இளைஞர்களின் தேவையை எப்படி பூர்த்தி செய்ய?

சரித்திரத்தில் தனித்துவமான இளைஞர்கள் இயக்கமாக உருவெடுத்து வரும் இளைஞரும் உண்மையும் இயக்கத்தின் நோக்கம் குறித்து இந்தவார சத்குரு ஸ்பாட்டில் சத்குரு தெளிவு தருகிறார். உண்மையுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதற்கான அவசியத்தை விளக்கும் சத்குரு, அதற்கு அவர் மேற்கொண்டுள்ள அபாரமான முயற்சி குறித்து பகிர்கிறார்.
 
How We Can Meet Young People’s Needs
 
 
 

உண்மை ஒரு நேர்கோட்டைப் போன்றது. ஆனால் பெரும்பாலான மனிதர்கள், இளைஞர்களும் சரி, மற்றவர்களும் சரி, அதிலிருந்து விலகி பலதிசைகளில் சிதறியிருக்கின்றனர். உங்கள் வாழ்க்கை எந்த அளவு சிறப்பாக உங்களுக்கு வேலை செய்கிறது என்பது, அந்த நேர்கோட்டுடன் எந்த அளவு அதிகமாக தொடர்பில் இருக்கிறீர்கள், அல்லது அந்த நேர்க்கோட்டுக்கு எந்த அளவு நெருக்கமாக இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. தொடர்ந்து அந்த நேர்கோட்டிலேயே நீங்கள் இருக்கிறீர்கள் என்றால், நீங்கள் வேறொரு சாத்தியமாக பரிணமிக்க முடியும்.

உங்களால் அதில் எப்போதும் இருக்க முடியவில்லை என்றால், அதற்கு அருகாமையிலாவது இருங்கள் - அப்போதும் அற்புதமான விஷயங்கள் உங்களுக்கு நிகழமுடியும். அதனால்தான் இளைஞரும் உண்மையும் இயக்கம் - அனுபவப்பூர்வமாக நம் இருப்பின் அடிப்படை இயல்பை, அல்லது உண்மையை அறியும் முயற்சியிது. இதனை நீங்கள் அறிவுப்பூர்வமாக புரிந்துகொள்ள இயலாது. ஆனால் உண்மைத் தேடுதலில் ஆழமாகத் தோண்டுவதற்கு புத்தியிடம் இருக்கும் ஒரே கருவி, கேள்விதான். எனவே கேள்விகளைப் பயன்படுத்துகிறோம்.

உண்மைத் தேடுதலில் ஆழமாகத் தோண்டுவதற்கு புத்தியிடம் இருக்கும் ஒரே கருவி, கேள்விதான். எனவே கேள்விகளைப் பயன்படுத்துகிறோம்.

தற்போது நம்முடைய கல்விமுறை, மதிப்பெண் பெறுவது மீதும், ஏதோவொரு வேலையில் சேர தகுதி வளர்ப்பது மீதும் மட்டுமே கவனம் செலுத்துகிறது. இளைஞர்களை ஒரு வகுப்பறையில் போட்டு அரைப்பதும், புத்தகத்தில் இருக்கும் ஏதோ ஒரு முட்டாள் தகவலைத் திணிப்பதும் இளைஞர்களுக்கு வேலை செய்யப்போவதில்லை. அவர்கள் ஈடுபட இதுதவிர வேறெந்த செயலுமே இல்லை. நாம் அறிவியலிலும் கணிதத்திலும் எந்த அளவு நேரத்தை முதலீடு செய்கிறோமோ, அதே அளவு நேரத்தை கலையிலும் இசையிலும் நாடகத்திலும் செலவிடுவது மிகவும் முக்கியம். இப்படிப்பட்ட வெளிப்பாடுகள் மிகவும் அவசியமானவை.

இளைஞர்களை உற்சாகப்படுத்தி, அவர்களை ஈடுபடுத்தும் ஏதோவொன்றை அவர்களுக்கு நாம் வழங்கவேண்டும். அது விளையாட்டு, நடனம், இசை, புத்தகம் அல்லது புத்தியை பயன்படுத்தும் செயலாகவும் இருக்கலாம். ஆனால் அது அவர்கள் கவனத்தை ஈர்த்து, உற்சாகப்படுத்தி, ஈடுபடுத்த வேண்டும். தற்போது எதிலும் ஈடுபாடு இல்லாமல் இருப்பதால், இயற்கையாகவே போதையே மேலானதாகத் தெரிகிறது. நீங்கள் எப்போதுமே உள்ளிருந்து போதையாக இருக்கும் வழிகளை உங்களுக்கு என்னால் கற்றுத்தர முடியும். என் கண்களைப் பார்த்தால், நான் எப்போதும் முழு போதையில் இருப்பதை கவனிப்பீர்கள், ஆனால் ஒருபோதும் எந்த வஸ்துவையும் தொட்டதில்லை.

