இந்த வார சத்குரு ஸ்பாட்டில் பைரவியின் உக்ர ரூபத்தை பற்றி விவரிக்கும் சத்குரு அவர்கள், அவளின் தீவிரமும், கருணையும் எப்படி நம்மை கிரங்கச் செய்யும் சக்திரூபமாக இருக்கிறது என்பதைப் பற்றியும் பேசுகிறார். தன்னுடைய பெண்தன்மையின் வெளிப்பாடாக விளங்கும் தேவியினால், தன் வாழ்க்கையில் அழகு கூடியிருப்பதைப் பற்றியும் விவரிக்கிறார். படித்து மகிழுங்கள்!

Question: நமஸ்காரம் சத்குரு, சாந்தியா காலம், பிரம்ம முஹூர்த்தம் இவற்றின் முக்கியத்துவம் குறித்து முன்னர் சொல்லி இருக்கிறீர்கள். ஆனால், தேவி கோவிலில் செய்யப்படும் அபிஷேகங்கள் இந்நேரத்தில் நடைபெறுவது இல்லையே, ஏன்?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு:

இந்த கேள்வி பலப்பல விஷயங்களை திறக்கிறது. எளிமையாக சொன்னால், ஒரு வடிவத்தை நாம் உருவாக்கும்போது, அதன் பின்னணியில் முழுமையான கணிதம் இருக்கிறது. தியானலிங்கம் சூரிய அமைப்போடு ஒத்திசைந்து இருக்கிறது. இயல்பாக இருக்கும் ஒரு அமைப்புடன் இயைந்து இருப்பதால்தான், அவர் 5 - 10 ஆயிரம் வருடங்கள் இருப்பார் என உறுதியாக கூறுகிறோம். ஆனால், தேவியை அப்படி உருவாக்கவில்லை. அவள் சற்றே பித்துப் பிடித்தவள், வித்தியாசமானவள். அதாவது இயல்பாக இருக்கும் தாளம் என்னவோ, அதிலிருந்து விலகி இருப்பவள். அவளுடைய சக்தியும் செயலும் வித்தியாசமாய் இருப்பதால் நோக்கத்துடனேயே அவள் அப்படி உருவாக்கப்பட்டிருக்கிறாள்.

சூரியன் தினமும் வட்டமாகவே இருக்கிறது. ஆனால், நிலவோ புதிய வடிவம் எடுத்துக் கொண்டே இருக்கிறது. அதனால் மக்கள் நிலவின்மீது கூடுதல் கவனம் செலுத்துகின்றனர். தேவியும் அப்படித்தான், இரண்டரை அல்லது இருபத்தி ஏழரை நாட்கள் என அவளுக்கே உரிய சுழற்சிகளுக்கு அவள் உட்படுகிறாள். அவளுடைய சக்தி சிறிய சுழற்சிக்குள் இருப்பதால், அவளது வீச்சு பெரிதாக இருக்கிறது, அவளை நாம் உணர்வதும் சுலபமாக இருக்கிறது. முற்றிலும் வட்டமாக இருப்பவருக்கு இதுபோன்று இருப்பதில்லை. அதனால், சாந்தியா காலம், பிரம்ம முஹுர்த்தம் போன்றவற்றை எல்லாம் அவள் பின்பற்றுவதில்லை. இயற்கையில் இயல்பாக நிகழும் சக்திகளோடு அவள் இயைந்து இருப்பதில்லை. ஏனென்றால், ஒரு பெண் ஏதோ ஒரு விதத்தில் வித்தியாசமாக இருக்க விரும்புகிறாள். லிங்கபைரவியும் முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறாள். அதுவே அழகு, வாய்ப்பு, ஈர்ப்பு. அவளை நீங்கள் கவனிக்காமல் இருக்க முடியாது. உங்களது உயிர் சக்தி அவள்பால் ஈர்க்கப்பட்டு, நீங்கள் அவளை தொட்டுவிட்டால், உங்கள் பயணம் பரவசமானதாகிப் போகும். அவளுடன் சும்மா அமர்ந்திருந்தாலே உங்களை அப்படி ஆக்கிவிடுவாள் தேவி. அவளுடைய சக்தி அப்படி பித்தேறிய நிலையில் உள்ளது.

அதனாலேயே, அவள் தியானலிங்கதைவிட பிரபலமாகி விடுவாள் என எனக்கு ஒரு அச்சம் இருந்தது. அந்தபயம், உண்மையாகிக் கொண்டிருக்கிறது. தேவி டாலரை பலர் அணிந்திருப்பதை பார்க்கிறேன். ஆனால், தியானலிங்கதை யாரும் தலையில் சுமப்பதில்லை. ஒருவேளை, அவள் மிகப் பிரபலமாகிவிட்டால், பேசாமல் தேவி கோவிலை மூன்று மாதங்களுக்கு மூடிவிடுவதற்கான வாய்ப்புகளும் உண்டு. மூடிய பின் கோவிலை திறந்தால், அவள் இன்னும் பிரபலமாகிப் போவாள், ஏனெனில் எதைத் தடை செய்கிறோமோ அதை பார்க்க அனைவருக்கும் விருப்பம் ஏற்படுகிறது. அவளை எப்படி கையாள்வது என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், அவள் மிக சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறாள்.

