180 க்கும் மேற்பட்ட தொழில்முனைவர்கள், சி.இ.ஓக்கள் மற்றும் வழிகாட்டும் தலைவர்கள் பங்கேற்ற முதல் இன்சைட் நிகழ்ச்சி சற்றுமுன்னர்தான் நிறைவடைந்தது. மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, மொத்தத்தில் தீவிர செயல்பாட்டோடு அமைந்திருந்தது. இன்றைய சூழ்நிலையில், உலக பொருளாதாரத் தலைவர்களின் பங்கு மிக முக்கியமானது என்பதால், உலகத் தலைவர்களுக்கு ஓர் உள் பரிமாணத்தை உருவாக்குவது என்பதே இந்த இன்சைட் நிகழ்ச்சியின் முக்கியமான அம்சமாக இருந்தது.

இதன் அடிப்படையில், இரு வேறு பின்னணிகளுடன், வெவ்வேறு பரிமாணங்களைக் கொண்ட வெற்றிகரமான இரு தலைவர்கள் - திரு ஜி.எம்.ராவ் மற்றும் திரு கே.வி.காமத் அவர்களைத் தேர்ந்தெடுத்து, இந்த நிகழ்ச்சியை வடிவமைத்தோம். இந்த தலைவர்களின் “தி டிஎன்ஏ ஆஃப் சக்சஸ்” ஐ கூறு போட்டு காண்பிக்க திரு ராம் சரண் அவர்களை விட சிறப்பான ஒருவரை நாம் தேர்ந்தெடுத்திருக்க முடியாது.

மற்றவர்களால் காண முடியாதவற்றை காணக்கூடிய திறமையே இன்சைட் என்பதாகும். இதுவே தலைமை வகிப்பதற்கான தகுதியின் முத்திரையும் கூட. எந்த ஒரு முயற்சியையும் வெற்றியாக்குவதற்கு மூன்று அடிப்படைப் பண்புகள் தேவை - நாணயம், உத்வேகம், மற்றும் உள்ளொளி (இன்சைட்). நாணயம் இருக்குமிடத்தில் நம்பிக்கை இருக்கும். நம்பிக்கை இல்லாவிட்டால், வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் தேவையான சூழ்நிலை உருவாகாது. எனவே ஒரு தொழிலின் வளர்ச்சிக்கு நாணயம் மிக முக்கியமானதாகும். நாணயம் இல்லாத ஏதோ ஒன்று வளர்வதைவிட வளராமல் இருப்பதே இந்த சமூகத்திற்கு நல்லது. ஏனென்றால் அது வளர்ந்தால் இந்த சமூகம் முழுவதும் ஊழல் நிறைந்ததாய் ஆகிவிடும். துரதிர்ஷ்டவசமாக அது ஏற்கனவே வளர்ந்துவிட்டது.

ஒரு தலைமுறைக்கே பயன்படும்படியாக ஒன்று நடக்கவேண்டுமென்றால், அதற்குத் தகுந்த உத்வேகம் தேவைப்படுகிறது. காலை 10 மணிக்கு வேலைக்குச் சென்று மாலை 5 மணிக்கு வீடு திரும்பும் மனிதர்களால் இதனை சாதிக்க முடியாது. 10 முதல் 5 மணி வரை வேலை பார்க்கும் மனிதர்களால் ஒரு தலைமுறையின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுத்த இயலாது. பித்துப்பிடித்த ஆண்களும், பெண்களும்தான் இதற்குத் தேவை! பித்து பிடிக்கும் அளவிற்கு உத்வேகம் தேவைப்படுகிறது. அப்பொழுதுதான் பெருமளவில் அனைவருக்கும் பயன்படும் வகையில் ஒன்றை உங்களால் உருவாக்க முடியும்.

நான் காலை 10 மணிக்கு வேலைக்குச் சென்று, மாலை 5 மணிக்கு வீடு திரும்ப வேண்டும்; நேரத்திற்கு சாப்பிட வேண்டும்; சனி ஞாயிறு விடுமுறை வேண்டும்; என்று நீங்கள் கூறினால் வயிற்றுபிழைப்பை மீறி வேறெதையும் உங்களால் உருவாக்க முடியாது. அதனைத் தாண்டி வேறெதையும் சாதிக்க முடியாது.