நீங்கள் விரும்புவதை உள்ளிருந்தே உற்பத்திசெய்ய முடியும். இப்படிப்பட்ட போதை உங்களை விடுவிக்கத்தான் செய்யுமே தவிர, தடுமாறச்செய்யாது.

மனித உடல் அமைப்புதான் பூமியிலேயே மிகப்பெரிய இரசாயனத் தொழிற்சாலை. நீங்கள் விரும்புவதை உள்ளிருந்தே உற்பத்திசெய்ய முடியும். இப்படிப்பட்ட போதை உங்களை விடுவிக்கத்தான் செய்யுமே தவிர, தடுமாறச்செய்யாது. வெளியிலிருந்து போதையைத் தேடினால், அது உங்கள் புலன்களை வலுவிழக்கச் செய்யும். ஆனால் உள்ளிருந்து உயிரைக்கொண்டே நீங்கள் போதையானால் தள்ளாட்டத்திற்கு பதிலாக, தீவிரத்துடனும் போதையுடனும் இருப்பீர்கள். சிவன் அல்லது ஆதியோகி இதைத்தான் குறிக்கிறார் - ஒரே சமயத்தில் தீவிரமாக, துடிப்பாக, அசைவின்றி, போதையுடன் இருக்கிறார். இதுதான் யோகாவின் சாரம்சம். போதை உணர்வு என்பதே இல்லையென்றால், உண்மையாகவே உங்களால் வாழ்க்கையை தாங்கிக்கொள்ள இயலாது.

நீங்கள் வாழ்க்கையில் பல விஷயங்களை கையில் எடுத்துக்கொண்டால், அது மெதுமெதுவாக உங்களை கீழே அழுத்திவிடும். எப்போதும் உங்களுக்குள் சற்று போதை இல்லாவிட்டால், வாழ்க்கையை தாக்குப்பிடிக்க இயலாது. ஆனால் மதுவையும் மாத்திரைகளையும் கொண்டு இந்நிலையை எட்ட முயன்றால், அது உங்களை சீரழித்துவிடும். அது உங்கள் புத்திசாலித்தனத்தையும் புலன்களின் ஆற்றலையும் அழித்துவிடும். இளைஞர்களுக்கு நாம் ஒரு வீரியமான மாற்றுவழியை வழங்கவேண்டும்.

தியானம் என்றால் உங்களுக்கும் உங்கள் உடலுக்கும் இடையே, உங்களுக்கும் உங்கள் மனதுக்கும் இடையே சற்று இடைவெளி உருவாக்குவது. இது கட்டுப்பாடுகள் அனைத்தையும் உடைத்த ஒரு நிலை.

அவர்களிடம் ஏதோவொன்று நல்லது அல்லது கெட்டது என்று சொல்வதற்கு பதிலாக, நித்தமும் 24 மணி நேரமும் போதையில் இருப்பது எப்படி என்று என்னால் கற்றுத்தர முடியும். அதற்கு எந்த விலையும் கொடுக்கத் தேவையில்லை. அது பலவிதங்களில் உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தும். தியானம் என்றால் உங்களுக்கும் உங்கள் உடலுக்கும் இடையே, உங்களுக்கும் உங்கள் மனதுக்கும் இடையே சற்று இடைவெளி உருவாக்குவது. இது கட்டுப்பாடுகள் அனைத்தையும் உடைத்த ஒரு நிலை. மனிதர்கள் இந்நிலையைத தொட்டால்தான் அவர்களின் மேதைமை மலரும்.

துரதிர்ஷ்டவசமாக, இன்று சமுதாயம் பணமும் இன்பமும் மட்டுமே இலக்கு என்ற நிலை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறது. ஒருவருக்கு இவ்விரண்டும் இருக்கக்கூடாது என்று இல்லை, ஆனால் நம் வாழ்க்கையின் அச்சாணியாக இவை இருக்கக்கூடாது. அதேசமயம் ஏதோவொன்று ஆழமானதாக இருந்தால் மக்கள் அதை கேட்டுக்கொள்ள மாட்டார்கள் என்ற முடிவுக்கு வருவது தவறு. மேலோட்டமான தன்மைகளைத் தூண்டினால், அதைநோக்கி உடனடியாக வரும் மக்கள் அதிகமாக இருப்பார்கள் என்பது உண்மைதான். ஆனால் ஆழமான ஒன்றையும் புரிந்துகொண்டு தங்கள் வாழ்க்கையில் தங்களை அதனோடு அடையாளப்படுத்தும் விதமாக அவர்களுக்கு இதனை பரிமாறினால், இன்றும் அதை நாடி மக்கள் வருகிறார்கள், இதைக் காண்பது அற்புதமாக இருக்கிறது.

அதிக அளவில் மக்கள்மீது தாக்கம் ஏற்படுத்தக்கூடிய இடத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த பொறுப்பு உண்டு. அவர்கள் மக்கள் வாழ்க்கையைத் தொடுவது மட்டுமல்லாமல், மக்களுக்குள் ஏதோவொரு விதத்தில் மாற்றத்தையும் ஏற்படுத்த வேண்டும்.

