ஈஷா யோகா மையத்தில் ஆகஸ்ட், 23ம் தேதி நடைபெற்ற சத்குரு தரிசன நேரத்திலிருந்து...

ஆன்மீகப் பாதையில் பயணிக்கும் பல பேருக்கு ஒவ்வொரு நாள் காலையிலும் ஐந்து மணிக்கு எழும்போது இந்த கேள்வி உதிக்கும்,

'இதையெல்லாம் நான் செய்ய வேண்டுமா? மொத்த உலகமும் காலை எட்டு மணிக்கு எழுந்திருக்கிறது. நான் மட்டும் ஏன் ஐந்து மணிக்கு எழுந்திருக்க வேண்டும்? எல்லோரும் ஒரு நாளைக்கு ஐந்து வேளை சாப்பிடுகிறார்கள். நான் மட்டும் ஏன் இரண்டு வேளை மட்டும் சாப்பிட வேண்டும்? அனைவரும் இந்த பூமித்தாயைப் போல (உருண்டையாக இருப்பதைப் போல செய்து காட்டுகிறார்) மகிழ்ச்சியாகத் தெரிகிறார்கள். நான் மட்டும் ஏன் இப்படி தோற்றமளிக்க வேண்டும்?'

அது பூமித்தாயின் வடிவம்; மனிதனின் வடிவம் அல்ல, ஆனால் நிறைய பேர் அவளைப் போலவே தோற்றமளிக்க முயற்சிக்கிறார்கள்.

'நான் ஏன் இதைச் செய்ய வேண்டும்?' என்கிற இந்தக் கேள்வி எப்போதும் எழுகிறது. காலம், காலமாகவே 'நீ உன்னை உணர வேண்டும். கடவுளை உணர வேண்டும். முக்தி அடைய வேண்டும்' என்று சொல்லி வந்திருக்கிறார்கள். ஆனால் காலையில் நீங்கள், 'எனக்கு முக்தி வேண்டாம். நான் தூங்கத்தான் விரும்புகிறேன். எனக்கு கடவுளைப் பார்க்கத் தேவையில்லை. நன்றாக சாப்பிடவே விரும்புகிறேன். கடவுளைச் சந்திப்பதில் உண்மையிலேயே எனக்கு ஆர்வம் இல்லை. பக்கத்துத் தெருவில் இருக்கும் பெண்ணையோ அல்லது பையனையோதான் பார்க்கத்தான் விரும்புகிறேன்' என்று நினைக்கிறீர்கள்.

இந்த எண்ணங்கள் எல்லாம் உங்களுக்கு வரும். இந்த எண்ணங்களுக்கு உங்கள் உடல் இரசாயனங்களின் துணையும் உண்டு. ஆனால் ஆன்மீக ஏக்கத்திற்கு உங்கள் உடல் இரசாயனங்களின் ஆதரவு கிடையாது. இருந்தாலும், இந்த 'ஏன்' என்னும் கேள்வி மட்டும் மிகப் பெரிதாக ஆகிவிடுகிறது. 'ஏன்? ஏன்?'

உங்களுக்கு ஒரு புழுவின் புத்திசாலித்தனம் இருந்தால் 'ஏன்' என்பதே இருக்காது. ஒரு எருமையின் புத்திசாலித்தனம் இருந்தால் - அதற்கு உங்களுடையதை விட பெரிய மூளை உண்டு, குறைந்தபட்சம் பெரிய தலையாவது இருக்கிறது - இந்த பிரச்சனைகளெல்லாம் உங்களுக்கு ஏற்படாது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உண்மையில் நீங்கள், படைப்பு ஒவ்வொன்றையும் உன்னிப்பாக கவனித்தால் அனைத்துமே முன்னுக்கு பின் முரணாக இருப்பது புலப்படும். ஏதோ ஒரு விஷயத்தால் நீங்கள் முழுவதுமாக சூழப்பட்டால், அதுவே பரிபூரணமானதாக தெரியும். உங்கள் சுரப்பிகள் திரண்டெழுந்து சூடாக இருக்கும்போது, அவையே உங்கள் உடல் மற்றும் மூளையை ஆளும்போது, அதுவே வாழ்வின் நோக்கம் என்று தோன்றுகிறது.

