க்ஷேத்திர சன்னியாசம்

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், அவருடைய பிறந்த நாள் சத்சத்சங்கத்தில் தியான அன்பர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பினை அறிவித்துள்ளார் சத்குரு. "மக்கள் பல வழிகளிலும் பங்கெடுத்துக் கொள்ளும் வகையில் ஒரு சன்னியாச செயல்முறையை அடுத்த வருட வாக்கில் துவங்கப் போகிறோம். நீங்கள் எங்கிருந்தாலும், ஒரு சன்னியாசியாக இருக்கலாம். உங்களுக்குத் திருமணமாகியிருந்தாலும் நீங்கள் ஒரு சன்னியாசியாக இருக்கலாம், ஏனென்றால் எப்போதும் தேக்க நிலையில் இருக்க மாட்டேன் என்ற ஒரு உறுதிமொழியை அப்போது நீங்கள் எடுத்திருப்பீர்கள்." படித்து மகிழுங்கள்!
 
 
 
 

சத்குருவின் பிறந்த நாளான செப்டம்பர் 3, 2012 அன்று நடைபெற்ற சத்குருவின் சத்சங்கத்திலிருந்து சில பகுதிகள்:

நான் யார், என்னால் என்ன செய்ய முடியும் என்கிற அர்த்தத்தையும், நோக்கத்தையும் நான் உணர்ந்து முப்பது வருடங்கள் ஆகிவிட்டன. திரும்பிப் பார்க்கும்போது, இந்த முப்பது வருடங்களும் நேற்று முன்தினம் நிகழ்ந்ததைப் போல என் அனுபவத்தில் தோன்றுகிறது, ஏனென்றால் வாழ்க்கை அத்தனை அதிவேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது.

என் வாழ்வின் முதல் பனிரெண்டு வருடங்களில் நான் மிகவும் மௌனமாக, எப்போதாவது பேசுபவனாக, உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு என் தலைக்குள் எல்லா விஷயங்களையும் போட்டு குழப்பிக் கொள்பவனாக இருந்தேன்.

அடுத்த பனிரெண்டு அல்லது பதிமூன்று வருடங்களில் யோகா என் வாழ்வில் ஒரு பகுதியாக ஆனபோது, என்னைச் சுற்றி இருக்கும் உலகத்தைப் பற்றி, அது என்ன என்பதைப் பற்றி, எப்படி செயல்படுகிறது என்பதைப் பற்றி அதிகமாக அறிந்து கொள்ளத் துவங்கினேன். மேலும் நாளுக்கு நாள் என்னுடைய கோபமும் அதிகமாகிக் கொண்டே சென்றது.

நீதியை எதிர்பார்த்தால், கோபப்பட்டே இறந்துவிடுவீர்கள். என்னை நம்புங்கள், வேறு வழியே இல்லை. ஏனென்றால் அடுத்தவர்கள் சொல்வதை நீங்கள் நம்பாதவரை, மனித சமூகங்களில், நீதி என்று ஒன்று கிடையாது.

மக்கள் எப்படி செயல்படுகிறார்கள், குடும்பத்தில், சமூகத்தில், நாட்டில், உலகத்தில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று உங்களால் பார்க்க முடிகிறபோது, நீங்கள் கோபப்பட்டே இறக்க நேரிடும். எனவே நானும் எனக்குள் கொதித்துக் கொண்டிருந்தேன். அதிர்ஷ்டவசமாக என்னுடைய கோபத்தின் வெளிப்பாடு, புரட்சிக் கூட்டங்களுக்குச் செல்வதோடும், பல்கலைக்கழகத்தில் போஸ்டர்கள் ஒட்டுவதோடும் நின்றுவிட்டது.

துப்பாக்கியை ஏந்தும் அளவுக்கு நான் செல்லவில்லை. ஆனால் என்னுடைய சில நண்பர்கள் துப்பாக்கி ஏந்தி, கடைசி வரை சென்றார்கள். அவர்களில் ஒருவர் பெரிய தலைவராகி, இரண்டு வருடங்களுக்கு முன்னால் கொல்லப்பட்டார்.

