Question: நமஸ்காரம் சத்குரு, தாங்கள் ஒரு அவசரத்தில் இருப்பதாகவும், வெவ்வேறு சாத்தியங்களை நோக்கி, மக்களோடு சேர்ந்து வேலை செய்ய வேண்டும் என்றும் சொல்லி இருந்தீர்கள். நாங்கள் இதற்கு என்ன செய்ய முடியும்?

முதன்மையான, முக்கியமான விஷயம் இச்சை ஆகும். இச்சை என்றால் தீவிர ஆசை அல்லது விருப்பம் என்று பொருள். இச்சை உறுதியாக இல்லாவிட்டால், சிறு தடை வந்தாலும் நீங்கள் விலக நினைப்பீர்கள். மலையேற்றத்தின்போது உங்களுக்கு இது நடக்கும். கடந்த முறை கைலாஷ் சென்ற பொழுது, மனாங் பள்ளத்தாக்கு வழியே, தொராங் லா கணவாய் கடந்து தொராங் லா சென்றோம். 18000 அடியில், 60 டிகிரி சரிவுகள் உள்ள இடம் அது. ஏற ஆரம்பிக்கும் பொழுது, "மணாங் பள்ளத்தாக்கே அழகாகத்தான் இருக்கிறது, கணவாயை கடக்கத்தான் வேண்டுமா? ஆள் அரவமில்லாத இடமாக இருக்கிறதே, வெறும் பாறையாக இருக்கிறதே, பசுமையே இல்லை. ஆனால் இங்கே மணாங் பள்ளத்தாக்கோ பூக்கள் பூத்து அழகாக இருக்கிறது" என்று மனதுள் தோன்றும். உங்கள் வாழ்வில் மனதின் சூழ்ச்சி எப்பொழுதுமே இருக்கும். அந்த சூழ்ச்சியையும் கடந்து செயல்படுபவர்கள், சில படிகளைத் தாண்டி, ஒரு நிலை அடைகிறார்கள். மற்றவர்களோ உண்டு, உறங்கி வாழ்வில் தேக்கமடைகிறார்கள். ஆன்மிகமோ, வியாபாரமோ, கலையோ உங்கள் எல்லைகளை கடக்க முயலும் பொழுது, இது நடக்கும். உங்கள் மனம் "இங்கேயே அழகாகத்தான் இருக்கிறது, மலை மேலே ஏற வேண்டிய தேவை என்ன இருக்கிறது" என்று நினைக்கும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

எனவே முதல் விஷயம் விருப்பத்தை உருவாக்குவது. "நான் அறிந்து கொள்ள வேண்டும், நான் அறிந்து கொள்ள வேண்டும், நான் அறிந்து கொள்ள வேண்டும்" என்பது உள்ளிருந்து உங்களை தொந்தரவு செய்ய வேண்டும். உங்கள் விருப்பம் உங்களைத் தொந்தரவு செய்யாவிட்டால், உங்கள் தேடல் உங்கள் எல்லைகளை கடந்து உங்களை இட்டுச் செல்லாது. ஏனென்றால் ஒவ்வொரு மனிதரின் உள்ளேயும் தடைகள் இருக்கிறது. "நான் தடைகளைக் கடப்பேனா அல்லது இரை ஆவேனா" இதுதான் உங்கள் முன் உள்ள கேள்வி. அதை சந்திப்பதற்கு பதிலாக 'இதனால் என்ன பலன், நான் என்ன சாதிக்கப் போகிறேன்' என்ற கேள்வி மக்கள் மனதில் வந்து விடுகிறது. இது ஒரு சாதனை அல்ல. ஒரு செடி வளர்வது, அதன் வேர்கள் போஷாக்கு தேடுவது, ஒரு பூவையோ, கனியையோ மலர வைப்பது பற்றி ஒரு அழகான காணொளி இருக்கிறது. அந்த காணொளியில், பிழைத்திருக்க, செழித்திருக்க அந்த வேர்கள் என்னவெல்லாம் செய்கிறது என்று பார்க்கலாம். இந்த போராட்டம், இருக்கும் நிலையில் இருந்து மேலே செல்லும் விருப்பம். இது ஏதோ போதனை இல்லை. உயிரின் இயல்பே இதுதான். வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் மனித இனம் முயன்று கொண்டுதான் இருக்கிறது. அறிவியல், தொழில்நுட்பம், புவியியல், ஆன்மிகம் என ஒவ்வொரு தளத்திலும் ஒரு சிலர் செய்த முயற்சியின் பலனை அனைவரும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். முயற்சியில் பலர் இறந்தும் போனார்கள். ஒரு சிலர் வெற்றி அடைந்தார்கள். அந்த ஒரு சிலரால் பிரபஞ்சத்தில் பல விஷயங்கள் நடந்திருக்கிறது.

