இந்த வார ஸ்பாட்டில், டென்னஸ்ஸியில் இருக்கும் 'ஈஷா இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்னர் ஸயன்ஸஸ்' இல் சமீபத்தில் நடந்த மனதுருக்கும் பாவஸ்பந்தனா நிகழ்ச்சி, பொருளாதாரத்தின் அடிக்கோட்டில் வளரும் குழந்தைகளின் நல்வாழ்விற்கான ஆதாரம் மற்றும் இந்தியாவிலும், அமெரிக்காவிலும் அடுத்து வரும் மாதங்களில் ஈஷாவின் செயல்திட்டங்கள் என பலவற்றைப் பகிர்கிறார் சத்குரு.

இதுவரை எண்ணற்ற பாவஸ்பந்தனா வகுப்புகளை எடுத்திருக்கிறேன். என்றாலும், ஒவ்வொரு முறையும் இது அற்புதமான அனுபவமாகவே இருக்கிறது. கவலை, எச்சரிக்கையின் சுருக்கங்களில் இருந்து விடுபட்டு, அன்பாலும், ஆனந்தத்தாலும் பெருக்கெடுக்கும் கண்ணீரில் தோய்ந்த, மலர்ந்த முகங்களைக் காண்பது கண்கொள்ளாக் காட்சி. வெவ்வேறு சூழ்நிலைகளில், உலகின் வெவ்வேறு நாடுகளில் பிறந்து வளர்ந்த 700 க்கும் மேற்பட்ட மனிதர்கள், எவ்வித பாகுபாடுமின்றி, எவ்வித இடைவெளிகளும் இன்றி உணர்வளவில் ஒன்றிக் கலந்து, ஒருமைநிலையின் பெருக்கெடுக்கும் வெள்ளத்தை உருவாக்குவது பலருக்கும் வாழ்வை மாற்றியமைக்கும் அனுபவமாகிறது. இந்த நிலை எனக்கு மிகப் பரிச்சயமானதுதான் என்றாலும், ஒரு சூழ்நிலையாக, 'பாவ ஸ்பந்தனா'வை இவ்வுலகிற்கு அப்பாற்பட்ட ஒன்றாகவே நான் உணர்கிறேன்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பாவஸ்பந்தனா வகுப்பு நிறைவடைந்ததும், இரவில் பைரவி யந்திரா வைபவம் ஆரம்பமானது. இது விடிகாலை வரை தொடர்ந்தது. தேவி பைரவியின் அருளில் தொடர்ந்து திளைப்பவர்களின் வாழ்க்கை அனுபவங்கள், விவரிப்பதற்கு அப்பாற்பட்டு இருக்கிறது. இந்தியாவில் இவ்வருடம் 7 மாநிலங்களில் 25,000 பள்ளிக் கூடங்களில் பயிலும் மாணவர்களுக்கு யோகா கற்பிக்கும் திட்டம் நம் எதிர்பார்ப்புகளை மிஞ்சி விரிந்து கொண்டிருக்கிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் நம் நாட்டில் 1,700 குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது மிகமிக வேதனையான விஷயம். 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்றால், மிக அடிப்படையான ஏதோ ஒன்றை நாம் தவறாக செய்து கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம். இதைப் புறக்கணிப்பது, நம் சமூக அமைப்பின் அடித்தளங்களையே ஆட்டுவிக்கும். இந்நிலையை மாற்றி சீரமைக்க நம் மாநில அரசுக்கள் மிகுந்த ஆர்வத்தோடும் உறுதியோடும் ஒத்துழைக்க சம்மதித்துள்ளனர்.

இந்த வருடத்தின் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, 'நல்வாழ்விற்கான தொழில்நுட்பத்தை' குழந்தைகளுக்கு வழங்குவதே ஈஷாவின் நோக்கம். நம் நாடு முழுவதிலும் 1.5 கோடி குழந்தைகளுக்கு இதை வழங்க திட்டமிட்டுள்ளோம். நாளைய தலைமுறையின் நல்வாழ்வை உறுதிசெய்யும் இந்த அதிமுக்கியமான பணியில் எங்களோடு கைகோர்த்து செயல்பட எல்லோரையும் வரவேற்கிறோம். நம்மைவிட பலவிதங்களிலும் மேம்பட்ட ஒரு தலைமுறையை இவ்வுலகில் விட்டுச்செல்லும் பொறுப்பை நாம் தட்டிக் கழிக்கலாகாது.

அடுத்த இரண்டு மாதங்களில் இத்திட்டத்தை நிறைவேற்ற உங்கள் அனைவரின் ஆதரவையும் நான் வேண்டுகிறேன். பொருளாதாரத்தின் அடிமட்டத்தில் வாழும் சமூகங்களில் பிறந்த குழந்தைகள்தான் இன்று பெரும்பான்மையாக அரசாங்கப் பள்ளிகளில் பயில்கிறார்கள். இத்திட்டத்தின் மூலம் அவர்கள்தான் அதிகளவில் பயனடைய உள்ளார்கள்.

இன்று நான் கலிஃபோர்னியா நகரிற்கு கிளம்பிக் கொண்டிருக்கிறேன். அங்கு அடுத்த ஒரு வாரத்திற்கு பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறேன். அங்கிருந்து நேராக உஜ்ஜெயின் கும்பமேளாவிற்கு செல்கிறேன். அது முற்றிலும் வேறுவிதமான, பழமை தோய்ந்த ஒரு உலகம். இங்கு இந்த வாரம் முழுவதும் அமெரிக்காவின் சிறந்த பல்கலைக் கழகங்கள் உட்பட பல இடங்களில் சொற்பொழிவு ஆற்றிவிட்டு, கும்பமேளாவில் வந்து பேசுவது மிகவும் வித்தியாசமான அனுபவமாய் இருக்கப் போவது உறுதி!!!

Love & Grace