பரவசமான பாரம்…

என் இதயம் நன்றாகத் துடிப்பது

மலைகளினூடே இருக்கையில்தான்

உடல் எதிர்க்கிறபோதும்

மலைகளிலிருந்து விலக்கி என்னை

நீண்டகாலம் வைத்திருக்க இயலாது. என் இரக்கமற்ற

குருநாதர் என்மேல் மலைபோன்ற

பாரத்தை வைத்துச் சென்றார்.

அடிவாரத்தில் அமைந்திருக்க

அயராது முயல்கின்றேன். என் இதயமோ

மலைச் சிகரங்களுக்கே ஏங்குகிறது.

பரவசமான இந்த பாரமின்றி

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நான் என்னவாக இருப்பேனோ!

அன்பும் அருளும்,

இந்த மலையடிவாரத்தில் இருப்பது மிக அற்புதமாக இருக்கிறது, என் வாழ்வின் முதல்பாதி இம்மலைகளை கண்டுபிடிப்பதிலேயே சென்றது - என் சுமையை நான் இறக்கிட வேண்டுமல்லவா! ஆனால், இப்போதோ இங்கிருப்பதே அரிதான விஷயமாகிவிட்டது.

ஒரு நிலையில் பார்த்தால், ஆன்மீக செயல்முறை என்பது ஒரு மலையைப்போல் திடமாக, அசைவில்லாமல் இருப்பது. எப்போது ஒருவருக்கு திடமான அடித்தளம் இருக்கிறதோ, நம்மால் பல விஷயங்களையும் செய்திட முடியும். பரிபூரண திடம் இருந்தால் மட்டுமே அங்கு உயிரோட்டம் நிரம்பியிருக்கும். இல்லாதுபோனால், உயிரோட்டம் கிறுக்குத்தனத்திற்கே வழிகோலும். இதனால்தான், சற்றே படைப்பாற்றலுடன், துடிப்பாய், உயிரோட்டமாய் இருப்போர் தான்தோன்றித்தனத்தோடு, கிட்டத்தட்ட பைத்தியம் பிடித்ததைப் போல் ஆகிவிடுகிறார்கள். ஸ்திரத்தன்மை இல்லாமல் நடனம் செய்துகொண்டு இருக்க முடியாது. இதனால்தான், சிவனென்று சொல்லும்போது அசைவின்மை, நாட்டியம் என்று ஒருசேர சொல்கிறோம். ஒன்று அவன் அசைவற்று அமர்ந்திருப்பதை பார்க்கிறோம், அல்லது வெடித்தெழும் நடனத்தில் ஆழ்வதை காண்கிறோம். ஸ்திரத்தன்மை இருந்தால் மட்டுமே நிலைகுலையாத ஒரு வெடிப்பு சாத்தியப்படும்.

தன் வாழ்வினை அடக்கிக் கொள்வதால், நறுக்கிக் கொள்வதால் ஸ்திரமாக இருக்கமுடியும் என்று மக்கள் முயற்சிக்கின்றனர். "உன்னை கட்டுப்படுத்திக் கொள், அப்போதுதான் நீ ஸ்திரமாக இருக்க முடியும்," என்பது உங்கள் பாட்டிகள் உங்களுக்கு சொல்லியிருக்கக்கூடிய அறிவுரை. ஆம், நீங்கள் இறந்துவிட்டால், நீங்கள் ஸ்திரமாக இருப்பீர்கள். என்னால் அதனை சத்தியமாகச் சொல்ல முடியும். பொதுவாக, ஸ்திரத்தன்மைப் பற்றி பேசுபவர்கள் யாவரும் முட்டுக்கட்டை நிலையினில் வாழக்கூடிய உயிர்கள்தான். வாழ்வை பகுதி பகுதியாக வாழ்பவர்கள், அவர்களது சந்தோஷம், அவர்களது அன்பு, அவர்களது பேரானந்தம், அனைத்துமே அவ்வப்போது பகுதி பகுதியாகத்தான் நிகழும். அதனால், ஸ்திரத்தன்மை என்பது நீங்கள் வாழ்வை சுருக்கிக் கொள்வதாலோ அல்லது குறைந்தப்பட்ச அளவில் நறுக்கிக் கொள்வதாலோ நீங்கள் ஸ்திரத்தன்மையுடன் இருக்கிறீர்கள் என்றில்லை - இரண்டிற்கும் சம்பந்தமே கிடையாது. அனைத்தையுமே தெள்ளத் தெளிவாக காண்பதால்தான் நீங்கள் ஸ்திரமாக இருக்கிறீர்கள்.

