இந்த வார சத்குரு ஸ்பாட்டில், கைலாயம் நோக்கிய பயணத்தில் எதிர்கொண்ட சோதனைகளையும் வேதனைகளையும், அதைத்தாண்டி அதுதந்த அற்புத அனுபவத்தையும், யாத்திரையை முடித்த கையோடு காத்மாண்டுவில் இருந்து நம்முடன் பகிர்ந்துள்ளார் சத்குரு...

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இந்த முறை சிமிகோட் முதல் ஹில்சா வரையிலான 70கி.மி மலையேற்றத்தை இதமான வானிலை ஆசீர்வதித்தது. சென்ற வருடமோ கொட்டும் மழையால் நிலம் சேறும் சகதியுமாகி பாதை வழுக்கலாகி, இரவுகள் மிகவும் குளிராக இருந்தது. இது கடினமான மலையேற்றம், இருந்தாலும் மிகுந்த உற்சாகத்தோடு இக்குழுவினர் ஒன்றாக ஒட்டிக்கொண்டார்கள். சன்மானமாக கடைசி சில நாட்களின் மிகக்கடினமான, செங்குத்தான ஏற்றத்திலிருந்து தப்பிக்கவும் செய்தார்கள் - இப்பகுதிகளில் நடந்துகொண்டிருக்கும் சாலை வேலைப்பாடுகளுக்குதான் நன்றி சொல்லவேண்டும். எங்கள் கால்களை வருத்திய இப்புராதன நிலப்பரப்பு, எங்கள் உள்ளம் குளிர நாங்கள் அனுபவித்துணர்ந்த இந்நிலப்பரப்பு, அவசரத்தில் ஓடும் ஆறுகளின் ஆரவாரம் ஓயாமல் ஒலித்திருக்கும் இப்பள்ளத்தாக்கு, இனி வாகன எஞ்ஜின் சத்தங்களின் சீற்றத்தாலும் நிரம்பியிருக்கும். வலியும் இன்பமும் மிக தாராளமாக, சரிசமமாகக் கலந்திருக்கும் கதையிது - ஒருவரை வாழ்வின் உயிர்ப்பிலும் சாவின் வேதனையிலும் திளைக்கவைக்கும் மிக அரிய அதிசயக் கலவையது. அல்லது நான் முன்னரே சொன்னதுபோல “இதயத்திற்கு சொர்க்கம்,கால்களுக்கு நரகம்."

ஹில்சாவை நோக்கிய பயணமோ, இந்த பூமியிலேயே மிக ஆபத்தான பயணங்களில் ஒன்று.அதுவும் நான் ஓட்டிய சீன ஜீப், வெறும் எண்ணெயும் தூசியும் அதை சேர்த்துப் பிடித்துவைத்திருந்தது போலவே இருந்தது. பிற வாகனங்கள் விட்டுச்சென்று இறுகியிருந்த தடத்திற்கும் பாறைகளுக்கும் ஊடே நான் வண்டியை ஓட்டிச்செல்ல, எப்படியோ என் கைகளிலிருந்து துள்ளிக்குதித்து தப்பித்துவிட ஸ்டியரிங்வீல் முடிந்தவரை முயன்றுகொண்டிருந்தது. சில ஆயிரம் அடி ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்துவிடாமல் அக்குறுகிய பாதையில் வாகனத்தை வைத்திருக்க, உண்மையில் என் பலம் முழுவதையும் அதில் போட்டு, நான் ஸ்டையரிங் வீலோடு மல்லுக்கட்டிக் கொண்டிருந்தேன். முதல் கியரில், நான் பிரேக் பெடல் மீது ஏறி நிற்க வேண்டியிருந்தது - வண்டியை நிறுத்துவதற்கல்ல, வெறும் வேகத்தைக் குறைத்திட! வியக்கத்தக்க இந்தக் கற்குவியலின் மேலும் கீழும் நாங்கள் குதித்துக்குதித்து பந்தைப் போலப் பட்டுத் தெறித்து செல்லச்செல்ல, என்னோடு பின்னால் இருந்த மூன்று பயணிகளில் ஒருவர் சுற்றியிருந்த இயற்கைக் காட்சிகளையும் என் வாகனம் ஓட்டும் திறனையும் கண்டு பிரமிப்பில் ஆழ்ந்திருந்தார், இன்னொருவர் மௌனப் பிரார்த்தனையில் உறைந்திருந்தார், இன்னொருவர் சந்தோஷமாக உறங்கிக்கொண்டிருந்தார் - இதுவல்லவா விசுவாசத்தின் உச்சம்!

சீன நாள்காட்டியில் இது குதிரை வருடம் - இது கழுதைகளை அவமரியாதை செய்வதற்கல்ல - இது கௌதம புத்தர் பிறந்த வருடமாகக் கருதப்படுகிறது. அதிகப்படியான யாத்திரிகர்கள் வரவை எதிர்பார்த்து இவர்களின் நிர்வாகம் எல்லாவற்றையும் இறுக்கப்படுத்திவிட்டது, இது பயணத்தை ஒருங்கிணைப்பதற்கு மிகப்பெரிய சவாலாக மாறிவிட்டது. நம் குழுக்கள் பல்வேறு இடங்களில் வீசா மற்றும் சாலைப்பயண அனுமதி பிரச்சனைகளில் சிக்கிக்கொண்டது. சுமுகமான கடவுக்குத் தேவையானது பலமாதங்கள் முன்னரே செய்தாகிவிட்டது, ஆனால் கடைசி நிமிடத்தில் எல்லாம் கேள்விக்கு உட்படுத்தப்பட்டது. இது அனைவருக்கும் மிகுந்த சிரமத்தையும் வருத்தத்தையும் கொடுத்தது. ஹில்சாவிற்கு நடந்து சென்ற குழுவில் இந்திய கடவுச்சீட்டு கொண்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். வேறு 8 தேசங்களைச் சேர்ந்த 18 பேர் ஹெலிகாப்டரில் வேறொரு நுழைவிடம் வழியாக வரவேண்டியிருந்தது, இந்த செயல்முறைக்கே 6 நாட்களுக்கு மேல் பிடித்துவிட்டது. மானசரோவருக்கு வராமால் தவறவிட்டுவிடும் அளவு மிகுந்த தாமதமாகிவிட்டது.
கைலாயம் அத்துணை நிறைவான அனுபவத்தைத் தருவதால், இந்த சோதனைகளும் இன்னல்களும் மறந்துபோகிறது, எஞ்சியுள்ளதெல்லாம் அதன் பிரம்மாண்டமான பிம்பமும் சக்திமிக்க அதிர்வுகளும் மட்டுமே.
இங்கே நான் காத்மாண்டுவில் ஒரு ஓட்டல் அறையின் கதகதப்பில் இப்போது... ஒருசில மணிநேர தூரத்தில் கோவைக்கான விமானம்...

அனைவரும் கைலாயத்தின் பிரம்மாண்டத்தை உணர்வீர்களாக!

Love & Grace