இப்பிறவியில் முக்தி கிடைக்குமா?

இந்தவார சத்குரு ஸ்பாட்டில், மொழியால் விவரிக்கமுடியா ஒன்றை விவரிக்கும் முயற்சியில் மொழியை அதன் விளிம்பிற்கே எடுத்துச்செல்கிறார் சத்குரு. "நான் முக்தி அடைவேனா?" எனும் கேள்விக்கு, முக்தி என்பது எவரும் அடைவதல்ல என்று விளக்குவதுடன், கேள்விக்கான விடையையும் சூசகமாகச் சொல்கிறார்.
 
இப்பிறவியில் முக்தி கிடைக்குமா?, ippiraviyil mukthi kidaikkuma?
 
 
 

இந்தவார சத்குரு ஸ்பாட்டில், மொழியால் விவரிக்கமுடியா ஒன்றை விவரிக்கும் முயற்சியில் மொழியை அதன் விளிம்பிற்கே எடுத்துச்செல்கிறார் சத்குரு. "நான் முக்தி அடைவேனா?" எனும் கேள்விக்கு, முக்தி என்பது எவரும் அடைவதல்ல என்று விளக்குவதுடன், கேள்விக்கான விடையையும் சூசகமாகச் சொல்கிறார்.

மக்களுக்குள் தீயாய் எரியும் ஒரு கேள்வி, மீண்டும் மீண்டும் என்னிடம் வரும் ஒரு கேள்வி, "எனக்கு இப்பிறவியில் முக்தி கிடைக்குமா?" முதலில் முக்தி என்றால் என்னவென்று நாம் புரிந்துகொள்வோம். பிறப்பும் இறப்பும் ஒரே பரிமாணத்தின் இரண்டு பக்கங்கள். வாழ்க்கைக்கு பல்வேறு பரிமாணங்கள் உள்ளன - மழலைப்பருவம், குழந்தைப்பருவம், வாலிபம், இளமைப்பருவம், முதுமைப்பருவம். ஒவ்வொரு பரிமாணத்திற்கும் வரையறைகள் உள்ளன, அதனை விவரிக்கவும், வர்ணிக்கவும், கிரகிக்கவும், புரிந்துகொள்ளவும் முடியும். முக்தி என்று நாம் சொல்வது பரிமாணமற்றது - அதனை விவரிக்கவோ, வர்ணிக்கவோ, புரிந்துகொள்ளவோ முடியாது. "நான் முக்தி அடைவேனா?" என்றால், அடையமாட்டீர்கள்! எவரும் முக்தியை அடையமாட்டார்கள். நீங்கள் எந்தவொரு பரிமாணமாகவும் இருப்பது நின்றுபோகும்போது - பொருள்தன்மையோ, ஆத்மாவோ, இதுவோ, அதுவோ இல்லாது, எதுவுமில்லாது போகும்போது - பரிமாணமற்றுப் போகும்போது, அதுதான் முக்தி.

பரிமாணம் என்றால் எல்லை இருக்கிறது. முக்தி என்றால் எல்லையில்லை, பிணைப்பில்லை. இவையனைத்தும் எதிர்மறை சொல்லாடல், ஆனால் முக்தி என்பது மிகவும் நேர்மறையான ஒரு சாத்தியம். முக்தி என்றால் இல்லாதது. சிவா என்றால் இல்லாதது - எது இல்லையோ அது. முக்தி என்றால் ஒன்றுமில்லாததாக ஆகிவிடுவது. சிவா என்பதை "அவன்" அல்லது "அவள்" என்று கூறுவதும்கூட தவறுதான். ஏனென்றால் பாலினம் என்பது ஒரு பரிமாணம். சிவா என்றால் பரிமாணமற்ற இல்லாநிலை. இல்லாநிலை என்றால், அது இல்லவேயில்லை என்று கிடையாது. இப்போது எதை எடுத்துக்கொண்டாலும், அதை நீங்கள் ஒரு குறிப்பிட்ட பரிமாணமாகத்தான் உங்கள் அனுபவத்தில் உணர்கிறீர்கள் - இது அல்லது அதுவாக உணர்கிறீர்கள். பரிமாணமற்றது என்றால் இதுவுமில்லை அதுவுமில்லை. இதுவுமில்லை அதுவுமில்லை என்றால் மூன்றாம் பாலினமல்ல - பாலினத்திற்கு அப்பாற்பட்டது. முக்தியை புரிந்துகொள்ள வழியேயில்லை - அதுவாகவே மாறுவதுதான் ஒரே வழி. ஆனால் அதுவாக ஆக விழையாதீர்கள். உங்கள் அனுபவத்தில், கிரகிப்பில், புரிதலில் இல்லாத ஒன்றாக ஆவதற்கு நீங்கள் விரும்பமுடியாது.

