என்னுடைய பதினைந்தாவது வயது முதல், நான் கால்பந்து உலகக் கோப்பை விளையாட்டைப் பார்க்க விரும்பியிருக்கிறேன். அப்போதிலிருந்தே, உலகக் கோப்பை விளையாட்டுகளில் என்ன நடக்கிறது என்று ஏதோவொரு விதத்தில் கவனித்து வந்திருக்கிறேன். சென்ற முறை பிரேசில் நாட்டில் நடந்தபோது கைகளில் டிக்கட் இருந்தது, ஆனால் போகவில்லை. ஏனென்றால் அரையிறுதியோ இறுதி விளையாட்டோ குருபௌர்ணமி தினத்தன்று இருந்தது என நினைக்கிறேன். இந்த முறை சூழ்நிலைகள் அனைத்தும் சரியாக அமைந்துவிட்டது. தேவையான ஏற்பாடுகளைச் செய்தார்கள், ரஷ்யாவில் இருக்கும் நம் நண்பர்கள் டிக்கட் மற்றும் பிற ஏற்பாடுகள் அனைத்தையும் கவனித்துக் கொள்கிறார்கள்.

இப்போது நான் இங்கு ரஷ்யாவில். நேற்று, முதலாவது அரையிறுதிப் போட்டியைப் பார்த்தேன். நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக இதைப் பார்க்கவேண்டும் என்று நினைத்திருக்கிறேன், இப்போது இங்கு இருக்கிறேன், நீண்டகாலம் எடுத்துக்கொண்டேன். பிரான்ஸ் நாட்டிற்கும் பெல்ஜியம் நாட்டிற்கும் இடையிலான விளையாட்டில், இந்த இரண்டு டீமும் அரையிறுதிக்கு வந்துள்ள மிக பலமான டீம்கள் என்றே நினைக்கிறேன். விளையாடும் முறையில் ஒன்றிலிருந்து மற்றொன்று மிகவும் மாறுபட்டது. அதில் பிரான்ஸ் அந்த ஒரு கோல் அடித்ததால் அவர்கள் இறுதிக்குச் செல்கிறார்கள். இன்று இங்கிலாந்திற்கும் குரோஷியாவிற்கும் இடையே நடக்கும் இரண்டாவது போட்டிக்கு செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரத்திலிருந்து மீண்டும் மோஸ்கோ செல்கிறோம். இங்கிலாந்தும் குரோஷியாவும் அரையிறுதிக்கு வருவார்கள் என்று பெரும்பாலும் எவரும் எதிர்பாத்திருக்க மாட்டார்கள். ரஷ்ய ரவுலட் சூதாட்டம் போன்ற நிலையிது! (சிரிக்கிறார்)

பெரிய பிரபலங்களான பிரேசில், அர்ஜென்டினா, ஜெர்மனி, ஸ்பெயின் டீம்கள் வெளியேறிவிட்டார்கள். இதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். உங்கள் புகழால் நீங்கள் எதையும் ஜெயிக்கமாட்டீர்கள். பேரும் புகழும் ஜெயிக்காது. புகழோ, கடந்தகால சாதனைகளோ, பழைய சரித்திரமோ ஒரு விளையாட்டை ஜெயிக்க உதவாது. அவற்றால் இப்போது எதையும் நிகழ்த்தமுடியாது. இப்போது எவ்வளவு கூர்மையாக செயல்படுகிறோம் என்பதுதான் முக்கியம். பிரான்ஸ் கட்டாயமாக வேகத்தையும் திறமையையும் விளையாட்டு உத்தியையும் வெளிப்படுத்தியுள்ளது. அதற்கு மற்றவர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை.

அற்புதமான வீரர்கள் மெஸ்சி, ரொனால்டோ, இளம் நெய்மர், சலா, அனைவரும் ஓரங்கட்டப்பட்டுவிட்டனர். இவர்கள் அனைவரும் கிளப் விளையாட்டு வீரர்கள், அவர்கள் விளையாடும் டீம்களில் அவர்களுக்கு அபாரமான ஆதரவுண்டு. அதுவும் கிளப் விளையாட்டுகளில் மிகவும் புரஃபெஷனலான அணுகுமுறை இருக்கும். தேசிய டீம்கள் அந்த அளவு புரஃபெஷனல் இல்லை, அவை அதிக உணர்ச்சிப்பூர்வமானவை. அதனால் இப்படிப்பட்டவர்களுடன் விளையாடும்போது காயப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். நட்சத்திர வீரர்கள் பின்தங்கியுள்ளதற்கு காயப்படுவது குறித்த ஐயமும் காரணம் என்று நினைக்கிறேன். ஏனென்றால் அவர்கள் கால்களுக்கு லட்சக்கணக்கான டாலர்கள் மதிப்பு உண்டு.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மொத்தத்தில் உலகக் கோப்பை அரையிறுதியின் சூழ்நிலை, மின்சாரம் பாய்வது போன்ற உற்சாகத்துடன் இருக்கிறது. ரஷ்ய தேசத்தை நாம் பாராட்ட வேண்டும். அற்புதமாக ஏற்பாடுகள் செய்துள்ளார்கள், நகரம் முழுவதும் பிற தேசத்திலிருந்து வந்துள்ள விருந்தினர்களை பெரிய புன்னகையுடன் வழிநடத்த ஆயிரக்கணக்கான தன்னார்வலர்களுக்கு பயிற்சியளித்துளார்கள், எல்லாம் மிக அழகாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது, சூழ்நிலை முற்றிலுமாக கட்டுக்குள் இருக்கிறது. அதோடு அனைவரும் விளையாட்டைக் கண்டு ரசிக்க ஏதுவாக, அதிரடியாக வன்முறையில் ஈடுபடக்கூடிய விளையாட்டு ரசிகர்களும் கண்காணிக்கப்படுகிறார்கள். ரஷ்யாவிற்கு இது ஒரு அபாரமான வெற்றி. இந்த அளவு ஒருங்கிணைத்து, திறமைகரமாக இந்த விளையாட்டுகளை நடத்திவருவது அற்புதம்! இங்கிலாந்தும் குரோஷியாவும் இறுதிக்குள் நுழைவதற்கான போட்டியில் மோதுவதைக் காண, இன்று மோஸ்கோவிற்கு பயணமாகிறேன்.

