கடந்த வியாழனன்று குருசங்கமத்தின்(ஆன்மீக குருமார்களின் கூட்டமைப்பு) முதல் வருடாந்திரக் கூட்டம் நடந்தது. கடந்த வருடம் நாங்கள் 17 பேர் ஒன்றுகூடி இந்தக் கூட்டமைப்பை உருவாக்கினோம். இந்த வருடம் பல பாரம்பரியங்களைச் சார்ந்த, பெருவாரியான மக்களின் பிரதிநிதிகளாக விளங்கும் சுமார் 100 குருமார்கள் வந்திருந்து, இதில் கலந்து கொண்டனர். இது ஒரு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சி. இதற்கு முன்னர் இப்படிப்பட்ட ஒரு நிகழ்வு நடந்ததே இல்லை.

பாரதம், ஹிந்துஸ்தான் என்று பல பெயர்களில் அழைக்கப்படும் இந்தியா, கடந்த 12000 வருடங்களாகவே உலகளவில் புகழ் பெற்று விளங்குகிறது. இந்த தீபகற்பத்தில், பல காலகட்டங்களில், 200க்கும் மேற்பட்ட அரசியல் அமைப்புகள் ஆண்டு வந்தபோதும், இந்த பகுதியை உலகம் எப்போதும் ஒரே தேசமாகத்தான் அங்கீகரித்திருக்கிறது. இந்தியா என்னும் நாடு 1947ம் ஆண்டில் பிறக்கவில்லை. முன்பு அரசியல்ரீதியில் வித்தியாசமானவர்களாகவும், இப்போது கலாச்சாரரீதியாக மிகவும் வித்தியாசமானவர்களாகவும் இருக்கிறோம். இந்த நாட்டுக்குள் நீங்கள் பயணம் செய்யும்போது, சில கிலோமீட்டர்களுக்கு ஒரு முறை, வெவ்வேறு விதமான மக்களையும், பலவிதமான உடைகளையும், வெவ்வேறு வகையான உணவுப் பழக்கவழக்கங்களையும் காண முடியும். அத்தனை வகைகளிலும் நாம் வித்தியாசமானவர்கள்தான். ஆனாலும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒரே தேசமாக நம்மைக் கோர்த்து வைத்திருக்கும் அடிப்படை விஷயம் எதுவென்றால், ஆன்மீகம் என்னும் நூலிழைதான். இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய உச்சபட்ச நல்வாழ்வை, அதாவது தன்னுடைய விடுதலையைத்தான் தேடுகிறான்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

கடந்த ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக, வெளியிலிருந்து வந்த படையெடுப்புகள் நம் கலாச்சாரத்தை பல வழிகளிலும் ஆக்கிரமிக்க முயற்சி செய்திருக்கின்றன. உலகின் மற்ற பகுதிகளைப் பார்த்தால், எங்கெல்லாம் ஆக்கிரமிப்பாளர்கள் சென்றார்களோ, அங்கெல்லாம் அவர்களுக்கு 100% வெற்றி கிடைத்திருக்கிறது. இந்த ஒரு நாட்டில் மட்டும்தான், நூற்றுக்கணக்கான ஆண்டுகள் அன்னியர்களின் ஆக்கிரமிப்பின் கீழ் நாம் வாழ்ந்திருந்தாலும், அவர்களால் நம்முடைய அடிப்படையான பண்புகளை மாற்ற முடியவில்லை. ஏனென்றால் இங்கு ஒரே ஒரு ஆன்மீக அமைப்பு மட்டுமோ அல்லது ஒரே ஒரு ஆன்மீகத் தலைவரோ இருந்தது கிடையாது. இங்கு ஆன்மீக பணிகள் ஒரே ஒரு அமைப்பாலோ அல்லது ஒரே ஒரு தலைவராலோ வழிநடத்தப்படவில்லை. ஒவ்வொரு குடும்பமுமே தன்னளவில் ஒரு ஆன்மீக செயல்பாடாகத்தான் திகழ்ந்தது. பெற்றோரிலிருந்து குழந்தைகளுக்கு ஆன்மீக செயல்பாடுகள் கைமாறி சென்று கொண்டே இருந்தன. முதல் முறையாக, தங்கள் குழந்தைகளுக்கு என்ன சொல்வதென்று தெரியாத பெற்றோர்களைத் தற்போது கொண்டிருக்கிறோம். முதல் முறையாக, ஒரு தலைமுறை இன்னொரு தலைமுறைக்கு ஆன்மீக செயல்பாடுகளை கை மாற்றிக் கொடுக்க முடியாத நிலையை சந்திக்கிறோம். எனவே இன்றிருக்கும் ஆன்மீகத் தலைவர்களுக்கு, முன்பு எப்போதையும் விட மிக முக்கியமான கடமையும், பொறுப்பும் அதிகரித்திருக்கிறது. இதுதான் குருசங்கமம் நிகழ்வதற்கு அடிப்படைக் காரணம்.

