தீபாவளி - உள்நிலை நரகத்திலிருந்து புதிய ஒளி நோக்கி

தீபாவளி தினத்தை முன்னிட்டு, தீபங்களின் ஒளியைக் கொண்டாடும் தீபாவளியின் முக்கியத்துவத்தை புதியதொரு கண்ணோட்டத்தில் சத்குரு நமக்கு விளக்குகிறார். அதோடு நமக்குள் புதியதொரு ஒளி சுடர் விடுவதற்கு என்ன செய்யவேண்டும் என்றும் வழிகாட்டுகிறார்.
 
தீபாவளி - உள்நிலை நரகத்திலிருந்து புதிய ஒளி நோக்கி, deepavali ulnilai naragathilirunthu puthiya oli nokki
 
 
 

தீபாவளி தினத்தை முன்னிட்டு, தீபங்களின் ஒளியைக் கொண்டாடும் தீபாவளியின் முக்கியத்துவத்தை புதியதொரு கண்ணோட்டத்தில் சத்குரு நமக்கு விளக்குகிறார். அதோடு நமக்குள் புதியதொரு ஒளி சுடர் விடுவதற்கு என்ன செய்யவேண்டும் என்றும் வழிகாட்டுகிறார்.

இந்த தீபாவளி தினத்தில், அனைவருக்கும் என் தீபாவளி நல்வாழ்த்துக்கள். தீபாவளி என்பது "ஒளியின் திருவிழா". ஒளி என்பது மனித வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமாக இருப்பதற்கு, பார்வைக்கான நம் புலன்கள் இயங்கும் விதமும் ஒரு காரணம். மற்ற உயிரினங்களுக்கு ஒளி என்றால் பிழைப்பு மட்டுமே. ஆனால் மனித உயிருக்கோ, ஒளி என்பது, பார்ப்பதும் பார்க்காமல் இருப்பதும் பற்றியது மட்டுமில்லை. நம் வாழ்வில் ஒளி பெருகுவது புதியதொரு துவக்கத்தைக் குறிக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக தெளிவைக் குறிக்கிறது.

பெரும்பாலான உயிர்கள் உள்ளுணர்வால் உயிர்வாழ்கின்றன. அதனால் அவற்றுக்கு என்ன செய்யவேண்டும் செய்யக்கூடாது என்பது பற்றிய குழப்பங்கள் எதுவும் கிடையாது. ஒரு புலிக்குட்டி ஒரு ஓரமாக உட்கார்ந்து, "நான் நல்ல புலியாக வளர்வேனா, இல்லை வீட்டுப்பூனையாக வளர்ந்துவிடுவேனா?" என்றெல்லாம் யோசிப்பது கிடையாது. அது நன்றாக சாப்பிட்டால் போதும், நல்ல புலியாக வளரும்.

நீங்கள் மனிதராக பிறந்திருக்கலாம், ஆனால் நல்ல மனிதராவதற்கு நீங்கள் நிறைய செயல்கள் செய்யத் தேவையிருக்கிறது. அவ்வளவு செய்தாலும் என்ன நிலையில் இருக்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியாது. ஒப்பிட்டுப் பார்த்தால், வேறொருவரை விட நீங்கள் நன்றாக இருப்பது போலத் தெரியலாம். ஆனால் நீங்களாக என்ன நிலையில் இருக்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியாது.

மனித புத்திசாலித்தனம் எத்தகையது என்றால், அதனை நீங்கள் சரியாக ஒருங்கிணைக்கவில்லை என்றால், உங்களோடு ஒப்பிடும்போது கோடியில் ஒரு பங்கு மூளை இருக்கும் மற்ற உயிரினங்கள் உணரக்கூடியதை விட அதிகமான குழப்பத்தையும் துயரத்தையும் மனித புத்தியால் உருவாக்க முடியும். அந்த உயிரினங்கள் அனைத்தும் குழப்பமின்றி செயல்படக்கூடியவை. ஒரு மண்புழுவும் பூச்சியும் தான் என்ன செய்யவேண்டும் செய்யக்கூடாது என்பதை தெரிந்திருக்கும், மனிதன் தெரியாதிருப்பான். குழம்பியிருப்பதற்கு புத்திசாலித்தனம் தேவை. மனிதர்களின் போராட்டமே நம் மூளையின் செயலாற்றலால்தான்.