இதை நான் எப்படிச் சொல்ல? உலகம் முழுவதும் அமர்ந்து உலகக் கோப்பை கால்பந்து விளையாட்டைக் காண்பதற்குக் காரணம், அதிலுள்ள ஈடுபாட்டின் தீவிரம்! சிலர் பந்தை காலால் அங்குமிங்கும் உதைத்து விளையாடுகிறார்கள், ஆனால் மிக துல்லியமாகவும் மிகுந்த ஈடுபாட்டுடனும், அவர்கள் வாழ்க்கையில் செய்யப்போகும் கடைசி செயல் போல விளையாடுகிறார்கள். அந்த அளவு ஈடுபாடு! அதனால் உலகில் பாதிபேர் ஆர்வத்துடன் பார்க்கிறார்கள்.

இந்தியா இதில் கவனம் செலுத்தினால்... ஐஸ்லாந்து போன்ற நாடு உலக கோப்பையில் கலந்துகொள்கிறது என்றால், இந்தியா கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும். கடர் தேசத்தில் நடக்கவிருக்கும் அடுத்த உலக கோப்பையில் கலந்துகொள்ள முடியாவிட்டாலும், அதற்கடுத்து 2026ல் அமேரிக்காவில் நடக்கவிருக்கும் விளையாட்டில் நாம் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும். 32 டீம்களாக இருப்பதிலிருந்து 48 டீம்களாக அதிகரிக்கவும் போகிறார்கள். அதனால் இந்தியா பங்குபெற நல்ல வாய்ப்பு இருக்கிறது. அரசாங்கத்திடமும் விளையாட்டு அமைச்சகத்திடமும் இதை நான் கேட்டுக்கொள்கிறேன். 130 கோடி மக்கள்தொகை கொண்ட ஒரு தேசம் முழுவதிலுமிருந்து திறமை வளர்ப்பதற்கு பதிலாக, பல லட்சங்கள் மக்கள்தொகை கொண்ட ஒரே ஒரு நகரத்தில் நாம் கவனம் செலுத்தினாலும்கூட, மிக சுலபமாக, அவர்களை சரியான வயதில் தேர்ந்தெடுப்பது, சரியான பயிற்சியாளர் நியமிப்பது, விளையாட்டுகளுக்கு வெளிப்படுத்துவது ஆகியவை மூலம் நாமும் உலக கோப்பைக்கு செல்லும் டீமை உருவாக்கமுடியும்.

உலகக் கோப்பையில் ஜெயிப்பது வெகுதூரமாக இருக்கலாம். அந்த 48 நாடுகளில் ஒன்றாக, லீக் விளையாட்டுகளிலேனும் விளையாடும் விதமாக நம்மால் உலகக் கோப்பையில் நுழைய வாய்ப்பிருக்கிறது. 100 கோடிக்கும் மேலான மக்கள் இருக்கையில், நம்மால் இதை செய்யமுடியும். இளைஞர்கள் நிறைந்த தேசமாக, நாம் கட்டாயம் 2026 உலக கோப்பையில் இடம்பெற வேண்டும். நிச்சயம் இந்தியா அதில் கலந்துகொள்ளும் என எதிர்பார்க்கிறேன்.

இப்போது மோஸ்கோ செல்வதற்கான நேரம்! ஒன்றரை மணிநேர விமானப்பயணம், பிறகு மாலையில் விளையாட்டு. வெகு நீண்டகாலத்திற்குப் பிறகு இப்படி ஒன்றில் ஈடுபட எனக்கு நான்கைந்து நாட்கள் கிடைத்திருக்கிறது. இடையே ஒருசில சந்திப்புகளும் நேர்காணல்களும் இருக்கத்தான் செய்கின்றன, ஆனால் அது பரவாயில்லை. இந்த நான்கு நாட்களின் பெரும்பகுதி இந்த விளையாட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இங்கு ரஷ்யாவில் இருப்பது அற்புதமான அனுபவம்! வானிலை அற்புதமாக இருக்கிறது, சூழ்நிலை அற்புதமாக இருக்கிறது, இந்த தேசத்தில் பிரமாதமான விருந்தோம்பல். ரஷ்ய அரசுக்கும் மக்களுக்கும் பாராட்டுக்கள்! விருந்தினர்களை வரவேற்கும் பெருந்தன்மையும் உற்சாகமும், அவர்கள் இங்கு செய்யும் யாவும் அற்புதம்!

அன்பும் அருளும்,

ரஷ்யாவில் உலகக் கோப்பையை சத்குரு பார்க்கும் புகைப்படங்களைக் காணவும், இதை ஆங்கிலத்தில் சத்குரு பேசியிருப்பதை கேட்கவும் இந்த வீடியோவைக் காணுங்கள்!