அதனால்தான் நாம் ஆதியோகி பற்றி பேசும்போது, ஸ்திரத்தன்மை பற்றியும் பேசுகிறோம். அதே சமயத்தில் உயிர்துடிப்பான ஒரு ஆட்டத்தைப் பற்றியும் பேசுகிறோம். அவருக்கு இரண்டிற்கும் மேற்பட்ட கண்கள் இருந்ததால்தான் இது சாத்தியம், மூன்றாக இருக்க வேண்டிய அவசியமில்லை - இரண்டிற்கும் மேற்பட்ட கண்கள். பெரும்பாலான மக்கள் பார்ப்பதைவிட அவர் அதிகமாகக் காண்கிறார் என்பதே இதற்கான அர்த்தம். ஒரே ஒரு பகுதியை மட்டும் பார்த்தால் நீங்கள் ஸ்திரமாக இருக்க இயலாது. அதனால், முழு முயற்சியுமே இன்னும் சிறப்பாய் காண்பதைப் பற்றித்தான். தரிசனம் என்றால் பார்ப்பது என்பது உங்களுக்குத் தெரியும். இந்தக் கலாச்சாரம் எப்போதுமே இதைப் பற்றி பேசி வந்திருக்கிறது. கோரிக்கை மனுக்களை சமர்ப்பிப்பதற்காக நீங்கள் கோவிலுக்கு செல்வதில்லை, மாறாக தரிசனம் செய்வதற்குத்தான் - இன்னும் சிறப்பாக பார்க்க.

அடிப்படையில், வாழ்வில் பலவற்றுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதால்தான் மக்கள் என்ன உள்ளதோ அதைப் பார்க்க இயலாதபடி உள்ளனர். உடலிலிருந்து துவங்கி, அடையாளப்படுதல் பலப்பல விஷயங்களுக்கு செல்கிறது. நீங்கள் ஏதோ ஒன்றுடன் அடையாளப்படும் அந்தவொரு கணத்திலிருந்து, தன்னைப் பாதுகாத்துக்கொள்ள தேவையிருக்கிறது என்பதை முழு மனமும் முழுமையாக உணர்ந்து கொள்கிறது, அதை நோக்கி வேலை செய்யத் துவங்குகிறது. "அப்போது, என் தேச அடையாளத்தை, என் மத அடையாளத்தை, என் இன அடையாளத்தை நான் உடைப்பது எப்படி?" என்கிற ரீதியில் நீங்கள் செல்ல வேண்டாம். உங்கள் உடலுடன் கொண்டுள்ள அடையாளத்தை நீங்கள் தகர்த்தால் அனைத்துமே சென்றுவிடும். அனைத்துமே போய்விடும். ஏனென்றால், அனைத்து அடையாளங்களும் உடலில் வேர்விட்டிருக்கின்றன. மற்றவை அனைத்தும், உங்கள் உடல் கொண்டுள்ள எல்லையுடைய அடையாளங்களின் மிகைப்படுத்தலாகவே இருக்கிறது.

