இந்த வார சத்குரு ஸ்பாட்டில், ஈஷாவிலுள்ள பிரம்மச்சாரிகளுக்கும் பைராகினி மா அவர்களுக்கும் என்ன வித்தியாசம் என ஒருவர் கேட்க, வைராக்ய பாதைக்கும், பிரதிபலிப்பாய் இருக்கும் பாதைக்கும் உள்ள வித்தியாசத்தினை வெகு நேர்த்தியாய் விளக்கும் சத்குரு அவர்கள், இந்தப் பாதை ஒருவருக்கு வழங்கும் சாத்தியம் பற்றியும், வாழ்க்கை அவர்களுக்கு அளிக்கும் நிறைவினைப் பற்றியும் எழுதுகிறார். படித்து மகிழுங்கள்...

Question: நமஸ்காரம் சத்குரு, லிங்கபைரவி தேவியை பராமரிப்பவர்களை “பைராகினி மா” என அழைக்கிறோம், “பைராகினி” என்றால் என்ன? பைராகினி மா அவர்களுக்கும், ஈஷாவில் இருக்கும் பிரம்மச்சாரி, சந்நியாசிகளுக்கும் என்ன வித்தியாசம்?

ராகா என்றால் நிறம். ஒருவிதத்தில் பார்த்தால், “பைராகினி” என்பவர் தேவியின் நிறமாய் ஆகிவிட்டவர். பிரம்மச்சரியம் என்றால் வைராக்கியம் ஆவது, அதாவது “நிறமற்றவர்” ஆக இருப்பது. நிறமற்றவர் என்னும் வார்த்தைக்கு எதிர்மறை பொருள் உண்டு. அதனால், வைராக்கியம் என்பதனை “எது ஒன்று படிகம் போல், தெளிவாக உள்ளதோ அது” என்று நாம் சொல்லலாம். ஒரு பிரம்மச்சாரி என்பவர் வைராக்கியமான அந்நிலையை அடைவது எப்படி எனப் பார்க்கிறார். தன் வாழ்வின் லட்சியமே தெளிவினை அடைவது பற்றியதாய் அவருக்கு இருக்கிறது. வாழ்வையும் மரணத்தையும் ஊடுறுவிக் காண்கிற தெளிவு அது.

பைராகினி என்பவர் நிலவினைப் போன்றவர். நிலவு சுய ஒளியில் பிரகாசிப்பதில்லை, சூரியனின் ஒளியினை பிரதிபலிக்கிறது. சூரியன் நிலவிற்கு சக்தியளிக்கிறது. ஆனால், பெரும்பாலானவர்கள் சூரியனைவிட நிலவினால் மகிழ்வடைகிறார்கள். நிலவினை உயர்வாகப் பார்க்கிறார்கள். நிலவு அணுகக்கூடியதாய் உள்ளது. ஒவ்வொரு நாளும் ஒரு உருவமெடுத்து வெவ்வேறு நிலைகளில் தோற்றமளிக்கிறது. அதற்கு 28 மாறுபடு நிலைகள் உள்ளன. ஆனால், சூரியனோ – நாளும் பொழுதும் மாறுவதேயில்லை.

Sign Up for Monthly Updates from Isha

Summarized updates from Isha's monthly Magazine on Isha and Sadhguru available right in your mailbox.

No Spam. Cancel Anytime.