ஆன்மீகரீதியாக இந்தியாவிலிருந்து என்ன கிடைக்கும் என்று இதுவரை இல்லாத அளவிற்கு இந்த உலகம் இப்போது எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. ஏனென்றால் உலகின் மற்ற பகுதிகளில் நம்பிக்கை அமைப்புகள் மக்களின் மேல் திணிக்கப்பட்டுள்ளன. இந்த கலாச்சாரம் மட்டும்தான், மக்கள் தாங்களே உண்மையைத் தேடுவதை ஊக்குவித்திருக்கிறது. வேதங்கள் என்ன சொன்னாலும், குருமார்கள் என்ன சொல்லியிருந்தாலும், கடவுளின் அவதாரங்கள் என்ன சொல்லியிருந்தாலும், ஒரு மனிதன் தன்னுடைய சொந்த உண்மையை தானே தேடிக் கொள்ள முடியும். பழங்காலத்தில், யாராவது ஒருவர் வந்து, என்ன செய்வது என்று சொல்ல வேண்டுமென மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் தற்போது முதல் முறையாக, மனித இனத்தில் உள்ள ஒவ்வொருவருக்குமே தேடலுக்கான விருப்பம் இருக்கிறது. வெளிநிலையிலும், உள்நிலையிலும் தங்களுக்கென்று சொந்தமாக ஒரு வாழ்க்கையை வடிவமைத்துக் கொள்ளவேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள்.

எனவே சனாதன தர்மத்தை அதன் உண்மையான வடிவில் சொல்லப்பட்டுள்ளதைப் போல பெரியளவில் நாம் முன் வைத்துள்ளோம்; சனாதனம் என்றால் முடிவற்றது என்று மட்டும் பொருளல்ல; உலகளாவியது, அனைத்தையும் உள்ளடக்கியது என்றும் பொருள்படும். ஒருவரைக் கூட விட்டுவிடாமல் தனக்குள் அது சேர்த்துக் கொள்கிறது. இந்த நாட்டில் மட்டும்தான், ஒரே குடும்பத்தில் இருக்கும் ஐந்து பேர், ஐந்து விதமான கடவுள்களை வணங்கினாலும், ஒற்றுமையாக சேர்ந்து வாழ முடியும். உலகின் பல பகுதிகளிலும், நீங்கள் இப்படி செய்தால், உங்களை கொன்றே விடுவார்கள். இந்த மண்ணில்தான் நாமே நம்முடைய சொந்த கடவுள்களை உருவாக்கிக் கொள்ளும் சுதந்திரம் இருக்கிறது. இப்போதிருக்கும் கடவுள்களை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், நீங்களே ஒரு கடவுளை சொந்தமாக உருவாக்கிக் கொள்ள முடியும். ஒரு பாறையையோ அல்லது ஒரு மரத்தையோ அல்லது ஒரு மலையையோ, உங்கள் தாயையோ யாரை வேண்டுமானாலும் நீங்கள் வணங்கிக் கொள்ளலாம்.

