ஒரு வாரம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மன்ஹாட்டன் பகுதியில் இருந்தேன். அப்போது சில முக்கியமான சந்திப்புகள் நிகழ்ந்ததோடு, எனது சொந்த வேலைகள் சிலவற்றைச் செய்வதற்கும் தேவையான நேரம் கிடைத்தது. மேலும் அங்கு சீதோஷ்ணமும் மிகவும் இதமாக இருந்தது. பிராட்வே தியேட்டர்களிலும் சிறிது நேரம் செலவழித்தேன்.

பிராட்வே சுற்றி வளர்ந்திருக்கும் இத்தனை விதமான திறமைகளைப் பார்க்கும்போது, அது மிகவும் நம்ப முடியாததாக இருக்கிறது. இசை, நடனம், நடிப்பு என அனைத்திலும் அசர வைக்கும் அபாரமான திறமைகள். நிச்சயமாக, இந்தியாவிலும் இதே போன்ற திறமைகள் ஓரளவாவது உருவாக வேண்டும்.

நம் நாட்டில் ஏதாவது ஒரு நகரத்தில் தியேட்டருக்கென்றே ஒரு சாலையை உருவாக்கினால், இப்படிப்பட்ட திறமைகளும், அதை ரசிக்கும் ரசிகர்களும் உருவாகி, காலப்போக்கில் பெருகுவார்கள். அதற்கென குறிப்பிட்ட ஒரு அளவுகோலை வகுப்பதென்பது மிகவும் சவால்தான். ஆனால் இதைச் செய்துதான் ஆகவேண்டும். அப்படிச் செய்வதால் அது விவரிக்க முடியாத வழிகளில் சமூகத்தை வளமாக்கும்.

இன்றைய இந்தியாவின் நிலைமை மிகவும் அதிகப்படியாக சினிமாவை நோக்கி சாய்ந்துள்ளது. நம் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் விரிவான அணுகுமுறையை நாம் கையாள வேண்டியுள்ளது. இந்தியாவில், பொழுதுபோக்கும் விளையாட்டும் ஒரே பக்கமே சாய்ந்துள்ளது. இந்த அணுகுமுறையில் மாற்றத்தைக் கொண்டுவரும் நேரம் வந்துவிட்டது.

ஒரே நாளில் நியூயார்க், நியூஜெர்சி, கனெக்டிகட் என மூன்று இடங்களுக்கு, மூன்று நிகழ்ச்சிகளுக்கு ஹெலிகாப்டரில் பறந்து, கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. நியூயார்க்கின் வான்வெளியில், ஹட்சன் நதியின் மேல், கனெக்டிகட் செல்லும் வான்பாதையில், கொஞ்சம் சவாலான வானிலையை சமாளித்துப் பறந்த அந்த அனுபவம் அருமையாக இருந்தது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உலக வர்த்தக மையம் இருந்த இடத்தில் இப்போது கட்டப்பட்டு வரும் புதிய கோபுரங்களைப் பார்த்து ஒரு நீண்ட பெருமூச்சு எழுந்தது. அந்த விதிவசமான நாளில் உலக வர்த்தக மைய கோபுரங்கள் இடிந்ததிலிருந்து, இந்த உலகம் எப்படியெல்லாம் மாறிவிட்டது?

உங்களுக்குத் தெரியுமா, 2001 செப்டம்பர் 10ம் தேதியன்று, அதாவது உலக வர்த்தக மைய கோபுரங்கள் இடிக்கப்பட்டதற்கு முந்தைய நாள் மாலையில், அதே மன்ஹாட்டன் பகுதியில் இருக்கும் ரிவர்சைட் சர்ச்சில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தேன்.

24 மணி நேரத்தில் நான் பேசிக் கொண்டிருந்த இடத்திலிருந்து வெறும் ஒரு மைல் தொலைவில், பல சம்பவங்கள் நிகழ்ந்துவிட்டன. செப்டம்பர் 10ம் தேதி நான் அமெரிக்காவிலிருந்து சைப்ரஸ் நாட்டுக்குக் கிளம்பிவிட்டேன். இதில் ஒரு விசித்திரம் என்னவென்றால் சைப்ரஸ் நாட்டின் தலைநகரான நிகோசியாவில் இருக்கும் அமெரிக்கத் தூதரகத்தில் உரையாற்றுவதற்குத்தான் நான் அங்கு பயணமானேன்.

அமெரிக்காவில் நடைபெற்ற அந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்துக்குப் பிறகு, மனித இனம், இதுவரை பார்த்திராத வகையில் மிகப் பெரிய அளவு வன்முறை, வெறுப்பு, அடக்குமுறைகளினால் பெரும் வேதனையை அனுபவித்துவிட்டது.

ஆ... இங்கிலாந்தில், இதுவரை இல்லாத அளவில், 700க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட ஷாம்பவி மஹாமுத்ரா தீட்சை லண்டனில் நடைபெற்றது. அந்த வகுப்பு மிகப் பெரும் கொண்டாட்டமாக அமைந்திருந்தது.

முதன்முறையாக இது போன்ற மிகப் பெரிய நிகழ்ச்சி ஒன்றை, இங்கிலாந்தில் இருக்கும் தன்னார்வத் தொண்டர்கள், மிகச் சிறப்பாக நடத்தி முடித்ததால், அடுத்து 2013 பிப்ரவரியில் இதை விட பெரிய நிகழ்ச்சி ஒன்றை நடத்துவதற்கு இப்போதே தயாராகி விட்டார்கள்.

மேலும் லண்டன் பிசினஸ் ஸ்கூலில், டொனால்ட் சல் என்பவருடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அவர் வர்த்தகக் கல்வி இயலில் புகழ் பெற்ற கல்வியாளர். தனது துறை தொடர்பாக அமெரிக்காவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையே அடிக்கடி பயணம் மேற்கொள்பவர்.

டானும், லண்டன் பிசினஸ் ஸ்கூலும் வெறுமனே சந்தைப் பொருளாதாரக் கணக்குகளையும், நிர்வாகவியலில் முக்கியமற்ற புள்ளி விவரங்களையும் ஆராய்வதை நிறுத்திவிட்டு, விவேகமான, ஆழமிக்க தேடல்களில் ஈடுபடத் துவங்கியிருப்பதற்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

லண்டன் ஹீத்ரோ விமானநிலையத்தின் 5வது நுழைவாயிலிலிருந்து இதை எழுதிக் கொண்டிருக்கிறேன். ஹைதராபாத் செல்லும் பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் விமானம் இன்னும் சில நிமிடங்களில் புறப்பட்டுவிடும். Hydera - Bad ? வேண்டாம்... நல்ல ஹைதராபாத்தாகவே இரு.

Love & Grace