இந்த வார சத்குரு ஸ்பாட்டில், ஆந்திரா முதல் அட்லான்டா வரையிலான தனது பயணங்கள் குறித்து எழுதியிருப்பதோடு, நேபாளத்தில் நடந்த நிலச்சரிவு குறித்தும் சத்குரு எழுதியுள்ளார்.

இவ்விரண்டு வாரங்களில் விவரிக்கக்கூட முடியாத அளவு நாம் நிறைய இடங்களைத் தொட்டுள்ளோம். போபால் செல்லும் வழியில் மூன்று மணி நேரம் விஜயவாடாவில் இருந்து, ஈஷா லீடர்ஷிப் அகாடமி மற்றும் சட்டப் பள்ளித் திட்டங்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நான்கு இடங்களைப் பார்வையிட்டோம். மனித வளத்துக்கான ஆந்திரா மந்திரியும், அவரைச் சார்ந்த அதிகாரிகளும் மிகுந்த ஆர்வத்துடன் உபசரித்தனர். ஆந்திர அரசு சுறுசுறுப்புடன் செயல்படும் விதம் அனைத்து மாநில நிர்வாகங்களுக்கும் ஒரு பாடமாகவும் ஊக்கமாகவும் திகழ்கிறது. இத்தனை வருடங்கள் பொதுவிஷயங்களில் நான் ஈடுபட்டதில், இதுபோல் வேறெங்கும் கண்டதில்லை. துரதிர்ஷ்டவசமாக, சில ஊடகங்களும், தடுப்பதால் பலன்பெறக்கூடிய சிலரும், பெரிய அளவில் இந்த மாநிலத்திற்கு நலம் தரக்கூடிய திட்டங்களை எதிர்க்கின்றனர். புதியதோர் நகரத்தையும் வளமான மாநிலத்தையும் உருவாக்கும் இம்மாநில முதலமைச்சரின் கனவில் பலர் கலந்துகொள்ளாமல், அரசியல் வட்டாரங்களில் நல்லபெயர் வாங்குவதில் மும்முரமாக இருப்பது வேதனையைத் தருகிறது.

மத்தியப்பிரதேச நிர்வாகமும் புது நம்பிக்கையை அளித்துள்ளது. முதலமைச்சரும் அவரது குழுவும் எளிமையாக, அர்ப்பணிப்பாக செயல்படுவது பாராட்டிற்குரியது. இந்த அரசியல் தலைவரின் பணிவு, எல்லா தலைவர்களும் முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டிய ஒன்று. நர்மதா நதிக்கரைக்கு ஒரு சிறிய யாத்திரை சென்றோம். இங்கு வசிப்பவர்கள் நர்மதா நதியை அன்னை தெய்வமாக மரியாதை செலுத்துவது நெஞ்சைத் தொடுகிறது. தண்ணீரை ஒரு வர்த்தகப் பொருளாகப் பார்க்காமல், நம் உயிரை உருவாக்கும் தெய்வீக திரவமாக இவர்கள் பார்க்கின்றனர்.

உஜ்ஜெயின் நகரத்தில் நிகழவிருக்கும் கும்பமேளாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பேசினேன். பொருளளவிலும் ஆன்மிக ரீதியாகவும் கும்பமேளா நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை பகிர்ந்திடவும், இது குறித்த விழிப்புணர்வை வளர்த்திடுவதும் முதல்வரின் நோக்கம். மஹா கும்பமேளாவின் சக்திவாய்ந்த சூழ்நிலை, அனைவரும் உணரவேண்டிய ஒன்று. தென்னிந்தியர்களும் வெளிநாட்டவரும் 12 வருடங்களுக்கு ஒருமுறை நிகழும் இந்த மஹா கும்பமேளா நிகழ்ச்சியில் கலந்துகொள்ள, ஈஷாவும் மத்தியப்பிரதேச நிர்வாகமும் கைகோர்க்க உள்ளது. காலம் காலமாக பாதுகாக்கப்பட்டு இன்று வரை வாழ்ந்துவந்துள்ள கும்பமேளாவின் அறிவியலையும் புராணப் பின்னணியையும் மீட்டெடுக்க விரும்புகிறேன். உஜ்ஜெயின் நகரம், "மஹா காலா"வின் வசிப்பிடம், ஆன்மீக சாதகர்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இடம்.