உலகம் செயல்படும் விதத்தைப் பார்த்து நான் மிகவும் கோபாவேசமாக இருந்தேன் - எத்தனை ஏமாற்று வித்தைகள், எத்தனை அநீதிகள், செயல்பாடுகளில் எத்தனை அலட்சியம், மனிதர்கள் ஒருவரை ஒருவர் எப்படி நடத்துகிறார்கள், இந்த பூமியில் இருக்கும் மற்ற உயிரினங்களையெல்லாம் மனிதர்கள் எப்படி நடத்துகிறார்கள் என்பதைப் பார்த்து நான் மிகவும் கோபாவேசமாக இருந்தேன். இவையெல்லாம் சேர்ந்து என்னை கோபத்தில் மூச்சுத் திணற வைத்துக் கொண்டிருந்தன.

ஞானமடைந்ததால் கிடைத்த குளுமை மட்டும் எனக்குள் ஏற்பட்டிருக்கவில்லை என்றால், நான் கோபத்தினாலேயே இறந்திருப்பேன். எனக்குள் அத்தனை கொதிப்பு இருந்தது. அது என்னுடைய தினசரி வாழ்வில் வெளிப்படவில்லை என்றாலும், அப்போது என்னுடைய இரத்தத்தின் உஷ்ணம் சராசரியாக இல்லை என்றே நினைக்கிறேன்.

என் உடலுக்குள் இருந்த ஒவ்வொரு இரத்த நாளமும், நரம்பும், கொதித்துக் கொண்டிருந்தன, ஏனென்றால் ஒவ்வொன்றிலும் பாகுபாட்டையும், அநீதியையும், ஏமாற்றுதலையும் என்னால் பார்க்க முடிந்தது. .

வாழ்வின் மற்றொரு பகுதியைப் பார்ப்பதற்கு குறிப்பிட்ட பரிமாணத்தை உடைய ஒரு புரிதல் தேவையாக இருந்தது - இது மனிதர்களைப் புரிந்து கொள்வதற்கு மட்டுமல்ல, படைத்தலையும், படைப்பின் மூலத்தையும் புரிந்து கொள்வதற்கும் கூடத்தான். படைத்தலும், படைப்பின் மூலமும் எத்தனை அழகானது, எத்தனை கருணைமிக்கது, எத்தனை அற்புதமானது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

எனக்குள் அந்தப் பரிமாணம் திறக்கவில்லை என்றால், என்னுடைய கோபம் வெளிப்பட்ட விதத்துக்கு, ஒரு விஷயத்தை நான் உறுதியாகச் சொல்ல முடியும் - நான் திறமைசாலியாக இருந்திருப்பேன், ஆனால் அது நன்மை தருவதாக இருந்திருக்காது.

அதனால்தான் நம் வாழ்க்கைக்கு ஆன்மீக செயல்பாடுகள் மிகவும் இன்றியமையாதவையாக இருக்கின்றன. ஒன்று நீங்கள் உணர்ச்சியற்றவராக இருக்க வேண்டும் அல்லது ஆன்மீகத் தன்மையோடு இருக்க வேண்டும், இல்லாவிட்டால் நீங்கள் கோபமாகத்தான் இருப்பீர்கள்.

நீங்கள் உணர்ச்சி நிரம்பியவராக, விழிப்புள்ளவராக இருந்து ஞானம் அற்றவராக இருந்தால் இந்த இடம் நீங்கள் வாழ்வதற்கு மிகவும் கொடூரமானதாக இருக்கும். நீங்கள் முற்றிலும் அறியாமையில் இருப்பவராக இருந்தால், எந்தப் பிரச்சனையும் இல்லை.

அதே நேரத்தில் நீங்கள் ஒரு ஞானியாக இருந்தால் இந்த இடம் வாழ்வதற்கு மிகவும் அற்புதமாக இருக்கும். இரண்டுக்கும் நடுவில் - நான் அந்த நிலைமையில் இருந்திருக்கிறேன் - இது இருப்பதற்கு நல்ல இடம் அல்ல.

எனவே ஞானம் அடைவதற்கு என்ன செய்ய வேண்டும்? ஆன்மீக செயல்பாடு என்பது எப்போதும் துறவுடன்தான் சம்பந்தப்பட்டுள்ளது. இதுவும் ஒரு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட ஒரு வார்த்தை. துறவு என்றால் 'நான் எல்லாவற்றையும் துறந்துவிட வேண்டும்' என்று மக்கள் நினைக்கிறார்கள்.