அதெல்லாம் சரி, ஆனால் உள்ளொளி மட்டும் இல்லையென்றால், எதையோ ஒன்றைப் பின்பற்றுவதற்கோ எதற்காகவோ கடினமாக உழைப்பதற்கோ ஒன்றுமே இருக்காது. உள்ளொளிதான் மிக முக்கியமானது, அது இல்லையென்றால் இந்த முயற்சியே சாதாரணமானதாகிவிடும். சாதாரணமான ஒன்றை அசாதாரணமான செயல்பாடாக மாற்றுவதற்கு ஒருவருள் ஆழ்ந்த உள்ளொளி இருந்தால் மட்டுமே முடியும்.

Sign Up for Monthly Updates from Isha

Summarized updates from Isha's monthly Magazine on Isha and Sadhguru available right in your mailbox.

No Spam. Cancel Anytime.

சிவன் என்று எதை அழைக்கிறோமோ, ஆதியோகி என்று எதனை குறிப்பிடுகிறோமோ, அந்த பரிமாணம் அனைத்தும் இதுதான் - உணர்ந்தறிதல், உணர்ந்தறிதல். படமெடுத்திருக்கும் அந்த நாகம், உச்சகட்ட உள்ளொளியின் குறியீடு. ஏனென்றால் நம் பாரம்பரியத்திலும் சரி குறியீட்டு மொழியிலும் சரி, ஒரு பாம்பிற்கு எல்லா விஷயமும் தெரியும் என்று நம்பப்படுகிறது. வேறெந்த பிராணியையும்விட, ஏன் மனிதனையும்விட ஒரு பாம்பின் உணர்ந்தரியும் திறன் சிறந்தது.

அவருக்கு காது இல்லாததால், மற்றவர்களின் வம்பு பேச்சைக் கேட்கத் தேவையில்லை. நேரடியாக உணர்ந்தறிந்துக் கொள்ளுதல் மூலமே எல்லாவற்றையும் அறிந்துக் கொள்கிறார். யோகமுறை முழுவதும் இதைப் பற்றியதுதான். யார் சொன்னார்கள் என்பது முக்கியமில்லை, வேதம் இதைச் சொல்கிறது; கிருஷ்ணர் இதைச் சொன்னார், புத்தர் அதைச் சொன்னார் என்றால் - ஆஹா! அற்புதம்தான்! அவர்களை வணங்குகிறோம்; ஆனால் நாங்கள் அதை நம்பவில்லை. நாங்களும் அதை உணர விரும்புகிறோம். இதுவே பாம்பின் இயல்பும் கூட. அவருக்கு இந்த ஊர் வம்புடன் எல்லாம் தொடர்பில்லை.

இந்த இன்சைட் நிகழ்ச்சி ஒரு நிகழ்வாக நடந்து முடிந்தது, ஆனால் நாம் இதனை ஒரு இயக்கமாக உருவாக்க நினைக்கிறோம். ஒரு தொழிலின் வளர்ச்சி மட்டுமே அதன் குறிக்கோளாக இருக்க முடியாது - ஆனால் அது ஒரு நாட்டின் எழுச்சிக்கு வழிவகையாகிறது. துடிப்பான தொழில்முனைவோர் இல்லாமல் எந்த ஒரு நாடும் எழுப்பப்பட்டதில்லை. தொழில்முனைவோர் இல்லாமல் எழும்பிய நாடுகள் 50 வருடங்களுக்குள்ளேயே வீழ்ந்து உடைந்திருக்கின்றன. ஏனென்றால் ஒரு நாட்டை நிலைநிறுத்த உற்சாகமும் உத்வேகமும் தேவை. இல்லை என்றால் அது சாத்தியமாகாது. இதுவே தொழில்முனைவோரின் இயல்பும் கூட.

