போதைதரும் நறுமலர்!

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், தன் தாய்க்கு மிகவும் பிரியமான செண்பக மலர் பற்றியும், அதனோடு தனக்கு இருந்துள்ள தொடர்பு பற்றியும் சத்குரு அவர்கள் பகிர்ந்துகொள்கிறார்.
 
 
 
 

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், தன் தாய்க்கு மிகவும் பிரியமான செண்பக மலர் பற்றியும், அதனோடு தனக்கு இருந்துள்ள தொடர்பு பற்றியும் சத்குரு அவர்கள் பகிர்ந்துகொள்கிறார்.

என் வாழ்க்கை முழுவதும், எனக்கு செண்பகப் பூவுடன் ஒரு வித்தியாசமான தொடர்பு இருந்து வந்துள்ளது. இது மஞ்சள் நிறத்திலும், சில இடங்களில் சிறிது சிகப்பு கலந்த நிறத்திலும் இருக்கும். மயங்கவைக்கும் அளவிற்கு நறுமணம் மிக்க மலரிது. உங்கள் வீட்டில் கொஞ்சம் செண்பகப் பூக்கள் வைத்திருந்தால், அதன் வாசனையால் உங்களுக்கு தலை சுற்றும் அளவு இது நறுமணமாக இருக்கும். என் அம்மாவிற்கு மிகவும் பிடித்தமான பூவிது, அதனால் இவை பூக்கும் காலங்களில், எப்போதும் ஒரு செண்பக மலராவது எங்கள் வீட்டில் இருக்கும்.

நானும் என் மனைவி விஜியும் ஆசிரமத்திற்கு குடிபெயறும் முன்பு, நாங்கள் நாடோடிகளைப் போல 12 வருடங்கள் பயணத்திலேயே இருந்தோம். வீட்டிற்குக் குடியேறியபோது, அவள் செண்பகமரம் வேண்டுமென்று ஒரு செடி வைத்தாள். அப்போது அவள், "இது உங்கள் அம்மாவிற்குப் பிரியமான மலர், இதுதான் நம் வீட்டின் முதல் செடியாக இருக்க வேண்டும்" என்றாள். ஆறிலிருந்து எட்டு மாதங்களில் செடி பெரிதாக வளர்ந்துவிட்டது, ஆனால் பூ பூக்கவில்லை. ஒரு பௌர்ணமி காலையில் முதல் பூ பூத்தது. அதை விஜி என் தாயின் படத்திற்கு வைக்க விரும்பினாள். நான் விஜியிடம், "வேண்டாம், முதல் பூ இது, மரத்திலேயே இருக்கட்டும்" என்றேன். முதல் மலர் பௌர்ணமி தினத்தில் பூத்திருந்தது அவளுக்கு ஒரே சந்தோஷம். அந்த பௌர்ணமி இரவில்தான் அவள் இவ்வுலகை விட்டுச் செல்ல தீர்மானித்திருந்தாள், அதை நிறைவேற்றவும் செய்தாள்.

இந்த செண்பக மரத்திற்கும் எனக்கும் இடையே இன்னும் பல நிகழ்வுகள் நடந்துள்ளன. கர்நாடக மாநிலத்தில் "பிலிகிரி ரங்கனபெட்டா" என்ற மலை உள்ளது. மிக அற்புதமான இயற்கை சூழலும் வனவிலங்குகளும் நிறைந்த இடமிது. இந்த மலைகளுக்கும் எனக்கும் ஒருவிதமான தொடர்பு இருந்து வந்துள்ளது, ஏனென்றால் என் மிகச் சிறிய வயதிலேயே நான் இந்த மலையை சைக்கிளில் ஏறியிருக்கிறேன். இம்மலையில் தங்கி நடந்து திரிந்திருக்கிறேன். மிகவும் அடர்ந்த காடு இது, யானைகள், காட்டு எருமைகள், புலிகள், கரடிகள் என்று வனவிலங்குகளின் நிறைந்த இடமிது. வீரப்பனும் கூட அவர் வாழ்நாளின் ஒரு கட்டத்தில், தன் தங்குமிடமாக இவ்விடத்தையே தேர்ந்தெடுத்தார்.

இந்த பிலிகிரி ரங்கா மலையில் "தொட்ட சம்பிகே" என்ற இடமுள்ளது. இதற்கு "பெரிய செண்பகம்" என்று பொருள். இங்குள்ள ஒரு செண்பக மரம், வயதினால் உருக்குலைந்து, முடிச்சு முடிச்சாக, மிகப்பெரிய மரமாக இருக்கும். பொதுவாக செண்பக மரம் நீண்டகாலம் உயிர் வாழாது, ஆனால் இந்த மரம் 6000 வருடங்களுக்கு மேல் பழமையானது என்றும், இதை அகஸ்திய முனிவர் நட்டார் என்றும் சொல்கிறார்கள். 6000 வருடங்களுக்கு முன்பு அவர் இங்கே அமர்ந்து தியானம் செய்துவிட்டு, இம்மரத்தை ஆசிர்வதித்துச் சென்றார் என்பதுதான் இதன் கதை.

எப்படியோ, எனக்கும் இந்த செண்பக மரத்திற்கும் இடையே பல சம்பவங்கள் பல நேரங்களில் நடந்துள்ளன. இந்த மரத்துடன் எனக்கு ஒருவிதமான காதல் என்றே சொல்லலாம்.

அன்பும் அருளும்