உங்கள் உடலுடன் நீங்கள் அடையாளம் கொள்ளும் அந்தக் கணத்தில், பிற அடையாளங்கள் யாவும் பெருகத்தான் செய்யும். அவை மிகத் துரிதமாக பெருக்கம் அடைகின்றன. நீங்கள் செய்பவற்றில் நீங்கள் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கும் அதே வேகத்தைவிட, இந்த பெருக்கம் வேகமாக நடைபெறும். உங்கள் அடையாளங்கள் வளர வளர உங்களால் குறைவாகத்தான் பார்க்க முடியும். அந்த நாடகம், மனோநிலையிலான நாடகம் உச்சநிலையை எட்டும் - உங்களை எதையுமே பார்க்க விடாது. உங்கள் சுய எண்ணமும் உணர்வுகளுமே உங்களை மூழ்கடித்துவிடும். துரதிர்ஷ்டவசமாக, தங்கள் மனங்களில் என்ன நடக்கிறதோ அதுவே முக்கியம் என்று நம்பச் சொல்லி இந்த உலகம் மக்களை செலுத்திக் கொண்டிருக்கிறது. உங்கள் மனங்களில் நடப்பது வெறும்  குப்பையே என்று இந்த உலகை ஏற்கச்செய்ய நான் முயன்று கொண்டிருக்கிறேன். "இல்லை சத்குரு, நான் கடவுளைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்!!" அதுவும் குப்பைதான். வேண்டுமென்றால், அதனை புனிதக் குப்பை என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம், ஆனாலும் அது குப்பைதான். ஏனென்றால், உங்கள் மனதிற்குள், கடவுள் வரமுடியாது, சாத்தான் வரமுடியாது, தேவதைகள் வரமுடியாது - வெறும் எண்ணங்கள் மட்டுமே வரமுடியும்.

ஒரு முட்டாள்தான் ஒரு எண்ணத்தை புனிதமென்றும் மற்றொன்றை வேறொன்றாகவும் அடையாளப்படுத்திக் கொள்வான். எண்ணம் என்றால் தற்சமயம் உண்மையாக இல்லாத ஒன்று என்று அர்த்தம். எண்ணம் என்றால் உங்கள் மனத்தில் பழைய குப்பைகள் சீழ்கட்டிக் கொண்டிருக்கின்றன என்று அர்த்தம். நீங்கள் பிழைப்பிற்காக இதையும் அதையும் சிந்திக்கத் தேவையிருக்கும். ஆனால், புதிதாக எதையோ ஒன்றை கண்டறிந்துகொள்ள நீங்கள் சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஞானோதயம் அடைய நீங்கள் சிந்திக்கத் தேவையில்லை. ஏனென்றால், நீங்கள் எதைச் சிந்திப்பீர்கள்? உங்கள் தலையில் உழன்று கொண்டிருக்கும் பழைய சமாச்சாரங்களை மட்டுமே சிந்திப்பீர்கள் - அதையே பல கோணங்களில் சிந்திப்பீர்கள், அவ்வளவுதான். உங்கள் குப்பைகள் எத்தனை வகையான வடிவங்கள் எடுக்கக்கூடியவை என்பதற்கு உயிரைப் பொருத்தவரையில் எந்த மதிப்பும் கிடையாது. சமூக அளவில் வேண்டுமென்றால் அதற்கு கொஞ்சம் அர்த்தங்கள் இருக்கலாம். சில இடங்களில், நான் வெளிநாடுகளுக்கு செல்லும்போது, மக்கள் சொல்கிறார்கள், "இவர் ஒரு சிந்தனைத் தலைவர்," என்று. "ஓ!" என் தலையில் எண்ணமே இல்லையே என்பேன் நான்.