அபாரமான சாத்தியமாக இருப்பதற்கு பதிலாக, புத்திசாலித்தனம் என்பது நிறைய மக்களுக்கு ஒரு பிரச்சனையாக மாறிவிட்டது. அவர்கள் தங்கள் துயரத்திற்கு வெவ்வேறு பெயர்கள் கொடுத்திருக்கலாம். அதனை மன அழுத்தம், பதற்றம், மனச்சோர்வு, பைத்தியம், துயரம் என்று எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். ஆனால் அடிப்படையில் அவர்கள் புத்திசாலித்தனமே அவர்களுக்கு எதிராக திரும்பி இருப்பதையே அது குறிக்கிறது. எவரும் உங்களைக் குத்தாமல், நீங்களே உங்களுக்கு வேதனையை உருவாக்கிக்கொண்டால், உங்கள் புத்திசாலித்தனம் உங்களுக்கு எதிராக வேலை செய்வதையே இது குறிக்கிறது. மனித இருப்பின் தன்மையே இப்படி இருக்கும்போது, தெளிவு என்பது அனைத்திலும் அதிமுக்கியமாகிறது. அதனால்தான் ஒளி முக்கியமாகிறது. ஒளி என்றால் தெளிவு. உங்களுக்குள் கலங்கியிருப்பதை தெளிவாக்கும் ஒளியைக் கொண்டாடும் பண்டிகை என்பதால், தீபாவளி முக்கியமாகிறது. சரித்திரரீதியாக பார்த்தால், கிருஷ்ணர் நரகாசுரனை வதம் செய்த தினமாக கருதப்படும் தினத்தை இந்த பண்டிகை கொண்டாடுகிறது.

நரகாசுரன் என்பது அவருடைய இயற்பெயரல்ல, ஆனால் அனைவருக்கும் நரக வேதனையைத் தந்ததால் அவரை நரகாசுரன் என்று அழைத்தார்கள். நரகம் என்பதன் அர்த்தம் தெரிந்ததே. அதனால் அனைவருக்கும் நரக வேதனை தருபவன் நரகாசுரன். இந்த நரக வேதனைக்கு கிருஷ்ணன் முடிவு கொண்டுவந்ததால், மக்கள் வீடுதோறும் தீபங்கள் ஏற்றி கொண்டாடுகின்றனர். ஆனால் நரகாசுரனை வதம் செய்த நிகழ்ச்சி பல காலத்திற்குப் பிறகே நடந்தேறியது. வருடத்தின் இந்த சமயத்தில் விளக்கேற்றி கொண்டாடும் பாரம்பரியம் பன்னிரண்டு முதல் பதினைந்தாயிரம் ஆண்டுகள் பழமையானது. இந்த சமயத்தில் உயிர்த்தன்மையில் சற்று மந்தமான தன்மை ஏற்படுவதை மக்கள் கவனித்தனர். நீங்களே வெடி போல உயிர்துடிப்பாக வாழாவிட்டால், முழு உயிர்ப்பாகவும் துடிப்பாகவும் இல்லாவிட்டால், உங்களைச் சுற்றி வெடிக்கும் வெடிகளாவது உங்களை சற்று விழித்தெழ வைக்கவேண்டும். அதனால்தான் நரக சதுர்தசி தினத்தில், காலை 4 மணி முதல் தேசம் முழுவதும் வெடி வெடிக்கிறார்கள், எல்லோரும் விழித்தெழுந்து உயிர்துடிப்பாக இருக்கவேண்டும் என்பதற்காக.

இது இப்பண்டிகையின் தன்மை. ஆனால் மந்தத்தன்மையை தோற்கடிப்பதுதான் இதன் முக்கியமான அம்சம். வாழ்க்கை என்பது நேரம் மற்றும் சக்தியின் விளையாட்டு. உங்களிடம் குறிப்பிட்ட அளவு நேரமும் குறிப்பிட்ட அளவு சக்தியும் உள்ளது. நீங்கள் பிஸியாக இருந்தாலும், சோம்பலாக இருந்தாலும், ஆரோக்கியமாக இருந்தாலும், நோய்வாய்ப்பட்டு இருந்தாலும் நேரம் கடந்துபோகத்தான் செய்யும். நம் அனைவருக்கும் நேரம் அதே வேகத்தில்தான் கடந்து போகிறது. காலத்தை எவராலும் மெதுவாக ஓடும்படியும் செய்யமுடியாது, வேகமாக ஓடும்படியும் செய்யமுடியாது. ஆனால், நீங்கள் ஆனந்தமாக இருக்கிறீர்களா அல்லது துயரமாக இருக்கிறீர்களா என்பதைப் பொருத்து காலம் குறித்த அனுபவம் உங்களுக்கு மாறுபடுகிறது. நீங்கள் பரவசமாக இருந்தால் 24 மணி நேரம் ஒரு நிமிடம் போல கடந்துவிடும். நீங்கள் மனச்சோர்வுடன் இருந்தால் 24 மணி நேரம் ஒரு யுகம் போல கடக்கும்.