பிறகு திருமணம் செய்து கொண்டவுடன், 'நான் ஏன் இதில் வந்து சிக்கிக் கொண்டேனோ?' என்று நினைக்கிறீர்கள். எனவே வாழ்க்கை நன்றாக நடக்கிறதா, இல்லையா என்பது கேள்வி இல்லை. உங்களுக்கு வேலை செய்யும் மூளை இருக்கிறதா இல்லையா என்பதுதான் கேள்வி. உங்களுக்கு வேலை செய்யும் மூளை இருக்கிறது என்றால், வாழ்க்கை எத்தனை நல்லவிதமாக நடந்தாலும், 'நான் ஏன் இதில் சிக்கிக் கொண்டிருக்கிறேன்?' என்கிற கேள்வி எப்படி இருந்தாலும் எழும்.

படைப்பின் இயல்பான தன்மையை நீங்கள் கூர்ந்து கவனித்திருந்தால், விஷயங்கள் முன்னுக்குப் பின் முரணாகத் தோன்றும்போதும் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். இப்படிச் செய்வது உங்களை மிகுந்த சமரசம் செய்துக் கொள்பவராகத்தான் விட்டு வைக்கும். உங்களை மிகந்த சமரசம் செய்துக் கொள்பவர் ஆக்குகிறது.

யார் ஒருவர் முழுவதுமாக கண்களை மூடிக் கொண்டும், தனது சொந்த உணர்ச்சிகள், எண்ணங்கள் மற்றும் செயல்கள் மீதே கவனம் செலுத்தாமல் இருக்கிறாரோ, அவர்தான் தான் சரியானவர் என்று நினைப்பார். அப்படி இல்லாமல், படைப்பின் மீது போதுமான கவனம் செலுத்தினால், நீங்கள் செய்வதெல்லாம் மிகக் கொடிய சமரசம் என்பதை தெரிந்து கொள்வீர்கள்.

உங்களை எங்கு கொண்டு வைத்தாலும், அது எப்படிப்பட்ட இடமாக இருந்தாலும், உங்களுக்கு வேலை செய்யும் மூறை இருந்தால், அது 'ஏன்? ஏன் நான் இப்படி இருக்கிறேன்?' என்று கேட்டுக் கொண்டே இருக்கும். மக்கள் தங்கள் மூளைகளை மற்ற பல விஷயங்கள் மூலம் செயல்படாமல் உறைய வைக்க முயற்சித்தாலும், அது பலன் தராது. உங்களுக்கு வேலை செய்யும் துடிப்பான மூளை இருந்தால் 'ஏன்' என்ற கேள்வி மிக சீக்கிரம் வந்துவிடும். உங்களிடம் உறைந்து போன மூளை இருந்தால், இக்கேள்வி மரணம் சம்பவிக்கும் நேரத்தில்தான் வரும்.

'ஏன் நான் உயிர் வாழ்கிறேன், ஏன் இதைச் செய்கிறேன்?' என்கிற கேள்விதான், நான் உங்களுக்கு வழங்கிடும் ஆசிர்வாதம். இது உங்கள் வாழ்வில் எவ்வளவு சீக்கிரம் வர முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வர வேண்டும். நீங்கள் போதுமான சக்தியோடும், இளமையோடும் இருக்கும்போதே இது உங்களுக்கு நிகழ வேண்டும். வாழ்வின் மற்ற பிற இன்னல்கள் உங்களை சூழ்ந்து கொள்ளும் முன்னர், 'ஏன்' என்னும் கேள்வியிலிருந்து விடுதலை பெற்று, சித்தரவதை அடையாமல் போகச் செய்யும் இந்தப் பாதையை நீங்கள் வெகு விரைவில் தேர்ந்தெடுக்க வேண்டும்.

நீங்கள் தூங்க முடியாத அளவுக்கு இந்த 'ஏன்' மிகப் பெரியதாகும் போது ஓரிடத்தில் உங்களால் நிம்மதியாக உட்கார்ந்திருக்க முடியாது. எதையும் சரியாக செய்ய முடியாது, ஏனென்றால் இதுதான் பிரபஞ்சத்தின் இயல்பான தன்மை. மூளை வளர்ச்சி குறைவான ஒரு உயிரினத்தால்தான் இந்த பிரபஞ்சத்திற்குள் அமைதியாக இருக்க முடியும்.