இவை இரண்டும், இருவேறு பாதைகள். இக்கணம் வரை நாம் பைராகினி பாதையில் பெரிதாய் கவனம் செலுத்தவில்லை. வெறும் அரை டஜன் பைராகினிகளே கோவிலை கவனித்துக் கொள்கிறார்கள். வெறுமனே கோவிலை மட்டும் பராமரித்து, நடத்துவதாய் அல்லாமல், இந்தப் பாதையில் இன்னும் சில விஷயங்கள் நிகழலாம். என்ன… ஈஷா மையத்திற்கென்று ஒரு பிம்பம், அடையாளம் இருக்கிறது. அதனால், சிவப்பு உடை அணிந்த மக்கள் நிறைய பேர் மையத்தில் உலவுவதை நாம் விரும்பவில்லை. மக்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற எண்ணத்தினால் அல்ல, மாறாக, நாம் செய்து வரும் செயல்களின் ஆற்றலில் தொய்வு ஏற்படாமல் இருக்க ஒரு அடையாளம், பிம்பம் அவசியமாகிறது. நம் அடையாளத்தைப் பற்றி கவலைப்படாத நிலையினை ஈஷா எட்டிவிட்டாலும் இதனைப் பற்றி நாம் சற்று யோசிக்க வேண்டியுள்ளது. வரும் ஒன்றிரண்டு வருடங்களில், இன்னும் சிலர் இந்தப் பாதைக்குள் வரலாம். உங்களை நீங்கள் முழுமையாக அர்ப்பணித்தால், இது ஒரு அழகான பாதை. அதனை தர்க்கரீதியாக ஆராய முயன்றால், உங்களுக்கு கிறுக்குதான் பிடிக்கும். அதுவே உங்களை முழுமையாய் அர்ப்பணித்தால், நீங்கள் பரவசமான, அழகான நிலையில் இருப்பீர்கள்.

எனக்கு மூளையில்லை, ஆனால் பெரிய மனதிருக்கிறது என பெருமைப்பட்டுக் கொள்பவர்களுக்கு இது நல்ல பாதை. அல்லது, உங்கள் மூளை, எது கருப்பு-எது சிவப்பு, எது சரி-எது தவறு என்னும் முதிர்ச்சியில்லா தர்க்க மனத்தின்படி செல்லாமல், தோற்றத்தையும் கடந்து, உங்கள் உயிரைப் பார்க்குமானால், இது உங்களுக்கு அழகான பாதை. தர்க்கத்தையும் மீறி தர்க்கரீதியில் ஒரு விஷயத்தைப் பார்ப்பதற்கு, நமது அறிவு சூட்சுமமாய் செயல்படுவது அவசியம். இல்லாத பட்சத்தில், இது சரி-அது தவறு, இது உள்ளே-அது வெளியே என்று தர்க்க அறிவு சொல்லும். தேவி “உள்ளும்-புறமும்” என இரண்டும்தான். ஒரு பைராகினியாகவோ, இல்லாமலோ உங்களை நீங்கள் முழுமையாய் அர்ப்பணிக்கும் பட்சத்தில், தேவி முற்றிலும் வித்தியாசமான சக்தியாக இருக்கிறாள். தியானலிங்கம் அப்படி அல்ல. அவன் எப்போதும் ஒன்று போலவே இருக்கிறான். நம்பகமானவன். ஆனால், தேவி அப்படியல்ல, அவள் தன்னிச்சையாய் அவள் வழியில் செல்கிறாள். நான் அவளது கொல்லைப்புரத்தில்தான் வசிக்கிறேன், அதனால் எனக்கு தெரியும்.

பைராகினி எனும் பாதை தேவியின் நிறத்தை முழுதாய் எடுத்துக் கொள்வது. உடையில் மட்டுமல்ல, எல்லாவிதத்திலும் அவளை முழுமையாய் பின்பற்றுவது. உங்கள் இரத்தம் சிவப்புதான், உங்கள் தலையும் சிவப்பாக வேண்டும், உங்களுக்குள் ஒவ்வொன்றும் சிவப்பாக வேண்டும். உங்களுடையது என்று எது இருக்கிறதோ எதையுமே நீங்கள் தக்கவைத்துக் கொள்ளக் கூடாது. “அப்படியென்றால், நான் என்னை இழந்துவிட வேண்டுமா?” உங்கள் வாழ்வில் நீங்கள் பயனுள்ளபடி எதையாவது செய்ய விரும்பினால், உங்களை நீங்கள் இழக்க வேண்டும், வேறு வழியே இல்லை. நீங்கள் யார் எனும் அந்த அற்ப அடையாளத்தை நீங்கள் தக்கவைத்துக் கொள்ள விரும்பினால் – வாழ்த்துக்கள். கடைசி நாள் வரை அதே பிரச்சனைகள் முடிவில்லாமல் நிகழ்ந்து கொண்டே இருக்கும். சற்றே பின்நோக்கிப் பாருங்கள் – நீங்கள் வெவ்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு விதமாய் இருந்திருக்கலாம், ஆனால் போராட்டங்கள் ஒன்றேதான், உங்கள் மனவெளியில் பிரச்சனைகள் ஒன்றே. சூழ்நிலை மாறியிருக்கலாம், பொருள் மாறியிருக்கலாம், ஆனால் அடிப்படைகள் மாறவில்லை. என்னை நம்புங்கள், பல பேர் இப்படியே வாழ்ந்து, இறந்தும் போய்விடுகின்றனர்.

