போதையில் மிதப்பது
இந்த வார சத்குரு ஸ்பாட்டில், போதைப் பொருட்கள் ஞானோதயத்திற்கு வழிகோலுமா என்ற கேள்விக்கு விடையளிப்பதோடு, போதைப் பொருட்களுக்கு அடிமையாவது குறித்து "போதைப்பொருட்களின் கேடு" என்ற தலைப்பில் ஒரு கவிதையையும் சத்குரு இயற்றியுள்ளார்.
 
போதையில் மிதப்பது, Bothaiyil mithappathu
 
 
 

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், போதைப் பொருட்கள் ஞானோதயத்திற்கு வழிகோலுமா என்ற கேள்விக்கு விடையளிப்பதோடு, போதைப் பொருட்களுக்கு அடிமையாவது குறித்து "போதைப்பொருட்களின் கேடு" என்ற தலைப்பில் ஒரு கவிதையையும் சத்குரு இயற்றியுள்ளார்.

கஞ்சா பிரியர்கள் என்னிடம் வந்து, ஞானோதோயம் அடைவதற்கான வழியாக ஏதாவது மூலிகை அல்லது போதைப் பொருட்களைப் பயன்படுத்தலாமா என்று அடிக்கடி கேட்கிறார்கள். சிவனே முழு போதையில் இருந்தவனாகக் கருதப்படுகிறான். பலமுறை இமயமலையிலும் வேறு இடங்களிலும் என்னை கஞ்சா புகைத்திட சில சாதுக்கள் அழைத்துள்ளார்கள். நான் போதைப் பொருள் பயன்படுத்துபவன் என்றே அவர்கள் நினைத்துவிட்டார்கள். என் கண்களைப் பார்த்தால் நான் எப்போதுமே போதையில் இருப்பதைப் பார்ப்பீர்கள், ஆனால் நான் எந்த போதைப் பொருளும் எடுத்துக்கொள்ளாமல் போதையில் இருக்கிறேன். நீங்கள் அனுபவிக்க விரும்பும் அனைத்தும் ஏற்கனவே உங்கள் உடலமைப்பிலேயே இருக்கிறது.

ஏதோவொரு அனுபவத்தை நாடி நம் உடலுக்குள் புகுத்தும் இரசாயனங்கள் பெரும்பாலும் நமக்குள் ஏதோவொன்றை தூண்டிவிட மட்டுமே செய்கின்றன. இப்போது கேள்வி, நீங்கள் self-startஆ? அல்லது push-startஆ? எப்படி என்று தெரிந்துகொண்டால், உங்கள் உடலமைப்பிற்குள் எந்த ஒரு பொருளையும் புகுத்தாமல் சும்மா உட்கார்ந்திருக்கும் போதே உங்களால் பரவசத்தில் திளைத்திருக்க முடியும். சிவன் எப்போதுமே முழு போதையில் இருந்தான், அதைப் பற்றி சந்தேகமே இல்லை. ஆனால் அவன் வெளியிலிருந்து இரசாயனங்கள் தேவைப்படும் அளவு பலவீனமானவன் கிடையாது. சிவன் எந்த போதைப் பொருளையும் பயன்படுத்தவில்லை - அவன்தான் போதைப்பொருள். என்னால் உங்களுக்கு இப்படிச் செய்திடமுடியும். என்னுடன் நீங்கள் ஒரு குறிப்பிட்ட விதத்தில் இருந்தால் உங்கள் அனைவரையும் என்னால் போதையில் திளைக்க வைக்க முடியும். இதை ஏற்படுத்தும் போதைப்பொருள் வெளியே இல்லை, உங்களுக்கு உள்ளே இருக்கிறது.

உங்களில் சிவனைப் பின்தொடர விரும்புவோர், அவர் செய்த எல்லாவற்றையும் செய்யமுடியுமா? முதலில் நீங்கள் அசைவின்றி மூன்று மாதங்கள் உட்கார்ந்திருக்க வேண்டும் - பிறகு வேண்டுமானால் போதைப்பொருள் பயன்படுத்துங்கள். ஆதிசங்கரர் இந்தியா முழுவதும் குறுக்கும் நெடுக்குமாக பயணம் செய்தார், தெற்கிலுள்ள கேரளத்திலிருந்து வடக்கிலுள்ள பத்ரிநாத் வரை சென்று திரும்பினார், பிறகு கிழக்கிலிருந்து மேற்கு எல்லைக்குச் சென்றார், பிறகு 32 வயதில் உயிர்நீத்தார். இடையில் ஆயிரக்கணக்கான பக்கங்களுக்கு இலக்கியம் இயற்றினார். அவர் வேகமாக நடந்துகொண்டே இருந்தார். ஒரு சில சீடர்களும் அவர் பின்னாலேயே ஓடியோடிச் சென்றனர்.