நான் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் பயணித்து வருகிறேன். கல்லூரி மாணவர்கள் இதில் ஆர்வம் காட்டுவதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது, ஆனால் 12 முதல் 15 வயதுக்குட்பட்ட பள்ளிக் குழந்தைகள் இந்த ஆன்மீக சொற்பொழிவுகளை இன்று ஆர்வத்துடன் கேட்கிறார்கள். நான் வளர்ந்த காலத்தில் இப்படி நடக்க வாய்ப்பேயில்லை. எங்கள் பெற்றோர்கள் வற்புறுத்தாமல் ஆன்மீக உரையாடல் எதையும் நான் கேட்டிருக்க வழியில்லை.

இப்போது நான் எங்கு சென்றாலும் பள்ளிக் குழந்தைகளுக்கு என்னைத் தெரிகிறது. அவர்களாகவே நான் பேசுவதைக் கேட்கிறார்கள். ஆழமான, தன்னிலை மாற்றம் ஏற்படுத்தவல்ல ஒன்றைப் பற்றி பேசினால், மக்கள் கேட்பதற்கு விரும்புவதில்லை என்பது உண்மையில்லை. அவர்கள் கட்டாயம் கேட்பார்கள். நாம் சொல்லும் விதம் வேண்டுமானால் மாறத்தேவையாக இருக்கலாம், ஆனால் சொல்லவேண்டிய செய்தியை நம்மால் சொல்லமுடியும். அதிக அளவில் மக்கள்மீது தாக்கம் ஏற்படுத்தக்கூடிய இடத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த பொறுப்பு உண்டு. அவர்கள் மக்கள் வாழ்க்கையைத் தொடுவது மட்டுமல்லாமல், மக்களுக்குள் ஏதோவொரு விதத்தில் மாற்றத்தையும் ஏற்படுத்த வேண்டும்.

நம் தேசத்தின் நலனுக்கும் உலகின் நலனுக்கும், இன்னும் சற்று பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் - அவர்கள் வார்த்தைகளில், அவர்கள் செயல்களில், மற்றும் எல்லாவற்றிலும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.

நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களுக்குள் நாம் இந்த பொறுப்புணர்வை எடுத்துவர வேண்டும். நம் தேசத்தின் நலனுக்கும் உலகின் நலனுக்கும், இன்னும் சற்று பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் - அவர்கள் வார்த்தைகளில், அவர்கள் செயல்களில், மற்றும் எல்லாவற்றிலும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். இன்னர் இன்ஜினியரிங் அல்லது ஈஷா யோகா மூலமாக நாங்கள் செய்வது இதுதான், மக்களை மதத்திலிருந்து பொறுப்புணர்வு நோக்கி நகர்த்துகிறோம்.

நெடுங்காலமாக மக்கள் தங்கள் வாழ்க்கையில் தவறாகும் எல்லாவற்றுக்கும், அவர்கள் செய்யும் அபத்தங்கள் எல்லாவற்றுக்கும் மேலே கைகாட்டி, “இது கடவுளின் விருப்பம்” என்று சொல்லி வந்துள்ளார்கள். மக்கள் தாங்கள் எப்படிப்பட்ட அபத்தமாக இருந்தாலும், அதற்கு பொறுப்பேற்கும் நேரம் வந்துவிட்டது. ஒவ்வொரு மனிதரும், தான் இருக்கும் நிலைக்காவது பொறுப்பேற்கும் துணிவுடன் இருக்க வேண்டும். எழுந்து நின்று நீங்கள் சொல்லவிரும்புவதைச் சொல்லுங்கள். யாரோ ஒருவருக்கு அது பிடிக்கிறதா பிடிக்கவில்லையா என்பது அவரவர் விருப்பம்.

தற்போது இளைஞரும் உண்மையும் எனும் இயக்கத்தின் நடுவில் நாம் இருப்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். எந்த அளவு முடிகிறதோ அந்த அளவு இளைஞரை உண்மைக்கு நெருக்கமாக கொண்டுவரப் பார்ப்போம். இது இளைஞர்கள் நிறைந்த தேசம் - நம்மிடம் இருப்பதெல்லாம் மக்கள்தொகைதான்.

இந்த மக்கள்தொகையை ஊக்கம் நிறைந்த, சமநிலையான, ஒருமுகமான மக்கள்தொகையாக நாம் மாற்றினால், நாம் அதிசயமாக வாழ்வோம். இல்லாவிட்டால் நாம் பேரழிவாக மாறக்கூடும். நம்மிடம் தொழில்நுட்பத்தின் கருவிகள் உள்ளன, வேறெந்த தலைமுறையிடமும் இல்லாத வசதிகளும் சௌகரியங்களும் நம்மிடம் உள்ளன. நம்மிடம் இருக்கும் அளவு சக்தி இதற்குமுன் எவரிடமும் இருந்ததில்லை. இது மிகச்சிறந்த தலைமுறையாக மலரவேண்டும் என்பதே என் முயற்சி. இதனை நாம் நிகழச் செய்வோம்.

அன்பும் அருளும்,