மும்பையில் சில முக்கியமான சந்திப்புக்களுக்குப் பிறகு இப்போது அமெரிக்காவில் இருக்கிறேன். முதல் இரண்டு நாட்கள், "ஈஷா இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்னர் சயன்சஸ்"-ல் இருந்தேன். அங்கு ஆதி யோகி ஆலயப்பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. சில சிக்கல்களைத் தவிர்த்து, செப்டம்பர் 23ஆம் தேதி நாம் ஆலயத்தை பிரதிஷ்டை செய்யப்போவது நிச்சயம். அமெரிக்காவில் இதுவரை நடந்தேறியுள்ள ஆன்மீகப் பணிகளில் இந்தப் பிரதிஷ்டை மிகவும் முக்கியமானதாக இருக்கப்போகிறது. இங்கு வேறு சில பிரதிஷ்டைகள் நாம் செய்திருக்கும் போதிலும், அனைத்திலும் இதுதான் மிக பிரம்மாண்டமானது.

Sign Up for Monthly Updates from Isha

Summarized updates from Isha's monthly Magazine on Isha and Sadhguru available right in your mailbox.

No Spam. Cancel Anytime.

கடந்த ஐந்து நாட்களில் நான் நான்கு வெவ்வேறு நகரங்களில் இருந்துள்ளேன். டெக்சஸின் ஹூஸ்டன் நகரில், மாலை வேளையில், பேலார் மருத்துவக் கல்லூரியின் டேவிட் ஈகிள்மேனுடன் நடந்த "இன் கான்வர்சேஷன்" நிகழ்ச்சிக்குப் பெருந்திரளாக மக்கள் கூடியிருந்தனர். டேவிட் ஈகிள்மேன் அவர்கள் பல சரித்திரம் படைக்கும் ஆராய்ச்சிகளை நரம்பியல் துரையில் செய்துள்ளார். அவர் ஒரு அற்புதமான, ஆனந்தமான மனிதர். அவர் பெற்றுள்ள டாக்டர் பட்டங்கள் அவரை பாதிக்காமல், அவர் குழந்தையின் ஆர்வத்துடனும் ஆச்சரியத்துடனும் இருந்தார். இது மிகவும் அரிதான ஒன்று. எனக்கு நிகரான உயிர்ப்புடன் பேசிடும் ஒருவரைக் கண்டதும் ஆன்மீகத்திற்குள் ஆழ்ந்திட மறந்து, கிசுகிசு போல லேசாக, விளையாட்டாக பேசிக்கொண்டோம். அதனை கூடியிருந்த 2500 மக்களும் வெகுவாக இரசித்தனர்.

பிறகு இரண்டு நாட்களில் பாம் பீச்சில் டவுக் ஸ்பூனருடன் ஒரு சுவாரஸ்யமான கால்ஃப் விளையாட்டில் ஈடுபட்டேன். டவுக் ஸ்பூனர் என்பவர் இங்கிலாந்து நாட்டின் பிரபலமான "ஸ்பூனரிஸம்" எனும் 'சொற்களை மாற்றி உச்சரித்து வேறுவிதமான அர்த்தம் தரவைக்கும்' கலையைக் கண்டறிந்த ஸ்பூனர் பரம்பரையைச் சேர்ந்தவர். குழந்தைப் பருவத்தில், ஆங்கில மொழியில் கற்றுத் தேர்ந்த நிபுணரான என் பெரிய மாமா மூலமாக, "ஸ்பூனரிஸம்" எனும் இந்த வார்த்தை விளையாட்டிற்கு நான் மிகவும் பரிட்சயமாகியிருந்தேன். இவற்றுடன் மறைந்த ராபர்ட் கென்னடி அவர்களின் மனைவி ஈத்தல் கென்னடி அவர்களுடன் ஒரு அற்புதமான மாலைப் பொழுது கழிந்தது. அவர் 87 வயதான ஒரு உற்சாகமான சுறுசுறுப்பான பெண்மணி, சமூக நோக்கத்திற்காக செயல்பட்டால், ஒருவரின் முதிய வயது அவருடைய உயிரோட்டத்தை அபகரித்துவிட முடியாது என்பதற்கு அவர் ஓர் எடுத்துக்காட்டு.

