீண்டகால கொள்கை அமைப்பதுதான் நமது நோக்கம்.

நாம் உயிர்வாழ இது மிக அவசியம். நம் மண்ணின் நிலையும், நீரின் நிலைமையும் அகலபாதாளத்தில் இருக்கின்றன. 130 கோடி மக்கள்தொகை கொண்ட ஒரு தேசத்தில், நம் மண்ணும் நீரும் பொய்த்தால், அது மிகக் கோரமான ஒரு பேரழிவாய் இருக்கும். இது நிகழாமல் தடுக்க விரும்புகிறோம். உங்கள் பொறுப்பினை நீங்கள் வெளிப்படுத்த வேண்டும். செப்டம்பர் 1ம் தேதி, "நதிகளை மீட்போம்" பதாகைகளை உயர்த்துங்கள், மக்களை இணையுங்கள். அதிகம், சிறப்பு.

நம் நதிகளுக்காகவும் நம் தேசத்தின் எதிர்காலத்திற்காகவும் எழுந்து நிற்போம்.

இதனை நாம் நிகழச் செய்வோம்.

Love & Grace

 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1