இந்த வார ஸ்பாட்டில், குரு பௌர்ணமி உருவாகக் காரணமான நிகழ்வையும் அதன் முக்கியத்துவத்தையும், இந்த வருடம் அது ஏன் மிகவும் விசேஷமானது என்பதையும் சத்குரு விளக்குகிறார். குரு பௌர்ணமி தினமான ஜூலை 19ஆம் தேதி வரையிலான இந்த காலத்தில், அருளை உள்வாங்கிக்கொள்ள "ஜொலிக்கும் பாத்திரம்"ஆக நம்மை தயார்செய்து கொள்ளச் சொல்கிறார். பெர்லின் நகரில் ஜூலை 3ஆம் தேதி சத்குரு பேசியதிலிருந்து இது தொகுக்கப்பட்டுள்ளது.

இவ்வருடம் (2016), ஜூன் 21ஆம் தேதி நடந்த கோடைக் கதிர்த்திருப்பம் பௌர்ணமி தினமாக அமைந்தது. குரு பௌர்ணமியாக அறியப்படும் அடுத்த பௌர்ணமியன்று, தோராயமாக 15,000 ஆண்டுகளுக்கு முன்னர், ஆதியோகி தன் முதல் யோகா நிகழ்ச்சியைத் துவங்கினார். ஆதியோகி என்றால் "முதலாவது யோகி" என்று பொருள். அவருக்குத் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று தோன்றவில்லை, மக்களுக்கு அவருடைய பெயர் தெரியவில்லை, அதனால் அவரை ஆதியோகி என்றழைத்தனர். அவர் தன்னுடைய முதல் ஏழு சீடர்களைக் கண்டுகொள்ளாமல் இருந்திட, தன்னால் இயன்ற எல்லாவற்றையும் செய்தார். இன்று இந்தியாவில் இந்த ஏழு சீடர்களை சப்தரிஷிகள் என்றழைத்துக் கொண்டாடுகிறார்கள், இந்த ஏழு சீடர்கள் தான் ஆன்மீக ஞானம் முழுவதற்கும் அடிப்படையாகக் கருதப்படுகிறார்கள் - அவர்கள்தாம் இதைப் பரிமாறினார்கள். ஆதியோகியுடைய கவனத்தை ஈர்க்க அவர்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்தார்கள் - அவரோ இவர்களை கண்டுகொள்ளாமல் இருக்க அவரால் முடிந்த எல்லாவற்றையும் செய்தார். தான் உணர்ந்த யோகாவின் பரவசத்தில் திளைத்திட மட்டுமே அவர் விரும்பினார். அவர் எவருக்கும் கற்றுக்கொடுக்க விரும்பவில்லை. எவரும் அவரைத் தொந்தரவு செய்வதை அவர் விரும்பவில்லை, ஆனால் பல ஆண்டுகளாக இந்த ஏழுபேர் அவரைப் பின்தொடர்ந்தார்கள். யோக மரபில் அவர்கள் கிட்டத்தட்ட 84 ஆண்டுகள் காத்திருந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. நமக்குத் தெரியாது, ஆனால் நிச்சயம் அவர்கள் நீண்ட காலம் காத்திருந்தார்கள்.

ஜூன் 21ஆம் தேதியன்று கதிர்த்திருப்பம் நிகழ்ந்தபோது, ஆதியோகி தனக்குள் சில விஷயங்களை சீர்செய்து கொண்டிருந்தார். கதிர்த்திருப்பத்தின் போதும் சங்கராந்தியின்போதும் பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான உறவில் மாற்றங்கள் நிகழ்கிறது. இந்த மாற்றங்கள் நிகழும்போது ஒவ்வொரு யோகியும் தனக்குள் அதற்கேற்ப சில திருத்தங்களை செய்துகொள்வார். அப்படி அவர் சில மாற்றங்களை செய்துகொண்டு இருந்தபோது அந்த ஏழ்வரைப் பார்த்தார், அவர்கள் அங்கேயே அமர்ந்திருந்தனர். அவர்கள் மிகவும் திறந்த நிலையில் இருந்தார்கள்; அவர் அறிந்ததைப் பரிமாறுவதற்காகக் காத்திருந்தார்கள். அவர் இவர்களைப் பார்த்தபோது, அவரால் கண்களை இமைக்க முடியவில்லை. அவர்கள் அந்த அளவு ஜொலிக்கும் பாத்திரங்களாக மாறியபின் அவரால் அவர்களைக் கண்டுகொள்ளாமல் இருக்க இயலவில்லை. அவர்களை கவனமாகப் பார்த்தார், அடுத்த 28 நாட்களுக்கு அவர்களை கவனித்துவந்தார்.