இல்லை, உங்கள் தாயின் கருவறையைத் துறந்து ஒரு பச்சிளம் சிசுவானீர்கள், பச்சிளம் சிசுவைத் துறந்து ஒரு குழந்தையானீர்கள், குழந்தையைத் துறந்து இளைஞனானீர்கள், இளமையைத் துறந்து நடுத்தர வயதடைந்தீர்கள், நடுத்தர வயதைத் துறந்து முதுமை அடைந்தீர்கள், முதுமையைத் துறந்து கல்லறையை அடைந்தீர்கள்; எப்படி இருந்தாலும் இவற்றையெல்லாம் நீங்கள் செய்கிறீர்கள். இவற்றை நீங்கள் விழிப்புடனும் நேர்த்தியாகவும் செய்தால் இதை நாம் துறவு என்கிறோம். இல்லாவிட்டால் சிக்கிப் போதல் என்கிறோம்.

தொடர்ச்சியாக நீங்கள் துறந்து கொண்டிருந்தால் - அதாவது சிறிதான ஒரு விஷயத்தை விட்டு அதை விட பெரிதான ஒன்றுக்குப் போகும்போது - அதுதான் துறவு. துறவு என்றால் - சிறிய விஷயங்களை பின்னால் விட்டுவிட்டு, பெரிய விஷயங்களுக்கு நகர்வது, இப்படி தொடர்ந்து செய்கிறீர்கள் என்று பொருள். அதாவது நீங்கள் சிக்கிக் கொள்ளாமல் இருக்கிறீர்க்ள்.

'சன்னியாசம்' என்கிற வார்த்தை இன்றைய சமூக கட்டமைப்புகளில் நிறைய எதிர்மறைத் தன்மையை உருவாக்கி இருக்கிறது, ஏனென்றால் சன்னியாசிகள் அத்தனை மோசமான உதாரணங்களை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். எல்லோரும் இல்லை, அவர்களில் பலர் அற்புதமானவர்கள், ஆனால் நிறைய பேர் வாழ்க்கை நடத்துவதற்கான இன்னனொரு வழியாக சன்னியாசத்தை தேர்ந்தெடுத்துவிட்டார்கள்.

மோசமான உதாரணங்களைப் பார்த்ததால், மக்கள் சன்னியாசத்தைப் பற்றி தவறாகப் புரிந்து கொண்டுவிட்டார்கள். இதைப்பற்றி நான் நீண்ட காலமாகவே சிந்தித்து வருகிறேன், குறிப்பாக கடந்த ஒன்றரை, இரண்டு வருடங்களாக. எந்த ஒரு மனிதனும், சரியான ஒரு சூழ்நிலையில் இருந்தால், அவரை நிலைமாற்றி விட முடியும் என்னும் அளவுக்கு நான் இந்த உயிரைப் பற்றி போதுமான அளவு அறிந்து வைத்திருக்கிறேன்.

அங்குலிமாலா என்பவர், கொள்ளையடிப்பதில் தன்னுடைய சாதனைகளை கணக்குப் போடுவதற்காக, தான் கொள்ளையடித்தவர்களின் விரல்களை வெட்டி மாலையாக்கி தன் கழுத்தில் அணிந்திருந்தார். அதற்காக நூற்றுக்கணக்கான விரல்களை அவர் வெட்டி சேகரித்திருந்தார். அப்படிப்பட்ட ஒரு மனிதன் மனம் மாறி ஒரு முனிவராக ஆனார்.

இன்று சிறைகளில் அடைபட்டிருக்கும் பல பேர், நமது வகுப்புகளால், தங்களளவில் உண்மையான முனிவர்களாக ஆகியிருப்பதை நாம் அறிவோம். நமக்கு இது ஒரு மிக அற்புதமான பயணமாக இருந்திருக்கிறது.

ஈஷா யோகா அல்லது உள்நிலை விஞ்ஞான வகுப்புகளை எடுப்பவர்களுக்கு இதைப் பற்றி தெரியும் - மூன்று அல்லது ஏழு நாட்களில் மக்களிடம் ஏற்படும் நிலைமாற்றத்தை அவர்கள் பார்க்கிறார்கள். இந்த உலகத்தில், ஏதோ ஒன்றைச் செய்து, அதன் காரணமாக சில நாட்களிலேயே, மக்களிடையே ஏற்படும் மலர்ச்சியைப் பார்ப்பதை விட பெரிய சந்தோஷம் எதுவும் இருக்க முடியாது.

நீங்கள் எப்படிப்பட்ட மனிதர்களை அழைத்து வந்தாலும், அவர்களை ஒரு சரியான சூழ்நிலையில், சரியான சக்திநிலையில், சரியான தூண்டுதலோடு வைத்திருந்தால், அவர்களை மிக அற்புதமானவர்களாக, மிக அழகானவர்களாக நிலை மாற்றிவிட முடியும் என்று எனக்கு நூறு சதவிகிதம் தெரியும்.