ஐந்து வருடங்களுக்குப் பிறகு, மதியம் வெப்பம் அதிகரிக்கும் வேளையில் டாம்ப்பா நகரில் பொதுமக்களுக்கு ஒரு சொற்பொழிவு.

இப்போது பைப்பர் மலிபு எனும் வெட்டுக்கிளியைப் போன்ற ஒரு சிறிய விமானத்தில், தெளிந்த வானத்தில், மேற்கு கடற்கரைப் பகுதி நோக்கிப் பறந்துகொண்டு இருக்கிறேன். மரத்தான் விமானத்தில் 11-மணி நேரப் பயணம். மணிக்கு ஐம்பது கடல்மைல் போகும் வேகத்தில் அடிக்கும் எதிர்காற்றையும் தாண்டி, தன் பறக்கும் திறனைக் காட்டிடும் உறுதியுடன் இந்த சிறிய, மெல்லிய இயந்திரம் பறந்துகொண்டு இருக்கிறது. மனித உயிர் மெல்லியதாய் இருப்பினும், மனிதனின் படைப்பாற்றலானது, அவனை கட்டுப்படுத்தவேண்டிய அதே விதிகளைத் தாண்டி நழுவிச்செல்ல இடம் கொடுக்கிறது. மேற்கு கடற்கரைப்பகுதி நோக்கி சென்றுகொண்டு இருக்கிறேன். வானூர்தி சார்ந்த வட்டாரங்களில் எப்போதும் "வெஸ்ட் இஸ் பெஸ்ட்", அதாவது "மேற்கே சிறந்தது" என்பார்கள்.

நேபாளத்திற்கு நம் இதயங்களில் கடந்த 12 ஆண்டுகளாகவே ஒரு சிறப்பிடம் உள்ளது. இப்போது நிகழ்ந்திருக்கும் பேரிழப்பு மிகவும் வேதனையானது. உயிர்களை இழந்திருப்பது மிகவும் வருந்தத்தக்கது. தங்கள் தைரியத்திற்கும், எதையும் தாங்கும் ஆற்றலுக்கும் பெயர்போன நேபாள மக்கள் இதிலிருந்து மீண்டு வந்து செழிப்பார்கள் என்று நம்புகிறேன். உலகப் பாரம்பரியத் தளங்களில் ஒன்றாகவும், தனித்துவம் வாய்ந்ததாகவும் திகழும் பக்தபூர் நகரத்திற்கு ஏற்பட்டிருக்கும் சேதம், உண்மையில் ஈடுசெய்ய முடியாதது. நேபாளின் தனித்துவம் வாய்ந்த படைப்பான இந்த அற்புத இடத்தை மீட்டெடுக்கும் பணியில் சர்வதேச நிறுவனங்கள் பங்கேற்பார்கள் என்று நம்புகிறேன். இந்தியாவின் பிரதம மந்திரி நேபாளத்தின் தேவைகளுக்குத் துரிதமாகச் செயல்பட்டிருப்பது அற்புதமானது. சீனர்களும் அதேபோல் செயல்பட்டுள்ளனர். நேபாள் நாட்டிற்கும் மக்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்களும் ஆசிகளும்...

Love & Grace