தியானலிங்கத்தின் 16 வருடங்கள்
தியானலிங்கம் 16 வருடங்களைத் தொடும் வேளை, அது நமக்கு வழங்கவிருக்கும் சாத்தியங்கள் பற்றி இந்த சத்குரு ஸ்பாட்டில் நம்மிடம் பகிர்கிறார் சத்குரு.
 
 
 
 

தியானலிங்கம் 16 வருடங்களைத் தொடும் வேளை, அது நமக்கு வழங்கவிருக்கும் சாத்தியங்கள் பற்றி இந்த சத்குரு ஸ்பாட்டில் நம்மிடம் பகிர்கிறார் சத்குரு.

தியானலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு 16 வருடங்கள் ஆகிவிட்டது. 16 என்பது யோக முறையில் ஒரு முக்கியமான எண்ணிக்கை. ஆதியோகி தன் ஞானத்தைப் பரிமாறியபோது, மனிதன் தன் உச்சநிலையை அடைவதற்கான 112 வழிமுறைகளை ஆராய்ந்துணர்ந்து, அவற்றை வழங்கினார். ஆனால் அவருடைய 7 சீடர்களுக்கும் (சப்தரிஷிகள்), இந்த 112 வழிமுறைகளை உள்வாங்கிக் கொள்ள நீண்டகாலம் பிடிக்கும் என்று அவர் பார்த்தபோது, அவற்றை 7 பாகங்களாக, ஒவ்வொருவருக்கும் 16 வழிமுறைகளாகப் பிரித்து வழங்கினார்.

ஏழு சீடர்களும் 16 வழிமுறைகளை உள்வாங்கிக் கொண்டபின், ஆதியோகி, "நீங்கள் இதைக் கொண்டுசென்று உலகிற்கு பரிமாறும் நேரம் வந்துவிட்டது" என்றார். அவர்கள் இதைத் தாங்கமுடியாமல் திணறினார்கள், ஏனென்றால் ஆதியோகி இல்லாத ஒரு வாழ்க்கையை அவர்களால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அவர்கள் விடைபெறும் நேரம் பார்த்து, ஆதியோகி, "குரு தட்சணை எங்கே?" என்று கேட்டார். இந்த பாரம்பரியத்தில், ஒரு சீடன் விடைபெறும் முன்பு, ஏதோவொன்றை அர்ப்பணம் செய்யவேண்டும். குருவிற்கு தட்சணை வேண்டும் என்று கிடையாது, விலைமதிப்பில்லாத ஏதோ ஒன்றை அர்ப்பணித்துவிட்ட உணர்வோடு தன் சீடர்கள் செல்லவேண்டும் என்று அவர் விரும்புகிறார். ஏனென்றால், அந்த அர்ப்பணிப்பு நிலையில்தான் ஒரு மனிதன் தன் சிறந்த நிலையில் செயல்படுகிறான். இந்த ஏழு பேரும் செய்வதறியாமல் திகைத்துப்போனார்கள், "இவருக்கு என்ன அர்ப்பணிப்பது?" அவர்கள் அணிந்திருந்த கோவணத்தைத் தவிர அவர்களிடம் எதுவுமில்லை.

அப்போது அகஸ்திய முனிவர் முன்வந்து, "நான் என்னுள் 16 இரத்தினங்களை சுமந்துகொண்டு இருக்கிறேன், இவை மிகவும் விலைமதிப்பானவை. நான் உங்களிடமிருந்து பெற்றுக்கொண்ட இந்த பதினாறு இரத்தினங்களை உங்களுக்கு அர்ப்பணிக்கிறேன்" என்று கூறி, அந்தப் பதினாறு வழிமுறைகளையும் ஆதியோகியின் காலடியில் வைத்துவிட்டு, வெறும்கையுடன் நின்றார். மற்ற ஆறு பேரும் அவரைப் பின்தொடர்ந்து, ஆதியோகியிடமிருந்து பெற்றுக்கொண்ட 16 வழிமுறைகளையும் மீண்டும் அவரிடம் அர்ப்பணித்துவிட்டு, அவர்களும் வெறும்கையுடன் நின்றனர். இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் - அவர்கள் வாழ்க்கையின் நோக்கமே இந்த ஞானத்தைப் பெற்றுக்கொள்வதாக இருந்தது. 84 வருடங்களாக நெஞ்சை நொறுக்கும் கடும் ஆன்மீக சாதனா செய்து இதை அவர்கள் சம்பாதித்தார்கள் - அதை ஒரே க்ஷணத்தில் மறுபடியும் அவர் காலடியில் வைத்துவிட்டு வெறுமையாக நின்றார்கள். அவர்கள் கையில் எதுவுமில்லாமல் நின்றார்கள்.