நம் கலாச்சாரங்களுக்கு இடையே நிலவும் வேற்றுமைகள் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல. உண்மையில் இந்த வேற்றுமைகள் பல சாத்தியங்களை மனிதர்களுக்கு அளிக்கின்றன. இதன் மூலம் ஒவ்வொருவரும் அவரவருக்கென்று தனி வழியை தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும். இந்த சாத்தியத்தை உலகத்துக்கு எடுத்துச் சொல்வதற்காகத்தான் இது போன்று குருசங்கமம் என்றொரு அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. மனித விடுதலை மற்றும் நல்வாழ்வுக்குத் தேவையான அறிவும், சாத்தியங்களும், வழிமுறைகளும் கொண்ட மிகப் பெரிய களஞ்சியமாக இந்த மண் திகழ்கிறது. இதை நாம் அனைவரும் ஒன்றிணைந்து, ஒரே குரலில் உலகுக்கு வெளிப்படுத்துவதற்கு இதுதான் சரியான தருணம் என்று நினைக்கிறேன். அதற்காக ஒவ்வொரு ஆன்மீக குருவும் தாங்கள் மேற்கொண்டிருக்கும் தத்தமது வழிமுறைகளை விட்டுவிட்டு, அனைவரும் ஒரே வழிமுறையைக் கடைபிடிக்க வேண்டும் என்று அர்த்தமில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழிமுறையை வைத்திருந்தாலும், ஒரே நோக்கம் நிறைவேற பல வழிகள் இருக்கின்றன என்று நாம் சொல்கிறோம். ஒரே ஒரு வழிமுறை எல்லா மனிதர்களுக்கும் எப்போதும் பொருத்தமானதாக இருக்காது.

இந்தியா எப்போதுமே உலகத்தின் ஆன்மீக நுழைவாயிலாக இருந்து வந்திருக்கிறது. ஆனால் கடந்த 30 வருடங்களாக அந்த இடத்தை நாம் இழந்து வருகிறோம். இதனால் மிகப் பெரிய இழப்பு ஏற்பட்டுவிட்டது. வாளும், துப்பாக்கியும் செய்ய முடியாததை MTV செய்து வருகிறது. எனவே மக்கள் தங்களுக்குத் தேவையானதை தாங்களே தேர்ந்தெடுக்கும்படியாக, அத்தனை வழிமுறைகளையும் ஒரே தளத்தில் முன்நிறுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது. இன்று மக்கள் கூடி, சந்தித்து, ஒன்றிணைந்து, தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள இணையதளம் மிகப் பெரிய மேடையாக விளங்குகிறது. ஒவ்வொரு நாளும் சுமார் 4,00,000 பேர் இணையத்தில் 'ஆன்மீகம்' என்கிற வார்த்தையைத் தேடுகிறார்கள். எனவே நாம் இந்தியாவின் ஆன்மீகப் பாரம்பரியங்களை ஒரு சக்தி வாய்ந்த மேடையில் முன் வைப்பதற்கு இதுதான் சரியான தருணம். இதன் மூலம் யார் ஒருவர் ஆன்மீகத்தைத் தேடி வந்தாலும், அவர்களை இந்தத் திசையை நோக்கி நம்மால் திருப்ப முடியும்.

அடுத்த சந்திப்பு 2013ம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி நடைபெறும் என்று நிர்ணயித்திருக்கிறோம். அந்த சமயத்தில் உலகெங்கிலும் இருந்து 500க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என்று நிச்சயம் நம்புகிறோம். அனைத்து ஆன்மீகத் தலைவர்களும் ஒற்றுமையாக இருந்து இதை நடத்தினால், இந்த நோக்கத்தை நிறைவேற்ற முடியும். இது கண்டிப்பாக நிகழக் கூடிய ஒன்றுதான். இதற்குத் தேவையான தொழில்நுட்பமும், திறமையும் நம்மிடம் உள்ளன.

Love & Grace