Question: பௌர்ணமியன்று லிங்கபைரவியின் சிறிய உருவமான உற்சவமூர்த்தி, ஊர்வலமாக எடுத்துசெல்லப்பட்டு தியானலிங்கம் முன் லிங்கபைரவி மஹா ஆர்த்தி நடைபெறுகிறது. இதன் முக்கியத்துவம் என்ன? தேவி சிவனின் காதலை நாடுகிறாள் என்று குறிப்பிட்டீர்கள். இதைப்பற்றி விரிவாகச் சொல்லமுடியுமா?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

வாழ்வை மாற்றி அமைக்கக்கூடிய ஒரு உண்மையான ஆன்மிக செயல்முறையைப் பரிமாறவேண்டும் என்றால், உங்களுக்கு அபரிமிதமான சக்தி தேவை. அந்த சக்திமூலத்தை நீங்கள் உருவாக்கவில்லை என்றாலோ, அந்த சக்தி கிடைக்கும் வகையில் உள்ள வேறொரு சக்தியை நீங்கள் அணுகவில்லை என்றாலோ, உயிர்த்தன்மையை பரிமாறமுடியாது. வெறும் வார்த்தைகள் மட்டுமே பரிமாறப்படும். இப்படி ஒரு செயல்முறையை பரிமாறுபவர் ஒரு குறிப்பிட்ட சக்திநிலையில் இருந்தால், இந்த பரிமாற்றம் சிறிது காலத்திற்குத் தொடரும். அவர் உடல் சிறிது வலுவிழந்தால்கூட இந்த செயல்முறையும் உயிரிழந்துவிடும். அவர் இறந்துபோக வேண்டியதில்லை, உடலில் சிறிது பலவீனம் வந்தால் போதும், அந்த செயல்முறை முழுவதும் முடிந்துவிடும். எனவே பலகாலம் நிலைத்திருக்கும் ஒரு அடிப்படையான சக்திமூலத்தை உருவாக்கவில்லை என்றால் உயிரோட்டமான ஆன்மிக செயல்முறையை தொடர்ந்து பரிமாற இயலாது.

தியானலிங்கம் அப்படிப்பட்ட சக்தியின் ஊற்றாகத் திகழ்கிறது. அது மிகவும் சூட்சுமமாக இருப்பதற்குக் காரணம், அது நீண்டகாலம் நிலைத்திருக்க வேண்டும். நீண்டகாலம் என்றால் மிக மிக நீண்ட காலம். மிக உறுதியாக, வெளிநிலையில் சக்திவாய்ந்ததாக, தேவியைப் போல ஏதோ ஒன்றை நீங்கள் உருவாக்கினால், அதை நீங்கள் தினசரி பராமரிக்காவிட்டால் அது நெடுங்காலம் நீடிக்காது. தேவியை நீங்கள் தினமும் சக்தியூட்ட வேண்டும், இல்லாவிட்டால் அவள் உயிர்வாழமாட்டாள். எனவேதான் தேவியைத் தொடர்ந்து உயிர்ப்பாக வைத்திட, அவளைச் சுற்றி இருப்பவர்களுக்கு மிகுந்த அர்ப்பணிப்பும், பக்தியும் தேவைப்படுகிறது. தியானலிங்கத்தை பராமரிப்பவர்கள், கோவில் வளாகத்தையும், அங்கு வருகைதரும் மக்களையும் மட்டும்தான் கவனித்துக் கொள்கிறார்கள். அவர்கள் எவ்விதத்திலும் தியானலிங்கத்தைப் பராமரிப்பதில்லை, ஏனென்றால் அவருக்கு எந்த பராமரிப்பும் தேவையில்லை. எவரும் கவனிக்காவிட்டாலும் அவர் அப்படியேதான் இருப்பார். லிங்கபைரவியைப் பொறுத்தவரை இது முற்றிலும் மாறுபட்ட அமைப்பு. அங்கு வளாகத்தையும் வருகைதரும் மக்களையும் மட்டுமல்லாமல், தேவியையும் அன்றாடம் பராமரிக்கிறார்கள். அவளை தினமும் பராமரிக்காவிட்டால் அவள் நீண்டகாலம் உயிர்வாழமாட்டாள். அவளை நீங்கள் நன்றாக கவனித்துக் கொள்ளாவிட்டால், அவள் சீற்றங்கொள்வாள். அவள் கோபம் கொள்ளாதவாறு பார்த்துக்கொள்ளும் புத்தி அவளை கவனித்துக் கொள்பவர்களுக்கு இருக்கும் என்று நம்புகிறேன்.