உங்களிடம் வேலை செய்யும் மூளை இருந்தால், இந்தப் பிரபஞ்சத்தில் உங்களால் அமைதியாக இருக்க முடியாது. எப்படிப் பார்த்தாலும் உங்களால் அமைதியாகப் பொருந்தியிருக்க முடியாது. நகரத்தில் இருந்தாலும், கானகத்தில் இருந்தாலும், குடிசையில் இருந்தாலும், அரண்மனையில் இருந்தாலும், உங்களால் அதனோடு பொருந்திப் போக முடியாது. ஏனென்றால் இதுதான் பிரபஞ்சத்தின் இயல்பான தன்மை.

மனிதர்கள் ஒரே இடத்தில் தேங்கிவிடக் கூடாது என்பதற்காக, பிரபஞ்சம் இப்படி படைக்கப்பட்டிருக்கிறது. ஒரு மனிதர் எங்கிருந்தாலும் அது அர்த்தமற்றதாகத்தான் அவருக்குப் படும். அங்கிருந்து அவர் வேறோர் இடத்துக்கு நகரவே விரும்புவார். தெய்வீகம் அத்தனை கருணை உள்ளதாக இருப்பதால்தான், உங்களை ஏதோ ஒரு வகையில் இராட்டினமாக சுற்றி வரச் செய்கிறது.

நாம் கைலாஷ் யாத்திரைக்கு சென்றிருந்தபோது, சில விஷயங்கள் செய்யப்படுவதில் ஒரு தொய்வைப் பார்த்தேன். அதனால் தன்னார்வத் தொண்டர்களையும், ஆசிரியர்களையும் அழைத்து, 'என்ன பிரச்சனை? ஒவ்வொரு வருடமும் இங்கு வருவதால் கைலாஷ் உங்களுக்கு மிகச் சாதாரணமாகிவிட்டதா? இந்த இடத்துக்கு வருவதற்காக மக்கள் தங்களைக் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள். உங்களுக்கு என்ன பிரச்சனை?' என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், 'இல்லை சத்குரு, நாங்கள் களைப்படைந்துவிட்டோம்' என்றனர். 'களைப்பு நல்லதுதான். ஆனால் நீங்கள் உயிரற்றுப் போய்விடவில்லை. களைப்பு ஒரு பிரச்சனை இல்லை. நீங்கள் உயிரற்றுப் போய்விடவில்லைதானே? நீங்கள் இளமையானவர்கள்' என்று சொன்னேன். பிறகு ஒரு பங்கேற்பாளர், 'அவர்கள் எப்போதும் ஏதோ ஒன்றை இராட்டினம் போல் சுழன்று, சுழன்று செய்து கொண்டேதான் இருக்கிறார்கள்' என்று சொன்னார். 'அதுதான் உங்கள் வாழ்வை வாழ்வதற்கான மிகச் சிறந்த வழி' என்று சொன்னேன்.

ஓய்வாக சாய்ந்து உட்கார்ந்திருப்பதுதான் நன்றாக வாழும் வழி என்று நினைக்கிறீர்களா? எப்போதும் இராட்டினம் போல் சுழல்வதுதான் சிறந்த வழி. அதாவது அப்போது உங்கள் வாழ்க்கை நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்று பொருள். அப்போது உங்களிடம் தேங்கிப் போன ஒரு வாழ்க்கை இருக்காது. எப்போதும் ஏதாவது நிகழ்ந்து கொண்டே இருக்கும் ஒரு வாழ்க்கை உங்களிடம் இருக்கும்.

இங்கு எப்போதும் ஏதாவது நிகழ்ந்து கொண்டே இருப்பதற்கு நீங்கள் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் - வாரத்தில் ஏழு நாட்களும், வருடத்தில் முன்னூற்றி அறுபத்தி ஐந்து நாட்களும் அவை நிகழ்கின்றன. ஈஷாவில் 'எதுவுமே நடப்பதில்லை' என்று உங்களால் புகார் எதுவும் சொல்ல முடியாது. இங்கு எப்போதும் ஏதாவது நிகழ்ந்து கொண்டே இருக்கும். இது மிகவும் முக்கியம். அசைவில்லா தன்மைக்கு உங்களை எடுத்துச் செல்லும் செயல்பாட்டின் ஆனந்தத்தை நீங்கள் அறிந்து கொள்ள என் ஆசிகள்.

Love & Grace