இனிமேலும் வேண்டாம் பாஸ்டன் பயங்கரம்

நள்ளிரவு நெருங்குகிறது... பாஸ்டனிலிருந்து கிளம்பும் சிறு வானூர்தியில் அமர்ந்திருக்கிறேன். MIT-இல் நடந்த "வெற்றிக்குத் தயாராவோம்" (Gearing towards Success) நிகழ்ச்சிக்காக இங்கு வந்திருந்தேன். குண்டு வெடிப்பு பயங்கரம் அரங்கேறி ஒரு வாரமே ஆன நிலையில், அதிலிருந்து மீண்டு வருகின்றனர், பாஸ்டன் மக்கள். இதையொட்டி, நாளை நினைவஞ்சலி செலுத்தப்படுகிறது. மதவாத இயக்கத்தின் பிரச்சாரத்தினால், அரக்கர்களாக்கப்பட்ட 19வயதே நிரம்பிய இளைஞர்கள்தான் இந்த கொடூரத்திற்கு காரணமென்பது உலகத்திற்கு எவ்விதத்திலும் நற்செய்தியல்ல... இந்த சகோதரர்களில் இளையவனின் அப்பாவியான முகத்தை பார்த்தால் சிறிது கலக்கமாகத்தான் இருக்கிறது. இவர்கள் நம் குழந்தைகளாகக்கூட இருந்திருக்க முடியும்...

உலகத்தை ஆளும் நோக்கத்துடன் செயல்படும் மதபோதனைகள், பூமியிலுள்ள அனைத்து உயிர்களுக்கும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் தன்மையைக் கொண்டுள்ளன. கடந்த இருநூற்றாண்டுகளாக, எந்தவித தூண்டுதலுமில்லாமல் உலகின் பல பகுதிகளிலுள்ள மதக்குழுக்கள் பலதரப்பட்ட மக்கள் மீது கொடூரமான வன்முறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளன. அமைதி, அன்பு மற்றும் கருணை என்ற பெயரில் இவர்கள் விட்டுச்சென்றுள்ள இந்த கொடுமையான வன்முறைச்சூழல், உண்மையில் வெறுப்பையும் அபாயகரமான விளைவுகளையும் தன்னுள் மறைத்து வைத்துள்ளது!

மதத்தின் பெயரால் வன்முறை செயல்களை முடுக்கிவிட்டிருக்கும் சில அடிப்படை விஷயங்களுக்கு தீர்வுகாண வேண்டிய நேரம் வந்துவிட்டது. பொது சொற்பொழிவுகளில், அரசியல்ரீதியாக சரியான நிலைப்பாடு பற்றி பேசுவதை விடுத்து, தற்கால சமூக அநீதிகளுக்கு தீர்வுகாணும் நோக்கில் விவாதங்களைத் தீவிரமாக தொடங்க வேண்டிய தருணம் இது.

Sign Up for Monthly Updates from Isha

Summarized updates from Isha's monthly Magazine on Isha and Sadhguru available right in your mailbox.

No Spam. Cancel Anytime.

சிலர் தேர்ந்தெடுத்த நம்பிக்கைகளையோ, நம்பக் கற்றுக்கொடுக்கப்பட்ட விஷயங்களையோ ஏற்றுக் கொள்ளாத தரப்பினர் அனைவரின்மீதும் வன்முறையை ஏவிவிடும் உந்துதல் தற்போது அதிதீவிரமாக உள்ளது. இந்த மாதிரியான முரண்பாடுகள், கடவுளின் வார்த்தைகளை சுமந்துகொண்டிருப்பதாகக் கருதப்படும் புனித நூல்களிலேயே உள்ளன! எப்படிப்பட்ட காரணங்களுக்காக அவை புனித நூல்களுக்குள் வந்திருந்தாலும், அவை தற்கால நடைமுறை வாழ்க்கைக்கு ஒவ்வாததாக இருப்பின் கடவுளின் விருப்பப்படி அவற்றை நீக்கிவிடுவதே நல்லது. ஆம்! கடவுளின் விருப்பப்படிதான் நாம் அப்படி செய்யப்போகிறோம். நாம் வேண்டுமென்றால் கடவுளையே கேட்டுவிடுவோம். அவர் ஒருவேளை பதில் எதுவும் தரவில்லையென்றால் அதை சரியென்று எடுத்து கொள்வதில் ஒரு குற்றமும் இல்லை!

கடவுளின் பெயரால் யாரும் போர் புரியத் தேவையில்லை என்ற நிலைப்பாடு, இப்போதைய சூழ்நிலைக்கு மிகவும் தேவையான ஒன்று. உலகில் எந்தவிதமான வன்முறைக்கும் என்றாவது தீர்வு கண்டுவிட முடியும். ஆனால், தங்கள் கடவுள்களுக்காக போராடுபவர்களுக்கு என்றுமே தீர்வு இல்லை. இவர்களைத் தடுப்பதென்பது முடியாத காரியம். ஏனெனில் இவை, முதலும் முடிவுமில்லாத காரணத்திற்காகவும் உலகத்தை மீளா நரகமாக மாற்றவும் செய்யப்படும் செயல்கள். குறிப்பிட்ட ஒரு குழு மட்டுமின்றி, எல்லா மதச்சார்புடைய குழுக்களும் தங்கள் புனித நூலிலுள்ள வன்முறையைத் தூண்டும் கருத்துக்களை மாற்றிக்கொள்ளவோ அழிக்கவோ முன்வந்தால் மட்டுமே தீர்வு சாத்தியமாகும்! இது சுலபமான காரியமில்லை, ஆனால் என்றாவது தொடங்கப்பட வேண்டிய வேலைதான்...

இந்தவார இறுதியில், அட்லாண்டாவில் 1100 க்கும் மேல் பங்கேற்பாளர்கள் கலந்துகொண்ட 3 நாள் Inner Engineering நிகழ்ச்சி மிகவும் அற்புதமாக இருந்தது. பலதரப்பட்ட மக்களை சந்தித்தது ஒரு அலாதியான அனுபவம்.

நள்ளிரவு கடந்துவிட்டது... நிலவொளியில் நனைந்திருக்கும் வானைக் கிழித்து விமானம் சீறிப்பாய்கிறது. இறகில்லா உயிர்களான நாமும்கூட விண்ணில் பறந்து செல்லமுடியும் என்பது ஒரு வரம்தான். லிலியென்தல் சகோதரர்களுக்கும், வானூர்தி தொழில் நுட்பத்தை கண்டுபிடிக்க போராடி மறைந்து போன மற்ற எல்லோருக்குமே நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்ன ஒரு மகத்தான பரிசு இது!

Love & Grace