ஆதியோகியின் போதனையில் இதுதான் மிகப்பெரிய அம்சம். அவர்கள் வெறுமையாக சென்றதால், அவர்களும் ஆதியோகியைப் போலவே ஆனார்கள். "ஷி-வா" என்றால், "எது இல்லையோ, அது". அவர்களும் "ஒன்றுமில்லாதது" ஆனார்கள். இல்லாவிட்டால், அவர்கள் இந்த 16 வழிகளை ஒரு மகுடம் போல சுமந்திருப்பார்கள், இதை உலகின் பிற பகுதிகளில் விற்பனை செய்திருப்பார்கள். அவர்கள் வெறுமையானதால், ஏழு பேர் மூலமாகவும் 112 வழிமுறைகளும் வெளிப்பட்டது. அவர்கள் உள்வாங்கிக்கொள்ள முடிந்திராத விஷயங்கள், அவர்கள் திறமையில் இல்லாத விஷயங்கள், அவர்களுடைய அங்கமானது, அவர்கள் வாழ்க்கையின் மிக மதிப்பான அம்சத்தை அவர்கள் திருப்பி அர்ப்பணித்துவிட்ட ஒரே காரணத்தால்...

எனவே 16 என்பது நமக்கு மிக முக்கியமான எண். அதனால் அடுத்த 16 ஆண்டு காலத்தில், தியானலிங்கத்தை அனைவருக்கும் கிடைக்கும் விதமாகச் செய்ய, நாங்கள் குறிப்பிட்ட சில விஷயங்களைச் செய்வோம். மிகக்குறைவானவர்களே அதை உண்மையில் உட்கொண்டுள்ளார்கள், ஆனால் இது ஞானத்தின் ஓர் அளப்பரிய களஞ்சியம், வேறெங்கும் இது இப்படி உருவாக்கப்படவில்லை. இந்த உருவம் மிக மிக தனித்துவம் வாய்ந்தது. மக்கள் இதற்கு அதிக கூர் உணர்வு கொண்டவர்களாக மாறும் நேரம் வந்துவிட்டது. இதை நான் அக்கறையில்லாமல் சொல்லவில்லை, ஆனால் மக்கள் இங்கு சுற்றுலாப் பயணிகளைப் போல வந்து பதினைந்து நிமிடங்கள் அமர்ந்துவிட்டு இறுதியில், "பிரசாதம் இல்லையா?" என்று கேட்பார்கள்.அல்லது "பதினைந்து நிமிடங்கள் முடியப்போகிறதா?" என்று கேட்பார்கள். வேறு சிலர் பதினைந்து நிமிடங்களை ஒரு க்ஷணம் போல உணர்வார்கள். நீங்கள் ஒரு சுற்றுலாப் பயணியைப் போல வந்தால், அதில் என்ன பிரச்சனை? ஆனால் சுற்றுலா பயணியைப் போல நீங்கள் இந்த உலகைவிட்டு சென்றால், அது பரிதாபத்திற்குரிய நிலை. நீங்கள் இந்த உலகைவிட்டுப் போகும்முன், இந்த உலகை எது உருவாக்கியதோ, அதில் ஒரு சிறிதளவேனும் உங்களுடையதாக இருக்கவேண்டும். அது உங்களுடையதாக ஆகவில்லை என்றால், உங்களிடம் எஞ்சியிருக்கப்போவது எல்லாம் ஒருபிடி மண்தான், அதை எப்படியும் திருப்பி எடுத்துக்கொள்வார்கள்.

உங்களுக்குள் ஏதோ ஒன்று தீப்பற்றியிருந்தால், உங்கள் உடலின் உஷ்ணத்திற்கு மேல் ஏதோ ஒன்று உயிர்ப்புடன் இருந்தால் - நீங்கள் ஆசிரமத்தில் வசிப்பவராக இருந்தாலும் சரி, இல்லை ஆசிரமத்தில் சிறிது காலம் தங்குபவராக இருந்தாலும் சரி - வரும் வருடங்களில், தியானலிங்கம் உங்களுக்கு செயல்படும் விதத்தை மிகைப்படுத்துவதற்கான வழிகளை நாங்கள் வழங்கவுள்ளோம். உங்கள் பொருள்தன்மையைக் கடந்த ஏதோ ஒன்றை நீங்கள் உணரவேண்டும் என்பதே என்னுடைய ஒரே விழைவு. இது அனுபவங்களைத் தேடுவதால் வருவதில்லை, உங்களை அதிகம் உள்வாங்கும் தன்மை கொண்டவராக, திறந்த தன்மையில் இருப்பவராக செய்துகொள்வதாலே நிகழும். உங்கள் சாதனாவே உங்கள் உயிர்நாடி. நான் உங்களுடன் இருக்கிறேன்.

Love & Grace

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1