ஒரு சமயம் இப்படி நடந்தது. தனது முந்தைய பிறவியில் சங்கரன் பிள்ளை மரணப் படுக்கையில் இருந்தார். தூங்கி விழிப்பதைப் போன்று, விழிப்புநிலைக்கும் விழிப்பற்ற நிலைக்கும் இடையே அவர் ஊசலாடிக் கொண்டிருந்தார். இதற்கிடையே ஒரு சமயம் விழிப்பு வரவே, தன் மனைவியைப் பார்த்து, “என் முதல் மகன் ராமு எங்கே?” என்றார். முதல் மகன் சடுதியில் எழுந்து, “அப்பா, நான் இங்கிருக்கிறேன், கவலைப்படாதீர்கள்” என்றான். மறுபடியும் சுயநினைவின்றி போனார். மீண்டும் விழிப்பு வந்தபோது, தன் மனைவியிடம், “நம் இரண்டாம் மகன் பீமு எங்கே?” என்றார். குதித்தெழுந்த பீமு, “அப்பா நான் இங்குதான் இருக்கிறேன். உங்களைவிட்டு நான் எங்கும் செல்ல மாட்டேன்” என்றான். மறுபடியும் மயக்க நிலையை அடைந்தார் சங்கரன் பிள்ளை. இம்முறை மயக்கத்திலிருந்து மீண்டு வந்தவர், தன் வீட்டாளிடம், “நம் மூன்றாவது மகன் சோமு எங்கே?” என்றார். மூன்றாமவன், இவரது கால்களை பற்றிக் கொண்டு, “அப்பா நான் உங்கள் கால்களில் கிடக்கிறேன். நான் இங்குதான் உள்ளேன்,” என்றான். தன் மனைவியைப் பார்த்து, “அப்போது, நம் கடையை பார்த்துக் கொள்வது யார்,” என்றார் பிள்ளை. இப்படி கதை முடிவில்லாமல் நீண்டு கொண்டே இருக்கும்.

உணவு உண்பதற்கான தூண்டுதல், இனப்பெருக்கம் செய்ய வேண்டும் என்கிற தாபம் – இவற்றிலேயே முழு வாழ்க்கையும் கடந்து சென்றுவிடும். நீங்கள் அவற்றை மகிமைப்படுத்திப் பேசலாம், உணர்ச்சிப் பெருக்குடன் வர்ணிக்கலாம் – ஆனால் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள் – வாழ்க்கை இப்படித்தான் நகரும். நான் இதனை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருக்க விரும்பவில்லை, நான் இதனைப் பலமுறை சொல்லி இருக்கிறேன். இயங்கிக் கொண்டிருக்கும் மூளையை உடைய உங்களில் சிலர் ஏதோ ஒன்றில் முதலீடு செய்யலாம். வாழ்க்கை எனக்கு புகட்டிய பாடத்திலிருந்து நான் இதனைச் சொல்கிறேன். அறிவதற்காக நான் தேடிய தேடல், எனது போராட்டங்கள் இவை யாவும் உங்களுக்கு மிகச் சுலபமாக கிடைக்கிறது. ஆம், மிகச் சுலபமாக கிடைக்கிறது. நீங்கள் பைராகினி ஆக விரும்பினால் அது வாழ்வதற்கு மிக அற்புதமான ஒரு பாதையாக இருக்கும். ஈஷாவில் உள்ள பிறவற்றைப் போன்றே நான் அவர்கள் மீதும் போதிய கவனம் செலுத்தவில்லை. நான் எனது பயணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்போது, இதுவும் நிகழும். அப்போது… சத்குரு எப்போது பயணம் செய்யத் துவங்குவார் என நினைப்பீர்கள்!

Love & Grace