நாம் இப்போது அந்த 28-நாள் காலகட்டத்தில் இருக்கிறோம் - நான் உங்களை பார்த்துக்கொண்டு இருக்கிறேன். முதலாவது குரு பிறந்த தினமான குரு பௌர்ணமி என்றழைக்கப்படும் அடுத்த பௌர்ணமி தினத்தன்று - அந்த நாள் இவ்வருடம் ஜூலை 19ஆம் தேதி வருகிறது - அவரால் தான் அறிந்திருந்ததைக் கற்றுக்கொடுக்காமல் இருக்க முடியவில்லை. உடல் மற்றும் சக்தி உடலின் பல்வேறு பரிமாணங்கள், நம்மீது நாம் வேலை செய்யக்கூடிய 112 சக்கரங்கள், உடலமைப்பை மாற்றவல்ல பஞ்சபிராணங்கள், மற்றும் மனதின் பதினாறு பரிமாணங்களுக்குள் ஆழமாகச் சென்று அவர்களுக்கு விளக்கினார். இவற்றைப் பரிமாற வெகு நீண்ட காலம் எடுத்தது. 112 வழிகளில் அத்தனையையும் புரிந்துகொள்ளும் அளவு ஏழு முனிவர்களில் எவருக்குமே தங்கள் புத்தியில் இடமில்லாததை அவர் உணர்ந்தபோது, அவற்றை 16 பகுதிகள் கொண்ட ஏழு பாகங்களாய்ப் பிரித்தார். அவர்கள் அந்த ஞானத்தின் ஒரு பகுதியையேனும் சுமந்திருக்கட்டும் என்று ஒவ்வொருவருக்கும் 16 வழிகளைப் பரிமாறினார்.

இந்த பரிமாற்றத்தை அடுத்த பௌர்ணமி தினத்தன்று துவங்கினார், ஆனால் இந்த இடைப்பட்ட காலம், அவர்தன் ஏழு சீடர்கள்மீதும் கவனம் செலுத்திய காலகட்டம். இவ்வருடம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனென்றால் மீண்டும் கதிர்த்திருப்பமும் பௌர்ணமி தினமும் ஒரே நாளில் வந்துள்ளது. இது மிகவும் அரிதான நிகழ்வு. யோக மரபில் அவர்தன் சீடர்களை 28 நாட்களுக்கு கவனித்தார் என்று சொல்லப்படுகிறது. அப்படியென்றால் கதிர்த்திருப்பம் பௌர்ணமி தினத்தன்று நிகழ்ந்திருக்கும். 2016ஆம் ஆண்டிலும் அப்படியே இருக்கிறது. இந்த வருடம் நாம் அனைவரும் இங்கே ஒன்றாக இருப்பது நம் அதிர்ஷ்டம். உங்கள் கல்வி முறைகள், கலாச்சார பின்னணிகள், என்று எதுவும் உள்முகமாகத் திரும்புவது குறித்து எதுவும் சொல்வதில்லை. அவை அனைத்தும் வெளியே ஏதோவொன்று செய்வது குறித்துப் பேசுகின்றன - அவை அனைத்தும் உலகை சீர்செய்வது குறித்ததாக இருக்கிறது. நாம் அதை எந்த அளவு சீர்செய்துள்ளோம் என்றால், இதற்கு மேல் உலகை சீர்செய்தால், சீர்செய்வதற்கு உலகமே இல்லாமல் போய்விடும். உலகை இப்படி சீரமைக்கும் செயல்பாடுகள் அனைத்தையும் நாம் மனித நல்வாழ்வை நாடியே செய்தோம். சீர்செய்வது நிகழ்கிறது, ஆனால் நல்வாழ்வு ஏற்படவில்லை, ஏனென்றால் நல்வாழ்வு என்பது நீங்கள் உள்முகமாகத் திரும்பும்வரை நிகழாது.

Sign Up for Monthly Updates from Isha

Summarized updates from Isha's monthly Magazine on Isha and Sadhguru available right in your mailbox.

No Spam. Cancel Anytime.