அப்படி பயணம் செய்கையில் ஒரு கிராமத்திற்கு வெளியே ஒரு மதுக்கடையைப் பார்த்தார். ஒருசிலர் அங்கே கூடிக் குடித்துக் கொண்டு இருந்தார்கள். போதையில் மூழ்கியிருந்த அவர்களை சங்கரர் பார்த்தார். அவர்களும் அவரைப் பார்த்தனர். உங்களுக்குத் தெரிந்திருக்குமே, குடிகாரர்கள் எப்போதும் அவர்கள்தான் வாழ்க்கையை அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்றும் பிறர் தவறவிட்டுக்கொண்டு இருக்கிறார்கள் என்றும் நினைப்பார்கள். அதனால் சங்கரரைப் பார்த்து சற்று ஏளனமாகப் பேசினார்கள். ஒரு வார்த்தை பேசாமல் சங்கரர் கடைக்குள் நுழைந்து ஒரு பானை நிறைய சாராயத்தைக் குடித்துவிட்டுச் சென்றுவிட்டார்.

இதை சீடர்கள் பார்த்துக்கொண்டே இருந்தார்கள். சங்கரர் மீண்டும் வேகமாக நடக்கத்துவங்கிவிட்டார். சீடர்கள் அவர் பின்னால் ஓடத் துவங்கினர். அவர்களுக்குள் இப்படி விவாதம் துவங்கியது, "நம் குரு குடிக்கலாம் என்றால், நாமும் குடிக்கக்கூடாதா?" அவர்களுக்கு ஒரு சாக்கு மட்டுமே தேவைப்பட்டது. சங்கரருக்கு இப்படி நடந்துகொண்டு இருந்தது தெரியாமலில்லை. அடுத்த கிராமத்திற்குள் நுழைந்தபோது அங்கு ஒரு கொல்லன் வேலை செய்துகொண்டு இருந்தான். உருக்கப்பட்ட இரும்பு ஒரு பாத்திரத்தில் உலோகக்குழம்பாக இருந்தது. சங்கரர் அதை எடுத்துக் குடித்துவிட்டு மீண்டும் நடக்கலானார். சீடர்களுக்கு இதைக் கட்டாயம் குடிக்கக்கூடாது என்பது மட்டும் தெரிந்திருந்தது.

சிவன் எப்போதுமே நிச்சயம் போதையில்தான் இருந்தான், ஆனால் அவன் சொற்பமான மூலிகை எதையும் பயன்படுத்தவில்லை. கஞ்சா பயன்படுத்துவதால் நடப்பதெல்லாம், மூளைக்குள் புகை மூண்டது போல சற்று மயக்கமாக உணர்கிறீர்கள். இப்படி எல்லாம் மங்கலாகத் தெரிவது ஆன்மீகமென்றால், நான் ஆன்மீகத்தோடு தொடர்புடையவனாக இருக்க விரும்பவில்லை. எனக்கு அனைத்திலும் அதிமுக்கியமானது அப்பழுக்கற்ற தெளிவுடன் வாழ்வதுதான். தெளிவு என்பது போதையை ஏற்படுத்தமுடியும். உங்கள் விழிப்புணர்வின் விளிம்பில் இருக்கத்தேவையாக இருக்கும் ஒரு செயலைச் செய்யும்போது, அதில் ஒருவித போதை இருக்கிறது. அதனால்தான் மக்கள் விமானங்களிலிருந்து குதிப்பதும், உயிரையே பணயம் வைக்கும் வேறு பல சாகசங்களையும் புரிகின்றனர்.

ஓரளவிற்கு, உடலைப் பயன்படுத்திச் செய்யும் செயல்களால் போதை உருவாக்க முடியும். வெளியிலிருந்து எந்தவொரு பதார்த்தத்தையும் பயன்படுத்தாமல் உங்களுக்குள் ஒரு போதை நிலையைத் தூண்டிக்கொள்ள முடியுமென்றால், சிவனின் அம்சம் உங்களுக்குள் உள்ளது என்றே அர்த்தம். இங்கே சும்மா உட்கார்ந்து உங்களுக்குள் விழிப்புணர்வின் உச்சத்தில் இருக்கமுடியும் என்றால், அப்படித்தான் அதனை அடையவேண்டும், மூலிகைகள் புகைப்பது மூலமாக அல்ல. மூலிகைகளை மாடுகளுக்கு விட்டுவிடுங்கள். மனிதர்கள் வேறு பல நல்ல விஷயங்களைச் செய்திடமுடியும். மூலிகைகளைப் புகைப்பவர்கள் பொதுவாக அமைதியாக இருப்பது போலத் தெரிவார்கள். அவர்கள் மூளை மங்கிப்போனதால் அமைதியாக இருக்கிறார்கள், அந்த அமைதியில் எந்த மதிப்பும் இல்லை, அந்த போதைப்பொருளை அவர்களிடமிருந்து அபகரித்துவிட்டால் அவர்கள் அமைதியாக இருக்கமாட்டார்கள்.