நீங்கள் செய்யக்கூடியது ஒன்றே ஒன்றுதான், உங்களை பிணைத்திருப்பது எதுவாக இருந்தாலும் அதை துண்டித்துக்கொண்டே வருவது. உங்களை பிணைத்திருக்கும் எல்லாவற்றையும் துண்டித்துவிட்டால் - வாழ்வோ சாவோ, இதுவோ அதுவோ, நன்மையோ தீமையோ, சொர்க்கமோ நரகமோ - எதுவும் உங்களை பிணைக்காவிட்டால் அதுதான் முக்தி. முக்தியை தேடாதீர்கள் - எல்லாவித பிணைப்புகளிலிருந்தும் விடுபடுவது எப்படி என்று பாருங்கள்.

வானத்தில் பறக்க விரும்பினால், வானத்தைப் பற்றி நீங்கள் அதிகம் தெரிந்திருக்கத் தேவையில்லை - தரையில் உங்களைப் பிடித்து வைத்திருப்பது என்னவென்று நீங்கள் அறிந்தால் போதும். புவியீர்ப்பு விசையின் புரிதலே உங்களை பறக்க அனுமதிக்கிறது, வானம் குறித்த புரிதல் அல்ல. பறக்க வழிசெய்வது வானத்தை எட்டிப்பிடிப்பது எப்படி என்று பார்ப்பதல்ல, புவியீர்ப்பு விசையை எப்படி வெல்வது என்று பார்ப்பதே. முக்திக்காக ஆசைப்படாதீர்கள், ஆசைப்பட்டால் கற்பனைகளில் தொலைந்துபோவீர்கள்.

மனம் எத்தகையது என்றால், அதனால் தொடர்ந்து "எனக்குத் தெரியாது" என்ற நிலையில் இருக்கமுடியாது. ஒன்று, அது தெரிந்துகொள்ள வேண்டும், அல்லது அதற்கு தெரியாதது பற்றி அது அனுமானித்துக்கொள்ளும். முக்தியை உங்கள் மனதில் ஒரு பரிமாணமாக வைத்துக்கொண்டால், அது தேவையில்லாமல் உங்களை அலைக்கழிக்கும். உங்களை பிணைப்பவை என்னென்ன என்று பார்த்து ஒவ்வொன்றாகத் துண்டித்து வாருங்கள். ஒருநாள் துண்டிப்பதற்கு வேறெதுவும் இல்லாமல் இருப்பதை கவனிப்பீர்கள், அப்போது என்ன நடக்கவேண்டுமோ அது நடக்கும். அதற்காக ஆசைப்படவேண்டிய அவசியமில்லை, முக்திக்கு ஆசைப்பட்டால் கற்பனைகள் அலைபாயும். கற்பனைகள் அனைத்தும் பழைய ஞாபகங்களின் மிகைப்படுத்தலால் வருபவை, அது நல்லதல்ல, ஏனெனில் கடந்தகாலத்திற்கு ஒப்பனைசெய்து எதிர்காலத்திற்குள் கொண்டுவருவீர்கள். அது வேறு வடிவத்தில் இருந்தாலும், வேறு வண்ணத்தில் இருந்தாலும், உங்கள் கற்பனைக்கு மூலப்பொருள் பழைய ஞாபகங்களிலிருந்தே வருகிறது, ஞாபகங்களோ கடந்தகாலத்தைச் சேர்ந்தவை.