உள்முகமாகத் திரும்புவது என்று நான் சொல்லும்போது - உங்கள் ஐம்புலன்கள் மூலமாகத் தான் நீங்கள் எல்லாவற்றையும் உள்வாங்கிக் கொள்கிறீர்கள். இப்போது உங்கள் வாழ்க்கை அனுபவம் முழுவதுமே நீங்கள் பார்ப்பது, கேட்பது, வாசனை, ருசி, மற்றும் தொடுதல் மூலமாகத்தான் நிகழ்கிறது. புலனுறுப்புக்கள் அவற்றின் இயல்பிலேயே வெளிமுகமானவை. உங்களைச் சுற்றியுள்ளதை உங்களால் பார்க்க முடியும் - உங்கள் கண்விழிகளை உள்முகமாக உருட்டி உங்களை உங்களால் பார்க்க இயலாது. உங்கள் கைமேல் ஒரு எறும்பு ஊர்ந்தால் கூட உங்களுக்குத் தெரிந்துவிடும். ஆனால் உங்களுக்குள் இவ்வளவு இரத்தம் ஓடுகிறது - அதை உங்களால் உணரமுடியவில்லை. நீங்கள் உங்கள் தாயின் கருவிலிருந்து வெளியே வந்தபோது தான் உங்கள் ஐம்புலன்களும் திறந்தன, ஏனென்றால் அவை உங்கள் பிழைப்புக்கு அத்தியாவசியமானவை. ஒரு மனிதனின் இயற்கையான தன்மையே பிழைப்பைத் தாண்டி ஏதோ ஒன்றை உணர விரும்பும்போது, பிழைப்பைத் தாண்டிய ஒன்றை நீங்கள் உணரவேண்டுமெனில், உள்முகமாகத் திரும்பப் பாடுபட வேண்டும். அது எவ்வளவு தூரத்திலிருக்கிறது? இதைச் செய்ய ஒரு இமாலய குகைக்குச் செல்ல வேண்டுமா? உங்களுக்கு நான் ஒரு உண்மையைச் சொல்கிறேன் - இமாலயத்தின் குகைகள் எல்லாவற்றையும் ஆக்கிரமித்துவிட்டார்கள் - அங்கே தங்குவதற்கு இனி இடமில்லை. அதனால் இதை நீங்கள் பெர்லின் நகரிலேயே செய்யக் கற்றுக்கொள்ள வேண்டும்.

பெர்லினின் கான்கிரீட் சுவரை இடித்தமைக்கு நீங்கள் மிகவும் பெருமைப்படுகிறீர்கள் என்று கேள்விப்பட்டேன், அதை நீங்கள் செய்தது எனக்கும் மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. ஆனால் உள்த்தன்மைக்கும் வெளித்தன்மைக்கும் இடையிலுள்ள சுவரை இடிப்பதற்கான நேரம் வந்துவிட்டது. நீண்டகாலத்திற்கு பெர்லின் என்று சொன்னாலே மக்கள் அந்த சுவரைத்தான் நினைத்தார்கள். இப்போது பெர்லின் என்றாலே சுவரை உடைத்தவர்களை நினைக்கிறார்கள். இது நல்ல விஷயம், ஆனால் உள்த்தன்மைக்கு வெளித்தன்மைக்கு இடையிலான சுவரை உடைக்க என்ன செய்யப் போகிறீர்கள்? உள்முகமாகத் திரும்புவதற்கு சற்று முயற்சி தேவைப்படுகிறது. அந்தக் கொஞ்சம் முயற்சி கூட இன்று சமுதாயங்களில் இல்லாமல் இருக்கிறது. உங்கள் அனுபவத்தின் அடிப்படை எப்படி வேலை செய்கிறது என்பதை உணர்ந்து அதை உங்கள் கைகளில் நீங்கள் எடுத்துக்கொள்வீர்களேயானால், நிச்சயம் நீங்கள் விரும்பும் அனுவத்தைத் தான் உங்களுக்குள் உருவாக்குவீர்கள்.

மிக உயர்ந்த நிலையிலான இனிமை தான் உங்களுக்கு வேண்டும், கசப்பு வேண்டாம் என்று நீங்கள் கூறினீர்கள். இது ஒவ்வொரு மனிதருக்கும் பொருந்தும். உலகில் நாம் இதில் கவனம் செலுத்தியதே இல்லை. நாம் ஆனந்தமான, புத்திசாலி மனிதர்களை உருவாக்கினால், நம்மிடம் ஒரு அற்புதமான உலகம் இருக்கும். அப்போது உள்முகமாகத் திரும்புவது தூரமான விஷயமாக இருக்காது. அது கடினமில்லை - ஆனால் நீங்கள் பயிற்றுவிக்கப்பட்டிருக்கும் நோக்கத்திலிருந்து அது மாறுபட்டது, அவ்வளவு தான். வெளியிலிருப்பதை எப்படி சீரமைப்பது என்று தான் நீங்கள் எப்போதும் கற்றுக்கொண்டீர்கள். பிரபஞ்சத்திலுள்ள எல்லாவற்றையும் நீங்கள் சீரமைத்துவிடலாம், ஆனால் உங்களை நீங்கள் சீர்செய்யாவிட்டால், இந்த உயிரின் அழகை உணரமாட்டீர்கள்.

நான் மீண்டும் சொல்கிறேன், "விடுதலைக்கான ஒரே வழி உள்முகமாகத் திரும்புவது." இம்முறை குருபௌர்ணமி தினத்திற்கு முன்பாக, ஜொலிக்கும் பாத்திரமாக உங்களை தயார் செய்துகொள்ளுங்கள். உங்கள் உடல், மனம் மற்றும் உணர்ச்சிகள் ஒரு தடையாக இல்லாத வண்ணம் உங்களை வைத்துக்கொள்ளுங்கள்.

நான் உங்களுள் இருக்கிறேன்.

இதனை நாம் நிகழச்செய்வோம்.

Love & Grace