தேவி தன் வாழ்வாதாரத்தை பிரதான சக்திமூலமான தியானலிங்கத்திலிருந்து எடுத்துக்கொள்கிறாள். அதனால்தான் அவள் இவ்விடத்தில், இவ்விதத்தில் அமைக்கப்பட்டிருக்கிறாள். நாம் இப்போது வேறு எதை உருவாக்கினாலும், அதை உலகில் எவ்விடத்தில் வைத்தாலும், அதுவும் இதே மூலத்தில் இருந்துதான் சக்திபெறும். தியானலிங்கம் ஒரு முழுமையான உயிர், ஏழு சக்கரங்கள், இன்னும் பல, என்று எல்லாம் உள்ளடக்கிய உயிர். அவர் உடலில்லாத முழுமையான உயிர். இது நல்லது. உடலின் பிரச்சனைகள் அவருக்கு இல்லை. தேவி வெறும் மூன்றரை சக்கரங்கள்தான். அவள் பாதி உயிர்தான், ஆனால் அதிர்வுமிகுந்த பாதி. அவளை நீங்கள் தவறவிடமுடியாது. நீங்கள் தியானலிங்கத்தில் எதுவும் உணரவில்லை என்றால் லிங்கபைரவியிடம் செல்லுங்கள். அவள் உங்களை முகத்தில் அறைவாள்! அவள் சக்தி அவ்வளவு வெளிப்படையானதாக இருக்கும், ஏனென்றால் ஒரு குறிப்பிட்ட விதத்தில் அவள் உயிர்ப்பாக இருக்கிறாள். தொடர்ந்து பராமரிக்கப்பாட்டாலொழிய, இந்த அதிர்வு நீண்டகாலம் நீடிக்கமுடியாது.

அதனால் மாதம் ஒருமுறை அவள் வெளியேவந்து தியானலிங்கத்துடன் கொஞ்சம் நேரடித் தொடர்பு வைத்துக்கொள்கிறாள். காரணம், அவள் வாழ்வாதாரம் இதைச் சார்ந்திருக்கிறது. வரும் தலைமுறைகளில் அவளை பராமரிப்பவர்கள், ஒவ்வொரு பௌர்ணமியின்போதும் அவள் வெளியேவந்து இந்தத் தொடர்பை ஏற்படுத்திக்கொள்வதை உறுதிசெய்துகொள்ள வேண்டும். மழை கொட்டினாலும் அவள் வெளியே வரவேண்டும். வெள்ளம் வந்தாலும் சரி, அவள் அப்போதும் வெளியே வந்தாகவேண்டும். அவள் உயிர்வாழ இது அவசியம், இல்லாவிட்டால் அவள் சக்தி கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கரைந்துவிடுவாள். அவள் பலமானவளாக, சக்திவாய்ந்தவளாக, அழகானவளாகவே இருக்க விரும்புகிறாள். ஆனால் அவள் வெறுமையாகிவிட்டால், கடுஞ்சினம் கொண்டுவிடுவாள். அவளை அந்த நிலையில் வைத்திருப்பது நல்லதல்ல. முழுமையாகவும் உயிர்ப்பாகவும் அவளை வைத்திருந்தால், அனைவர்மீதும் நல்வாழ்வைப் பொழிந்து நனைத்திடுவாள்.

Love & Grace