கற்பனை என்பது கடந்தகாலத்தைப் புதுப்பிப்பது. கடந்தகாலத்தை பல்வேறு வடிவங்களாக மாற்றி வடிவமைத்து, அதைக் கண்டு பூரிப்படைகிறீர்கள். நம் கற்பனையில் முற்றிலும் புதிதாக எதுவும் நடக்கமுடியாது - கற்பனை என்பது கடந்தகாலத்தை வெவ்வேறு விதங்களாக மாற்றி அலங்கரித்துக் காட்டுகிறது - எவ்வளவு விதங்கள் என்றால், ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் புதிது போலத் தெரிகிறது.

நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது, மூன்று முகக்கண்ணாடித் துண்டுகளையும் பல வண்ணங்களிலுள்ள உடைந்த கண்ணாடி வளையல் துண்டுகளையும் கொண்டு நாங்களே கலைடோஸ்கோப்பு உருவாக்குவோம். அது காட்டும் வடிவங்களை நாட்கணக்கில் பார்த்துக்கொண்டு இருப்போம். ஒவ்வொரு முறையும் புதியதொரு வடிவமும் புதியதொரு சாத்தியமும் தெரியும், ஆனால் அதே பழைய வளையல் துண்டுகள் தம்மை பல விதங்களாக நிறுத்திக்கொண்டு, உங்கள் குழந்தை மனதை பூரிப்படையச் செய்கிறது. வாழ்க்கையிலும் அதுவே நடக்கிறது - வாழ்க்கையும் ஒரு கலைடோஸ்கோப்புதான்.

எப்போதுமே உங்களுக்கு நீங்களே கலைடோஸ்கோப்புகள் உருவாக்கிக் கொள்கிறீர்கள். பொழுதுபோக்கிற்கு அது பரவாயில்லை, வாழ்க்கையின் உண்மைத் தன்மையை உணர அது உதவாது. இல்லாநிலை என்றால், இதுவாகவும் அதுவாகவும் இல்லாத ஒன்றாக மாறுவது. மொழி என்பது இவ்வளவு தூரம் மட்டுமே செல்லமுடியும். மொழி என்பது மனதின் உருவாக்கம் என்பதால், ஒரு கட்டத்திற்கு மேல் அதைக்கொண்டு மனதைக் கடந்த ஒன்றை விவரிக்க இயலாது. அதனால் நம் கேள்விக்குத் திரும்பி வருவோம், "இப்பிறவியில் நான் அடைவேனா?" தன்னை உணர்தல் என்பது ஒரு சாதனையல்ல, ஜெயிக்க வேண்டிய பந்தயமும் அல்ல, அடைதலும் அல்ல. தன்னை உணர்தல் என்றால் ஏற்கனவே இருப்பதை உணர்வது.

அது தன்னை அடைவதல்ல, தன்னை ஜெயிப்பதுமல்ல - அது தன்னை உணர்தல். எதையும் நீங்கள் கண்டுபிடிக்கவில்லை, எதையும் அடையவில்லை, மேலே ஏறி சிகரத்தில் நிற்கவில்லை. இங்கேயே இருந்துகொண்டு, வாழ்க்கையின் அப்பட்டமான தன்மையைப் பார்க்கத் தவறுவதன் முட்டாள்தனத்தை உணர்வதே தன்னை உணர்தல். அதனால்தான் சாதாரணமாக எவரும் தன்னை உணர்ந்தவுடன் சமுதாயத்திலிருந்து ஒதுங்கிச்செல்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் பரவசமாக தர்மசங்கடப்படுகிறார்கள். "எப்போதுமே இங்கு இருந்திருப்பதை நான் எக்கணத்திலும் உணர்ந்திருக்கலாம். ஆனால் பல பிறவிகளாக சர்க்கஸ் செய்தபிறகு உணர்ந்தேனே! இவ்வளவு முட்டாளாக இருந்திருக்கிறேனே, என் முகத்தை எப்படி வெளியே காட்டுவது?" நீங்கள் முட்டாள் என்பதை நீங்கள் உணராதபோது, உலகில் கர்வமாகவும் கம்பீரமாகவும் நடமாடலாம். ஆனால் உண்மையை உணர்ந்ததும் தர்மசங்கடப்படுவீர்கள், ஆனால் உலகம் முழுவதும் உங்களை வழிபட விரும்பும் - அது மிகவும் சங்கடமான ஒரு நிலை.

