இங்கு அன்னபூர்ணா மலைத்தொடரின் தெற்கு அடிவாரத்தில் இருக்கிறோம்.

நாங்கள் சிலபேர் அழகிய காக்புசந்தி ஏரிக்கு சென்று இரண்டு நாட்கள் தங்கினோம்.

என் உடலின் ஒவ்வொரு தசையும் கதறுகிறது, "எங்களை ஏன் இங்கு அழைத்துவந்தாய்?" என்று கேட்கிறது. ஆனால் என் இதயம் விவரிக்கமுடியா பரவசத்தில் திளைக்கிறது, ஆனந்தக் கூத்தாடுகிறது. உடலோ வலியில் கதறுகிறது.

இம்மலைகளை நீங்கள் ஆயிரம் ஆண்டுகள் மீண்டும் மீண்டும் பார்த்தாலும், மலைகள் மீதான உங்கள் மோகம் தீராது. "வருடாவருடம் ஏன் அங்கு செல்கிறீர்கள் சத்குரு?" என்று என்னிடம் ஒருவர் கேட்டார். "இமயமலை மீதான மோகம் இது" என்றேன்.

தற்போது பயணப்பட்டுள்ள இந்த குழுவிலும், நாங்கள் தவிர்க்க முயன்றும்கூட, இந்த முப்பத்தைந்து பேரில் ஐந்தாறு பேர் இரண்டாவது அல்லது மூன்றாவது முறையாக இங்கு வருகிறார்கள். ஏனென்றால் மலைகள் உங்களைப் பற்றிக்கொண்டால், அவை ஒருவிதமாக உங்களை ஆட்கொண்டு கீழ்ப்படியச் செய்கின்றன.

தம் பனிபோர்த்திய தலைகளிலிருந்து தண்ணீர் சிந்தும் இம்மலைச் சிகரங்களைப் போல, நானும் கொஞ்சம் கவிதை சிந்துகிறேன். அவற்றைப் போல வெண்மையாக, பிரகாசமாக, அழகாக அவை இருக்காது, ஆனால் இது நான்தானே, நான் ஒன்றும் இமயமலை இல்லையே. அதனால் இவற்றை உங்களுக்கு வாசிக்கிறேன். இப்படி கவிசொல்லி பலகாலம் ஆகிவிட்டது.

malaigal-meethaana-mogam-sgspotsubjectimg

ஹம்தே

ஹம்தே பள்ளத்தாக்கின் மடி

என் வீடு போலத் தோன்றுகிறது,

அதிகம் பயணிக்கப்படாத

இந்த அழகிய மலைச்சிகரங்கள்

எனை ஈர்க்கின்றன.

என் சுவாசத்தையும் உயிரையும்

சிவன் ஆட்கொண்டு அவன்தன்

அண்டமெனும் நெஞ்சோடு வாரியணைத்தபின்,

தாயின் கருவறையின் அன்பான அரவணைப்பிலுள்ள

சிசுவைப் போல இருக்கிறேன்.

வாழ்வோ சாவோ பற்றி துளிக்கவலை இல்லை.

அதற்கு அப்பால் உள்ளதை அடையும்

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஏக்கங்களும் எனை பிணைக்கவில்லை,

இதுவே இதற்கப்பால் என்றாகிவிட,

இதற்கு அப்பாற்பட்டதும் இங்கேயே இருக்கிறது.

malaigal-meethaana-mogam-sgspotsubjectimg2

அழகிய அன்னபூர்ணா மலைத்தொடரின் பெயர்தான் அடுத்த கவிதைக்கு...

அன்னபூர்ணா

அன்னபூர்ணா மலையின்

பனிபடர்ந்த சிகரம்

தனது பால்முகத்தை ஒருக்கணம் காட்டி

மேகத்தின் திரையின்பின் மறைந்துகொண்டாள்

அதன்பின் வெட்கத்திலிருக்கும்

மணப்பெண் போலவே நடித்துவிட்டாள்,

ஆதவனின் ஒளிக்கீற்றுகள்

ஒருக்கணம் திரைவிலக்கும் வரை.

ஒருக்கணமே என்றாலும்

அனைவரையும் வசீகரிக்கும் அழகிய முகம்.

malaigal-meethaana-mogam-sgspotsubjectimg3

இன்னொரு கவிதை சொல்லி இந்தவாரம் முழுக்க உங்களை ஏக்கம்கொள்ள வைக்கிறேன், இதன் பெயர் "பால்வண்ண மலைச்சரிகை".

பால்வண்ண மலைச்சரிகை

பனி உருகி, வெறுமையான

மலை முகத்தை ஓடைகளின்

பால்வண்ண சரிகையால் மூட,

ஓடை பெரிதோ, நரம்புபோல

மெல்லியதோ, இந்த மென்மையான

பால்வண்ண நீரின் சரிகை,

அனைவரும் பயந்து பக்திகொள்ளும்

நதியின் பிரவாகமாக பெருகுகிறது.

ஒரு மனிதனுக்கு மலை என்ன செய்யவல்லது என்பதை விளக்குவது மிகவும் கடினம். மலைகளையே பார்த்திராத ஒரு மனிதனை "மனிதன்" என்று அழைக்கலாமா என்றே ஐயம் ஏற்படுகிறது. காலங்காலமாக இப்படித்தான் இருந்துள்ளது.

நான் அனைவரையும் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன், குறிப்பாக இந்த தேசத்து இளைஞர்களையும் உலகெங்குமுள்ள இளைஞர்களையும் கேட்டுக்கொள்கிறேன்: ஏதாவது மலையுடன் ஏதோவொரு விதத்தில் காதல் கொள்ளுங்கள் - உங்களுக்கு சவால்விடுக்கும் ஒரு மலையுடன், உங்களை ஈர்க்கும் ஒரு மலையுடன், அதன் பிரம்மாண்ட உருவத்தாலும், உறுதியாலும், கம்பீர இருப்பாலும் உங்களை கீழ்ப்படியச்செய்து ஆட்கொள்ளும் ஒரு மலையுடன் மோகம் கொள்ளுங்கள்.

அனைவரும் இமயமலைக்கு வாருங்கள்!

malaigal-meethaana-mogam-sgspotsubjectimg4

சத்குரு ஆங்கிலத்தில் பேசியுள்ளது: https://youtu.be/cfhNOVC6wbc

அன்பும் அருளும்,