தெளிவாய் பார்ப்பது, அனைத்தையும் பார்ப்பது, உங்கள் பார்வை உங்களால் தடைசெய்யப்படாமல் இருப்பது - இந்த ஒரு விஷயம் மட்டும் நிகழ்ந்தால், ஸ்திரத்தன்மை நிகழும். உயிர்துடிப்பு பற்றி நீங்கள் கவலைப்பட தேவையில்லை. ஏனென்றால், உயிரின் இயல்பே அதுதான். அனைத்துமே உயிர்துடிப்புடன்தான் உள்ளது. உயிர்துடிப்பு நிகழ அனுமதிக்க ஸ்திரத்தன்மை தேவை. நீங்கள் சமநிலையற்று இருக்கும் போதெல்லாம் உங்கள் உயிர்துடிப்பினை நீங்கள் சுருட்டிக் கொள்வீர்கள். நீங்கள் சமநிலையற்று இருக்கும்போது, ஒரு குறிப்பிட்ட வேகத்தில் சென்றால், காயமடைவது நிச்சயம். நீங்கள் சைக்கிள் ஓட்டுகிறீர்களோ அல்லது இந்த பிரபஞ்சத்தையே ஓட்டுகிறீர்களோ, நீங்கள் சமநிலையற்று இருக்கும்போது வேகத்தை கூட்டினால், பலத்த காயம் ஏற்படப் போவது என்னவோ நிச்சயம்தான். அதனால், சமநிலை மிக மிக முக்கியமானது.

குறுகலாக்கிக் கொள்வதால் வரும் சமநிலை, சமநிலையே அல்ல - ஒருவிதத்தில் பார்த்தால் அது உரையிடப்பட்ட மரணம். பார்க்க பண்பார்ந்ததாகவும் கண்ணியமாகவும் தோற்றமளிக்கும். ஏனென்றால், இறந்தவர்களும் மிக கண்ணியமாக காட்சி தருவார்கள். இதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அவர்கள் பண்பற்ற வகையில் எதையும் செய்தது கிடையாது. அடிப்படையில், அனைத்துமே தீர்க்க தரிசனத்தில் உள்ள தெளிவில்தான் உள்ளது. எனக்கும் என் உடலிற்கும் ஒரு தொலைவு ஏற்படாத வரையில் இது ஏற்படப் போவதில்லை. இந்த தொலைவு இல்லையென்றால், அடையாளங்கள் பல்கிப் பெருகுவது தவிர்க்க இயலாத ஒரு பின்விளைவாகவே இருக்கும். பார்வை... நீங்கள் இந்த மலைகளின் மீது முழு கவனம் செலுத்துங்கள் - ஒவ்வொரு நாளும் உங்களுக்கு பித்துப்பிடிக்க வேண்டும். நான் என் வாழ்நாள் முழுவதும் இதனை சுமந்திருந்தாலும், இந்த மலைகளை பார்க்கும்போது நான் இன்றும் பித்தேறிப் போகிறேன். ஒன்று நீங்கள் அதைப் பார்க்கிறீர்கள், அல்லது அதை காண்கிறீர்கள், ஆனால் காணவில்லை.

ஒருமுறை சங்கரன் பிள்ளை ஈஷா யோக மையத்திற்கு வந்திருந்தார். மிக அருமையான காட்சியமைப்பு கொண்ட அறை வேண்டும் என்று கேட்டிருந்தார். கொஞ்சம் யோசனைக்கு பின், அலுவலகத்தார் அவருக்கு சித்ரா கட்டிடத்தில் இடம் ஒதுக்கினர். அடுத்த நாள் காலையில் கண்விழித்தவுடன் ஒரு குற்றச்சாட்டுடன் வந்தார் சங்கரன் பிள்ளை. "நல்ல காட்சியமைப்புடைய அறை கேட்டேன், நீங்கள் இந்த அறையைப் போய் எனக்கு தந்திருக்கிறீர்களே," என்று புலம்பினார். "இதுதான் சிறந்த அறை," என்று அவருக்கு விளக்க முயற்சித்தனர். "காட்சியமைப்பு, எங்கே இருக்கிறது? காட்சியமைப்பாம் காட்சியமைப்பு, பாருங்கள் இந்த மலை நடுவே நிற்கிறது!!" என்றார். மலை எப்போதும் குறுக்கே வருவதில்லை. உங்களைத் தாண்டி பாருங்கள் - அவ்வளவுதான் இருக்கிறது.

வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் நடைபெற்ற தியானலிங்க பிரதிஷ்டையை குறிப்பிடுகிறார். சத்குருவிடம் அவரது குரு ஒப்படைத்த பொறுப்பு இது.