குளிரிலும் தகிக்கும் தீவிரம்!
அமெரிக்கா ஈஷா யோக மையத்தில் சமீபத்தில் நடந்த 3 நாட்கள் "குருவின் மடியில்" சத்சங்கத்தைப் பற்றி இந்த வார சத்குரு ஸ்பாட்டில் பகிர்ந்துகொள்கிறார் சத்குரு...
 
 
 
 

அமெரிக்கா ஈஷா மையத்தில் நடந்த 3 நாட்கள் "குருவின் மடியில்" சத்சங்கத்தைப் பற்றி இந்த வார 'சத்குரு ஸ்பாட்'டில் பகிர்ந்துகொள்கிறார் சத்குரு...

இங்கே, அமெரிக்கா ஈஷா மையத்தில், இரவுகளில் -10 டிகிரிக்கும் குறைவாக சென்றுவிடுகிறது. சத்சங்கத்துக்காக, கடந்த 3 நாள் இங்கே குழுமிய 1100க்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டர்களின் அளப்பரிய உற்சாகத்தின் மீது இந்தக் குளிர் பாதிப்பு ஏற்படுத்தவில்லை. உயிரோட்டமான ஊக்கமான மனிதர்களுடன் இருப்பது ஈஷாவிற்கு கிடைத்த ஆசீர்வாதம். உற்சாகம் குறைவான சூழலில் இருப்பது என்னால் இயலாது, ஆனால் நம்முடைய தன்னார்வத் தொண்டர்கள், "முழு வீச்சில்" இருக்கும் சூழலை உருவாக்கிவிடுகிறார்கள். வாழ்வில் நெருப்பு, தீவிரம் இல்லாமல் இருப்பது தற்கொலையை நோக்கிய பயணத்தை போன்றது. வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் வேகமும், திறனும் நிரம்பி இருக்கவேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.

ஆந்திராவில் ஒரு வாரம், ஈஷா யோக மையத்தில் இரண்டு நாட்கள், மும்பையில் இரண்டு நாட்கள் என சூறாவளி பயணங்கள் மற்றும் செயல்களிலிருந்து தற்போது அமெரிக்க ஈஷா யோக மையத்தில், வாழ்க்கை நிதானமான வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. வெறுமனே உட்கார்ந்து செங்குத்தான நிலப்பரப்புகளையும், தொலைதூர மலை சிகரங்களையும் பார்த்து ரசிக்கக்கூட இப்போது நேரம் இருக்கிறது. இடைவிடாத பணியால் எனக்கு இதுவரை கிடைக்கப் பெறாத ஆடம்பரங்கள் இவை. சுவாசத்திற்கிடையே இருக்கும் இடைவெளியில் கவிதை கூட எழுத முயற்சிக்கிறேன். இன்னும் ஒரே ஒரு நாள். மீண்டும் பயணம்.

"குருவின் மடியில்" நிகழ்ச்சியில் மக்கள் மிக அற்புதமாக இருந்தார்கள். அனைத்துக்கும் மேலாக, உயர்நிலையிலான திறன், தீவிரத்துடன் கூடிய உண்மையான தேடலும் பலருக்கு ஏற்பட்டிருக்கிறது. இவர்களுடன், இங்கு இன்னும் கொஞ்ச நேரம் செலவு செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. தேடலுக்கான கலாச்சார பின்னணி எதுவும் அமெரிக்காவில் இல்லாவிட்டாலும், உயர் சாத்தியங்களுடன் அவர்கள் சிறப்பாக வடிவம் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

2016ல் ஈஷாவின் கவனம் குறிப்பிடத்தகுந்த விதத்தில் அமெரிக்கா மீது இருக்கும். அமெரிக்காவுக்கென எழுதப்பட்ட முதல் புத்தகம் செப்டம்பரில் வெளிவருவதை அடுத்து, வேறு பல நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அனைத்துக்கும் மேலாக, வட அமெரிக்க மக்கள் மீது ஆதியோகி ஆலயம் தாக்கம் ஏற்படுத்த துவங்கியிருக்கிறது.

எனது கவிதை முயற்சியை நீங்கள் சற்றே சகித்துக் கொள்ளத்தான் வேண்டும் - நான் அமெரிக்க ஈஷா யோக மையத்தில் இருக்கிறேன்.

துயில் காலம்

மலர்களற்ற பனிக்காலம் -
வண்ணமய வரவேற்பின்றி
வாடுகிறான் கதிரவன்
ஆனாலும் பிரகாசமாய் ஒளிர்கிறான்
இலை மற்றும் மலர்களுக்கு
தானே வாழ்வாதாரம்
என்று அவன் நன்கறிவான்.

வண்ணமோ வண்ணமற்றதோ
வெறும் பருவமாற்றத்தின் அம்சங்களே -
உயிரின் இனிமை காரணத்திற்கு அப்பாற்பட்டு நிகழ்வது போல்.
வெறுமையும் வெங்குளிரும்
இதமான இளவேனிற்கான முன்னேற்பாடே

துயில் காலம் கடந்து
துளிர்களும் மலர்களும் தளிர்ப்பதுபோல்
குளிர்காலம் பிரகாசமாய் கடந்தவன்
அவசியமாய் கண்டடைவான்
மலர்களையும் கனிகளையும்.

முழு வெறுமையும் மலர்ந்தே தீரும்
ஆழ்துயில் பருவத்திற்கும் அடிபணியாமல்.

Love & Grace

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1