இன்னும் சொல்லப்போனால், தேவி கோவிலை இரவு நேரத்தில் திறந்து வைத்திருந்தால், அது வியக்கத்தக்க வகையில் பிரபலமாகிவிடும். அவளுக்கு இரவு தேவை, இரவில் அவள் விழித்திருக்கிறாள். இரவில் தேவி கோவிலுக்குள் நுழைந்து பாருங்கள், உயிரின் வேறு பரிமாணத்தை பார்ப்பீர்கள். ஆனால், அப்படியொரு நிலைக்குச் செல்ல நமக்கு விருப்பமில்லை, ஏனெனில், பல சமூகங்களில், இந்தியா உட்பட, மக்கள் மிகுந்த போலி நாணம் உடையவர்களாய் இருக்கிறார்கள். உக்கிரமாக, காட்டுத்தனமாக இருக்கும் எதுவொன்றையும் கண்டு நடுங்குகிறார்கள்.

இந்தியாவில், தேவி ஒரு புலியின் மீது அமர்ந்து அதைச் செலுத்தும் விதமாக சித்தரிக்கப்படுகிறாள். அவள் அந்தப் புலியை விடவும் உக்கிரமானவள் என்பதைச் சொல்லவே இப்படிச் சித்தரிக்கப்படுகிறது. ஆனால், மக்களோ அந்த காட்டு விலங்கு நல்லதிற்கில்லை என நினைக்கிறார்கள். அவர்களுக்கு புலியை வசப்படுத்தி, அதனுடன் விளையாட ஆசை. நம் மனதில், நாகரீகம் என்பதன் அர்த்தமே அனைவரையும் வசப்படுத்தி ஆள வேண்டும் என்பதுதான். என்னைப் போல் தாடிவைத்து, காட்டுத்தனமாய் தோற்றமளிக்கும் ஒருவரை மக்களால் விரும்பக்கூட இயலுவதில்லை.எதையெல்லாம் அகற்ற முடியுமோ, அவையெல்லாம் அகற்றப்பட்டுவிட்டன. அவை அகற்றப்பட்டதற்கு நோக்கமோ, விழிப்புணர்வோ இல்லை, வெறுமனே நீக்கப்பட்டுவிட்டன.

தேவி வசப்படுத்தப்பட்டவள் அல்ல. உக்கிரமாகவும் மூர்க்கமானவளாகவும் அவள் இருக்கிறாள். அவள் வெறும் பெண் அல்ல, பெண்ணிலும் பெண். நகரத்திலிருந்து வெகு தூரம் தள்ளி நாம் ஆசிரமத்தை நிறுவக் காரணம், நமக்கு கட்டுக்கடங்காத காட்டுத்தனம் வேண்டுமே தவிர, நகரத்தின் ஒருங்கிணைப்பு அல்ல. நம்மைச் சுற்றி அற்ப வேலிகளை நாம் அமைத்துள்ளோம், யானைக் கூட்டம் உள்ளே வர நினைத்தால் எந்நேரத்திலும் உள்ளே நுழையலாம். ஒரு புலியோ, கருஞ்சிறுத்தையோ, ராஜநாகமோ உள்ளே நுழைய வேண்டுமென்றால், எளிதாக அவை வந்துவிட முடியும். ஆன்மீகச் செயல்முறையும், ஒரு எல்லையின் விளிம்பில் இருப்பதும் நேரடித் தொடர்புடையவை. வருங்காலத்தில் பல பேருக்கு, தேவிதான் முதல்படியாக இருப்பாள் என்று நான் நம்புகிறேன். அவளின் காட்டுத்தனத்தில் சிறிது நேரம் திளைத்துவிட்டு பிறகு தியானலிங்கத்தின் ஒத்திசைவுக்குள் மக்கள் வருவார்கள். அப்படித்தான் அது நடக்கும், ஏனென்றால் அவளின் அந்த காட்டுத்தனத்தை உங்களால் புறக்கணிக்க முடியாது.

தேவி லிங்கபைரவி, எனது ஈடா நாடியின், எனது இடப்புற சக்தியமைப்பின் வெளிப்பாடு. தேவியின் விளையாட்டோ, ஒரு பிரம்மாண்டமான செயல்முறையாகவும், அனுபவமாகவும் எனக்கு உள்ளது. நீங்களும் அவளது கட்டுப்பாடற்ற காட்டுத்தனத்தின் மாய வழிகளாலும், கருணையாலும் தொடப்படுவீர்களாக!

Love & Grace