முக்தியைப் பற்றி கவலைப்படாதீர்கள். இளமையாக இருக்கிறீர்கள் என்றால், சர்க்கஸ் செய்ய விரும்புகிறீர்கள் என்றால், செய்யுங்கள். இன்னும் சற்று முதிர்ந்தபிறகு, அதை என்னிடம் விட்டுவிடுங்கள். நீங்கள் உணர்கிறீர்களா இல்லையா என்று எனக்குக் கவலையில்லை, ஆனால் ஒரு குருவாக நான் வெற்றிகரமாக இருக்க விரும்புகிறேன். "உங்களை நேசிக்கிறேன். உங்கள்மீது எனக்கு அக்கறை உள்ளது. உண்மையை நீங்கள் உணரவேண்டும் என்று விரும்புகிறேன்." என்றெல்லாம் நான் உங்களிடம் சொன்னால், இன்று கேட்பதற்கு நன்றாகவே இருக்கும். நாளை யோசிப்பீர்கள், "அட, நான் எப்படி..." என்று.

நீங்கள் உணர்கிறீர்களா இல்லையா என்று எனக்குக் கவலையில்லை, ஆனால் என் வாழ்க்கையில் நான் தோல்வியடைய விரும்பவில்லை. உங்களுக்கு போராட்டம் பிடிக்கும் என்றால் கொஞ்ச காலம் போராடுங்கள், போராட்டமின்றி நீங்கள் வீண்போவீர்கள் என்று நினைத்தால் போராடுங்கள். நீங்கள் தயாராக இருக்கும்போது, அதை என் கையில் விட்டுவிடுங்கள். நான் குருவாக வெற்றிகரமாக இருக்க விரும்புகிறேன் - இதை நீங்கள் நம்பலாம்.

உங்களுக்கு முக்தி நிகழ்வதை நான் உறுதிசெய்வேன், ஆனால் அதை நீங்கள் என் கைகளில் விட்டுவிடவேண்டும். வயதாகி தள்ளாடத் துவங்கும் போதாவது என்னிடம் விட்டுவிடவேண்டும். ஆனால் இப்போதே அதை என் கைகளில் கொடுத்துவிட்டால், வாழ்க்கையின் கடைசி படியைப் பிடித்துக்கொண்டு வாழ்க்கையை நீங்கள் அனுபவித்து ரசிக்க நாங்கள் உதவமுடியும். உங்கள் சர்க்கஸ் உங்களுக்குப் பிடிக்கும் என்றால் கொஞ்ச காலத்திற்கு செய்துகொள்ளுங்கள். உங்கள் சர்க்கஸ் அலுத்துப்போகும்போது, உங்களில் பலர் மனம் மாறுவீர்கள் என்று எனக்குத் தெரியும். அது எவ்வளவு சீக்கிரம் நடக்கிறதோ அவ்வளவு நல்லது. நான் இன்னும் இங்கு இருக்கும்போதே, துடிப்பாக செயல்படும்போதே, நீங்கள் விடுதலை அல்லது முக்தியை உணர்ந்து என்னை மிகவும் வெற்றிகரமான குருவாக மாற்றிடுங்கள். பாருங்கள், இரண்டு விதத்திலும் நானே ஜெயிக்கிறேன்...

sadhguru signature

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1