இன்று அமெரிக்காவின் பல மாநிலங்களில் போதைப் பொருட்கள் பயன்படுத்துவது சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட ஒன்றாகிவிட்டது, அதனால் பல தொழில் நிறுவனங்களும் அந்த வியாபாரத்தில் இறங்குகிறார்கள். என்றோ ஒருநாள் Coca Cola விற்பனை செய்வது போல கடைவீதிக்கு Coca Smoka என்ற பெயரில் போதைப்பொருளை விற்பனைக்கு கொண்டுவந்துவிட்டால், அதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. கரியமில வாயு இருக்கும் பானத்தை விற்பதிலிருந்து கஞ்சா இருக்கும் பதார்த்தத்தை விற்கத் துவங்குவதை நீங்கள் முன்னேற்றம் என்று நினைத்துக்கொள்ளலாம். ஆனால் உங்கள் மூளை சுருங்கிவிடும். இந்த மூளையை நீங்கள் உருவாக்கவில்லை, அது இப்போது இருக்கும் நிலைக்கு வருவதற்கு பற்பல தலைமுறைகள் எடுத்துக்கொண்டது, இந்த மூளையை எப்படிக் கையாளுவது என்று தெரியாததால் அதற்கு புகை மூட்டி அமைதி காணலாம் என்று நினைத்தால், அது தீர்வல்ல.

உங்கள் மூளையைப் பயன்படுத்தி உங்களால் பித்துப்பிடிக்கும் அளவிற்கு பதற்றமடைய மட்டும்தான் முடியுமென்றால், வேறு நல்லவிதத்தில் அதை உங்களுக்குப் பயன்படுத்தத் தெரியவில்லை என்றால், கஞ்சா பயன்படுத்தி ஒரு மூலையில் சும்மா உட்கார்ந்துகொண்டு யாரையும் தொந்தரவு செய்யாமலாவது இருப்பீர்கள். உங்கள் மூளையை இன்னும் சிறப்பாக உங்களால் பயன்படுத்த முடியும் என்றால், உங்கள் மூளையை வைத்து அர்த்தமுள்ள ஏதோவொன்றை, படைப்பாற்றல் ததும்பும் விதமாக, பயனுள்ள விதமாக ஏதாவது செய்யமுடியும் என்றால், போதைப்பொருட்களைப் பயன்படுத்துவது வழியே அல்ல. எந்தவொரு இரசாயனத்திலும் ஆன்மீகத்தோடு தொடர்புடைய எதுவும் இல்லை.

போதைப்பொருட்களின் கேடு

கிளர்ச்சியற்றுக் கிடப்பது அச்சுறுத்துகிறது
ஆனால் போதையோ நிஜமாகிய
அனைத்திலிருந்தும் விலகச்செய்கிறது
உலர்ந்த உயிரற்ற தர்க்கமெனும்
வெற்றறையில் எப்படி வாழ்வது.
நாள் முழுதும் தர்க்கம்
நாளின் இறுதியில் போதை
வாரம் முழுவதும் தர்க்கம்
வார இறுதியில் போதை
வேலையில் தர்க்கம் விடுமுறையில் போதை
இப்படி சமரச விரும்பிகள் சொல்கிறார்கள்

வாருங்கள்! ஒரு மூலிகை என்னிடமுள்ளது
ஒரேசமயத்தில் பரவசத்தின் பிரவாகத்திலும்
விழிப்புணர்வின் உச்சத்திலும் இருக்கச்செய்யும்
இரகசியமாக வைத்திருக்கத் தேவையில்லை,
நமக்குள் நம்மை எவரும் கண்டுபிடிக்கமுடியாது

உருவமில்லாமல் உள்ளுக்குள் இருக்கும்
அந்த போதைப்பொருளை பயன்படுத்திடுவோம்
தள்ளாட்டமில்லாத் தெளிவுடன் போதையுமுண்டு

Love & Grace

 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1