ஆன்மீக செயல்முறையும் இப்படிதான். அது கடினமா? அது கடினமான ஒன்று இல்லை. ஆனால் நீங்கள் கடினமானவராக இருந்தால் அதுவும் கடினமாக இருக்கும். கடினத்தன்மை என்பது ஆன்மிக செயல்முறையில் இல்லை. அது உங்கள் உள்ளே இருக்கிறது. உங்கள் விருப்பம் கொழுந்து விட்டெரியும் ஒரு விருப்பமாக மாறினால் மீதியை என்னிடம் விட்டு விடுங்கள். என்ன செய்ய வேண்டும் என்று படிப்படியாக நான் சொல்கிறேன். ஆனால் உங்கள் விருப்பம் தினசரி அளவில் ஊசலாடிக் கொண்டிருந்தால் என்ன செய்வது? ஒரு எளிமையான 15 அல்லது 20 நிமிட தியானத்துக்கு தீட்சை கொடுக்க வேண்டுமென்றால் அதை எளிதாக செய்து விடலாம். ஆனால் உள்ளே ஒருவர் தீயுடன் இருக்கிறார் என்றால், அவரை உச்சபட்ச நோக்கம் நோக்கி அழைத்துச் செல்லமுடியும். அனைவரும் மகிழ்ச்சியாக, ஆரோக்கியமாக, சுகமாக இருக்க வேண்டும் என்பது எனது நோக்கம் இல்லை. அவர்கள் வேறு ஒளியில் எரிய வேண்டும் என்று விரும்புகிறேன். 30 வருடம், 90 வருடம், 100 வருடம் என எத்தனை வருடங்கள் வாழ்கிறீர்கள் என்பது எனக்கு முக்கியமில்லை. உங்கள் வாழ்நாளில் தெய்வீகம் தொட முடிந்ததா; தசை, எலும்பு தாண்டிய ஒரு நெருப்பு உள்ளே எரிகிறதா என்பதே முக்கியம். இது உங்கள் வாழ்வில் நடக்கவில்லை என்றால் என்ன பயன்? இந்த தசையோடும், எலும்போடும் நீங்கள் 100 வருடங்கள் வாழ்ந்தாலும் வேதனை தரும் பல பிரச்சனைகளோடுதான் எப்போதும் இருப்பீர்கள். அந்த பிரச்சனைகள் மிகவும் வலி தருபவை, அவ்வளவுதான்.

வயதானவர்களைப் பாருங்கள். தங்கள் வாழ்வில் செய்த விஷயங்கள் குறித்து ஒரு நிறைவோடு இருக்கிறார்களா? முழு வாழ்க்கை வாழ்ந்தவர்களை நோக்கி இந்த கேள்வியை கேட்கிறேன். ஒவ்வொரு படியும் வலி மிகுந்ததாக தெரியவில்லையா? அண்டை வீட்டுக்காரருக்கு ஏற்பட்ட பிரச்சனை தனக்கு இல்லை என்பதே பலரின் திருப்தியாக இருக்கிறது. "உங்களுக்குத் தெரியுமா, நான் மிகவும் சாமர்த்தியம், அது போன்ற பிரச்சனைகளை நான் சந்தித்ததே இல்லை" இப்படித்தான் மக்கள் இருக்கிறார்கள். இந்தப் பிரபஞ்சத்தில் நீங்கள் ஜனத்தொகையின் ஒரு எண்ணிக்கையாக இருந்தால் போதும் என்றால் இந்த திருப்தி போதும். ஆனால் தெய்வீகத்தின் பிரதிபலிப்பாக நீங்கள் இருக்க விரும்பினால் வாழ வேண்டிய வழியே வேறு. முதல் விஷயம் விருப்பம், அது தணல் போன்று எரியும் விருப்பமாக இருக்கவேண்டும். உள்ளே ஒரு நெருப்பு இல்லையென்றால் என்ன செய்வது? அந்த நெருப்பு உங்களுக்குள் இல்லையென்றால் உங்களை எப்படி வழி நடத்துவது? அந்த நெருப்பை உருவாக்குங்கள். அதற்கே 35 வருடங்கள் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

எவ்வளவு காலம் எடுத்துக் கொள்ளப் போகிறீர்கள்?

Love & Grace