நீங்கள் ஆனந்தமாக இருந்தால் இது மிகவும் குறுகிய வாழ்க்கை. ஒரு மனிதர் சுமக்கும் ஆற்றலை வைத்துப் பார்த்தால், நூறு வருடம் வாழ்ந்தாலும் அது அதிவேகமாக ஓடிவிடும். ஆனால் உங்களுக்குள் மந்தத்தன்மை புகுந்து துயரமாக நீங்கள் இருந்தால், நேரம் ஓடாதது போலத் தோன்றும். மக்கள் துயரமாக இருக்கும்போது, பொழுதுபோக்கிற்கான தேவை அதிகரிக்கிறது. மக்கள் ஆனந்தமாக இருக்கும்போது அவர்களுக்கு பொழுதுபோக்கிற்கு நேரம் இருப்பதில்லை. உங்கள் நேரம் முழுவதையும் ஆனந்தமே ஆட்கொள்ளும். காலையில் சூரியனோடு எழுந்தால், நீங்கள் கவனிக்கும் முன்பு சூரியன் மறைந்து இரவு வந்துவிடும். நீங்கள் ஆனந்தமாக இருக்கும்போது உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்வீர்கள். நீங்கள் துயரமாக இருக்கும்போது எப்படி எல்லாவற்றையும் தவிர்ப்பது என்றே எப்போதும் பார்ப்பீர்கள்.

"நல்லவேளை வெள்ளிக்கிழமை வந்துவிட்டது" என்ற கலாச்சாரம் இப்போது பரவிக்கொண்டு வருகிறது. அதாவது ஐந்து நாட்கள் துயரம், அடுத்த இரண்டு நாட்கள் ஆனந்தமில்லை, சாதாரணமாக அவை போதையில் கழிகின்றன. மக்களை சிரிக்கவைத்து, ஆடவைத்து, பாடவைத்து, ஆனந்தமாக ஏதாவது செய்யவைக்க வேண்டும் என்றால், போதை வேண்டும், அல்லது ஒரு கிளாஸ் மதுவாவது கொடுக்கவேண்டும் என்ற நிலை இப்போது வந்துவிட்டது. பல்வேறு விதங்களில் மக்கள் தங்களுக்குள் மந்தத்தன்மையை உருவாக்குவதால் இப்படி நடந்திருக்கிறது. மந்தத்தன்மை வந்துவிட்டதால் வாழ்க்கை மிகவும் நீளமாகத் தெரிகிறது. தீபாவளி என்பது மந்தத்தன்மையை ஜெயிப்பதைக் குறிக்கிறது. ஏனென்றால், மந்தத்தன்மையே நரகத்தின் மூலம். மந்தத்தன்மை வந்துவிட்டால் நீங்கள் நரகத்திற்குப் போகமாட்டீர்கள், நீங்களே நரகமாக மாறிவிடுவீர்கள். நீங்களாக தனியாக இருக்கும்போதும் கூட இது முடிவில்லாமல் தொடரும், வேறெவரும் எதுவும் செய்யாமலே நரகமாக இருக்கும். ஏதோவொன்று நடந்தால், மக்கள் பாதிப்படைவார்கள். எதுவும் நடக்காவிட்டால், இன்னும் அதிகமாக பாதிப்படைவார்கள். மக்கள் மிக மோசமாக பாதிக்கப்படும் விஷயங்களில் ஒன்று என்றால், அவர்கள் வாழ்வில் எதுவும் நடக்காதிருப்பதுதான். அதனால் தீபாவளி மிகவும் முக்கியமானது.

பலர் தங்களுக்குள் நரகத்தை உருவாக்க வெளி உதவி தேடுவதில்லை, சுய-உதவியிலேயே தங்களுக்குள் நரகம் உருவாக்கிக் கொள்கிறார்கள். கோபத்தில், பொறாமையில், பயத்தில், நீங்கள் நரகத்தை உருவாக்கி நரகாசுரராக மாறுகிறீர்கள். இவற்றை உங்களுக்குள் இருந்து நீக்கிவிட்டால், ஒரு புதிய ஒளி சுடர்விடுகிறது. இந்த தீபாவளி தினத்தில் உங்களுக்குள் ஒளி பெருகட்டும்!

ஆனந்தமும் ஆசிகளும்,

 

 
?rel=0" frameborder="0" allowfullscreen="">