சன்னியாசம் என் தலைக்குள் ஒரு பெரிய விஷயமாக சுற்றிக் கொண்டிருக்கிறது. இதை மக்களுக்கு எப்படி பெரிய அளவில் கொண்டு சேர்ப்பது என்பதைப் பற்றி நான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

இப்போது, ஒரு சன்னியாசியாக வேண்டுமென்றால் குறிப்பிட்ட வருடங்கள் பிரம்மச்சாரியாக இருக்க வேண்டும், ஆனால் இது எல்லோருக்கும் சாத்தியமில்லை. உங்களுடைய மனைவியோ அல்லது கணவரோ அல்லது உங்கள் வாழ்க்கை சூழல்களோ இதற்கு உங்களை அனுமதிக்காமல் போகலாம்.

சன்னியாசம் என்றால் நீங்கள் எங்காவது சென்றுவிட வேண்டும் என்று அர்த்தமல்ல. சன்னியாசம் என்றால் வளர்ச்சியடைய வேண்டும் என்கிற தொடர்ச்சியான ஏக்கத்தில் மூழ்கி இருக்கிறீர்கள் என்று பொருள்.

நீங்கள் வளர்ந்து கொண்டிருந்தால், எப்போதும் எதையாவது விட்டு விலகிக் கொண்டோ அல்லது துறந்து கொண்டோ இருப்பீர்கள். தேங்கிப் போனவர்களால்தான் எதையுமே துறக்காமல் உயிர் வாழ முடியும். வளர்பவர்கள் எப்போதும் எதையாவது துறந்து கொண்டேதான் இருப்பார்கள். எதையாவது நீங்கள் துறக்கவில்லை என்றால், அடுத்ததை நீங்கள் அடையமுடியாது. இதுதான் வாழ்க்கையின் இயல்பு.

எனவே மக்கள் பல வழிகளிலும் பங்கெடுத்துக் கொள்ளும் வகையில் ஒரு சன்னியாச செயல்முறை அடுத்த வருட வாக்கில் துவங்கப் போகிறோம். நீங்கள் எங்கிருந்தாலும், ஒரு சன்னியாசியாக இருக்கலாம். உங்களுக்குத் திருமணமாகியிருந்தாலும் நீங்கள் ஒரு சன்னியாசியாக இருக்கலாம், ஏனென்றால் எப்போதும் தேக்க நிலையில் இருக்க மாட்டேன் என்ற ஒரு உறுதிமொழியை அப்போது நீங்கள் எடுத்திருப்பீர்கள்.

ஒவ்வொரு கணமும், உங்கள் வாழ்வில் ஏதாவது புதிதாக ஒன்று நிகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும். ஏதாவது பழைய விஷயம் ஒன்று உதிர்ந்து கொண்டே இருக்க வேண்டும். பழைய ஒன்றை துறந்து, புதிய ஒன்று உங்களுக்குள் நிகழ வேண்டும்.

ஒவ்வொரு கணமும் இல்லாவிட்டாலும், குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது கட்டாயம் அது நிகழ வேண்டும். ஏனென்றால் குறிப்பிட்ட ஒரு ஏக்கத்துக்குள் உங்களை மூழ்கடித்துக் கொள்ளாவிட்டால், உங்கள் வாழ்வில் அருள் இல்லாமலே போய்விடும். உங்களுக்குள் எந்த ஏக்கமும் இல்லாவிட்டால், உங்களைச் சுற்றியிருக்கும் மிக அழகான விஷயங்கள் கூட உங்களுக்குள் நுழையாது.

மக்கள் ஒரு அருட்குடையின் கீழ் தொடர்ந்து வாழும் ஒரு வாய்ப்பினை வழங்குவதற்கு, இந்த சக்திநிலையில் மூழ்கி இருப்பதற்கு, நாம் 'க்ஷேத்திர சன்னியாசம்' என்னும் ஒரு வாய்ப்பினை உருவாக்க இருக்கிறோம். அதாவது அந்த சக்திவெளியை விட்டு எப்போதும் வெளியே செல்ல மாட்டேன் என்று நீங்கள் ஒரு உறுதிமொழி எடுக்க வேண்டும். வெவ்வேறு விதமான தீவிர நிலைகள் உள்ள, க்ஷேத்திர சன்னியாசத்தின் மூன்று பரிமாணங்களை, வரும் வருடத்தில் உருவாக்க இருக்கிறோம்.

அன்பும் அருளும்