திரு ஜி.எம். ராவ் என்பவர் தான், நம் நாட்டின் “முதல் முகப்பை” - மக்கள் இந்தியாவில் தரையிறங்கியதும் பார்க்கும் அந்த முதல் முகப்பினை மாற்றியவர். இந்தியாவின் மிகப்பெரிய ஏர்போர்ட்டுகளும் அவர் கட்டியதுதான். இன்றைக்கு, இந்தியாவில் தரையிறங்குவது, வேறெந்த நாட்டைக் காட்டிலும் மேம்பட்டதாக இருக்கிறது என்றே சொல்லலாம். தரவரிசையில் இரண்டாவதாக உள்ள டெல்லி ஏர்போர்ட், மிக குறைந்த நாட்களில் கட்டப்பட்டது. இப்பொழுது அவர் உலகம் முழுவதும் பல ஏர்போர்டுகளை கட்டிக்கொண்டிருக்கிறார். அவர் தம் கடுமையான சரிதத்தை ஆதிமுதல் அந்தம்வரை நம்மிடன் பகிர்ந்துகொண்டார். பெரிதாய் ஒரு கல்வித்தகுதியும் இல்லாமல், ஆங்கிலம் கூடத் தெரியாமல், தனி மனிதராய் தம் தொழிலை வளர்த்திருக்கிறார். இந்த மனிதரின் சாதனையைப் பார்த்து, இந்த மாநாட்டில் உத்வேகம் அடையாத மனிதரே இருந்திருக்க முடியாது.

திரு கே.வி.காமத் அவர்கள், இந்திய வங்கிகளின் இயக்கமுறையில் பெருமளவு மாற்றம் கொண்டு வந்தவர். இரண்டாவது நாளன்று, இவர் வங்கிகளின் இயங்குமுறை பற்றி கொடுத்த அறிவார்ந்த விளக்கவுரை, மக்களின் சிந்தனையைத் தூண்டும்விதமாக அமைந்தது. உலகிலேயே அதிகளவில் விரும்பப்படும், நிர்வாகம் மற்றும் தலைமைப் பதவிக்கான பயிற்சியாளரான திரு. ராம் சரண் அவர்கள், இந்த இரு மனிதர்களின் வாழ்க்கைகளையும் வெற்றிகளையும் ஒரு பாடமாக மாற்றியமைத்து வழங்கினார்.

சிறந்த அறிவாற்றல் கொண்ட, வாழ்க்கையில் வெற்றி கண்ட மனிதர்களின் சங்கமமமாக இந்நிகழ்ச்சி இருந்தது. சிறு தொழில் மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்களுக்குகோ, வெற்றிபெற்ற மனிதர்களுடன் உரையாடி அவர்களுடன் கிடைத்த அந்த நேரத்தை உபயோகமாக்கிக் கொள்ள இது ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமைந்தது. இந்த நிகழ்ச்சியில் சிறிது ஆன்மீக அம்சமும் அடங்கியிருந்த்து. எல்லாம் சேர்ந்து சுவையூட்டி, அனைவருக்கும் இது ஒரு நல்ல அனுபவமாக இருந்திருக்கும் என நினைக்கிறேன். பங்கேற்பாளர்கள், ஆன்லைனில் தகவல் மாற்றிக்கொள்ளவும், பறிமாறிக்கொள்ளவும் சில வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இவையெல்லாம் சேர்த்து மெல்ல ஒரு இயக்கமாக மாறுவதற்கான நோக்கத்துடன் பல நிகழ்ச்சிகளை நாம் திட்டமிட்டு வருகிறோம். 2015 இல் இது “லீடர்ஷிப் அகாடமி” யாக மாற்றம் பெறும். உயர்ந்த தரம் வாய்ந்த சில வணிகக் கல்வி நிறுவனங்களில் உள்ளோரிடம் நான் பேசி வருகிறேன். வெறும் வகுப்பறை கல்வியாக மட்டுமல்லாமல் எல்லாவற்றையும் செயல்-சார்ந்த கல்வியாக அமைக்க, தனித்துவம் வாய்ந்ததாக உருவாக்க திட்டமிட்டுள்ளோம். இதிலிருந்து வெளிவரும் மாணவர்கள் வேலை தேடாமல், துடிப்புள்ள, வெற்றிகரமான தொழில்முனைவோராக இருப்பார்கள். இது எதிர்காலத்திட்டம். இதனை நிகழச் செய்ய நாம் நிறைய செயல் செய்யத் தேவையிருக்கிறது.

Love & Grace